அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


“சமாதி“ புலம்பும்!

வாயிருந்தால் அலறி ஏசும், அந்தச் சமாதி!

‘மலர்மாலை – பூச்செண்டு – சலவைக்கல் மேடை - எல்லாம் சரி, ஆனால்!‘ என்று ஏசும்! பேசும்!

ஏழாண்டு போய்விட்டது எந்தை அவர் பிதாவே, தனயர்களை ஆசீர்வதியும் என்று என் பெயர் சொல்லி எங்கும் கர்ஜிக்கிறார்களே! என்று கண்ணீர் வடிக்கும்.

வேட்டுச் சப்தம் விளக்கு அலங்காரம், வானொலி கீதம், பூரதம் – பொல்லாதவர்களே, இதைத்தானா உங்களிடம் எதிர்பார்த்தேன்? ஏனிப்படிச் செய்கிறீர்கள்? – என்று இரத்தக் கண்ணீர் வடிக்கும்.

வர்ணத்தாலே சலவைக்கல்லா கேட்டார், என் சீடர், அன்பரே, பாகிஸ்தான், அதிபரே, நீர் அனுப்ப வேண்டாம் வர்ணக் கற்களை – என்னை ‘மூடியிருப்பது போதும் – இன்னும் ஆழத்தில் மூடவா? வேண்டாம். வேண்டாம்! என்று கையெடுத்துக் கும்பிட்டிருக்கும்.

அந்நிய நாட்டு அரசியல்வாதிகளே, நீங்களே இந்திய மண்ணில் எடுத்தடி வைத்ததும் என் சமாதிக்கு அழைத்து வந்து, பூச்செண்டுகளைத் தந்து என் சமாதிமீது வைக்கச் சொல்லுகிறார்களே, அதைக் கண்டு மயங்கிவிடாதீர்கள். என் சமாதி அவர்களுக்கொரு ‘லேபிள்‘ – அவ்வளவுதான் என்று அழுத வண்ணம் கூறாமலிருக்காது.

அது, எங்கே பேசுகிறது? சமாதி பேசாதல்லவா! அந்தத் துணிவினால்தான், கடந்த 30ந் தேதியன்று காங்கிரஸ் தலைவர்கள், ஆங்காங்கும் அவருடைய நினைவு நாளைக் கொண்டாடியிருக்கின்றனர்.

எந்த ஆண்டையும்விட இந்த ஆண்டு, உத்தமர் காந்தியாரின் நினைவுநாளும், குடியரசு தினமும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றன. பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் அதிகமான வேட்டு முழக்கம், வாண வேடிக்கைகளைச் செய்வர். பழைய சங்குதானே, நமது காங்கிரஸ் தலைவர்களுக்கு இருக்கும் சொத்து. ஆகவே, அதிவிமரிசையாகவே செய்யலாம்.

காசு தருவோர் உண்டு! சர்க்கார் பொக்கிஷம், கைவசம்! விளம்பர வசதிகள்! இத்தனையும் இருப்பதால் ஏகச் சிறப்புடனே செய்ய முடியும்.

செய்யட்டும்! ஆனால், அப்படிச் செய்வதன் மூலம், இவர்கள் நாடாத்தும் அக்கிரமத்துக்கு, மக்கள் தலைசாய்த்துவிடவா செய்வர்? காந்தியடிகளின் ‘ஹரிஜன்‘ ஏடு ஆவடி விழாவுக்குமுன், அகம்நொந்து தீட்டிற்று, ‘ஐயோ இவ்வளவு மாறிவிட்டார்களே காங்கிரஸ்காரர்கள்‘ என்று.

“எங்கள் சுயரூபத்தை இன்னும் கண்டுகொள்ளவில்லை. அரிஜன்-இதோ“, என விளக்குவதுபோல, ஆவடியில், ஒரு முக்கியமான விஷயத்தில் அனைத்திந்தியத் தலைவர்களும் நடந்து கொண்டிருக்கின்றனர்.

அன்பர் நேரு, அந்தத் தீர்மானத்தைத் கண்டதும், கனல் பொறி கிளம்ப கர்ஜித்தாராம்!

“என் ஆட்சி என்னாவது? என்றாராம். குடியரசுக் குழந்தையைக் கொன்றுவிடுவார்களே?“ – என்று கர்ஜித்தாராம்.

“இப்படிப்பட்ட தீர்மானங்களைக் கொண்டுவருவது சிறுபிள்ளைத் தனம்“, என்றாராம்.

சீறினாராம், சினந்தாராம்! செச்சே! என்றாராம்.

