அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சரசமும் சதியும்

பேசுவது ஜெயகர்; நாமல்ல! வகைதரும் பருவமதில் மையல் கொண்டவர்களை வேண்டாமென்று தள்ளிவிட்டு; வயது முதிர்ந்தபிறகு, மேல் விழுந்து சென்று கிடைப்பது கிடைக்கட்டும் என்று கருதும், மாதின் நிலையில் இருக்கிறது காங்கிரஸ்!

பாட்டு, நாம் எடுத்துக்கூறுவது,
கிழமடந்தை ஒரு பொருளும்
கிட்டாதேனும்
இன்னிதி நயந்து
எவர்க்கும் பின்றொடரும்
மனோரதமும் எய்தாதாகும்!

இந்தக் கிழத்தின் குலுக்கு மினுக்கைப் பார்! எவன் சீந்துவான் இந்த நரைத்த நாரியை என்று ஏசுவது தெரிந்தும், எவன் பின்னும் சென்று, ஆசை நிறைவேறாது, திரும்புவாளாம் காமக்கிழவி. டாக்டர் ஜெயகர், இத்தகைய கிழவிக்கு ஒப்பிடுகிறார் காங்கிரசை! வயதை உத்தேசித்துக் கூறினாரா என்றால், இல்லை, இயல்பு, நிலை நடவடிக்கை ஆகியவைகளை உத்தேசித்தே கூறினார். வெடுக்கெனக் கூறிவிட்டு இருந்துவிட்டாரா? இல்லை, விளக்கமும் தருகிறார்!

1935ம் ஆண்டு சீர்திருத்தச் சட்டம், சிலகாலத்துக்கு முன்பு தரப்பட்ட கிரிப்ஸ் திட்டம், என்பவைகளைக் காங்கிரஸ் வேண்டாம் என்று உதறித் தள்ளிற்று. (இதைத்தான் மங்கைப் பருவமுடையவள், மணாளராவதற்கு வந்தவர்களை, வேண்டாம் வேண்டாமென்று கூறி அசட்டை செய்ததற்குச் சமம் என்கிறார் - பெரியாரன்று - ஜின்னாவுமன்று - டாக்டர் ஜெயகர்!)

இப்படிப்பட்ட திட்டங்களை அந்தக் காலத்திலே வேண்டாமென்று கூறிவிட்ட காங்கிரஸ், அந்தத் திட்டங்களை விடக் குறைந்த அளவு யோக்யதை உள்ள வேவல் திட்டத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்று மேல் விழுந்து சென்றது. (இதைத்தான், வயதுக்காலத்திலே வரட்டு ஜம்பத்துடன் இருந்துவிட்டவள், வயது முதிர்ந்து வசீகரம் குறைந்த பிறகு கிடைத்தது கிடைக்கட்டும் என்று மேல்விழுந்து போகும் கிழவிக்குச் சமம் என்று ஜெயகர் கூறுகிறார்)

இவ்விதம் கூறினார் டாக்டர் ஜெயகர், பிளிட்ஸ் என்ற பம்பாய் பத்திரிகை நிருபரிடம்.

இந்த உவமையை, ஜனாப் ஜின்னா, பெரியார், டாக்டர் அம்பேத்கார் ஆகியவர்கள் கூறிவிட்டிருந்தால், தேசீயத் தாள்களிலே தீப்பொறி பறக்கும். ஆனால் சொன்னவர், காங்கிரசுக்கும் சர்க்காருக்கும் இடையிலே அடிக்கடி தூது போகும் இரட்டையரில் ஒருவர். கொஞ்சம் நெஞ்சழுத்தக்காரருங்கூட! எனவே அவர் பச்சையாகக் கூறிவிட்டார்.

