அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சாஸ்திரியார் கட்டிய ஜல்லடம்

இனாம்தாரர்கள் சார்பாக, கூ.கீ.வெங்கட்ராம சாஸ்திரியார், ஜல்லடம் கட்டிக்கொண்டு புறப்பட்டிருக்கிறாரல்லவா! அந்த ஜல்லடம், அவர் கட்டிப் பத்தாண்டுகளுக்கு மேலாகிறது.

அவருக்கு முன்பும், பலர் ஜல்லடம் கட்டினர். சர்மா, ஐயர், ஐயங்கார், சர், அட்வகேட், அட்வகேட் ஜெனரல் ஆகியோர். நீண்டபோர்! சுவையுள்ள காரணம், அப்போருக்கு. அந்தக் காரணவிளக்கம் இது.

இனாம்தாரர்கள், ஜமீன்தாரர் போல் அல்லர்; அவர்களுக்கு உரிமை அதிகம்; ஜமீன்தாரராவது நிலத்துக்கு வரி விதித்து, ஒரு பகுதியைச் சர்க்காருக்குக் கொடுத்துவிட்டுப் பெரும்பகுதியைத் தமக்காக எடுத்துக் கொள்ளமட்டுமே உரிமைகொண்டவர். இனாம்தாரர், இதுபோல, வரி விதிக்கும் அதிகாரி மட்டுமல்லர், நிலத்துக்குச் சர்வ சுதந்தரத்துடன், சர்வ உரிமைகளை அனுபவிக்கும் நிலை பெற்றவர் - என்றுதான் சட்டமும் சம்பிரதாயமும், இருந்தது. 1908இல் இந்த முறைப்படியே, இனாம்தாரர்களின் உரிமையைப் பாதுகாத்தும், அந்தஸ்தை உயர்த்தியும் பிரிட்டிஷார் சட்டம் இயற்றினர்.

ஆனால், இனாம்தாரர்களின் கொட்டத்தை 1936ஆம் வருஷ இனாம் சட்டத்தின் மூலம், ஜஸ்டிஸ் மந்திரி சபை நொறுக்கிற்று.

இனாம்தாரர்களும், ஜமீன்தாரர்போன்றவர்களே - நிலத்துக்குத் தீர்வை விதிக்கும் உரிமை பெற்றவர்களே - இனாம் குடிகளுக்கு அவர்கள் கோமான்களல்லர், என்று சட்டம் இயற்றினர்.

அப்போது, மயிலையும், திருவல்லிக்கேணியும் இப்போது போடுவதுபோலவே கூக்குரலிட்டன.
‘சர்-மாக்களும், ஆச்சாரியாரும், சாஸ்திர விரோதமான காரியம் இது - சண்டாளர்கள் ஆட்சியால் நேரிடுகிறது என்று கண்டித்தனர்.

பொதுவுடைமையைப் புகுத்தும் சட்டம் இது - பரம்பரை பாத்தியதையைப் பறிக்கும் சட்டம் இது - நாஸ்திகர்களின் சட்டம் இது - என்று கூ. கீ. வெங்கட்ராம சாஸ்திரியார் அப்போது ஆர்ப்பரித்தார் - இப்போது போலவே. ஓடிஓடி மாநாடுகள் கூட்டினார். பாபட்லாவில் நடந்த ஒரு மாநாட்டிலே, ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர்களான ஜமீன்தாரர்களும், தொண்டர்களான புரட்சிக்கார்களும், ஒன்றுகூடிக் கொண்டு, இனாம்தாரர்களை ஒழிக்கச் சதிசெய்கிறார்கள் என்று ஓலமிட்டார். இதைச் சட்டமாகும்படி விடமாட்டேன் என்று சபதம் செய்தார். அப்போதும் அவர், அகில உலகத்திலே உள்ள நாடுகளின் சட்ட புத்தகங்களைச் சாட்சிக்கு இழுத்தார்.

காங்கிரஸ் தலைவர்கள், சாஸ்திரியாருடன் கைகோத்துக்கொண்டு, எந்தச் சட்டம் உண்மையாகவே, நிலமுதலாளித்துவத்தின் ஒரு பகுதியைத் தாக்கி, ஏழை உழவனுக்கு உரிமை கிடைக்க வழி செய்ததோ, அதே இனம் சட்டத்தை எதிர்த்துப்பேசிப் பொதுமக்கள் மனத்தைக் கலைத்தனர்.

