அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சாந்திஸ்தான்!

அந்த வால்!
சசீகரப் பார்வை!
வளைந்துள்ள உடல்!
குதித்தோடும் குணம்
கோபுரத்தின் மீதும்
தாவும் ஆற்றல்!

குரங்காரே! கூறுவேன் கேண்மின்! உமது அழகுக்கு ஈடு, இந்தக் குவலயத்திலே இல்லை! ஊர் அமைத்தோம், பேர் அத்தோம், உயர் அரசும் அமைத்தோம் என்று மானிடர் பிதற்றுவர் பெருமைக்குரிய காரியங்களென்று கருதி! இருக்கட்டும், அவர்கள், இக்காரியங்களிலே பெருமைகூடப் பெறட்டும், பெற்றால் மட்டும் என்ன? உம்மை அவர்கள் நிகர்த்தவராவரோ? கதித்து ஆடத்தெரியுமா? கோபுரம் ஏற முடியுமா? தலையிலே பாகை கட்டி, வால் அமைப்பர். ஆனால், உமக்கு இறைவன் அருளிய வாலுக்கு அது ஈடாகுமா? உமது பார்வை உண்டா, அந்த மாந்தருக்கு! வானரரே! உமக்கு அவர் ஈடாகார்!

பாரதியார், குரங்காரின் உயர்வைக் குயிலி பாடியதாகக் கூறியிருக்கிறார், குயில் என்ற இனிய, உயரிய பாடலிலே! தத்துவம் கூற அவர் இதனைச் செப்பினார் என்றபோதிலும் குரங்கின் இலட்சண்த்தைப் புகழ வேண்டும் என்று, ஒரு குறும்புக்காரன் எண்ணினால் பாரதியாரின் குயிலிடம் பாடங் கேட்கவேண்டும். அவ்வளவு அழகாக அந்தக் குயில், குரங்கின் வடிவழகையும் குண விசேஷத்தையும் கூறுகிறது. பாருங்கள் கவின் தயை - மேனியழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனியிருக்கும் கொலு நேர்த்தி தன்னிலுமே
வானரர்கள் சாதிக்கு மாந்தர் நிகராவாரோ?
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்
பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை
எட்டுடையால் மூடி யெதிருமக்கு வந்தாலும்
மீகையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம் ஆசை முத்தினைப் போலாக்க முய்னறிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும் போபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்
வேறெதைச் செய்தாலும வேகமுறப் பாய்வதிலே
வானரார் போலாவாரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை யிதற்குநிக ராமோ?
பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கந்தைபோல் வேகமுறத் தாவுகையில் வீசி யெழுவதற்கே தெய்வங்கொடுத்த திருவாலைப் போலாமோ?
சைவசுத்த போசனமும், சாதுரியப் பார்வைகளும்
வானரர்போற் சாதியொன்று மண்றலகின் மீதுளரோ?

பாடலிலே, வெறும் நகைச்சுவை மட்டுமில்லை வேதாந்தமும் உண்டு என்ற கூறுவோர் உளர். இருக்கலாம். இருக்கட்டும், ஆனால், எனக்கு இதிலுள்ள நகைச்சுவையை விட, இது கிளப்பும் வேறோர் கருத்து அதிகச் சுவை பயப்பதாக இருக்கிறது. என்ன என்று கேட்வீர்? கேட்பானேன்! நானே கூறிவிடுகிறேன், குரங்கு இக்கவிதையைக் கேட்டிடும் சக்தி பெற்றுக் கேட்டபிறகு, மானிடரிடம் மல்லுக்கு நின்று, ஓய்! மானிடரே! என்ன அற்புதங்களை நீவிர் செய்தாலும் சரி! எமக்கு நீவிர் ஈடாகமாட்டீர். இதோ பாரும், எமது வாலை! இதற்கு ஈடாக, ஏது உம்மிடம் என்று அறை கூவினால், பரிதாபத்திற்குரிய மனிடர் என்ன பதில் கூற முடியும்? குரங்கினம் கவியின் சொல்கேட்டு நம்மிடம் வம்புக்கு வராத. ஆனால், கவிகள், கதைகூறிகள் ஆகியோரின் மொழிகேட்டுக் கொண்டு, வானர இனமல்ல, சாதாரண நரருமல்ல, பூதேவர் கூட்டமிருக்கிறதே, அந்தக் கும்பல் வந்துவிடுகிறது போருக்கு! வானரத்தின் வடிவழகுபற்றிப் பாரதியார் பாடியதுபோல, இந்த வேதியக் கூட்டம், தமக்குள்ள இலட்சணாதிகளை அந்த அழகான குடுமி! அலங்கார நூல்! அவசரமாக நடந்தால் தடுக்கும் ஆடைக்கட்டு! அரைத்த பூச்சுகளை அகல நீளமாக அப்பிக் கொண்டிருக்கும் அழகு! குளத்துத் தவளைபோல் கூவி ஆண்டவனைக் கூப்பிடும் நேர்த்தி! மனிதனைக் கண்டதும், எட்ட நில் என்று கட்டளையிடும் காட்டரசக் காட்சி! எனும் இன்னோரன்ன இலட்சணங்களை, இன்றும், நாகரிகம் வளர்ந்தோங்கிய இந்நாளிலும், சிறப்பின் சின்னங்களென்றும், சீலத்துக்சு சான்றுகளென்றும் குலப்பெருமைக்குரிய குறிகளென்றும் கூறிக்கொள்ளவும், இவைகளினாலேயே தமக்கு, பிரமதேஜஸ் இருப்பதாக உபதேகம் புரியவும் அவர்களில் பலருக்குத் துணிவு இருக்கிறது அவர்களின் குருமார்களும் குரங்கின் குணவிசேஷத்தைக் குயில் பாடியபடி, அல்ல. குயில் கேலி மொழி கூறிற்று, மதிகெட்ட குரங்குக்கு அது புரியவில்லை. எனவே, பூரித்தது - குருமார்கள், உண்மையாகவே, ஆரிய வேடத்திலேயும் நடவடிக்கைகளிலேயும் மேன்மையும் மகிமையும், இருப்பதாக நம்பிக் கொண்டு பிறரையும் நம்ப வைக்கிறார்கள்.