உவமை, கோபமூட்டக் கூடியதாக இருப்பின், தள்ளிவிடுவோம், உவமையுடன் தொக்கி நிற்கும் விஷயத்தையே பார்ப்போம், அவர் சொன்னது உண்மையா அல்லவா என்று அறிய காங்கிரசுக்கு ஈடாக ஒரு கட்சி உண்டா? என்று பலரும் வியந்த காலம் ஒன்று இருந்தது. நாட்டிலே இரண்டே கட்சிகள், ஒன்று காங்கிரஸ் மற்றொன்று சர்க்கார் என்று பண்டித ஜவஹர் பரணி பாடிய காலம் அது. ஆண்டால் நாங்கள் ஆள்வோம் இல்லையேல் துப்பாக்கி ஆளும் என்று காங்கிரஸ் துந்துபி முழக்கிய காலம். பருவ மினுக்குடன் இருந்த மங்கை என்று ஜெயகர் இந்த நிலையைத்தான் குறிப்பிடுகிறார். அந்தச் சமயத்திலே, கிடைத்தால் பரிபூரண சுயராஜ்யம் கிடைக்கட்டும், இல்லையேல் ஒன்றும் வேண்டாம் என்று காங்கிரஸ் கூறிவந்தது. கிரிப்ஸ் திட்டத்தைப் பரிசீலனை செய்த காங்கிரஸ் தலைவர் மௌலானா அபுல்கலாம் ஆஜாத், அந்தத் திட்டத்திலே ஏதேதோ கூறப்பட்டிருக்கிறதே யொழிய சுயராஜ்யத்தைப் பற்றி ஏதும் கூறப்படவில்லையே என்று வருந்தி, “ஸ்வராஜ்கிதர்ஹை?” - சுயராஜ்யம் எங்கே இருக்கிறது என்று கேட்டாராம். அந்தக் காலத்திலே வெள்ளையனே வெளியே போ! என்ற முழக்கம், கொலைபாதகத் தொழிலாகிய போரிலே நாங்கள் ஈடுபட முடியாது, அது எமது உயிருக்குயிரான அஹிம்சைக் கொள்கைக்கே விரோதம் என்ற பேச்சு! பட்டாளத்திலே சேராதே! பாங்கியில் பணத்தைப் போடாதே என்ற கூச்சல். இந்தப் போர் ஏகாதிபத்ய யுத்தம் என்ற தத்துவம். பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுப் போய்விட்டால், ஜப்பானியன் படை எடுப்பை நிறுத்திக் கொள்வான் என்ற பேச்சு! இது அன்று காங்கிரஸ் கொண்டிருந்த கோலம். போரில் ஒத்துழைக்க மறுத்த காங்கிரஸ் கிரிப்ஸ் திட்டத்தை வேண்டாம் என்று மறுத்தது. இந்த ‘முடுக்கு’ கடைசிவரை நிலைத்ததா? இந்தத் ‘துறவு’ பகல் சாய்வதற்குள்ளாகவே கலைந்துவிட்டது. காங்கிரஸ் தலைவர்கள் தனித்தனியாக, அரசியல் நெருக்கடியை நீக்க வேண்டும் என்று பேசலாயினர். இந்தப் பணியிலே, ஆச்சாரியார் முழுமூச்சாக இறங்கினார். பாகிஸ்தானை ஏற்போம் என்றார். போரை எதிர்ப்பது கூடாது என்றார். காந்தியாரும் ஜின்னாவும் சந்திக்க வேண்டுமென்றார். ஜின்னாவிடம் கலந்து பேசினார். பிரிட்டிஷார் இந்த நெருக்கடியை நீக்க வேண்டுமென்று வற்புறுத்தலானார். கிரிப்ஸ் திட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமென்றார்.