ஜஸ்டிஸ் மந்திரிகள், சட்ட புத்தகங்களைச் சட்டை செய்யவில்லை. சாஸ்திரியாரின் புலம்பலைப் பொருட்படுத்தவில்லை. இனாம் குடிகளின் நன்மையைக் கைவிட முடியாது என்று தெளிவாகக் கூறிவிட்டனர்.

மயிலையும், திருவல்லிக்கேணியும், கவர்னரிடம் தஞ்சம் புகுந்தன. கவர்னர், மயிலை மகிமையாலும், திருவல்லிக்கேணி தரிசன விசேஷத்தாலும், சொக்கிப்போனார். சட்ட சபையிலே, இனாம் குடிகள் மசோதா நிறைவேறியும், அதனைச் சட்டமாக்க முடியாது என்று கூறினார். இருமுறை நிராகரித்தார். ஜஸ்டிஸ் மந்திரிகள் இந்தப் பிரச்னையை விட்டுவிட மறுத்தனர்; கடைசியில், கவர்னர் இணங்கினார்.
மயிலை, சென்னையிலிருந்து நேரே டில்லிக்குத் தாவிற்று! வைசிராயிடம் காவடி எடுத்தனர்.
வைசிராய், அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு, சட்டத்தை அங்கீகரிக்க மறுத்தார். விடவில்லை ஜஸ்டிஸ் மந்திரிகள்; போராடினர். கடைசியில், வேறு வழியின்றி, வைசிராயும் இணங்கினார். சட்டம் நிறைவேற்றப்பட்டது. இவ்வளவு இடையூறுகள் பதினோராண்டுகளுக்கு முன்பு. இப்போது, அந்தச் சட்டத்தின் வளர்ச்சி போன்ற, புதியசட்டம் ஏற்பட இருக்கிறது. இப்போதும், அந்தப்பழைய முறைப்படியே எதிர்ப்பு, பார்ப்பனத்தலைவர்களிடமிருந்தும், காங்கிரசிலுள்ள வைதிகர்கள், காட்டுராஜாக்கள் ஆகியோரிடமிருந்தும் வருகிறது.

1908-ஆம் வருஷச் சட்டத்தின்படி, இனாம் நிலங்களை, இனாம்தாரர், தன் இஷ்டப்படி, விற்கஉரிமை இருந்தது. ஜஸ்டிஸ் மந்திரிசபையின் சட்டத்தின் பயனாக, இனாம்தாரர்களின் சொக்கட்டானாக நிலங்கள் இருந்த நிலை ஒழிந்தது. 1933ஆம் வருஷம் நவம்பர் மாதத் தொடக்கத்தின் போது, எந்தெந்த இனாம் நிலம், எந்தெந்தக் குடியானவனிடமிருந்ததோ, அவனுக்கு உரிமை கிடைத்தது. இனாம்தாரர், வரிவாங்கும் அளவோடு, இருக்கவேண்டியதாயிற்று.

இப்போது கொண்டுவரப்படும், மசோதா, இந்த வரி விலக்கும் வேலையையும், இனி இனாம்தாரரிடம் விடவேண்டியதில்லை, அவர்களுக்கு ஏதேனும் பணம், நஷ்டஈடாகக் கொடுத்துவிட்டு நிலத்தை, ரயத்வாரி முறையின்கீழ்க் கொண்டு வந்து விடலாம் என்பதாகும்.

“ஏதடா தொல்லை வளருகிறது! ஜஸ்டிஸ் மந்திரிகளோ, நமக்கு நிலத்தின் மீது பூரண பாத்தியதை கிடையாது, என்றனர் - இப்போது காங்கிரஸ் மந்திரிகளோ, இந்த வரிவசூலிக்கும் காரியமும் இனிக்கூடாது என்கிறார்கள். நமக்கு உள்ள ஆதிக்கம், இலாபம், எல்லாம் போகின்றனவே!” என்று இனாம்தாரர்கள் அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

பிடிபட்ட கள்ளனேகூடப் போலீசார் கொடுக்கும் அடி உதையையும் மறந்துவிட்டு, இவ்வளவு கஷ்டப்பட்டும் திருடிய பொருளைப் போலீசார், சொந்தக்காரனிடம் கொடுத்துவிடுகிறார்களே, நாம் பட்ட கஷ்டமெல்லாம் வீணாயிற்றே - என்று விசாரப்படக்கூடும்.