பாம்பீச்சூட் அணிந்து கொண்டு, பாட்டா கம்பெனி ஷுவுடன் பம்பாய் கீ பேடி படத்தைப் பார்க்க, பார்க்கத் துரையுடன், பானம் அருந்திவிட்டுப் போகும், பஞ்சாபகேச சாஸ்திரியாருக்கு பஞ்சகர்ச்சம் உச்சிக்குடுமி சந்தியாவந்தனம் எனும் ஆரியக் காரித்தை கவனப்படுத்துவதே கேவலம். குரு கவனப்படுத்துகிறார். சாஸ்திரிகளும் ததாஸ்து கூறுகிறார். ஆனால், ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கிறார், வைத்தாச்சாம் இதுகள் குலாச்சாரத்தை பென்ஷன் வாங்கியவுடனே செய்கிறன் என்று. அதன்படியே பெஷ்ன் வாங்கியவுடனே கிராப்பு உச்சுக்குடுமி ஆகிவிடுகிறது. ஷுட்டு மருமகனுக்குத் தரப்பட்டு இவர் மதுரை வேட்டியால் பஞ்சகச்சம் கட்டிக் கொள்கிறார். பாக்கெட் டைரியை பழைய கணக்கு எழுத பங்கஜவல்லிக்குக் கொடுத்துவிட்டு பாக்கெட் சைஸ் பகவத் கீதையை எடுததுக் கொள்கிறார். பார்க்கர் துரைக்குப் பதிலாக பாலகிருஷ்ணன் அய்யரை ஜோடி சேர்த்துக கொள்கிறார். சினிமாவுக்குப் பதில் சிரவணம் செய்யச் செய்கிறார். சினிமாவுக்குப் பதில் சிரவணம் செய்யச் செல்கிறார். இந்த மறுபிறவி அஇரு பிறப்பாளருக்கு ஏறக்குறைய 50ஆம் வயதிலே ஆரம்பம் ஆகிவிடுகிறது. இதற்குக் காரணம் இவர்கள் வேறு ஆச்சாரங்களிலே ஈடுபட்டிருந்த நாட்களிலேயும், குலாச்சாரத்தை மறந்ததில்லை என்பது மட்டுமல்ல, அந்தக் குலாச்சாரத்தைக் கவனப்படுத்த அவர்களின் குருமார்கள் தவறுவதில்லை.

ஆரியர்கள் தங்கள் குலாச்சாரத்திலே, பிரேமை கொள்வதுகூட அவ்வளவு வேடிக்கை இல்லை. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். ஆனால், நம்மவர்களிலே சிலர்கூட, பார்பனர்கள் பழைய காலத்திலே ஆச்சார அனுஷ்டானத்டு, நெமநிஷ்டை தவறாமல் இருந்தனர். எனவே, அவர்களுக்குக் கவுரவம் தரப்பட்டது உயர்வாக இருந்தனர். இது கலிகாலம் பிராமணர்கள், ஆச்சாரத்தை இழந்துவிட்டனர். எனவே, அவர்களுக்கிறருந்த பெருமை போய்விட்டது என்று பேசுகிறார்களே அது மிக மிக வேடிக்கை! மற்றொன்று, பிராமணர்கள் கெட்டுப் போய்விட்டார்கள். நாம் அவர்களைப்போல ஆச்சாரத்தை இழந்துவிடக்கூடாது. நாம் நமது குலாச்சாரத்தின்படி நடக்கவேண்டும் என்று நம்மவரிலே கூறிக்கொண்டு, வேடமணியத் தொடங்குவது.

இவ்வளவு வேடிக்கைகளுக்கும் காரணம், இந்த ஆச்சாரங்களைப்பற்றி விணான பெருமைகள் புகுத்தப்பட்டிருப்பதுதான். ஆரியர்கள் ஆதி நாட்களிலே, ஆச்சாரங்களோடு ஆஸ்ரமங்களிலே வாழ்ந்தபோதும், இன்று இருப்பதைவிட, இம்மி அளவு பொது நலனுக்காக வாழ்ந்தார்கள் என்றோ, உழைத்தார்கள் என்றோ கூற ஆதாரம் ஏதுமில்லை, குளக்கரையிலே கூடினபோதும் சரி, கோல்கொண்டோனின் கூடத்திலே உலாவியபோதும் சரி, அவர்கள், ஊரார் உழைப்பிலே வாழ வழி அமைத்துக்கொண்டு வாழ்ந்தனர் என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளனவேயன்றி ஊருக்குழைத்தனர் என்றோ, உன்னதமான சேவை செய்தனர் என்றோ ஆதாரம் கிடையாது. புலித்தோல் மீதமர்ந்திருந்த காலையில் பூபதிகளை அடிமை கொண்டனர், இன்ற பாராளுமன்றங்களிலே புகுந்து கொண்டு பரிபாலிப்பவரைப் பாய்ச்சிகைகளாக்கிச் சாணக்கிய சதுரங்கமாடுகின்றனர். அந்த நாளிலே ஏதோ, பயனுள்ள காரியம் செய்தனர் போலப் பேசப்படுவது, ஓர் புதிய புரட்டு! இதை நம்பி மோசம் போக வேண்டாம் என்ற கூற ஆசைப் படுகிறேன். குலாச்சாரப்படி நடக்கும் ஆரியனானாலும், அது தவறிய ஆரியனானாலும், நாம் அடையும் இன்னல்வேறு வேறுமல்ல, ஒன்றுக்கொன்று இளைத்ததுமல்ல! ஆச்சாரப் பிராமனன் ஆகமத்தைக் காட்டி அடக்குவான், ஆச்சாரமிழந்தவன் எந்தெந்த சமயத்துக்கும் ஏதெது கிடைக்கிறதோ, அதைக்காட்டி, சில சமயம் தேசியம், வேறு சில சமயம் சமதர்மம் இன்னும் சில சமயம் கலை, என்பனபோல எந்த ஆயுதம் கிடைத்தாலும் அதை எடுப்பான், நம்மவரை அடக்குவான், இஃதேயன்றி, ஆரியன் வேதமோதி வாழ்ந்தநாளில், யாகயோகாதிகள் செய்திருந்த நாட்களிலே, அவன் வணக்கத்துக்குரியவனாக இருந்தானென்றும், இன்று அவன் கெட்டுவிட்டதாலேயே, அவநைத் தூற்றுகிறார்கள் என்றம் பேசப்படுவது, பழைய புரட்டைப் புதிய முறையிலே புகுந்த முயற்சிக்கும் செயல் என்பதை உணர வேண்டும். இல்லையானால், ஆச்சார அனுஷ்டானத்தினால் ஆரியன் உண்மையிலேயே உயர்ந்தவனாகிவிடுகிறான் என்ற கருத்தை வளர்த்துவிடுவர்! அது பிறகு, நம்மவரின் வாழ்வை வதைக்கும் நோயாகிவிடும்.

