அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சர்க்கார் கடமை

தேனியில் 4.7.51ல் நடந்த திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டத்தில், அவ்வூர் காங்கிரஸ் குண்டர்களால், திட்டமிடப்பட்டு தடி, கல், இன்னும் பல பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கலகம் விளைத்த சம்பவம், தமிழ்நாடு முழுவதும் மனக் கொதிப்பையுண்டாக்கியிருக்கிறது. காங்கிரஸ் காலிகள் அஹிம்சை, மகாத்மா காந்தி, பாரத மாதா என்ற பெயரால் செய்த அக்கிரமம் போதாதென்று சட்டத்தையும், அமைதியையும் நிலைநாட்ட தக்க முறையில் நடவடிக்கை எடுத்து வெற்றிகரமாக நிலைமையைச் சமாளித்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன் விசாரணைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களால் கைது செய்யப்பட்டிருந்த கலகக்காரர்களுக்குப் பரிந்து கொண்டு சர்க்கார் வருவதைப் பார்க்கும்பொழுது, இனி இம்மாதிரி சம்பவங்கள் அடிக்கடி, இன்னும் பெரிய அளவில் வரும் பொதுத் தேர்தலுக்குள் ஏற்படும் என்றே தெரிகிறது. இன்றைய ஆளவந்தாருக்கு எதிர்க்கட்சிகளாக உள்ளவைகளை அடக்க, மிகவும் வெறுக்கத் தக்க மூர்க்கத்தனமான நடவடிக்கைகளில் நம்பிக்கையிழந்த காங்கிரஸ் ஈடுபட வேண்டியதாகிவிட்டது. இம்மாதிரி சம்பவங்கள் பல ஏற்படுவது கடைசியில் பாசீச பாதைக்கே அழைத்துச் செல்லும். ஆகவே, மக்கள் இம்மாதிரி கொடுமைகளைத் தாங்கிக் கொண்டால், தங்களின் அடிப்படை உரிமைகளையே இழக்க நேரிடும் என்பதையுணர வேண்டும். இச்சம்பவத்தைப் பற்றி விசாரித்து, குற்றவாளிகளைத் தண்டித்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு நியாயம் வழங்கிட உத்தியோகஸ்தரல்லாத விசாரணைக் குழு ஏற்படுத்துவது சர்க்காரின் கடமை. இலாக்கா விசாரணையினால் மக்களை ஏமாற்ற முடியாது. அது காங்கிரஸ்காரர்களின் வெறியாட்டம், சர்க்காரின் அதிகாரத்துணையுடன் நடைபெற வழி செய்வதற்கே உதவும்.

வி.சர்க்கரை,
தலைவர்
அனைந்தியத்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்.