அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சர்ச்சிலிசம்

“ஏழைகள் படும்பாடு உமக்குத் தெரியவில்லையா?”

“தெரிகிறது!”

“தொழிலாளர்களின் துயரால் நாடு நலிவதைத் தாங்கள் உணரவில்லையா?”

“உணருகிறேன்”

“பயங்கரமான பொருளாதார பேதம் சாந்தியையோ சமாதானத்தையோ தராது அல்லவா?”

“தராது. சமருக்குத்துதான் வழி உண்டாக்கும்”

“சுரண்டிப் பிழைப்பவன் சுகபோகியாகவும், பாடுபடுபவன் பகல் பட்டினியாகவும் இருப்பது முறையா”

“முறையல்ல!”

“ஒருசிலர், பணத்தைப் போட்டு, பொறிகள் அமைத்து, இயற்கைச் செல்வத்தைப் பாட்டாளியின் உழைப்பால் பெருக்கி, தங்கள் சொந்த இலாபத்தைக் குவித்துக் கொள்கிறார்களே, அது கொடுமையல்லவா?”

“கொடுமைதான்”

“அந்தக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டாமா?”

“கட்டாயம் ஒழிக்கப்படத்தான் வேண்டும்”

“ஆகவே முதலாளித்வ முறைபோய்த் தொலைய வேண்டாமா?”

“தொலைய வேண்டும்”

“அப்படியானால் சமதர்ம ஆட்சிக்காகத்தானே முயற்சிக்க வேண்டும்?”

“ஆமாம்!”

“சமதர்ம ஆட்சி சாத்தியப்படும். அது வெறும் கனவல்ல, ஏட்டிலே தீட்டப்பட மட்டுமே ஏற்ற இலட்சியமல்ல, நாட்டிலே நடத்திக் காட்டக் கூடியது என்ற உண்மையைச் செயலிலே, தீரமாய், ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல், தன்னந்தனியாக நின்று எடுத்துக்காட்டிய நாடு எது?”
“ரஷியா”


“உண்மையாகவா?”

“ஆமாம்! இது உலகுக்கு அரிச்சுவடி போலாகிவிட்ட செய்திதானே”

“அப்படியானால், ஏன், அத்தகைய மகத்தான பணியை மானிட குலத்துக்குச் செய்த மாநிலத்தின் மணிவிளக்கு, மங்காப்புகழ்படைத்த சோவியத் ரஷியாவைக் கண்டிக்கிறீர், வெறுக்கிறீர், அதற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்கிறீர்?”

“அதுவேறு ஒரு காணரத்துக்காக”

“சமதர்மம் அவசியம் என்பதையும் ஒப்புக் கொள்கிறீர், சம தர்மத்தின் தாயகம் சோவியத் ரஷியா என்றும் ஒப்புக் கொள்கிறீர், இருந்தாலும், அதே ரஷியாவை வெறுத்துப் பேசுகிறீரே, ஏன்?”

“அதுவா? அங்கே ஜனநாயகம் இல்லை”

“சரி! அங்கு ஜனநாயகம் தேவை என்றால் ரஷியர்கள் கவலை எடுத்துக் கொள்ளட்டும். அதற்காக நீர், அதன்மீது துவேஷப் பிரசாரம் செய்வானேன்?”

“உனக்குத் தெரியாது விஷயம். ரஷியாவின் செல்வாக்குப் பலமாகிக் கொண்டு வருகிறது. ஆதிக்கம் வலுவடைகிறது. ஒரோப்பிய நாடுகள் பலவற்றிலே ரஷியாவுக்குச் செல்வாக்குக் கிடைத்துவிட்டது. மத்திய கிழக்கில், சீனாவில், ஏன், நமது இந்திய சாம்ராஜ்யத்திலேகூட, மாஸ்கோவுக்குச் செல்வாக்கு ஏற்பட்டுவிட்டது.”

“சரி! அதனாலே என்ன ஆபத்து நேரிட்டுவிடும்? என்ன கேடு?”

“நமது ஏகாதிபத்யம், சாம்ராஜ்யம், வியாபார ஆதிக்கம், கடலில் இதிபத்யம், சர்வதேச சபைகளிலே நமக்குள்ள செல்வாக்கு இவைகள் பாழ்படவோ! நமது ஏகாதிபத்யத்தை நாசம் செய்யக்கூடிய விஷக்காற்று மாஸ்கோவிலிருந்து கிளம்புகிறது. அது பரவாதபடி தடுத்தாலொழிய நமது ஏகாதிபத்யம் கெடும்.”