இவ்வளவு புகழ்கிறார்களே, ஆச்சார அனுஷ்டானம் தவறாமல், ஆரியர் வாழ்ந்த அந்த நாட்களை, அதுபோது ஆரியரின் தன்மை, போக்கு, நடவடிக்கை, ஏதேனும் மனிதத் தனம் (தெய்வத்தன்மை கூடவேண்டாம்) பொருந்தியதாக இருந்ததா என்று அறிய, பழங்கால வரலாறு, புராண இதிகாரம், அவைகளின்படி அமைக்கப்பட்ட சட்டத்திட்டங்கள் ஆகியவற்றையே ஆராய்ந்து பாருங்கள்!

குலாச்சாரம் கெடாமல், ஆரியர் வாழ்ந்தனர் என்றால் அதன்பொருள், அவர்கள் சந்தியாவந்தன சத்காரியங்களைச் செய்தனர் என்பது மட்டுமில்லை. சகல குலத்தினரும, அவர்களுக்குச் சேவை செய்தனர், சேவை செய்கையில் சந்தோஷமடைந்தனர். அதற்காகவே தாங்கள் ஜென்மம், எடுத்ததாகக் கருதிக்களித்தனர், செய்த பாவம் தீர அதுவே வழியென்று நம்பினர் என்று பொருள். எனவே, ஒரு இம்மி எதிர்ப்புமின்றி, ஏகசக்ராதிபத்யம் செலுத்தினர் என்று அர்த்தம். ஆச்சாரத்தை நழுவவிடக்கூடாது என்று குருமார்கள் ஆரியருக்கு அடிக்கடி உபதேசிப்பது, அந்தப் பழைய நாளைய பரிபாலனத்தை ஆரீய பரம்பதை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காகவேயன்றி, உண்மையிலேயே அந்தப் பழைய ஆச்ரங்களிலே ஏதோ மகிமை இருப்பது என்றல்ல பொருள்.
அடுத்துக்கெடுப்பது, ஆளடிமை கொள்வது, அரசுகளை அழிப்பது, ஆணவத்தைக் கொள்வது என்பன போன்ற காரியங்களே, காவி கமண்டலதாரிகளாக அவர்கள் காட்டுக்கும் நாட்டுக்குமிடையே உலவிய காலத்திலே செய்து வந்தது. அவர்கள் காடுகளிலே வசிப்பர், அனால் அக்காடுகளிலே தஷ்டமிருகங்கள் வராதபடி பாதுகாத்துக்கொள்ள, ஒரு முயற்சியும் அவர்களுக்குக் கிடையாது. காததூரத்திலே கர்ஜனை கேட்டால் போதும். ஆரியவன் அரண்மணை சென்று, ஏ! ராஜன! என்று ஒரு அதிகாரத்தொனி கிளப்பினால் போதும், நால்வகைச் சேனையுடன் நமது ராஜாதிராஜன கிளம்பிவிடுவான். வேட்டையாடுவான்! துஷ்ட மிருகங்கள் பயமின்றி ஆரியர் வாழ்வர், ஒரு துளியும் பாடுபடாமல்! ஆரியர் யாகம் செய்வர், அதன் செலவுக்கு நமது ராஜமார்த்தாண்டர்கள் பயபக்தியுடன் பொருள் தருவர், இராஜ்யத்தை இழந்தேனும், பெண்டு பிள்ளைகளை விற்றேனும், சுடலை காத்தேனும்! ஆரியன் வேதம் ஓதுவான்! ஆனால் அதற்கான ஆலயங்கள் அமைக்க அவனுக்கு அரைக்காசும் செலவு கிடையாது எல்லாம் அரசாங்கப் பணம்! அன்றும் சரி, இன்றும் சரி. ஆச்சாரத்தோடு வாழ்ந்தாலும் சரி, ஆச்சாரம் இழந்தாலும் சரி, ஆரிய வாழ்வு மற்றவரின் உழைப்பை உறிஞ்சும் தந்திமான வாழ்க்கைத் திட்டமேயொழிய வேறில்லை. இதனை அறியாது நம்மவரிலே சிலர், ஆரியர் ஆச்சாரத்தை இழந்துவிட்டனர். கெட்டுவிட்டனர், ஆகவேதான் அவர்களக்கு எதிர்ப்பு. அவர்கள் பழைய காலத்தின் முறைப்படி இருந்தால் பாதகம் இல்லை என்று பேசுகிறார்கள். அந்தப் பழைய கால ஆரியர், பசுத்தோல் போர்த்திய புலி, தற்காலத்திலே, நாகரிக உடையிலே உலவுகிறது. அதே நாசகாரியம் செய்யும் நோக்குடன், உடை மாறி என்ன, உறைவிடம் மாறி என்ன, உள்ளம், மனப்பாங்கு பர்ணசாலைக் காலத்திலே இருந்தது போலவேதான் பங்களா புகுந்தபோதும் இருக்கிறது. அப்படித்தானே இருக்கமுடியும்! இயல்பு இலேசானதா? மாறிவிடுமா?