இந்தத் தாபத்தைக்கண்ட “கட்சியில்லாதார்” கடை வைத்தனர், சரக்கு விற்பனையாகவில்லை. சாப்ரூ திட்டம் தயாரிக்கப்பட்டது, அதன் விளம்பர இலாகாவை ஆச்சாரியார் ஏற்றுக்கொண்டார். அந்தத் திட்டமும் பலிக்கவில்லை. ஏதாவது செய்தாக வேண்டும், இப்படியே இருப்பதற்கில்லை, காங்கிரஸ் செயலற்றுக் கிடக்கிறது இந்த ஆபத்துப் போகவேண்டும் என்று ஆச்சாரியார் துடியாய்த் துடித்திடலானார். சந்தையிலே சரக்கு விலை பொழுது சாயச்சாய, இறங்குவதுபோல, காங்கிரசின் திட்டங்களும், ஒவ்வொரு தோல்விக்குப்பிறகும், கீழ்நோக்கிப் பாய ஆரம்பித்தது. எச்சரிக்கை, கோரிக்கையாக மாறி, கோரிக்கை பேரமாகி, பேரம் வேண்டுகோளாகி, வேண்டுகோள் பவதி பிக்ஷாந்தேஹியாகி விட்டது. வேவல் திட்டம் வெளியிடப்பட்ட போது, நிலைமை இது போலித்தானாகிவிட்டது. இதனைத்தான் ஜெயகர், குமரி கிழவியானாள், கிடைத்தது போதுமென்று கூறும் நிலையை அடைந்தாள் என்று கூறினார். பாகிஸ்தானைப் “பஞ்சமாபாதகம்” என்று பேசிய தலைவர்கள் லீகைச் “சரிப்படுத்த” பாகிஸ்தானுக்கு இணங்கித்தான் தீரவேண்டும் என்று பேசலாயினார். காந்தியார், ஜனாப் ஜின்னாவிடம் சென்று இது சம்மந்தமா கலந்து பேசியும் பார்த்தார்.

ஏன் காங்கிரஸ் தன் பழைய நிலையை இழந்தது? ஏன் போர் முறையை மாற்றிக்கொண்டது? காங்கிரஸ், இந்த நெருக்கடியான நேரத்திலே, சர்க்காருடன் ஒத்துழைக்க மறுத்தால், பிரிட்டிஷார் அடக்கி ஒடுங்கி, கேட்டதெல்லாம் தருவர் என்று கருதிற்று. பக்கத்து வீடான அயர்லாந்திலே பகை கக்கிக்கொண்டும், ஜெர்மன் தலைவர்களுடன் கொஞ்சிக்கொண்டும், திவேலரா இருந்ததைக் கண்டே, சரி! நம் காரியத்தைக் கவனிப்போம் என்று, தயக்கமின்றிப் போரிலே தாவிக் குதித்த பிரிட்டன், காங்கிரசின் ஒத்துழையாமையைக் கண்டு ஏன் கவலைப்படப் போகிறது! இதிலே காங்கிரஸ் போட்டுப் பார்த்த புள்ளி தவறு!

காங்கிரசின் அன்றைய மனப்பான்மையை அன்பர் ஆச்சாரியார் அழகாகத் தமது சொல்லால், சிறு கதையால் விளக்கிக் கொண்டிருந்தார். பதவியைக் காங்கிரஸ் இழந்து விட்டது, ஆனால் மீண்டும் மிக விரைவிலே, பதவியிலே உட்காரப்போகிறது என்று ஆச்சாரியார் ஓயாமல் கூறிக்கொண்டிருந்ததை நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

குதிரை மீதேறிக் கொண்டு போகிறோம். போகிற வழியிலே, சாவடிக்கருகே இறங்கிக் குதிரையை மேயவிட்டு வைத்திருக்கிறோம். சாவடியிலே தங்கி, சமையல் செய்து சாப்பிட்டானதும், பிரயாணத்தைத் தொடங்குவோம். குதிரையைக் கூப்பிடுவோம். குரல் கேட்டதும் குதிரை வரும், ஏறி உட்கார்ந்து கொண்டு பழையபடி பிரயாணம் செய்வோம்” என்று சிறுகதை கூறினார் ஆச்சாரியார். ஆனால் பரிதாபம், குதிரையைக் கூப்பிடக்கூப்பிட, ஓட ஆரம்பித்து விட்டது. தேடித்தேடி அலைந்து சிம்லாவிலே, கண்டுபிடித்தார்! அதுவும் செத்துவிட்டது!! செத்த பிறகு தெரிய வந்தது, அது குதிரையுமன்று, கழுதை என்று, (“தந்தி”ச் சித்திரக்காரருக்கு நம் நன்றி!)