ஆனால், அந்த விசாரத்துக்காக எப்படிக் களவு அனுமதிக்கப்பட முடியாதோ, அதே போலத்தான், ஜமீன், இனாம் போன்ற, முறைகளையும், நாகரிக சர்க்கார் அனுமதிக்க முடியாது, இனாம்தாரர்களின் கண்களிலே இரத்தக்கண்ணீர் வழிந்தாலுங்கூட.

இனாம்தாரர்களிலே, மிகச்சிறு அளவு நிலம் வைத்துக்கொண்டுள்ளவர்களுக்காக வாதாடுவதாகக் கூறிக்கொண்டு, மறைமுகமாக, மடாதிபதிகள் போன்ற கொழுத்த இனாம்தாரர்கள் சார்பிலே வாதாடுகிறார், வக்கீல் தொழிலை, வர்க்க நலனுக்கு வழங்கும் வெங்கட்ராமசாஸ்திரியார். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்கள் மட்டுமே வைத்துக்கொண்டுள்ள ஏழை இனாம்தாரரின் கண்ணீரைக் காட்டுகிறார். அந்தக் கண்ணீரைத் துடைக்கச் சொல்லிமட்டும் கேட்கிறாரா? இல்லை! அதைச் சாக்குக்காட்டி, ஏமாந்த ராஜாக்களிடம் ஏதேதோ செய்து நிலத்தைத் தட்டிப் பறித்துக் கொண்டு, இனாம்தாரராகி, இன்று பாடுபடாமல் பன்னீரில் குளிக்கும் பேர்வழிகளைக் காப்பாற்றக் கிளம்புகிறாரா?

இந்தக் காரியத்தை இவர், தொடர்ந்து செய்து வருகிறார். ஜஸ்டிஸ் மந்திரிகள், இனாம் சட்டம் கொண்டுவந்த காலமுதற்கொண்டு, விடாது செய்து வருகிறார்.

-பொதுக் கூட்டங்கள் போட்டோம் - மாநாடுகள் நடத்தினோம் - துண்டு வெளியீடுகள் போட்டோம் - ஜஸ்டிஸ் மந்திரி வகையின் திட்டத்தைப் பலவழிகளிலும் தாக்கினோம், தகர்க்க” என்று அவரே ஆணவத்துடன் கூறினார், பிரகாசம் அமைத்த ஜமீன்முறை விசாரணைக் கமிட்டி யார் முன்பு.

இந்தக் கமிட்டி, ஆச்சாரியார் மந்திரிசபைக் காலத்திலே அமைக்கப்பட்டது. பிரகாசம் இதற்குத் தலைவர். ஜமீன்தாரர்கள் சார்பிலே, இந்தக் கமிட்டியிலே, மிர்சாபூர் ஜமீன்தாரர் வீற்றிருந்தார்.

இந்தக் கமிட்டியார், விசாரணை நடத்தினர்; கலெக்டர்களின் குறிப்புகளைத் தொகுத்தனர்; நிலப்பிரபுக்களின் அறிகைக்கைகளைச் சேர்த்தனர்; பல இடங்களைக் கண்டனர்; ஏராளமான பணம் செலவு செய்து, பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கை தயாரித்தனர்.

இவ்வளவும் செய்துவிட்டு, ஜமீன்தாரி ஒழிப்பை மட்டும் செய்யாமல், ஆச்சாரியார் மந்திரிசபை கலைந்துவிட்டது.

அந்தக் கமிட்டியின் முன்பு, இன்று மந்திரியாக உள்ள, காளா வெங்கட்ராவ் சாட்சியம் கூறுகையில், “ஜமீன்கள் போலவே இனாம்களும் ஒழிக்கப்பட வேண்டியவையே” என்று பேசியிருக்கிறார்.