சிலநாட்களுக்கு முன்பு சங்கராச்சாரியார், பிராமணர்களைத்தான் நான் குறை கூறுவேன். அவர்கள் ஆச்சார விதிகளை மறந்தார்கள். எனவேதான், இவ்வளவு இடையூறுகள் வந்துவிட்டன. பிரமணர்கள், ஆச்சாரமான, அவர்களுக்குக் குறிக்கப்பட்டுள்ள விதிப்படி நடப்பார்களானால், மற்ற குலத்தாரும், தத்தம், ஆச்சாரப்படி நடப்பர. ஜெகத்திலே ஷேமம் நிலவும் என்று கூறினாராம். கூர்ந்து கவனிப்பவருக்கு இப்பேச்சிலே புதைந்துள்ள கருத்து விளங்கும். பிராமணர்கள் பழைய ஆச்சாரப்படி மீண்டும் நடக்கவண்டும் என்கிறார். அவர். அகவே, மற்ற குலத்தவர் அந்த நாள் போல, ஏன்று கேளாமல் எதிர்த்துப் பேசாமல், பிராமணர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே, சங்கராச்சாரியார் இதனைக் கூறுகிறாரே தவிர, வேறில்லை. பழைய ஆச்சாரப்படி, பிராமணராகட்டும் மற்ற குலத்தவராகட்டும் நடந்தபோது, இன்றள்ள கேடுகளிலே எது இல்லாதிருந்தது?

போர் நடக்கிறது இது போது கோடிக்கணக்கிலே, பொருள் நட்டம், இலட்சக்கணக்கிலே மக்கள் இறந்தனர். நிரபராதிகள் மாள்கின்றனர். குழந்தை குட்டிகள், பெண்கள், பாலர், கிழவர் இறக்கின்றனர். கொடிய யுத்தம். இது காலக்கேடு என்பார் சங்கராச்சாரியார் அவர் வழிப்படி பேசும் சிலர், இப்படிப்பட்ட கோர யுத்தங்கள், மக்களின் மனம் மாசடைந்து, பழைய காலப் பண்புகள் கெட்டுவிட்டதால், நேரிட்டன என்று பேசுவர், போர், கொடுமை! ஆம்! யாரும் இல்லை என்று கூறவில்லை. ஆனால் வேதியர் வேதமோதி, ஷத்திரியன் நாடாண்டு, வைசியன் பொருள் ஈட்டிக்கொண்டு, சூத்திரன் சேவை செய்து கொண்டிருநத காலம் இருக்கிறதே, சங்கராச்சாரிகள் சதா காலமும மீண்டும் வரவேண்டும், வரவேண்டும் என்ற வேண்டித் துதிக்கும் அந்தக் காலத்திலே, ஆச்சாரம் கெடாத காலத்திலே, ஆரியம் அணுவும் பிசகின்றி இருந்த காலம், குலாச்சாரத்தைக் குறை கூறாத காலம், அந்தக் காலத்திலே இல்லையா, இந்தக் கொடுமை? இராமாயணமும், பாரதமும் போரின்போது ஒரு கட்சியார் மீது மற்றோர் கட்சியார் புஷ்பமாரி பொழிந்தனர் என்றா கூறுகின்றன? பயங்கரமான சண்டைகள்! தேவர்கள் தந்த ஆயுதங்கள்! ஆளைத் தேடித்தேகி கொல்லும் ஆயுதங்கள், இவைகள் ஆச்சாரம் மிகுந்திருந்த நாளிலே அந்தக் கவிகளைப் படித்தால் அறியலாம். இரத்தம், வெள்ளம்போல் ஓட, அதிலே பிணங்கள் மிதக்க, காளியும், கூளியும் கூத்தாட, நரியும், நாயும் நாவை நீட்டிக் கொண்டு ஓட, கழுகு வட்டமிட, நடந்த கடும் போர்களைப் பற்றிய கதைகளை இந்தப் படுகொரைகள், பர்ண நாலைகளிலே, ஆரியர் அச்சாரத்தைக் கை நழுவிவிடாது இருந்த நாட்களிலே நடந்தனவேயன்றி, இன்று மட்டுமல்ல, இன்ற இலட்சக்கணக்கிலே மக்கள் மாள்கின்றனர். அன்று அஃரோணிக் கணக்கு. இன்று கடவுள் களத்திலே புகுவதில்லை. தமது துஷ்டப் பிள்ளைகளின் தீயாட்டத்தைக் காண மறுக்கிறார். அன்று கடவுள் கதை எடுத்தார், வில் கொடுத்தார். சக்கரம் விட்டார், சூலம் ஏந்தினார், வாள் எடுத்தார், தேர் ஓட்டினார், தூது சென்றார். முக்கியமான போர்க்காரியங்களைச் செய்திருக்கிறார். ஆகவே, ஆச்சார அனுஷ்டானத்தோடு இருந்த காலம், அந்நாளிலே என்று ஏங்கிப் பெருமூச்சுவிடும் தோழர்களைக் கேட்கிறேன். இன்றள்ள போர், அன்ற இல்லையா? நமது கடவுள்களுக்குள்ள கவுரவமே போர்களிலே அவர்கள் காட்டிய திறமையைக் கொண்டு தானே கட்டப்பட்டிருக்கிறது. சந்தேகமிருப்பின் ஒரு புராணப் பிரசங்கத்தைக் கேட்டுப் பாருங்கள். இதோ பேசுகிறார் ஒரு சைவர்:

என்னப்ப, உமையொரு பாகன், தேர்தனில் ஏறினார். போருக்குக் கிளம்பினார். அவருடைய கோபாவேசத்தைக் கண்டு, முப்பத்து முக்கோடி தேவரும் நாற்பத்ண்ணாயிரம் ரிஷிகளும் நடுநடுங்கிப் போயிருந்தனர். மகாவிஷ்ணு பயந்து பாற்கடலிலே போய் ஆதிசேஷன்மீது படுத்தார், பயத்தால் கண்களை மூடினார், திறக்கவே இல்லை. பிரமனோ சிருஷ்டியையும் மறந்து கிடந்தார். என்னாகுமோ, ஈசனின் கோபத்தால் என்னென்ன நேரிடுமோ என்ற தேவர்கள் அஞ்சினர். அந்த நேரத்தில், தேரின் அச்சு முறிந்து, அய்யன், சிரித்தார் ஒரே ஒரு சிர்ப்பு, என்ன நடந்தது. சிரிக்கும்போது அவருடைய நெற்றிக்கண் திறந்தது, திறந்ததுதான் தாமதம், திரிபுரமும் தீக்கிரையாயிற்று முப்புரம் எரிந்தது, எப்புரமூம் தெரிந்தது அந்தத் தீ, ஒரு சிரிப்பினால் மூன்று புரங்களை எரித்த முழுமுதற் கடவுள், மழுமான் ஏந்தின மகேசன், மாதொரு பாகத்தான், மால் மருகனாம், முருகனின் தந்தையின் மாவீரம் எவருக்கே உண்டு

அரசுர நமப்பார்வதி பதயே நமஹ என்று முடிக்கும் சைவர் தமது கடவுளின் வீரத்தைக் கூறும் கதாப்பிரசங்கம் இது போர்ப் பரணியல்லவா? இந்தப் போரிலே நடந்தது நாசமல்லவா?

வைணவ பூஷணத்தின் வாயுரை இதற்கு மட்டமாக இருக்குமென்று எண்ணாதீர், அவர் அரிபரந்தாமனின் ஆற்றலை உரைப்பதைக் கேண்மின்.

அய்யன், கோதண்டத்தைக் கையிலெடுத்து, நாண் ஏற்றினான்! உடனே வானவீதியிலே தேவர்கள் கூடிவிட்டனர். வந்ததது விபத்து என்றனர் நாணைத் தட்டினார், எதிரியின் படைபஷ்மீகரம் ஆயிற்று. அய்யன் ஆணையைப் பெற்ற அம்பு எதிரியைக் கொன்று, ஈரேழு கடலிலும் மூழ்கிப் பிறகு அம்புராத் துணியிலே வந்து சேர்ந்தது என்பார் அவர், கடவுளரின் பிரதாபமே கடும்போரிலே அவர்கள் காட்டிய வீரத்தைப் பொறத்திருப்பதாக கதை இருக்கும் போது, போர் கொல்லாங்கானது என்று பேசுவதும், அந்தப் பொல்லாங்கான போரும் இக்காலத்திலே, ஆச்சாரம் கெட்டதனால், குலதர்மம் அழிந்ததால் எற்பட்ட வினை என்று கூறுவதும் பொருந்துமா?

இதிலே ஒரு விசேஷமல்லவா? அந்தக் காலத்திலேயும் போர் உண்டு. ஆனால், அவைகள் தர்ம யுத்தங்கள்! தஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனார்த்ததம்! என்று கருதினர். அவர்களை அழிக்கப் போரிட்டனர்

இந்தக் காலத்திலே, அது போலவே, சிலருக்கு வேறு சிலர் துஷ்டர்களாகத் தோன்றவே, அந்தத் துஷ்டர்களை அழிக்கபோர் மூள்கிறது. இன்று நடக்கும்போர், தர்மயுத்தம் அல்லவென்று கூறமுடியாது.

இது மார்க்கட் பிடிக்கும் சண்டையாமே!

இருக்கலாம்! விராட பர்வத்திலே, மார்க்கட் கூட அல்ல, மாடு பிடிக்கும் சண்டை நடந்திருக்கிறதே
அந்தக் காலத்திலே அரக்கர்களை அழிக்கச் சண்டை நடந்தது. இப்போது மனிதர்களுக்குள்ளாகவே சண்டை பாருங்கே, ஜெரமனியாரும், கிருஸ்தாவா, வெள்ளைக்காரனும் கிருஸ்தவன். இருந்தாலும் சண்டை இது அக்ரமமில்லையோ!

இது இப்போது மட்டுந்தானோ? கவுரவர் யார், பாண்டவர் யார்? ஒரே குடும்பமாயிற்றே! ஜெர்மனியாளும் வெள்ளைக்காராளுமாவது வேறு வேறு தேசம், இடையே சமுத்திரம், கவுரவாளும் பாண்டவரும் ஒரே குடுமபமாயிற்றே அவர்களுக்குள்ளே ஏன் அவ்வளவு பிரமாதமாக போர் மூண்டுவிட்டது

ஆனா அந்தக் காலத்திலே நிரபராதிகளைக் கொல்றதில்லை. இந்தக் காலத்திலே பாருங்கே, குண்டு வீசினா, ஊரே அழிஞ்சுன்னா போறது!

ஆமாம்! ஆனா, அந்தக் காலத்திலேயும் இந்த அக்ரமம் உண்டு. ஒரு உதாரணம் கேளுங்கோ, இராமாயணத்திலே இருப்பது, இராவணன், சீதையைத் தூக்கிண்டு போனான்!

ஆமாம்! மகாபாபி, ஜானகியைச் சிறை எடுத்தான், அழிஞ்சான்.

அது சரி! அவன் அழிஞ்சது இருக்கட்டும். அந்தக் காலத்திலே அனுமார் இலங்கைப் பட்டணத்தையே கொளுத்தினாரே. அது, இந்தக் காலத்திலே எதிரியின் பட்டணங்களின் முது நடத்தும் குண்டு வீச்சுக்கு எந்தவிதத்திலே குறைந்தது? கூறும் கேட்போம்! இப் நடக்கிற பாம் கூச்சு, ஊ.ர் அழிவது, பெரிய பாபம், காலக் கொடுமை என்கிறீர். காலம், வேதிய குலத்தின் பெருமை விளங்கிய காலமாக இருந்தபோது இராவணன் செயத் குற்றத்திற்காக, அவன் ராஜ்யமே அழிக்கப்பட்டதே அதுவும், சண்க்கு முன்னாலேயே! இது மட்டும் நியாயமோ?

போமய்யா! நீர் இந்தச் சுயமரியாதைக்காரன் மாதிரி பேசுகிறீர்.