அவ்வளவு எரிச்சலுக்குக் காரணமான, தீர்மானம் இது “நாட்டில் ஏற்படும் துப்பாக்கிப் பிரயோகங்களால் நமது சுயராஜ்யத்தின் கீர்த்திக்கே பங்கம் விளைகின்றன. ஆகையால் எங்காவது போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தால் அதுபற்றி விசாரிக்க ஒரு நிரந்தரக் குழு இருக்கவேண்டும். இந்தக்குழு துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்றால் உடனுக்குடன் விசாரித்து மக்களுக்கு விபரங்களைத் தெரிவிக்க வேண்டும். அதிகாரிகள் வேண்டுமென்றே செய்தார்களா இல்லையா என்பதை அப்போதுதான் நாம் கண்டுபிடிக்க முடியும்“ இதுதான் தீர்மானம்! கொண்டுவந்தவர், ஜம்னாதாஸ் பட்டேல் எனும் குஜராத் வாசி.

இந்தத் தீர்மனத்துக்காகத்தான் – நேருவின் கண்களில் கனல்! ஏனைய மந்திரிகளின் மனதில் எரிச்சல்!

‘துப்பாக்கிப் பிரயோகம் பற்றி விசாரிக்க ஒரு நிரந்தரக் குழு, இது தீர்மானம்.

“இது கூடாது! கடுமையாக எதிர்க்கிறேன் – என்று பண்டிதரின் கர்ஜனை, இதனால், சர்க்காரே இயங்க முடியாத நிலைமைக்கு, ஆளாக வேண்டுமே. ஐய்யோ! - என்று அங்கலாய்த்திருக்கிறார், பண்டிதர்.

“வேட்டுச் சப்தம் வேண்டாம் நாட்டு மக்கள் என்ன நாய்களா, பறவைகளா?“ – என்கிறார் பட்டேல்.

“அது எப்படி சாத்யம்! துப்பாக்கியின் குண்டுகள் இல்லை யென்றால் துரைத்தனம் சரியாக நடக்குமோ!“ என்கிறார் பண்டிதர்.

சுயராஜ்யத்துக்குப் பின்பு நாட்டில் வெடித்த துப்பாக்கிச் சப்தங்களையும், குண்டடிபட்டு வெந்து போன குடும்பங்களின் கணக்கையும், எண்ணினால் மனம் பதறும்! துப்பாக்கியிருக்கிறது எனும் துணிவில், சேலம் சிறைக்குள் 29 பிணங்களை எண்ணிக் கொள் என்று சுட்டும் தள்ளினர். இவ்வளவு அக்கிரமங்களும் தேவையாம் அப்போதுதான் அராஜக சக்திகளுக்குப் பயம் ஏற்படுமாம் அன்பர் நேரு தெரிவிக்கிறார்.

இரத்தமும் பிணமும் இவரது ஆட்சி, ஆபத்து இல்லாமலிப்பதற்குக் கொட்டப்படவேண்டுமாம்.

நேரு, மிகப் பெரியவர்! - மறுப்பதற்கில்லை ஆனால், ஆட்சியின் ஆசையில், அந்த நெஞ்சமும் நெருப்பாகியிருக்கிற அலங்கோலத்தை என்னவென்று சொல்வது? துப்பாக்கிப் பிரயோகம் வேண்டுமாம்! சொல்லுகின்றார், காந்தியடிகளின் சீடர்.

ஆம்! ஆம்! அவசியம் துப்பாக்கிப் பிரயோகம் வேண்டும். அது இல்லையென்றால் ஆபத்து! ஆபத்து!‘ என்று நேருவின் சகாக்களும், தலையசைத்தனரேயொழிய எவரும் எதிர்வார்த்தை கூடக் கூறவில்லை.

அதே தலைவர்கள்தான், உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளில் “அகிம்சா மார்க்கமே, நமது மார்க்கம்! அதுவே, உலகுய்யும் மார்க்கம்!“ என்று இமயமுதல், குமரிவரை மூழ்க்கியிருக்கின்றனர். இந்த அலங்கோலத்தைக் காணும்போது காந்தியடிகளின் சமாதி, வாயிருந்தால் ஓவென அலறாதா! கண்கள் திறந்திருந்தால், துடித்து வடிக்காதா கண்ணீர்!

தாய்மை – சத்யம் – அன்பு – அகிம்சை, இதுவே ‘சர்வோதயம் என்கிறார், இந்திய குடியரசுத் தலைவர். அண்ணலின் வழி இதுவே – என்று ஆராதனை புரியாத தலைவர்களும் கிடையாது. எனினும், ஜம்னாதாஸ் பட்டேல் தீர்மானத்துக்கு எதிர்ப்பு, அதுவும், எப்படிப்பட்ட எதிர்ப்பு? நேரு, கடுமையாக எதிர்த்தாராம் அகிம்சா மார்க்க வீரர் – உலகத்தில் போரும் பூசலும் குருதிக் குளமும் ஏன் எனக் கூவும் வீரர், கடுமையாக எதிர்த்துக் கைவிடச் செய்தாராம்.