“ஏகாதிபத்ய பாதுகாப்புக்காகத்தானா, இந்தச் சோவியத் எதிர்ப்பு?”

“சந்தேகம் என்ன! நான், நமது ஏகாதிபத்யத்தைக் கலைத்து விடுவதற்காகவா, பிரிட்டிஷ் பிரதமரானேன்!”

ஏகாதிபத்யத்தைக் காப்பாற்றுவதற்காக, ஏழைகள், வாழவும் வழி உண்டு என்ற உண்மையை உலகிலே நிலைபெறச் செய்த சோவியத் மீது பகையை மூட்டிவிட்டது தர்மமா?

ஏழைகளைக் காப்பாற்றும் வழி நமக்கும் தெரியும். அதற்கு நமக்கு மாஸ்கோ பாடம் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. ரஷியத் திட்டம் ரஷியாவுக்கு. இங்கு நாமே திட்டம் தயாரித்துக் கொள்ள முடியும், இங்குள்ள நிலைமை, தன்மை, தேவை, அறிவு, ஆற்றல், இவைகளுக்குத் தக்கபடி.

கேள்வி, பதில் வடிவிலே உள்ள, இந்தத் தத்துவம், சர்ச்சிலிசம், அதாவது, முதலாளித்துவ முறைக்கு, முலாம்பூசி, அதைக் காப்பாற்றுவதற்கு, பொதுமக்களிடையே, பிரச்சாரத்தைத் தந்திரமாகப் புரிந்து, முதலாளித்வத்தைச் சுக்குநூறாக்கிய சம்மட்டி அடியினின்றும், சீமான்கள் தப்பித்துக் கொள்வதற்கு வழி கண்டுபிடித்து, அந்தச் சம்மட்டியைத் தயாரித்த சோவியத் ரஷியா மீதே பழிபல சுமத்தி, எந்தப்பாட்டாளி மக்களின் போற்றுதலைப் பெற வேண்டுமோ, அதே பாட்டாளிகளைக் கொண்டே அதே சோவியத்துக்கு எதிர்ப்புணர்சசியை உண்டாக்கும் வித்தை, இந்தச் சர்ச்சிலிசம்!

இது பிரிட்டனிலே முன்னாள் முதலமைச்சாராக இருந்த சர்ச்சிலால் துவக்கப்பட்டு, இந்நாள்வரை அவரால் வளர்க்கப்பட்டு வருகிறது. அவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார், இதற்கு, இந்திய பூபாகத்திலே ஒரு கிளை ஸ்தாபனம் ஏற்படும் என்று. ஆனால் சர்ச்சிலிசம் இதுபோது இங்கு மிகத் திறமையாக வளர்க்கப்பட்டு வருகிறது. அதல சதல பாதாளம் என்று லோகங்கள் பல உண்டு என்ற அளவிலே, தங்கள் பூகோள ஞானத்தை வரையறுத்துக் கொண்டிருந்த அன்பர்கள் கூட இன்று ரஷியாவின் ஆதிக்க வெறிபற்றியும், ராஜதந்திர வெற்றி பற்றியும் பேசுகிறார்கள். பொது உடைமை என்ற தத்துவமே கூடக் கேலிக்குரிய விஷயமாக்கப்பட்டு வருகிறது. தோழர்கள் என்ற சொல்லே, ஐளனக் குறியாக்கப்பட்டு வருகிறது. ரஷியாவின் ஏகாதிபத்யம், பரவாதபடி செய்யும் புனிதப்போருக்குத் தங்களையும் தங்கள் ஆற்றல் (?) திறமை (?) ஆகியவற்றையும் ஆர்ப்பணிக்க முன்வந்துள்ளனர், இந்நாட்டுக் காங்கிரஸ் அன்பர்கள் பலர், சர்ச்சிலுக்கு இப்படிச் சீடகோடிகள் பெருகி வருவது பேரானந்தம் தரும்! சர்ச்சிலிசம் பரவுகிறது?