இங்ஙனம், இழந்த பதவியை எளிதிலே, பெற முடியும் என்று காங்கிரஸ் கருதிற்று, முஸ்லீம் லீகோ, காங்கிரஸ் ஆட்சி தொலைந்தது என்று “விடுதலை விழா” கொண்டாடிற்று. எதிர்பார்த்தபடி, பதவியைத் திருப்பிப்பிடிப்பது எளிதன்று, என்பது தெரிந்ததால், முன்னாள் முடுக்கு முறிந்து, இன்னாளில் இனிய முகமும், எதிர்ப்படுவோரிடம் உறவும், ஏற்பட்டது. இந்த மனமாறுதல், பருவமாறுதலின் விளைவு என்று ஜெயகர் கூறுகிறார். பருவம் மாறிவிட்டது உண்மையே! குமரி கிழவியானாள் என்ற உவமை உள்ளத்தை உறுத்தும், அது வேண்டாம், ஆனால் பருவ நிலை, மாறித்தான் விட்டது. டன்கர்க் நிலைமையும் தண்டவாளப் பெயர்ப்பும், பிரான்சின் வீழ்ச்சியும், தபால் பெட்டி தகனமும், பர்மா வீழ்ச்சியும் தந்திக்கம்பிகள் அறுபட்டதும், ஒரு பருவம்! பெர்லினில் சோவியத் கொடி பறப்பதும் வைசிராய் மாளிகையிலே காங்கிரஸ் தலைவர்கள்கூடி, வைசிராயின் தலைமையை ஏற்றுக் கொள்வதும் வேறோர் பருவம்!

“ஆறு ஆண்டுகளாக எதிரியின் குண்டு வீச்சுக் கொடுமைக்குப் பிரிட்டிஷார் ஆளானார்கள்; வெளி நாடுகளிலே பிரிட்டிஷார் போட்டிருந்த “முதல்” முறிந்து விட்டது. அவர்களுடைய வியாபாரக் கப்பற்படை குலைந்து கிடக்கிறது; வியாபாரம் போய்விட்டது; தொழிற்சாலைகளெல்லாம் தடுமாறித் தத்தளிக்கின்றன, தேய்ந்து போயுள்ளன; வீடுகள் பொடியாயின; இதே சமயத்தில், பிரிட்டிஷ் தொழிலாளர்கள் 40 மணி நேர வேலைத் திட்டம் வேண்டும், பாதுகாப்பு பண்டு வேண்டும், வயதானவர்

களுக்குப் பென்ஷன் திட்டம் வேண்டும், மற்றும் அது வேண்டும் இது வேண்டுமென்று கேட்டுக் கிளர்ச்சி செய்கிறார்கள்!”

அமெரியன்று, ஆச்சாரியார் பேசுகிறார் இதுபோல்! பிரிட்டிஷாரின் தொல்லைகளைக் கண்டு அந்த நாடுபடும் கஷ்டத்தைக்கண்டு கசிந்து கண்ணீர் மல்கி, “இந்தச் சமயத்திலே நாம் அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார், கோகலே மண்டபச் சொற்பொழிவிலே ஜூலை 25ந் தேதி.

