அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சமதர்ம வெற்றி!

கன்சர்வெடிவ் கட்சி தோற்றுவிட்டது. சர்ச்சிலின் சகாக்கள் பலர் தோற்றுவிட்டனர். சர்ச்சில், முதலமைச்சர் பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டார். பெருவாரியான இடங்களிலே வெற்றி பெற்றுள்ள தொழிற்கட்சியின் தலைவர், தோழர் அட்லி, மன்னரால் அழைக்கப்பட்டு, புதிய மந்திரிசபை அமைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். பிரிட்டனில் தொழிற்கட்சியின் ஆட்சி ஆரம்பமாகிறது.

கன்சர்வெடிவ் கட்சியேல, சர்ச்சில், ஈடன், எனும் இருவரின் வெற்றிதான், குறிப்பிடத்தக்கவை. பிறர் தோற்றனர், அமெரி உள்பட. இந்த வெற்றியின் பயனாக விளைவுகள் பல, கனவுகள் சில! விளைவைப் பிரிட்டனும், வீண் கனவை “இந்தியாவும்” அனுபவிக்க நேரிடுமோ என்று அஞ்சுகிறோம். ஆயினும், பலரும் மகிழும் இந்த நேரத்திலே, நாம் பிரிட்டிஷ் நிலை மாறுதலால் நமக்குப் பலன் இராது என்று கூறி, மகிழ்ச்சியை மட்டுப் படுத்துகிறோம் என்று சிலர் சீறக்கூடும். தொழிற்கட்சி வெற்றிபெற்ற செய்தி கேட்டதும், சர்தார் படேல், “தேர்தல் முடிவைக் கொண்டு ஒன்றும் கூறுவதற்கில்லை. தொழிற்கட்சி ஆளத்தொடங்கட்டும், அப்போது அவர்களின் செயலைக் கொண்டு தீர்மானிப்போம். முன் போர்முறை தொழிற்கட்சி ஆட்சிப்பீடத்திலே இருந்தது, ஆனால் நமது ஆசையோ அவலமாயிற்று!” என்று கூறினார். நிதானமாக யோசிக்கும் எவரும் இதைத்தான் கூறுவர்.

கன்சர்வெடிவ் கட்சி தோல்வி அடைந்த காரணங்கள் வேறு, இங்கு நம்மவர்கள் கன்சர்வெடிவ் கட்சியினர் மீது கோபங் கொண்டிருக்கும் காரணம் வேறு! படேலின் வாசகம் இந்த உண்மையைச் சிந்திக்கச் செய்யும் என்று எண்ணுகிறோம்.

தொழிற்கட்சி 1929ல் ஒருமுறை, தேர்தலிலே வெற்றிபெற்றது. ஆனால் மற்றக்கட்சியின் கூட்டுறவின்றி மந்திரி சபை அமைக்க முடியாத நிலையில்தான் அந்த வெற்றி இருந்தது. அதுபோது தொழிற்கட்சி 287, கன்சர்வேடிவ் 254, லிபரல் 57, சுயேட்சை 8, என்ற முறையிலே இருந்தது. இம்முறை எந்தக் கட்சியின் தயவுமின்றி ஆளக்கூடிய அந்தஸ்த்தைத் தொழிற்கட்சி பெற்றிருக்கிறது. தொழிற் கட்சி 390, கன்சர்வெடிவ் 195, லிபரல் 11 என்ற அளவிலே இருக்கிறது. சில இடங்களின் முடிவுகள் தெரிவதற்குள்ளாகவே, தொழிற்கட்சி பெற்றுள்ள வெற்றி அமோகமானது மட்டுமன்று, மற்றக்கட்சியை அண்டி வாழ வேண்டிய அவசியமில்லாத அளவு இருக்கிறது. இந்த வெற்றியைக் கண்டு தொழிற்கட்சித் தலைவர்களில் சிலரேகூடத் திகைத்துப் போயினராம், இவ்வளவு அமோகமான வெற்றியை அவர்கள் எதிர் பாராததால்.

பிரிட்டிஷ் அரசியல் அமைப்பிலே உள்ள அற்புதமே இதுதான், பிரிட்டிஷ் மக்களுடைய அறிவுக்கூர்மையும் இதுதான், அதாவது, தேவைக்கேற்றபடியான அமைப்பை உண்டாக்கிக்கொள்ளும் திறமை.