சர்ச்சிலிசம், வேதனையில் பிறந்த குழந்தை. பிரிட்டிஷ் ஆதிக்கம், பல்வேறு நாடுகளிலேயும் எதிர்க்கப்பட்டு, ஏகாதிபத்யம் ஐளனச் சித்திரமாக்கப்பட்ட பிறகு, சோவியத் மணம், பெர்லின், பாரீஸ், வார்சா, மாட்ரிட், ரோம், லண்டன் முதலிய பல்வேறு தலைநகர்களிலும் கமழத் தொடங்கிய பிறகு சர்ச்சிலிசம் பிறந்தது, ஏகாதிபதியத்தின் தத்துப்பிள்ளைகளான, ஆலை அரசர்கள், மில்மன்னர்கள், சுரங்கச் சீமான்கள், எண்ணெய் அரசர்கள் ஆகிய முதலாளிமார்களின், ஆதிக்கத்தின் சாவுச்சந்தமாக. அது, மக்கள் கீதமல்ல! ஆனால் இங்கு, மக்களின் மதிப்புக்குரியவர்கள் என்ற மான்யம் பெற்றுள்ளவர்கள், சர்ச்சிலிசத்தை, இராக-பாவ-தாளம் கெடாதபடி பாடி இன்புறுகிறார்கள். ஏன்? ஏகாதிபத்ய தத்துப்பிள்ளைகளின் தம்பிமார்கள் ஏராளம் வடநாட்டில், அவர்களின் “அரண்மனைக் குழந்தைகளுக்கு” வேறு இலாபனம் பிடிக்கக் காரணம் இல்லையல்லவா?

மாஸ்கோ ரேடியோவில், டில்லியில் நடைபெறும் பிரிட்டிஷ் மந்திரிமார்களின் மந்திரலோசனை, “வேறொன்றுமில்லை, பிரிட்டிஷ் முதலாளிகளும் இந்திய முதலாளிகளும் கூடி, உலகிலே குமுறிவரும் புரட்சிச்சக்தியை, குறிப்பாகச் சோவியத் சக்தியை ஒழிக்க ஏற்பாடு செய்துகொண்ட ஒப்நதத்தின் உறவுப்பேச்சுத்தான்” என்று கூறப்பட்டதாம்.ø
“சுத்த ஆபாண்டம்! மோசமான புளுகு, இந்திய முதலாளிகளுக்கும் பிரிட்டிஷ் முதலாளிகளுக்கும் ஒப்பந்தமும் இல்லை, தொடர்பும் இல்லை என்று தேசியப் தொடர்பும் இல்லை” என்று தேசியப் பத்திரிகைகள் தீப்பொறி பறக்கத்தான் எழுதுகின்றன. ஆனால் பாபம் அதே இதழ்களில் வேறோர் பக்கத்தில் வந்து பாருங்கள்!

வசீகரமான புதிய மோட்டர்கள் வந்துவிட்டன!

வந்துவிட்டன இந்துஸ்தான்!

10!

என்ற விளம்பரங்கள், பிர்லா கம்பெனியாருடையது. ஆழகாகப் பிரசுரிக்கப் பட்டுள்ளன. கோடீஸ்வரர் பிர்லாவுக்கும் வெள்ளை முதலாளி நப்பீல்டு பிரபுவுக்கும், மோட்டர் தொழில் பாக ஒப்பந்தம் நடந்திருக்கிறது. விளம்பரங்கள், மாஸ்கோவின் வாக்குப் பொய்யல்ல என்பதை விளக்கமாகக் காட்டுகின்றன.

காந்தியார், சர்ச்சிலித்தைக் கடைப்பிடிக்கவில்லை. சர்ச்சில், சமதர்மம் எனக்குத் தெரியும், ரஷியா கற்றுக் கொடுக்கத் தேவையில்லை என்று கூறுகிறார். காந்தியாரோ, பச்சையாக நெடுநாட்களுக்கு முன்பே சொல்லிவிட்டார், “நான் ரஷியா நடத்திய புரட்சி சம்பந்தமான புத்தகங்களைப் படிக்கவில்லை” என்று. ஆகவே அவர், எப்போதும்போல, இராமராஜ்யம் வரவேண்டும் என்று கூறிகிறார். மற்றவர்கள், மாஸ்கோவைப் பாராட்டிப் பேசி லண்டனின் ஆதிக்கத்தைக் கண்டிப்பர். பல்லவி சமதர்மம் அனுபல்லவி, அதனைப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கெடுப்பது, சரணம் சுயராஜ்யத்தின் அவசியத்தைப் பற்றி, இப்படியே இருந்தது, காங்கிரஸ் கீர்த்தனம்! சந்தேகமிருப்பவர்கள், பண்டித ஜவஹர், பெய்ஸ்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலே ஆற்றிய தலைமை உரையைப் பாருங்கள், பண்டிதர் மாஸ்கோவுக்கு எவ்வளவு அருகிலே போகிறார் என்பது விளங்கும். இன்று காங்கிரஸ் கீர்த்தனமே மாறிவிட்டது, ரஷியாவின் ஆதிக்க ஆசை! அதற்கு நாங்கள் சம்மதிக்க மாட்டோம்! ரஷிய சமதர்மமும் எமக்கு வேண்டாம். நாங்கள் சுதேசி சரக்குத் தயாரித்துக் கொள்வோம். என்கின்றனர். சரக்கு இந்துஸ்தான் மோட்டார் நம்பர் பத்து, போன்ற முறையிலே இருக்கக்கூடும். நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்ட நண்பர்களே, இப்படி சர்ச்சிலிசத்துக்கு இரையாவது, சரிதானா என்று கொஞ்சம் இர ஆமர இருந்து யோசியுங்கள்.