அதே கமிட்டியின் முன் சாட்சியம் தந்த வெங்கட்ராமசாஸ்திரியார், இப்போதுபோலவே, இனாம்தாரர்களுக்காகப் பிடிவாதமாக வாதாடியதோடு, ஜஸ்டிஸ் மந்திரிசபை நிறைவேற்றிய சட்டத்தையும் ரத்து செய்து, இனாம்தாரர்களுக்கு முழு உரிமை கிடைக்கும்படி செய்யவேண்டுமென்று வற்புறுத்திப் பேசினார்.

இங்ஙனம் இவர் இடைவிடாமல் இனாம்தாரர் பக்கம் வேலை செய்து வருவதுடன், ‘இந்து’ பத்திரிகையின் ஆதரவைப்பெற்று, அவ்வப்போது ஏற்படும் மந்திரி சபைகளை, (ஜஸ்டிஸ் மந்திரி சபையானாலும் சரி, காங்கிரஸ் மந்திரி சபையானாலும் சரி) மிரட்டிப் பார்க்கிறார்.

ஜெட்லண்டு பிரபு இந்தியா மந்திரியாக இருந்தபோது, கவர்னர், வைசிராய் ஆகிய இருவர் போட்ட முட்டுக்கட்டைகளைத் தாண்டி நிறைவேறிய இனாம் சட்டத்தை, இந்தியா மந்திரி தொலைக்க வேண்டுமென்று பெரிய மகஜர் தயாரித்து, அதை அனுப்பிவைக்கும்படி சென்னை சர்க்காரைக் கேட்டுக்கொண்டார். அப்போது ஆச்சாரியார் முதலமைச்சர். அவருக்குச் சங்கடமான நிலை ஏற்பட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சியினர், இந்தியா மந்திரி, எங்கள் விவகாரத்தில் தலையிட நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை என்று மேடை அதிரப் பேசிவிட்டனர். எனவே, ஆச்சாரியார், சாஸ்திரியாரின் தாட்சணியத்துக்காக வேண்டி, இந்தியா மந்திரிக்கு மகஜர் அனுப்புவது தவறு என்று, காங்கிரஸ் சட்டசபையினர் கூறிவிட்டனர். வெங்கட்ராமசாஸ்திரியார், காரியம் பலிக்காமல் வீடு திரும்பினார்.

இதுபோல் இவர் இடைவிடாது செய்துவருவது மட்டுமல்ல, இவர் போலச் சில பார்ப்பனத் தலைவர்கள், பன்னெடு நாட்களாக இந்தக் காரியம் செய்து வருகின்றனர்.

கிழக்கிந்தியக் கம்பெனி நாட்டை ஆளத்தொடங்கிய உடனே, ஆங்காங்குக் காட்டு ராஜாக்கள் கிளம்பினர். அவர்களில் பலரைச் ‘சரிப்படுத்த’ கம்பெனி வேலை செய்தது. ஜமீன்தாரர்கள் முளைத்தனர். அதேபோது, ஒரு பெரிய கும்பல், நாங்கள் இனாம்தாரர்கள், சுரோத்திரியதாரர்கள், அக்கிரகாரதாரர்கள், ஜாகீர்தாரர்கள் என்று பல்வேறு பெயர்களைக் கூறிக்கொண்டு, புராண ஆதாரமுதற்கொண்ட, செப்பேடு ஆதாரம் வரையிலே, ‘சாசனம் இருப்பதாகக் காட்டிக்கொண்டும் “சாசனம்” என்ற ஏதும் இல்லை. ஆனால், ‘சந்திரசூரியாள் உள்ள வரை, ஆண்டு அனுபவித்துக்கொள்ள வேண்டியது’ என்று எமக்கு, இன்ன மகாராஜா வாக்களித்தார். அதுபோலவே நாங்கள், இந்தக் கிராமங்களைப் ‘பாரம்பரியமாய்’ ஆண்டு அனுபவித்து வருகிறோம் என்று கூறிக்கொண்டும், ஏராளமானவர்கள் கிளம்பினர்.