இதுபோலதிதான் முடியும், அவர்களின் பாஷைப் படியே நாம், அந்த காலத்துப் பெருமையைப் பேசுபவரிடம் வாதிட்டால்.

போர் மட்டுமல்ல, பஞ்சம், பிணி, வேலையில்லாக் கொடுமை தீ, வெள்ளம், முதலிய இயற்கையின் கொடுமைகளும், செயற்கைத் தொல்லைகளும், அந்தக் காலத்திலே இருந்தன என்றுதான், அவர்கள் குறிப்பிடும் எந்த ஏட்டிலிருந்தும் அதாரம் காட்ட முடியுமே தவிர, ஆச்சாரத்தோடு மக்கள் வாழ்ந்தனர். ஆகவே, போர் இல்லை, பஞ்சம் இல்லை, பிணி இல்லை, வெள்ளம் இல்லை என்று கூறிவிட முடியாது. அதுபோலவே, பாபம் செய்பவர் இல்லை என்றும் கூறிவிட முடியாது. பத்து அவதாரங்கள் எடுத்திருக்கிறார். பாபிகளைத் தொலைக்க. எனவே, இன்றுள்ள எல்லாத் தொல்லைகளும் அன்றம் இருந்தன என்று ஏற்பபடுகிறது. இந்நிலையிலே அந்த நாள் போலில்லையே, என்று ஏங்குவதன் அர்த்தம் என்ன? அந்த நாள் ஆச்சாரத்தால் சமூகம் அடைந்த நன்மை ஏதுமில்லை என்பதை அறிந்தும், அந்த ஆச்சாரத்தை நாம் இழந்த இன்பம் என்று கருதி அதை மீண்டும் பெற வேண்டுமென்ற பேசுவதன் நோக்கம் என்ன? ஆச்சாரங்களிலே மக்களக்கு நம்பிக்கை பலமானால் ஆரியரின்பிடி, தளராது என்பதன்றி வேறில்லை. நான் கூறுவது தவறு என்றால் ஆச்சாரத்துக்காக பரிந்து பேசுபவர்கள், அந்த ஆச்சாரங்கள் அரசு செலுத்தியபோது, நாம் இன்று அடைந்திருக்கம் நன்மைகளிலே பதினாயிரத்திலே ஒரு பகுதியாவது பெற்றிருந்ததாகவோ, இந்த நாட்களிலே நமக்குள்ள இடர்களிலே சிவேனும் அந்த நாட்களிலே கிடையாது என்றோ கூறி மெய்ப்பிக்கட்டும பார்ப்போம். அது அறிவு ஆண்மை! வீணாக ஆச்சாரம் ஆச்சாரம் என்ற கூவிப் பயன் என்ன?

பார்ப்பனர் ஆச்சாரத்தைக் குறைத்துக் கொள்ளாமல் இருந்த அந்நாட்களிலே, அவர்களுடைய ஒழுக்கம், எவ்வண்ணம் இருந்தது. இப்போதுதான் பார்ப்பனர் கெட்டுவிட்டனர் என்று பரிதாபப்படுகிறார் சங்கராச்சாரியார். பழையபடி பார்ப்பனர் ஆச்சார அனுஷ்டானங்களை மேற்கொள்ளவேண்டும் என்று உபதேசிக்கிறார். அவர் எந்தக் காலத்தை மனதிலே வைத்துக்கொண்டு இதைக் கூறினாரோ, அந்த ஆச்சார காலத்திலே ஆரியரின் இலட்சணம், வாழ்க்கை முறை, ஒழுக்கம் எப்படி இருந்தது?

எந்த ஜாதியானோ எவனோ, தங்கள் மனையியை இழுத்துக் கொண்டு ஓடிவிட்டால் அவள் பிறகு விரும்பத் தக்கவளல்லவென்றோ, கெட்டுவிட்டவளென்றோ, பிராமணக் கணவர்கள் கருதுவதில்லை, எவன் இழுத்துக்கொண்டு போய், எவ்வளவு காலத்திற்கு வைத்துக்கொண்டிருந்தாலும், அதுபற்றிக் கவலைப்படாமல், அவன் மறுபடி தன்னிடம் தரப்பட்டுவிட்டால்போதுமென்று, கெஞ்சுவர், ஒழுக்கக் குறைவு மிகுந்திருந்த காலமாதலால், பஞ்சைப் பார்ப்பனரின் மனைவிமார், அரச குடும்பத்தினரோ, பணம் படைத்த வைசியரோ தாசனாக இருந்து வந்த சூத்திரனோகூட, ஆசை காட்டினால் மயங்கி இணங்கினர். எனவே பிராமணக் கணவன்மார்கள் தங்கள் மனைவிமார்களை, சர்வஜாக்ரதையாகப் பாதுகாக்கவேண்டி இருந்தது. புராணங்களிலே, ரிஷ் பத்தினிகளெல்லாங்கூட, விபசாரம் புரிந்ததாக, அமோகமான சம்பவங்கள் காணக்கிடக்கின்றன. அதிலும், பாரிடம் கூடுகிறோம் என்ற விவஸ்தை (பாகுபாடு) கூட அற்றுக் கண்டவனிடம் கூடினதாகத் தெரிகிறது. உதாரணமாக, வேதன் என்ற குரு வெளியே சென்றிருந்த சமயத்தில், குரு பத்தினி, சீடனாகிய உதங்கனிடம் காமச்சேட்டையாடினாள். ஆது தெரிந்ததால், சுரு, தன் பத்தினியிடம் கொண்ட அன்மையோ, மதிப்பையோ ஒன்றும் குறைத்துக் கொள்ளவுமில்லை மேலே பொறித்திருப்பவை, பொறுப்பற்ற வாசகங்களுமல்ல, துவேஷ மொழியுமல்ல வேதாசாரம்! ஆராய்ச்சியாளரின் பேச்சு! சு.ம.வின் சுடுசொல் அல்ல! சரித இலக்கிய ஆராய்ச்சிக்காரரின் தீர்ப்பு.