கம்யூனிஸ்டு கட்சிமீது வந்த கோபம், கடைசியில், சர்ச்சிலிசத்துக்குச் சீடர்களாகும் நிலைமைக்கா கொண்டு போய்விடவேண்டும்! இது, ஜின்னாமீது உண்டாகும் கோபம், காங்கிரசை, சுதேச சமஸ்தான லீலாவிநோதர்களின் சினேகத்தைக் கூட நல்லது என்று எண்ணச் செய்து விட்டதே, அதுபோல அல்லவா இருக்கிறது, ஏன் இந்த விபரீதபோக்கு?

சோவியத் ஆதிக்கம் பரவுகிறது என்பதை இல்லை என்று மறுக்கவில்லை. மறுக்கமுடியாது. மறுப்பானேன்! ரஷியா, அதிக தூரத்திலும் இல்லை. எல்லைப்புற மாகாணம், அதைத் தாண்டினால் இப்கானிஸ்தான், அதை ஆடுத்தால், ஈரான், அதை ஓட்டி சோவியத்! மிக அருகாமையில்தான் ரஷியா இருக்கிறது உண்மைதான். இருந்தால் என்ன? ஆதிக்கம் வலுத்தால் என்ன? கிலிகொள்ள வேண்டியவர்கள் யார்? மக்களா, அல்லது மக்களைக் கசக்கிழிப்பியும் முதலாளித்துவமா? யோசித்துப்பார்! மாளிகையிலே உலவும் மந்தகாச உருவங்கள், மருள வேண்டியது முறை தான். உனக்கு என்னப்பா கவலை? உலுத்த வாழ்வுக்காகவே உன் உழைப்பைத் தந்து உறுமாறுபவனே, நீ ஏன், உன் சக்தயைத் தற்கொலைக்குப் பயன்படுத்திக் கொள்கிறாய்.

ரஷியாவின் ஆணவம் ஆதிக்க வெறி, ஆசை ஆகியவைகளைக் கண்டித்து எல்லைப்புற மாகாண எம்.எல்.ஏ. ஒருவர் சென்ற வார இந்து இதழிலே ஒரு கட்டுரை தீட்டியிருக்கிறார். என்ன சொல்கிறார், இந்த சர்ச்சிலிச் சீடர்?

“ரஷியாவின் ஆதிக்கம் இந்தியாவிலே பரவாதபடி தடுக்க, எல்லைப்புற மாகாணம் பணிபுரியும். எல்லைப்புற மாகாண வழிதான், எதிரியின் படைஏடுப்புக்கு ஏற்றது. ஆகவே எல்லைப்புறம் பாதுகாப்பானதாக, பலமானதாக இருக்கவேண்டும்” என்று கூறுகிறார். நல்ல மனிதர், சோவியத்தினால் ஆபத்து வரும் என்று இங்கு எண்ணம் இருப்பதைக் கவனித்தார், தனக்கும் சோவியத் ஆதிக்கம் பிடிக்காது என்பதைக் காட்டிக் கொண்டார், பிறகு? அங்கேதான் அவர், வேடிக்கையான மனிதராகிறார்!

சோவியத் ஆணவமும் ஆதிக்க வெறியும் கொண்டதாம்! அவர்கூறுவது. அதனை இந்தியாவுக்குள் வரவிடாதபடி தடுக்கும் நிலைபெற்ற இடம் எல்லைப்புற மாகாணம். அந்த எல்லைப்புற மாகாணத்தின் நிலைமை என்ன?

“பொருளாதாரத்துறை, கல்வித்துறை ஆகியவற்றிலே நீங்கள் அடைந்திருக்கிற அளவு முன்னேற்றம் எங்களுக்கு வேண்டும். படிக்கும் வசதியற்ற பட்டாணியன் படித்த பண்டிதனுடன் எப்படி நேசமாக முடியும்? யந்திரத் தொழில் துறையிலே நன்றாக முன்னேறிய இந்தியாவிலே, தொழில் துறையிலே முன்னேற்றமே ஆடையாத எல்லைப்புற மாகாணம் எப்படி ஒரு அங்கமாக இருக்கும்!