இவர்களிலே யார் உண்மையானவர்கள், யார் போலிகள் என்பதை ஆராய்வது, பெரிய தலைவலியாகிவிட்டது பரங்கியருக்கு. கடைசியில் சுமார் 50 வருஷகாலமாக, யாரார் ‘இனாம்’ முறையில், நிலங்களையோ, ஊர்களையோ, அனுபவித்து வந்தார்கள் என்று ஏற்படுகிறதோ, அவர்களுக்கு இனாம் உரிமை உண்டென்று, நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்று கூறிவிட்டனர். அவர்களுக்கு என்ன அதனாலே நஷ்டம்! அவர்களே அக்கிரமமாக நாட்டைப் பிடித்துக் கொண்டவர்கள். எனவே, ஆளுக்குக் கொஞ்சம் அகப்பட்டவரையில் சுருட்டு!! இந்த முறையிலே, புத்துயிர் பெற்றனர் இந்த இனாம்தாரர்கள்.

அதற்குப்பிறகு, இனாம்தாரர்கள் சம்பந்தமான பிரச்னை கிளம்பியபோது, இன்று வெங்கட்ராம சாஸ்திரியார் அவர்கள் சார்பில் வாதாடுவதுபோலவே, அப்போது சர்.வி.பாஷ்யம் ஐயங்கார் போன்றவர்கள் வாதாடினர். இதே ‘கைங்கரியத்தை’ சர். தேசிகாச்சாரியார், திவான்பகதூர் கீ.ங. சீனுவாசஐயர், இ.ஓ.சீனுவாசராவ், ஓ. கீ. குருசாமி ஐயர், அந்த நாளில் அட்வகேட் ஜெனரலாக வேலை பார்த்த சிவசாமி ஐயர், நரசிம்மேஸ்வரசர்மா ஆகியோர் செய்துவந்தனர்.

1908 முதல் 1947 வரையில் எந்தெந்தச் சமயத்திலே, யாரால் இனாம்தாரர்களின் பிரச்னை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், பிரபல பார்ப்பனத் தலைவர்கள் இனாம்தாரர் பக்கமே நின்று வாதாடிக் குறிப்பிட்ட அளவு வெற்றியும் பெற்றுள்ளனர். இந்த வெற்றிக்கு ஒரு பெரிய இடியாக முடிந்தது ஜஸ்டிஸ் மந்திரி சபை கொண்டுவந்து நிறைவேற்றிய இனாம்
தாரர் குடிவாரச் சட்டம்.

இனாம்தாரர்களின் ஆதிக்கத்தைக் காப்பாற்ற, இங்ஙனம் சர். வி. பாஷ்யம் ஐயங்கார் காலமுதல் கூ.கீ. வெங்கட்ராம சாஸ்திரியார் காலம்வரை பிரபல பார்ப்பனத்தலைவர்கள், கச்சை கட்டிப்புறப்படுவதைக் காரணமற்ற சம்பவமென்று யாராவது தள்ளிவிட முடியுமா? சுயஜாதி அபிமானம், வகுப்புவாத வெறி, இவையே இந்த நிலைமைக்குக் காரணம் என்பதை மறைக்க முடியுமா? ஏன் இனாம்தாரர்களிடம், இந்தத் தலைவர்களுக்கு இவ்வளவு அக்கறை ஏற்படுகிறது? இதோ காரணம்.
இனாம்கள், இந்துமத சாஸ்திரப்படி, புண்ணியம் தேடுவதற்காக மன்னர்களால் தரப்பட்டவை. சாஸ்திரப்படி, ‘தானம்’ வாங்கும் உரிமை யாருக்கு? பார்ப்பனருக்கே! எனவே, பெரும்பாலான இனாம்கள் பார்ப்பனர் பெற்ற தானங்கள்.

மற்றும் புண்ணியகாரியம் என்று கருதப்பட்டு,
பூந்தோட்டம்
சாவடி
சத்திரம்
வேதபாடசலை
இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வதற்காக என்றும், பொதுவாகவே
கோயில்
மடம்
ஆகியவற்றுக்கான காரியத்துக்காகவும், ‘இனாம்’ நிலங்கள் வழங்கப்பட்டன.

இந்த இனாம்கள், இந்து மதத் தத்துவத்தின்படி ஏற்பட்டது என்றபோதிலும், இந்த மன்னர்கள் மட்டுமல்ல, முஸ்லீம் மன்னர்கள், வந்துபோன மாராட்டிய மன்னர்கள், பிடித்தாட்டிய பரங்கியர் அனைவருமே தந்தனர்.