சங்காளத்திலுள்ள ஹுக்ளி பல்கலைக்கழகச் சரிதப்பேராசிரியர் தோழர் நிருபேந்திர குமாரதத் என்பார், இந்தியாவில் ஜாதி தோன்றி, வளர்ந்த வரலாறு என்ற தலைப்புடன் தீட்டியுள்ள புத்தகத்திலே காணப்ப்டும் மணிமொழிகள், பூதேவர்களின் இலட்சணம், இதன் மூலம் விளங்கும் என்று நம்புகிறேன். ஆச்சார காலத்து அலங்கார நிலைமை இது! ஆகவே, ஆச்சாரத்தினால் என்னதான் பயன்? மற்ற குலம், அடங்கி ஒடுங்கி நடக்கும்; ஆரியர் பாடுபடாமல் வாழலாம், பிறர் உழைப்பினால் வளரலாம், என்பதன்றிச் சங்கராச்சாரியார் எடுததுக்கூற, வேறென்ன இருக்கிறது?
இந்தச் சூட்சமத்தைத் தெரிந்து கொள்ளாத சிலர், சங்கராச்சாரியார் சனாதன சேவைக்காகப் பார்ப்பனரையும் கண்டித்தார் என்ற திருப்தியும் அடைகின்றளர். அவருக்கும் தெரியும் அவருரையைக் கேட்டுக்கொண்டிருந்த ஆரியரும் அறிவர், பிராமணர்களுக்குக் குலாச்சார போதனை செய்தால், அதைக்கேட்டுக் கொண்டிருக்கும் பிராமணர், பழையபடி ஆச்சாரத்திலே ஈடுபட்டால் இலாபமும், இன்றுள்ளது போன்ற ஆதிக்கமும உண்டு என்பதும், பிராமணர்கள் குலாச்சாரத்தை மேற்கொண்டதனால், நாமும் நமது குலாச்சாரத்தைச் சரிவரக் கடைப்பிடிக்க வேண்டுமென்று, மற்ற குலத்தவரும் தீர்மானிப்பர், அந்தத் தீர்மானத்தின்படி சமூகம் நடக்கத் தொடங்கினால், நீ என்ன உயர்வு? நான் என்ன மட்டம்? நீ ஏன் பாடுபடாமல் வாழ்கிறாய்? நான் மட்டும் ஏன் ஒரு வேளைச் சோற்றுக்காக ஒருநாள் முழுதும் உழைக்கவேண்டும்? என்ற கேட்கும் புரட்சி அடங்கிவிடும் என்ற எண்ணத்தைத்தான், சங்கராச்சாரியார் மனதிலே கொண்டுள்ளார். ஆகவேதான், அவர் வேறோரிடத்திலே பேசியபோது, பிராமணர்கள் பழைய ஆச்சாரத்தோடு நடக்க ஆரம்பித்தால், மற்றக் குலத்தவரும் அதுபோலவே நடப்பர். அப்போது அல்லல் இராது. பாகிஸ்தான், திராவிடஸ்தான் என்ற பேச்சு இராது. எங்கும், சாந்திஸ்தான், எற்படும் என்று கூறினார்.

ஆச்சாரத்தை அப்பு - அழுக்கின்றி அனைவரும் கப்பிடித்தால், சாந்திஸ்தான் ஏற்படும் என்று சங்கராச்சாரியார் கூறியது வேதபுராண இதிகாச காலத்தையோ, அதற்குப் பிற்பட்ட ஆரிய ஆதிக்கம் வந்த அரசர்கள் காலத்தையோ, மக்கள் மறந்து விட்டிருப்பர் என்ற எள்ளத்தினால் என்று எண்றகிறேன். ஏனெனில், சாஸ்திரோக்தமாகச் சகல ஜாதியாரும வாழ்ந்த நாளிலேயும், தேவாசுர யுத்த முதற்கொண்டு குருஷேத்திர யுததம் வரையிலே நடந்ததற்கு ஆதாரம் இருக்கிறதேயொழியச் சங்கராச்சாரியார் குறிப்பிடும் சாந்திஸ்தான் இருந்ததாகத் தெரியவில்லை.
பூலோகத்திலே கடவுளே அவதாரம் எடுத்த காலம் என்று கனமாடிகள் குறிப்பிடும் கபட ஏடுகளின் படி பார்த்தாலும், சாந்திஸ்தான் இலலையே! சீதாபுராணமும், திரவுபதி மானபங்கம, ருக்மணி கலியாணம, திரிபுரதகனமும், கரதூஷண வதமும, இலங்காதகனமும், இராம இராவண யுத்தமும், சூரபதுமன் வண்டையும், பரசுராமர் திக்விஜயமும், வேறுபல புராண சம்பவங்களும், ஆச்சாரங்கள் அப்பு அழுக்கின்றி அனைவராலும் அனுஷ்டிக்கப்பட்ட காலத்துக் கதைகள் தானே! அன்று ஏற்படாத சாந்திஸ்தான், இன்று ஆச்சாரத்தை அனுஷ்டித்தால் எப்படி ஏற்படும்? சங்கராச்சாரியார், குறிப்பிடுவது பெயரளவில், சாந்திஸ்தானே தவிர, பொருள் அளவிலே அது ஆரியஸ்தானேயன்றி வேறு எதுவாக இருக்க முடியும்? சாந்திஸ்தான், என்று அவர் குறிப்பிடும், நிலை மீண்டும் வராது என்பது மட்டுமல்ல, சங்கரஸ்தானத்தை வகிக்கம் நிலைமைகளுங்கூட இனிமாறித் தீரும். ஆச்சார வேடத்தினால் ஆரியஸ்தான் அமைக்கப்பட்டதை அறிந்துகொண்டனர் மக்கள். எனவே, அவர்களிடம் மீண்டும் ஆச்சாரத்தைப் பேசிக் குலாச்சாரத்தைக்கூறி ஆரியஸ்துன்களை அமைக்க முடியாது. இந்துஸ்துன், சாந்திஸ்துன், சாந்திஸ்துன் என்ற பெயரளவிலே மாறுபட்டாலும், இவைகள் யாவும் பொருள் அளவில் ஆரியஸ்துன், என்பதை அறிவுள்ளோர் அறிந்துகொண்டனர். அவர்கள் ஆச்சாரம் கெட்ட ஆரியனையும் ஆச்சாரத்தோடு இருப்பவனையும், இரண்டு வித வேடத்திலே தோன்றும் ஒரே நடிகனாகவே கருதுவர்.