காங்கிரஸ் தலைவர்கள் கரம் தூக்கி, ஆமோதித்தனராம்.

“ஜாலியனவ்லாபாக்“ – கண்ட கட்சி, துப்பாக்கித் துரைத்தனத்துக்கு வக்காலத்து வாங்குகிறது.

குண்டடிபட்டு, கோர மரணம் அடைந்த ‘தியாகிகள் தினம்‘ கொண்டாடும் கட்சி, குண்டுகளால்தான் கோலோச்ச முடியும் என நம்புகிறது.

எத்தனைபேர், சுட்டுக் கொல்லப்பட்டனர், வெள்ளையரால் அதனை எதிர்த்து என்னென்ன முழக்கம் செய்தனர். இவர்கள் – இப்போது, துப்பாக்கி வேண்டுமாம் – அப்போதுதான் துரைத்தனம் நடைபெறுமாம்.

“இதனை, யார் நம்புவது? துப்பாக்கி முழக்கம் கேட்காமலே அரசாளும் நாடுகளை நாம் பார்த்ததில்லை எனும் நினைப்பில் பேசுகிறாரா. இந்தப் பண்டிதர்? இந்தியாவில் ஏதோ ஒரு நொண்டிச்சாக்குக் கூறி துப்பாக்கிப் பிரயோகங்கள் அடிக்கடி நடக்கின்றன. பிரிட்டிஷார்கூட இப்படிச் செய்ததில்லை. துப்பாக்கிப்பிரயோகம் இல்லையென்றால் சர்க்கார் நடைபெறுவதே கஷ்டம் எனக்கருதுகின்றனர். இதைநான் உண்மையாக மறுக்கிறேன். 1919ல் ஆஸ்திரேலியாவில் கோபாவேசம் கொண்ட கூட்டம் நான்கு போலீஸ்காரர்களைக் கொன்றது. அப்போதுகூடத் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற வில்லை. இந்தியாவில்தான் மனித உயிரின் மதிப்பு மிகமிகக் குறைவாக மதிப்பிடப்படுகிறது. மக்கள் ஈக்கள்போல் நடத்தப்படுகின்றனர்.“

ஈக்கள்போல, நடத்தப்படுகின்றனர், என்கிறார் சோஷியஸ்டு தோழல் லோகியா! துப்பாக்கிப் பிரயோகம் இல்லாமல் ஏன் நடத்த முடியாது சர்க்காரை? எனவும் கேட்கிறார்!

ஒரு அரசியல் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற வேண்டிய அளவுக்கு மக்கள் மனம் எரிமலையாவதேன்? என்பதே, விவாதத்துக்குரிய, பிரச்னையாகும். அந்தப் பிரச்னையைத் தீர்த்திட கையாலாகாதோர், ‘கனம்‘களாக ஏனிருக்க வேண்டும்? – என்பது சிந்தனைக்குரிய விஷயம் இதனை மறந்து நேரு, துப்பாக்கி வேண்டும் துரைத்தனம் நடாத்த எனக்கோருகிறார்!

இந்தியாவைவிட அரசியல் பிரபுக்கள் அதிகம் நிரம்பிய இடம் பிரிட்டன் அங்கே, இந்த எழுபது ஆண்டுக் காலத்தில் ஒரு தடவைகூடத் துப்பாக்கி வெடித்ததில்லையாம். துப்பாக்கியை, நேரு பரம்பரைக்குத் தந்துவிட்டுப் போன வெள்ளையன் நாட்டிலே – இந்த 70 ஆண்டுக்காலத்தில், ஒருமுறைகூட துப்பாக்கி வெடித்ததில்லையாம். ஆனால், பண்டித நேருவின் ஏழாண்டு ஆட்சியிலே, எத்தனை முறை துப்பாக்கிகள் வெடித்தது தெரியுமா? இதோ பாருங்கள் பட்டியலை.

1947-லிருந்து 1950-க்குள் மட்டும் 1872 தடவைகள் துப்பாக்கிகள் முழங்கின! இழந்த உயிர்கள் 37841 காயமடைந்தோர் 9342! இதில், குன்றத்தூரும், கல்லக்குடியும், தூத்துக்குடியும் சேரவில்லை. அவைகளையெல்லாம் சேர்த்து 1950-க்குப் பிறகு நடந்த துப்பாக்கிப் பிரயோகங்களையும் கணக்கெடுத்தால் நெஞ்சு பதறும்.