எங்கள் மாகாணத்திலே படிப்பு மிகமிகக் குறைவு. எங்களுக்குப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகம், தொழிற்கல்லூரி, மாதர் கல்வி போதகர்கள், ஆஸ்பத்திரிகள் எல்லாம் வேண்டும். எவ்வளவோ தொழில்கள் உற்பத்தி செய்யவழி உண்டு, ஒன்றுகூட உண்டாக்கப்படவில்லை. மலைகளிலே ஊலோகங்கள் உள்ளன. வெட்டி எடுக்கப் பணம் இல்லை. எந்தத் துûறியலே பார்த்தாலும் நாங்கள் மிகப்பன்னணியில் இருக்கிறோம். கதை இருக்கிறது ஏராளமாக, நாங்கள் முன்னேகியாதியுடன் வாழ்ந்தோம் என்றுகூற பழங்கதை பேசிப்பயன் என்ன? இப்போது நாங்கள் மிகப்பின்னணியில் இருக்கிறோம்”

இது, எல்லைப்புற மாகாணம் தான் அப்துல்கனிகான் எல்.எல்.ஏ. தீட்டும் சித்திரம். படிப்பு இல்லை! தொழில் இல்லை! நாகரிக வாழ்வுக்கான வசதி இல்லை, இந்தியாவின் மற்ற இடங்கள் முன்னேறிவிட்டன, முன்னேறுகின்றன, எல்லைமட்டும் தொல்லையே அனுபவித்துக் கொண்டே இருக்கிறது, என்றார் கான்அப்துல்கனிகான்.

இந்த எல்லைப்புற மாகாணத்தின் பலத்தைக் கொண்டு தான் ரஷியப்படை ஏடுப்பு நேரிட்டால் தடுக்க வேண்டும் என்கின்றனர். மகத்தான காரியத்தைச் செய்ய வேண்டிய பொறுப்பு எந்த மாகாணத்தின்மீது ஏற்றப்படுகிறதோ, அந்த எல்லைப்புறமோ, கல்வி தொழில் முதலிய எல்லாத்துறையிலும் பலம் குன்றிக் கிடக்கிறது!!

என்று அவரே கூறுகிறார். கூறிவிட்டு என்ன கேட்கிறார்? கொஞ்சம் கடன் கேட்கிறார். எல்லைப்புற மாகாணத்தைச் சீராக்க, பலப்படுத்த, எதிர்த்தாக்குதல் ஏற்படின் தடுக்க, எவ்வளவு பணம்? ஒரு இருபது கோடி ரூபாய்! ஆசாமி, புத்திசாலிதான்! சந்தேகமா!!

மற்றொன்று சொல்கிறார். சோவியத் ரஷியாவுக்கு ஏராளமான ஐந்தாம்படை இங்கே இருப்பதாக. கம்யூனிஸ்டுகளை அவர் குறிப்பிடவில்லை.

பசி! ஐழ்மை! இவை, சோவியத்துக்கு ஐந்தாம்படை என்கிறார். உண்மை! ஆனால் எவ்வளவு பெரிய உண்மை!! பசி! பசி! எங்கெங்கு பட்டினிப் பட்டாளம் இருக்கிறதோ, எங்கெங்கே ஏழையின் கண்ணீர் வழிகிறதோ, எங்கே இல்லாமையின் இம்சை இருக்கிறதோ, அங்கே எல்லாம், சோவியத்துக்கு ஐந்தாம்படை உண்டு, என்கிறார் எல்லை எம்.எல்.ஏ. உண்மைதானே! இந்த நிலையில் இவர் கேட்கும் 20 கோடி கடனாகக் கொடுத்துதான் என்ன பயன்?

பட்டினிக் கொடுஞ்சிறையிலே பதறுகின்ற மனிதர்களிடமா, மாஸ்கோவின் ஏகாதிபத்தியம், ரஷிய ஆதிக்க ஆசை என்ற சர்ச்சிலிசத்தைப் பேசுவது! பலிக்குமா? நம்புவரா? நியாயந்தானா?

சிந்தித்துப் பாருங்கள், நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டவர்களில் ஏராளமானவர்கள், தங்களையும், அறியாமல் சர்ச்சிலிசத்தக்குப் பலியாகிறார்களே, இது சரியா என்று!

(திராவிட நாடு - 21.4.46)