தொல்லை ஒழிந்து, துயரம் நீங்கி, கரண்டுதல் நின்று, சுகபோகிகளின் சூத்திரக் கயிறு அறுபட்டு அனைவரும் சமம், பிறப்பினால் உயர்வு, தாழ்வு இல்லை. ஜாதி இல்லை. பேதமில்லை. பார்ப்பனன் இல்லை, பஞ்சமன் இல்லை. ஏய்த்துப் பிழைப்பவன் இல்லை. ஏமாளி இல்லை, தருமவான் இல்லை, தரித்திரன் இல்லை, தரகள் இல்லை, பொருளை இழப்பவன் இல்லை என்ற நிலை ஏற்பட்டு, யாவருக்கும் வாழ உரிமை உண்டு. ஒருவரை ஒருவர் அடிமை கொள்ளவோ அடிமைப்படவோ அவசியம் இல்லை. சக்திக்கேற்ற அளவு சகலரும் உழைப்பர். தேவகைகேற்ற அளவு பெ-றுவர், என்ற அமைப்பு ஏற்பட்டால், அன்று, அங்கே, நிச்சயமாகச் சச்சரவு இல்லை, சஞ்சலம் இல்லை. சமர் இல்லை! சாந்திஸ்தான் அதுதான்! பல்லக்கிலே பவனி! பாத காணிக்கைக்குப் பக்த கோடிகள்! பட்டுப் பீதாம்பர மெத்தைகள்! பாதக்குறடு தங்கத்தில்! பாலும் பழமும வேளாவேளைக்கு! விசிறிட ஆள்! கால்கை பிடிக்கச் சீடர்கள்! கட்டியம் கூறப் புலவர்கள்! தங்கமடம்! எங்கும் ஆதிக்கம் செலுத்த ஏற்ற இடம்! என்ற நிலைமையிலே உள்ள எத்தர்கள் நிம்மதியாக உண்டு, நித்திரை நேரத்தில் கண்ணை மூடிக்கொண்டு, ஓம்! சாந்தி, சாந்தி, சாந்தி; என்று கூவினால், அங்கே சாந்திஸ்தானம் தோன்றிவிட்டது என்று விஷயமுணர்ந்தோர் கருதார்...!
பாரதியாரின் குயில் கூவுகிறபடி, ஆரித்தின் மேன்மையை, ஆச்சாரத்தின் மகிமையைச் சங்கராச்சாரியார் ஆயிரம் முறை உச்சாடனம் செய்தாலும், அவர் கூறும் சாந்திஸ்தான், சொப்பனஸ்தானாகத்தான் முடியும்! வசிஷ்டரும் வியாசரும் வியாகர்ணரும், பதஞ்சலியும், தேவரும, மூவரும, சாணக்கியரும் பிறருமாக, ஆரியத் தலைவர்கள் இன்றையச் சங்கராச்சாரியார்போல் எத்தனையோ ஆயிரம் மடங்கு அறிவாற்றல் பெற்றவர்கள், இந்தச் சங்கராச்சாரியார், எந்த வேத உபநிஷத்துகளிலே வல்லவரென்று புகழப்படுகிறாரோ அவைகளுக்கு மூலத்தை பொழிந்தவர்கள், இந்த லோகத்துக்கும் அந்த லோகத்துக்கும் இடையே போய் வந்துகொண்டிருந்தவர்கள், இந்திரனையும் சந்திரனையும் சொந்தங் கொண்டாடினவர்கள், நீரின் மேல் நின்றவர்கள், நெருப்பிலே புரண்டவர்கள், நிர்மலனைக் கண்டவர்கள், ஆகியவர்கள் அமைந்த ஸ்தான் இன்று உருக்குலைந்து, இருப்பதுபோலத் தெரிகிறரே தவிர உள்ளுக்குள் புரையோடிப் புழுத்துக்கிடக்கிறது. அந்த ஸ்தானின் மரணப் படுக்கையருகே மாரடித்தழும், கடைசிக் கும்பல், இப்போதுள்ள, ஆரியக்கூட்டம்! உபதேச ஊசி குத்து முறையினால், அதனை உயர்ப்பிக்க முடியாது! இதனைத் தெரிந்து கொள்ளாமல் சங்கராச்சாரியார் குரங்கைப் புகழ்ந்து குயில்போல, அந்த ஆச்சாரம், குலதர்மம், சனாதனம் என்று புகழ்கிறார். அந்தக் குயில் மொழி கேட்ட குரங்கு.
. . . மதிமயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெளிகொண் டாங்ஙனே.
தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும
ஆவி யுருகுதடி; ஆஹாஹா! என்பதுவும்
கண்ணைச் சிமிட்டுவதும், காலாலும் கையாலும்
மண்ணைப் பிராண்டியெங்கும் வாரி இறைப்பதுவும்

ஆக இருந்ததால், அதுபோல் இந்தச் சங்கராச்சாரியாரின் இந்தச் சத்தற்ற பேச்சைக் கேட்டுச் சனாதனங்கள், சந்தோஷமுற்றுச் சளசளவென்று சப்தத்தைக் கிறப்புகின்றன. இந்தச் சந்தடிஸ்தான், நம்மவர்களிலே சிலர் சந்தேகஸ்தானிலே வசிக்கும்வரை இருக்கும். பிறகோ! அவ்வளவேயொழிய, சாந்திஸ்துன் என்ற உபதேசம் செய்வதன் மூலம், சனாதன ஸ்தானை மீண்டும் ஸ்தாபித்துவிடலாம் என்று கருதவேண்டாம், நடவாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

(திராவிடநாடு - 01.04.1945)