எஃகு உள்ளம் படைத்தவர் சர்ச்சில், எதிர்ப்புக்கு அஞ்சாதவர். இந்தக் குணம் படைத்த ஒரு தலைவன் தேவை, விண்ணிலே ஜெர்மன் விமானங்கள் வட்டமிட்ட நேரத்தில்! போர்க்கால நடவடிக்கைக்கு ஏற்ற குணங்களைக் கொண்ட சர்ச்சில் பீடத்தில் அமர்த்தப்பட்டார், அதனால் பிரிட்டன் பேராபத்திலிருந்து தப்பிற்று. மக்கள், சர்ச்சிலின் எஃகு உள்ளத்தைப் புகழ்ந்தனர், அந்த வயோதிகனுக்குத்தான் எவ்வளவு வீரம் என்று வியந்தனர். போர் முடிந்துவிட்டது - ஐரோப்பியப் பகுதியைப் பொறுத்தமட்டில். ஜப்பானியரை முறியடிக்கத்திட்டம் தயாரிக்கப்பட்டு, திட்டத்தின்படி, காரியம் நடந்து வருகிறது. எனவே “சர்ச்சில் சீசன்” முடிவடைகிறது. இல்லையேல், போர்க்கோலத்திலே எஃகுக் குணம் என்று போற்றினவர்கள், அதே குணத்தைச் சமாதான காலத்திலே முரட்டுத்தனம் என்று கண்டிக்கத்தான் செய்வர், எவர்க்கும் அஞ்சாதவர் என்ற போர்க்காலப் புகழுரையே, யாரையும் மதிக்காமல் நடக்கிறார், ஆணவக்காரர் என்று கண்டிக்க நேரிடும். வீரம் வீம்பு என்றும், தீரம் திமிர் என்றும் மாற்றிப் பேசப்பட்டுவிடும். எனவே பிரிட்டன், புது நிலைமைக்கேற்ற ஒரு புதுத்தலைவருக்கு பீடமளிக்கிறது. மிஸ்டர் அட்லிக்கும் வயது 62 ஆகிறது, சர்ச்சிலைப்போலச் சுருட்டும் கையுமாக உலகைச் சுற்றிக்கொண்டு, சம்மட்டி அடிபோன்ற தோரணையிலே பேசிக் கொண்டிருப்ப வரன்று, அடக்கமானவர்! அவரை இன்று பிரிட்டன் பெற்றிருக்கிறது. நிலைமைக்கேற்ற அமைப்பைப் பிரிட்டன் பெற்றுவிட்டது, அந்நாட்டுக்கு இலாபம்! நமக்கு? வேவல் திட்டத்தைவிட வேறாகக் கிடைக்குமா? சொல்வதற்கில்லை, ஏனெனில் வேவல் திட்டமே தொழிற்கட்சியின் ‘அட்சதை’யுடன் தான் வந்தது. கிரிப்ஸ் திட்டத்தைவிட மேலானது கிடைக்குமா? சொல்வதற்கில்லை, கிரிப்ஸ் திட்டமே தொழிற்கட்சியின் திட்டம் என்று தேர்தல் சமயத்திலேயே கூறிவிட்டனர். ஆகவே உடனடியான இலாபம் பிரிட்டனுக்குத்தான். உலகுக்குள்ள இலாபம் வேறோர் விதத்திலே இருக்கிறது, இந்தத் தேர்தல் சமயத்தைப் பயன் படுத்திக்கொண்டு, சர்ச்சில், சமதர்மத்தைத் தாக்கிவந்தார். “சாக்கடை அருகே” என்ற தலைப்பிலே நாம் எழுதிய தலையங்கத்திலே இந்தப்போக்கைக் கண்டித்தோம். சர்ச்சில் கட்சி ஜெயித்திருந்தால், சமதர்மத்தைப் பழித்தவரின் வெற்றியாக அது கருதப்பட்டு, பிரிட்டனில் பிடி முதலாளித்தனத்திடம் சென்றிருக்கும். இந்தக்கேடு தவிர்க்கப் பட்டது, தொழிற்கட்சியின் வெற்றியினால். “தொழிற்கட்சியின் வெற்றி சமதர்மக் கொள்கையின் வெற்றி!” என்று தோழர் அட்லி கூறினார். அது முற்றிலும் உண்மை. அந்தக் காரணத்தாலேயே நாம் தொழிற்கட்சியின் வெற்றியைப் பாராட்டுகிறோம்.

29.7.1945