அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சந்தேகமில்லை! சந்தேகமில்லை!

``தன்னானத்தானா, தன்னானத்தானா,
தன்னானத் தானா, தன்னானத்தானா’’

என்ன பாரதா, தன்னானாவிலே ஆரம்பிக் கிறாய் என்று கேட்கிறீர்களா? நான் கேட்ட பாட்டை நீங்களும் கேட்டிருந்தால், என்னைப் போலத்தான் அந்த மெட்டையும், அதிலே அமைக்கப்பட்டுள்ள பாட்டையும், பாடிக் கொண்டிருப்பீர்கள் கேளுங்கள் பாட்டை. மேலே இருக்கும் மெட்டிலே பொருத்திப் பாடியும் பாருங்கள்.

``சந்தேகமில்லை.....
...... சந்தேகமில்லை
எதற்கும் என்றும் எள்ளளவேனும்
சந்தேகமில்லை......
..... சந்தேகமில்லை..
காக்கா, கருப்பு- சந்தேகமில்லை,
கடல் நீர் உப்பு - சந்தேகமில்லை
ஆண் பிள்ளைக்கு மீசை முளைக்கும்
- சந்தேகமில்லை
அது கிடையாது பொம்பிளைக்கு
-சந்தேகமில்லை
சந்தேகமில்லை, சந்தேகமில்லை
அப்பன்கூடப் பிறந்தவள் அத்தை
- சந்தேகமில்லை
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா
- சந்தேகமில்லை..

என்ன இது, பைத்தியக்காரத்தனமான பாட்டாக இருக்கே, காக்கா கருப்பாக இருப்பதும், கடல்நீர் உப்பாக இருப்பதும், அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்பதும், யாருக்குத் தெரியாது? இதிலே சந்தேகம் இல்லை என்று கூறுவானேன்? இது என்ன பைத்தியக்காரத்தன மான பாட்டு. இந்தப் பைத்யக்காரத்தனமான பாட்டுக்கு நீ பக்க மேளம் வாசிக்கிறாயே, என்ன விஷயம்? என்று கேட்கத்தான் தோன்றும் உங்களுக்கு.

பைத்யக்காரத்தனமான பாட்டாகத் தோன்றுகிறதல்லவா அந்தப் பாட்டு. சரி, தோழர் களே, அது பைத்யக்காரன் பாடுவதற்காகவே கட்டப்பட்ட பாட்டு, அதிலே இருக்கும் பொருத்த மிருக்கிறதே, அதனைக் கண்டு பாராட்டியே நான் அப்பாட்டைத் தீட்டினேன். பைத்தியக்காரன் என்ன பாடுவான் என்பதை யூகித்து, அழகாக அமைத்திருக்கிறார், இதுபோல, அந்த ஒட்டி உலந்து போய்க் காற்றடித்தால் கீழே விழுந்து விடும்படியான உருவமைந்த, உடுமலை நாராயண கவி.
வசந்தன்- பைத்தியக்காரன். அரண் மனையைத் தனது சாகசத்தால் ஆட்டிப் படைக்கும் வசந்த சேனையின் மகன். பைத்யக் காரன், பாடுகிறான் இப்பாட்டை. பக்கத்திலே விகடன் நின்று பாடுகிறான் கூட. பாட்டைக் கேட்டுச் சிரித்தான் அன்று ஏற்பட்ட பக்க வாட்டு வலி இன்னும் குறையவில்லை.

விழுந்து சிரித்தால் வயிற்றை வலிக்கும்
சந்தேகமில்லை
உங்களுக்கும் அதுதான் நேரும்
சந்தேகமில்லை
என்று எனக்குக் கூடப் பாடலாமா என்று தோன்றுகிறது.