இவ்வளவு இனாம்களும், பார்ப்பனருக்கும், அவர்கள் கட்டிவிட்ட கதைப்படி, எதெது புண்ணிய கைங்கரியம் என்று எண்ணப்பட்டதோ, அந்தக் காரியத்துக்குத் தரப்பட்டனவே தவிர, கண்ணிழந்தவன், காலிழந்தவன், கதிஇழந்தவன் ஆகியோரின் பராமரிப்புக்கு, அனாதைகளின் ரட்சகத்துக்கு, அபலைகளின் கஷ்ட நிவாரணத்துக்கு என்று இப்படிப்பட்ட அவசியமான காரியத்துக்கு, இந்த மன்னர்கள் “இனாம்’ வழங்கியதில்லை.

ஜெபமலைக்குப் பயந்து இனாம்கள் வழங்கினர்.

இந்து மன்னர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியமார்க்க மன்னர்களுங்கூட வழங்கினர். வடாற்காடு மாவட்டத்திலே, நட்டேரி என்பது ஓர் இனாம் கிராமம்.

நஞ்சை, புஞ்சை நிலங்கள் சேர்ந்து மொத்தத்தில் 4730 ஏக்கர் உள்ளன.

இந்தக் கிராமம், 128 பிராமணர்களுக்கு, 175 வருஷங்களுக்கு முன்பு, ஆற்காட்டு நவாபால், முழு உரிமையுடன் ஆண்டு அனுபவித்துக் கொள்ள, ‘இனாம்’ ஆகத் தரப்பட்டது.

நவாபுக்கும் பிராமணர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் அவர்களுக்கு 4730 ஏக்கர் பூமியை அவர் ‘இனாம்’ தந்தார் என்பது நமக்குத் தெரியாது. தெரிந்து என்ன பயன்? ஏனோ கொடுத்தார்! இந்துமதக் கர்த்தாக்களான பிராமணர்கள், இஸ்லாம் மதத்தவரான ஆற்காடு நவாபு தந்த அந்த நிலத்தை, இன்றளவு வரையில் ஆண்டு அனுபவித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

பார்ப்பனர்களுக்கு, அவர்களின் சொந்த நன்மைக்காக என்று வழங்கப்பட்ட ‘இனாம்களே’ இதிலே அதிகம்.

இனாம்தாரர்கள் பிரச்னை பற்றிச் சர்க்கார் ஆராய்ந்து, முன்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, பார்ப்பனர்களுக்கென்று (தானமாக) 2,54,473 ‘இனாம்கள்’ தரப்பட்டுள்ளன; அதாவது, இரண்டரை இலட்சத்துக்கு மேற்பட்ட சாசனங்கள், இனாம்கள், பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டவை.

கோயில், மடம், ஆகியவை சம்பந்தமாக 79,196 இனாம்கள் உள்ளன.

கடவுள் காரியத்துக்கு, 79,196 இனாம்கள்.

பூதேவர்களின் சுகபோகத்துக்கு 254,473 இனாம்கள்!

சத்திரம், சாவடி, பூந்தோட்டம், கிணறு, வேதபாடசாலை, போன்றவை நடத்துவதற்கு என்று குறிப்பிட்டுத் தரப்பட்ட இனாம்கள் 5600.

மற்றும் கிராமத்திலே மராமத்து, நீர்ப்பாசனம், அணைகட்டுவது, குளம் வெட்டுவது போன்ற பணி புரிவதற்காக என்று குறிப்பிட்டுத் தரப்பட்ட இனாம்கள் 6938.

கிராமக்காவல் வேலை முதலியனவற்றுக்கான 14,860.

கிராமத்து “ஊழியக்காரர்கள்” என்று பலவகை வேலைகள் செய்பவர்களுக்குத் தரப்பட்ட இனாம்கள் 6360.
ஆக, இனாம்தாரர்களின் தொகைதான் எவ்வளவு, யார் பார்த்தாலும் ‘எனக்கு இனாம்பாத்தியதை இருக்கிறது, இனாம் சாசனம் இருக்கிறது’ என்று கூறிக்கொண்டு கிளம்புகிறார்களே! யார்தான், இனாம்தாரர் என்று சர்க்கார் ஆராய்ச்சிசெய்து, எவ்வளவு ‘இனாம்கள்’ உள்ளன என்று புள்ளி விவரம் தொகுத்த போது,

3,67,427
இனாம்கள் வழங்கப்பட்டுள்ளன என்று முடிவு செய்தனர்.