ஆபத்திலே பிரிட்டன் சிக்கி, சோவியத் ஒத்துழைப்போ, அமெரிக்கக் கூட்டுறவோ கிடைக்காமல் திணறி, பிரான்சின் வீழ்ச்சியினால் பதறி, கப்பல்கள் மூழ்கிடக் கண்டு கதறி, எதிரியின் விமானப்படை இரவுபகலாக இலண்டனைத் தாக்கித் தகர்க்க, இருப்பிடமின்றி மக்கள் தவிக்கக்கண்டு, தோல்விமேல் தோல்வி பெற்று இருந்தனரே, அதுபோதுதான் இன்று கசிந்துருகும் ஆச்சாரியாரும் அவருடைய கூட்டுத்தோழர்களும், இந்த ஏகாதிபத்திய வெறியாட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ள முடியாது. பிரிட்டனுடைய போர்க்கொள்கையே எமக்குத் தெரிவிக்கப் படவில்லை. மேலும் அஹிம்சாவாதிகளான நாங்கள் எப்படி இம்சையின் உருவான போரிலே ஒத்துழைப்பது, என்றெல்லாம் கூறினர், யுத்த எதிர்ப்புச் செய்தவர், யுத்த ஆதரவாளரை ஏளனம் செய்தனர், நாட்டிலே கலவரம் உண்டாகச் செய்தனர். இன்று, இருபத்தொரு நாடுகள் ஒரு முகாமில்கூடி, இணையற்ற பலத்தோடு விளங்கி, வெற்றி வீரராகத் திகழ்ந்து, பிடிபட்ட நாடுகளை எல்லாம் விடுவித்து, ஜெர்மனியைச் சரணடையச் செய்து முறியடிக்கப்பட்ட நாட்டுக்கு எதிர்கால வாழ்வு எங்ஙனம் இருக்கவேண்டும் என்று வழிவகுக்கும் இதுபோது, ஆச்சாரியார் ஆங்கிலருக்கு ஏற்பட்ட அல்லலைக் கூறுகிறார். மனம் வேகுதே என்கிறார், உருகுகிறார், பிரிட்டனும் பிறநாடுகளும், இந்தப் பிரலாபத்தை நம்புமா? அரசியல் அரங்கிலே அன்று வீரரசம் சொட்ட நடித்தார், இன்று சோகரசம் சொட்டுகிறது! ஆச்சாரியார், நல்ல நடிகர் என்று கருதுவர். பரிதாப உணர்ச்சி தோன்றியிருக்க வேண்டிய சமயத்திலே பகை உணர்ச்சியைக் காட்டினர், உதவி தேவையில்லை என்று கூறும் அளவுக்கு வலிவு பெற்றுள்ள இந்நிலையில், பிரசாரத்துக்குக்கூட ஒரு தேசீயப்ப போர்முனை இயக்கம் தேவையில்லை என்று கருதிக் கலைத்துவிட்ட இந்த நேரத்தில், விளக்குகளின் மூடிகள் எடுபட்டு, ஏ.ஆர்.பி. ஸ்தாபனம் கலைக்கப்பட்டு, பர்மாவிலே நாட்டுக்கோட்டை செட்டிமார் மீண்டும் செல்வதற்கு நாள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலே, ஆச்சாரியார், ஆங்கிலர் மீது அன்பு சொரிகிறார். ஏன்? அன்று, நெருக்கடியான நேரத்திலே இவரும் இவர்தம் தோழரும் எதிர்த்தனர், அதனால் எந்தக் காரியம் தடைப்பட்டது? ஒன்றுமில்லை! எதிர்ப்புப் பயன்படாது போகவே, இதுபோது அணைத்திட முன்வருகிறார், ஜெயகர், கிழவியின் தளுக்கு இது என்று கூறினது தவறா? கோபம் வரலாம், ஆனால் என் செய்வது, நிலைமையைக் கவனித்தால், உண்மை அவர் கூறியதுபோலத்தானே இருக்கிறது!

இந்தக் “கனிவு” வேவல் மாநாட்டின் போது காட்டப்பட்டது. வைசிராய், முன்பு படைத்தலைவராக இருந்தவர், பர்மாக் களத்திலே ஜப்பானியர் வெற்றி பெற்றதைக் கண்டவர், அந்தச் சமயத்திலே காங்கிரஸ் கனல்கக்கியாக இருந்ததையும் கண்டவர். கஷ்டகாலத்திலே கனல்கக்கிய காங்கிரஸ், “இஷ்டபூர்த்தியாகி” பிரிட்டன் பூரிப்புடன் இருக்கும் நேரத்தில், கொஞ்சி விளையாடுவது கண்டால், வைசிராய் நெஞ்சார என்ன எண்ணியிருப்பார்!

“காங்கிரஸ் இவ்வளவு பாராட்டக்கூடியவிதமாக நடந்து கொள்ளுமென்று நாங்கள் நினைக்கவே இல்லையே!” என்று கூறிப் பூரித்தனராம் பல வெள்ளையர் மாம்பலத்தாரிடம். கூறித்தான் இருப்பர். கூண்டிலே இருந்து வெளிவந்த புலி, மேலே விழுந்து கடிக்குமோ என்று எண்ணி எச்சரிக்கையுடன் இருந்த சமயத்திலே, சர்க்கசிலே பழக்கப்பட்ட புலிபோல, சவுக்குக்கு அடங்கி நடக்கக் கண்டால், சந்தோஷந்தானே வரும்! வெள்ளையரின் பூரிப்புக்குக் காரணம் இருக்கலாம், இந்த வேதியர், அதையுமா பெருமைக்குரியதாகக் கொள்வது! என்ன செய்வது! மீண்டும், கிழவியின் கதைதான் நினைவிற்கு வருகிறது!!