இது போதாதாம், இன்னும் வேட்டு முழக்கம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமாம்! ‘காங்கிரஸ்‘ கேட்கிறது.

பட்டேல், கொண்டுவந்த தீர்மானத்தில், ‘துப்பாக்கிப் பிரயோகம் கூடாது‘ என்றுகூடக் கூறவில்லை.

‘நடைபெற்றதுபற்றி விசாரிக்க ஒரு நிரந்தரக் குழு வேண்டும்‘ என்பதுதான் தீர்மானம்.

இதற்குக் கண்களில், கனல், குரலில், அனல்!கோபித்துக் கொண்டு சீறியிருக்கிறார், பண்டிதர்.

இந்த இலட்சணத்தில், குடியரசின் சாதனைகளைப்பற்றி கேளிக்கைகளும், உத்தமரின் நினைவுகுறித்து ஊர்வலமும் வேடிக்கைகளும்.

உண்மையில், இந்த மனத்துணிவு, யாருக்கும் வராது? திருடியவன்கூட திருடிய வீட்டுப்பக்கம் செல்ல அஞ்சுவான்! காங்கிரஸ் தலைவர்களோ, காந்தியாரின் ஆசைகளை ஆழப் புதைத்தபடி, அவரது திருநாப பஜனையைச் சரிவரச் செய்கின்றனர்.

காந்தியார் உயிரோடிருந்திருந்தால், நிச்சயம், ஆவடியின் வாயிலில் படுத்துக்கொண்டு, ‘அக்கிரமக்காரர்களே! துப்பாக்கியைத் தொடேன் என்று சத்யம் செய்து கொடுங்கள் இல்லையென்றால், என்னை மிதித்துத் துவைத்துக் கொண்டு நடந்து போங்கள்“ என்று சத்யாக்கிரகம் துவங்கியிருப்பார்.

சுடாமல்ஆட்சி நடத்த முடியாதாமே, இந்தச் சுதந்திர ரூபருக்கு.

மனித வேட்டையில்லாமல், சுயராஜ்யம் வாழ முடியாதமே, மோதிலாலின் புதல்வருக்கு.

இந்த அழகில் – சமாதானத் தூதர்! சமரசச் சின்னம்! என்றெல்லாம் புகழ் மாலை! போற்றற்பாக்கள்.

அவருக்கு துப்பாக்கியில்லாமல், துரைத்தனம் நடத்த முடியாதாம், துணிவோடு தெரிவிக்கிறார்! அதே நேரத்தில் அன்பே என் வாழ்வு என்று குத்தும் வெட்டும் நடைபெற்ற நேரத்தில் ‘நவகாளி‘ சென்ற உத்தமரின் பெயர் கூறி விழக்களும் நடத்துகின்றனர்.

முன்பும் செய்தனர் – ஆனால், செய்யும் கொடுமையைச் சரியெனச் சொல்லும் துணிவு இல்லாமலிருந்தது. இப்போது அந்தத் துணிவு அபரிமிதமாக வந்துவிட்டது. அதனால் பகிரங்கமாகவே தெரிவிக்கிறார். துப்பாக்கி தேவை, சுயராஜ்யம் செய்ய – என்று என்ன துணிவு – என்ன அக்கிரமம் இதனால் தான், அவரது சகோதரி கிருஷ்ணா, “என் அண்ணன் ஒரு சர்வாதிகாரி ஆகி வருகிறார்“ என்று தெரிவித்தார் போலும்.

இந்த ‘சர்வாதிகாரி‘யின் போக்கையும் நெஞ்சுரத்தையும் காணும்போது, நிச்சயம் உண்மையான அகிம்சாவாதிகள், கண்ணீர் வடிக்க வேண்டும் – உத்தமரின் சமாதியினருகே நெருங்காதீர், அதனை மாசுபடுத்தாதீர், என இவர்களை எச்சரிக்க வேண்டும்.

ஆவடியில் நேரு பேசி வாரம் இரண்டாகிறது. ஒரு எதிர்ப்புக் குரல்கூட இல்லை! பூஜ்யர் எனப்போற்றப்படும் வினோபாபாவே போன்றோரின் மனதில், ஒருதுடிப்புக் கூட ஏற்படவில்லை! அவரவர்கள், அவரவர் சங்கு ஊதும் செயல், தடைபடாது நடந்தால் போதுமெனக் கருதுகின்றனர் – நேருவோ, சிரிப்பும் சிங்காரமும் கூத்தாட, பவனி வருகிறார்! பாராட்டிப் பேசவும் செய்கிறார், உத்தமர் காந்தியாரின் உபதேசங்களை! விந்தையான நாடு, இது மிகமிக விந்தையான பூமி, இது.

திராவிட நாடு – 6-2-55