3,67,427 இனாம்களில்,
2,54,473 இனாம்கள்

பார்ப்பனர்களின் சொந்தச் சுகத்துக்காகத் தரப்பட்டவை!! பாஷ்யமும் சாஸ்திரியும், ஏன் பதைக்கிறார்கள் என்பதற்குக் காரணம் ஆயிரம் காட்டுவானேன்? புள்ளி விவரம் பேசுகிறது!!

தமிழ்நாடு இனாம் விவசாயிகள் மாநாடு.

27-10-47 மாலை 4.30க்கு சென்னை, புரசை, முத்தையசெட்டி உயர்நிலைப்பள்ளியில் நடைபெறும்.


ரெவின்யு மந்திரி திரு. காளா. வெங்கட்ராவ் மாநாட்டை ஆரம்பித்து வைப்பார்.

ம.பொ.சிவஞானம் அவர்கள் தலைமை வகிப்பார். ப. ஜீவானந்தம், சி. என். அண்ணாத்துரை ஆகியோர் சொற்பொழிவாற்றுவர். அன்பர்கள் வருக.

அடுத்த கட்டம்
நிறம் வேறாக இருக்கும் காரணத்திற்காக வேற்றுமை காட்டி நியாயம் பேசுவது எவ்வளவு அக்கிரமமோ, அதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அநீதியானது பிறப்பினால் பேதம் காட்டி, மக்களை மாக்களாக நடத்துவது. அதிலும் தீண்டத் தகாதவர்களெனச் சிலரைக் கூறித் தெருவில் நடக்கவிடாமல் தடுப்பதும், ஆண்டவன் எழுந்தருளி இருப்பதாகச் சொல்லப்படும் இடங்களில் அனுமதிக்க மறுப்பதும், உலகிற்கெல்லாம் ஆத்மஒளியைத் தரவல்ல புண்ணியபூமி என்று பேசப்படும் நாட்டிற்குப் பொருந்தாது. இன்று எங்ஙனம் கோயில்கள் திறக்கப்படுகின்றன? அதுவும் ஏதோ காரணார்த்தமாகச் செய்யப்படுவதாகத்தான் இருக்கிறது. எப்படி இருந்தாலும் ஒரு பெரிய களங்கம் நீக்கப்படுகிறது எனும் அளவில் நாம் மகிழ்ச்சி கொள்ளத்தான் வேண்டும்.

தோழர் சிவஷண்முகம் போன்ற அதிகாரத்திலுள்ளவர்களை ‘உள்ளே வாருங்கள்’ என அழைக்கும் நிலையில்தான் இன்னும் ஆலயப்பிரவேசம் இருக்கிறதாக அவரே கூறுகிறார். ஆலயப் பிரவேசம் மட்டும் போதாது, வேறு பல நன்மைகளையும் செய்ய வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருவாரூர் ‘ஹரிஜன’ சேவாசங்க ஆண்டுவிழாவில் பேசும் பொழுது, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்தச் சங்கமும் இரண்டு தீர்மானங்களைச் செய்துள்ளது. தீண்டப்படாதோர் எனப்படுபவர்கள் குடியிருக்கும் இடங்களை அவர்களுக்கே சொந்தமாக்குவது ஒன்று; போதிய கல்வியளிக்க வேண்டுமென்பது மற்றொன்று. இந்த இரண்டும் ஜீவாதாரமானவை. ஒவ்வொருவரும் தோழர் சிவஷண்முகம் போன்ற பொருளாதாரத்துறையில் வசதிபெறும் அளவிற்கு வசதி செய்யப்படுவதுதான், ஆலயப்பிரவேசத்தின் அடுத்த கட்டம். இந்தக் காரியத்தில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் முறையில் தாழ்த்தப்பட்ட தோழர்கள் ஒன்று திரண்டு ஏகோபித்த குரலில், உரத்துப் பேசவேண்டும். அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என்பதை நினைவில் வைக்கவேண்டும்.

28.2.47