பாடட்டும், மெட்டும் இருக்கட்டும், உடுமலையின் கவிதையை, உணர்ச்சியோடு பாடி மகிழ்வித்தது யார், உனக்குத்தான் நகைச் சுவைக்கு என்.எஸ்.கே.தான் மாடலாயிற்றே, இது யார் பாடினது என்று கேட்கிறீர்களா? என்.எஸ்.கே. பாடாவிட்டாலும், அவருடைய கோஷ்டி பாடியது.

``யார், கோஷ்டி? கிருஷ்ணமூர்த்தியா? புளி மூட்டையா? செல்லமுத்துவா?’’

இல்லை, அது அவருடைய சினிமா, கிந்தனார், கோஷ்டி, நான் மேலே தீட்டியது, அவருடைய நாடகக் கோஷ்டியின் நகைச் சுவைப் பாட்டு. உங்களுக்குத்தான் தெரியுமே, நண்பர் என்.எஸ்.கிருஷ்ணன் இப்போது மங்கள பாலகான சபையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அதிலேதான் இப்பாட்டு. நடிகர்கள் பி.டி.சம்பந்தம் (வசந்தன்), மாதவன் (விகடன்) எனும் இருவரும் சேர்ந்துபாடி, கொட்டகையிலே சிரிப்பை அள்ளி அள்ளி வீசி விடுகிறார்கள்.

``மனோஹரா’’ நாடகம் நடக்கிறது. 9-ம் தேதியிலிருந்து, அதிலே வரும் நகைச்சுவை பகுதி ஒன்றே, பல நாட்கள் சென்னை கண்டு கண்டு களித்து, நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்று சென்று விருந்துண்டு வரும் விதமாக இருக்கிறது. அவ்வளவுதானா? வேறே இல்லையா? பேஷ். நகைச்சுவையுடன் இசைச் சுவை போட்டியிடுகிறது. அதைப் போட்டிக்கு இழுத்து விடுகிறது நடிப்பு. இவ்வளவையும் நான் மிஞ்சி விடுவேன் என்று மிரட்டுகிறது, ஒலியக்காரர் மாதவன் அவர்கள், மங்கள பாலகான சபையாருக்குத் தனித் திறமையுடன் தயாரித்தளிக்கும் காட்சி ஜோடனைகள், கண்கவர் உடைகள், இசைவிருந்து, இனிமை, புதுமை இரண்டும் கலந்ந்தது. இவை அவ்வளவையும் உடன் இருந்து கவனித்து, உருவாக்கிக் கண்டு களித்துவிட்டுப் பிறகே நமது சினிமாக் காரியத்தைக் கவனிக்கலானார் நகைச்சுவை அரசர்.

இசை விருந்து என்று கூறினேன். அது பொருத்தமான வாசகமா என்று கேட்பீர்கள். எம்.எஸ்.பி.எஸ். சபையியிலே பல வருஷங் களாக நடித்துப் புகழ் பெற்று, இப்போது `பூம்பாலை’ என்ற படத்திலே நடித்து ரசிகர் களைப் பூரிக்கச் செய்த, நண்பர் கே.ஆர். இராமசாமிதான் மனோஹரன், இசை, பிறகு விருந்தாக இராமல் வேறு எப்படி இருக்க முடியும்?