“எங்கள்மேல் இருந்த சந்தேகங்களை எல்லாம் போக்கினோம். ஜப்பானை எதிர்த்து நடத்தப்படும் யுத்தத்திலே ஒத்துழைப்பீர்களா? என்று கேட்டனர். “ஆஹா. சம்மதம்! என்று கூறினோம்.-” ஆச்சாரியார் பேச்சிலே ஒரு பகுதிதான் இதுவும். எவ்வளவு குழைவு! எத்துணை அபிமானம் ஆங்கிலரிடம்!! ஏன்? ஜெயகர் வார்த்தையே மறக்கமுடியவில்லையே!!

“சிம்லா மாநாட்டிலே சௌஜன்யமான உறவு ஏற்பட்டது, அதைக் கெடுக்கக்கூடாது” என்கிறார் ஆச்சாரியார். சௌஜன்யமான உறவு யாராருக்கு இடையிலே? ஆகஸ்டு வீரர்களுக்கும் ஆகாகான் மாளிகையிலே அவர்களை அடைத்து வைத்திருந்தவர்களுக்கு மிடையிலே! சிம்லாவிலே மட்டுமன்று, இலண்டனிலே கூடவாம் இந்தச் சௌஜன்யம் பிரிட்டிஷ் பத்திரிகைகளிலே தேன் வழிகிறதாம்! ஏகாதிபத்யம் இணையில்லாப் பிரசார கரைச் செலவின்றிப் பெற்றுவிட்டது!!

பிரிட்டிஷாரிடம் பரிவும், அவர்களின் கஷ்டத்தைத் துடைக்க வேண்டுமென்ற கனிவும், வைசிராயிடம் வாத்சல்யமும், ஏற்படக் காரணம் என்ன? ஆச்சாரியார் ஆனந்த மேலீட்டினால் அந்த மர்மத்தையும் வெளியிட்டுவிட்டார்.

பிரிட்டிஷ் பத்திரிகைகள் தேனொழுக எழுதின. இருதயத்திலிருந்து வெளிவந்தவை அந்த எழுத்துகள். எதிர்ப்புக் கட்சிமீதுதான் அந்தப் பத்திரிகைகள் கோபித்துக்கொண்டன” என்று ஆச்சாரியார் கூறினார்.

சிம்லாவிலே காங்கிரஸ் ‘சரசமாடிற்று’ வெள்ளையரும் விரசம் நீங்கிச் சரசத்துக்கு இசைந்தனர். பிரிட்டிஷ் இதழ்களும் பதம் பாடின. இது மட்டுமன்று! எதிர்ப்புக் கட்சிமீது சீறின. எதிர்ப்புக்கட்சி எது? முஸ்லீம் லீக், அதாவது காங்கிரசும் பிரிட்டிஷாரும் சிம்லாவிலே சரசமாடினார். லீக் எதிர்ப்பினாலேதான் வேவல் திட்டம் முறிந்தது என்று சகல காங்கிரஸ் ஏடுகளும் கூறுகின்றன, எனவே, எதிர்ப்புக் கட்சி என்று லீக்கையேதான் குறிப்பிடுகிறார் ஆச்சாரியார்.

லீகின்மீது பிரிட்டிஷ் பத்திரிகைகள் பாய்கின்றன, நம்மீது அன்பு சொரிகின்றன, என்று ஆச்சாரியார் கூறுகிறார். காங்கிரசின் குதூகலம் இதுவே. லீக்மீது பிரிட்டிஷ் பத்திரிகைகள் பாய்கின்றன, நம்மிடமோ சரசமாடுகின்றன, காங்கிரஸ் - பிரிட்டிஷ் கூட்டு முயற்சியினால், லீகை நசுக்கிவிடலாம், என்பது தான் கருத்து. இந்தச் “சூது” தெரிந்துதான், ஜனாப் ஜின்னா வேவல் திட்டத்தை ஏற்க மறுத்தார். அது, காங்கிரசும் பிரிட்டிஷாரும் சேர்ந்து தயாரித்த வலை, லீகை ஒழிக்கும் சதி என்று உணர்ந்தார், எனவேதான் வேவல் திட்டம் தோற்றுவிட்டது.

5.8.1945