மனோஹரனாக கே.ஆர்.இராமசாமியை இரும்புச் சங்கிலியாற் பிணைத்து, இழுத்துக் கொண்டு வருகிறபோது, அவருடைய நடிப்பை யும், மற்றப் பகுதிகளிலே அவருடைய இசை யையும், கண்டும் கேட்டும் களித்த நான், ஒன்று எண்ணினேன், என் நண்பர் இராமசாமி, இந்த இசைத் திறனையும் நடிப்புத் திறனையும், வளமாக வைத்துக் கொண்டால், விரைவிலே, பொற் சங்கிலியால் அவரைப் பிணைத்து இழுத்துக் கொண்டு வந்து நிறுத்துவார்கள் ரசிகர் கள். நண்பர் இராமசாமிக்கு, நல்ல சாரீரம், இசைத் திறன் இனிமை இருக்கிறது. என் போல் அவரோடு பழகியவர்களுக்குத் தெரியும். அவருடைய குணமும் மணமுடையதே, மேலும் அவர் நகைச்சுவை அரசரின் மேற்பார்வையிலே இருக்கிறார், வளர்ச்சிக்கு வேறு உறுதிமொழி தேவையில்லை. மனோஹரனின் நண்பன் இராஜப் பிரியனாக நடிக்கிறார், தமிழரின் பிரியத்தைத் தட்டிப்பறித்த தோழர் டி.வி.நாரா யணசாமி, தெளிவான உச்சரிப்பு, நேர்த்தியா நடிப்பு, நடிக உலகுக்கு உகந்தஒளிவிடு கண்கள், புன்னகை தவழும் முகம், திட்டமான உடலமைப்பு, தொழிலிலே அக்கறை, தோழர் களிடம் பாசம், படிப்பிலே பிரியம், பண்பிலே பயிற்சி, இவ்வளவுடன் இன்று டி.வி.நாராயண சாமி, என்.எஸ்.கே. கலாசாலையிலே ஓர் மாணவனாகச் சேர்ந்துவிட்டார். அவருடைய நடிப்பை நாடு மேலும் மேலும் கண்டு களிக்கும் காலம் விரைவிலே உளது. புருஷோத்தமனாக நடிக்கிறார், டி.பாலசுப்பிரமணியம். மன்னர்கள், கெம்பீரமாக இருப்பார்கள் என்று கதை படிக்கிறோம், நமது கண்முன் உள்ள பல மன்னர் களிடம் அதனைக் காண முடிவதில்லை. டி.பாலசுப்பிரமணியம் அவர்கள், மன்னனாக நடிக்கும்போது, நிஜ ராஜாக்கள் கண்டால், அடடா, நமக்கு இந்த ஆசாமி பாடம் கற்றுக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று யோசிப்பார்கள். அத்தனை அழகாக எடுத்துக்கொண்ட பாத்திரத் தின் இயல்பையும், கதையின் போக்கையும், உணர்ந்து நடிக்கிறார். தோழர் கே.டி.சந்தானம் சத்திய சீலர் வேடத்திலே, சாந்தசீலராக நடித்துப் புன்னகை தவழும் முகத்தைக் காட்டி, பொறுப்பும், அன்பும் செறிந்த மந்திரி எப்படி இருப்பார் என்பதைக் காட்டுகிறார். வசந்த சேனையின் நடிப்பும் நேர்த்தியே! விஜயாளாக நடிக்கும் சிறுமியின், நாதமும், நடிப்பும், சுவையுடையதாக இருக்கிறது. மகிழ்வால் மான்குட்டி போல் துள்ளியும், சோகத்தால் துவண்ட தாமரை போலாகியும், நடிக்கும்போது இப்படிப்பட்ட `விஜயாளை’ கொடுமையும் செய்கிறாளே என்று கோபம் வரும்! பாடல்கள் புதிய மெட்டிலே உள்ளன. கேட்க இனிக்கும் விதமாக அமைந் துள்ளன. பத்மாவதியாக நடித்துப் பதியிடம் பரிவும் மகளிடம் மட்டற்ற அன்பும், பொறாமை யும், விளங்க நடிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. மயில் நடனமும், வசந்தத் திருவிழாவும், நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. நான் அதிகம் கூறுவானேன், நீங்களே போய், போர்த்து ரசித்து விட்டுத்தான் வரப்போகிறீர்கள், ``மனோ ஹரா’’வை.

மங்கள பாலகான சபையின் மறுமலர்ச்சி யிலே, இது மனோரஞ்சிதமாக இருக்கிறது. ``போய்ப் பாருங்கள், நேர்த்தியான நாடகமே இது சந்தேகமில்லை என்று பாடிக்கொண்டு வருவீர்கள். சென்னை ஒற்றைவாடை தியேட் டரில் நடக்கிறது. ``மனோஹரா’.

(திராவிட நாடு - 17.9.1944)