அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சதுர்வேதி மங்கலம்!

ஆதி நாட்களிலே, புராண இதிகாசங்களைக் கேட்டனர். இன்று யார் அவைகளைச் சட்டை செய்கின்றனர். அப்படியாரேனும், கலைக்காகவோ, பொழுது போக்குக்காகவோ அவைகளைப் படித்தாலுங்கூட, பார்ப்பனருக்குத்தாசராக இசைவதில்லை, எனவே இக்காலத்திலே, பழைய ஏடுகள் மக்களைப் பாழாக்குகின்றன என்று பேசுவதும், எழுதுவதும் அவசியமற்ற காரியம், ஆகவே அக் காரியத்தைச் செய்வதைவிட வேறு, இக்காலத்திற்கு அத்யாவசியமான பிரச்னைகளைப்பற்றி எழுதலாகாதா, என்று அன்பர் சிலர் நம்மைக் கேட்டிருப்பதோடு, பழைய காலத்துக் கருத்துப் பரவியிருந்த போதுங்கூட, ஆரியருக்கு ஆதிக்கம் தரப்பட்டதாக ஆதாரம் இல்லையே, தமிழர் தமது ஆற்றல் குன்றும் நிலை பெற்று, வாணிபத்திலே வீழ்ச்சியுற்று, வளமிழந்த பிறகே, சுறுசுறுப்பும், அறிவாற்றலும் பெற்றிருந்த ஆரியர் உயர்ந்தனர், என்று நமக்குச் சமாதானங் கூறுகின்றனர். பார்ப்பன ஆதிக்கம் என்ற பிரச்னையே அபத்தம் என்று ஒரு சாரரும், பார்ப்பன ஆதிக்கம் என்பது முக்கியமாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையன்று என்று வேறோர் சாராரும் கூறுகின்றனர். ஆனால், அவ்விரு சாராரும் ஆரியருக்கு முதலிலே இடங்கிடைத்த வகையையும், அதன் விளைவாகத் தமிழர் இடர்பட்ட தன்மையையும் மறந்து விடுகின்றனர். நரை தெரியாதிருக்க மினுக்கெண்ணையும், நரம்புத் தளர்ச்சியைத் தடுக்க மதனலீலா செந்தூரமும், குடி நாற்றத்தை மறைக்க அரகஜாவும், பயன்படுத்தப்படுவதுபோல, ஆரியருக்குத் தாசராக இருக்கும். கேவல நிலைமையை வெளிக்குத் தெரியவொட்டாது தடுக்க செல்வம் செல்வாக்கு படிப்பு பட்டம், பதவி முதலிய முலாம்களைத் தேடிப்பூசிக்கொண்டு சிலர் மகிழ்வதையும் நாமறிவோம், ஆனால் விஷயமுணர்ந்தவர்களுக்கு இந்த விசேஷங்கள், அடிமையணியும் தங்கச் சங்கிலி போன்றது கூண்டில் அடைபட்டுக் கிடக்கும் கிளிக்குத் தரப்படும் கொவ்வைப்பழம் போன்றது என்பது நன்கு தெரியும். எனவேதான், தமிழருக்கு எவ்வித சீரும் சிறப்புமிருக்கினும் மாட மாளிகையிலே உலவிக்கொண்டு, மனோரதம் நிறைவேறியதால் மந்தகாசமுகங் கொண்டு காட்சிதரினும், மன்னர்பிரான் சர்க்காரிலே, மணி விளக்குகளாக விளங்கினாலும், ஆரியருக்கு அடிமைகள் என்ற முலாம் அவர்களைவிட்டு போகவில்லை என்பதை நாம் வலியுறுத்தி வருவதோடு, அந்த மூல நோய் போகாமுன்பு, வேறு எவ்வித எழில் இருப்பினும், அவை வெறும் முலாமாகவே கருதப்படும் என்று கூறி வருகிறோம்.

இன்று போலன்றி, தமிழர் தரணியாண்ட அந்த நாட்களிலேயுங்கூட, ஆரியத்தை வரவேற்றதும், தமிழர் நிலை குலைந்துதான் விட்டது. நாமோர் மண்டலாதிபதி, நாம் ஏதோ பிச்சை கேட்கும் பார்ப்பனருக்கு இச்சைபட்ட பொருளைத் தருவதால், நமது செல்வத்துக்கு என்ன குறை வந்துவிடும், என்று பிற்காலத்தமிழ் மன்னர்கள் கருதியே, ஆரியத்தை வளர்த்தனர், அலட்சியத்தோடு. அதன் பயன், என்ன? ஓடம் பெரிது, ஓட்டை சிறிது, என்றாலும், சிறியதோர் துளையிலே ஆற்று நீர் புகுந்து, பின்னர் ஓடத்தையே அமிழ்த்திவிடுமன்றோ! அதுபோல், செல்வமும் செல்வாக்கும் சிறக்க வாழ்ந்த தமிழ் மன்னர்கள், சிறுசிறு தானங்கள் தந்தார்களே ஆரியருக்கு, அதன் விளைவு, மண்டலங்களை மண்மேடாக்கிவிட்டது, மக்களை அடிமைகளாக்கிவிட்டது. இதனைத் தெரிந்து கொண்டால், இன்று, “இது என்ன, பெரிய பிரச்னையா?” என்று அன்பர் சிலர் பேசவும் மாட்டார்கள். ஏதோ கொஞ்சம் காசு பார்ப்பனருக்குப் புரோகிதத்துக்காகச் செலவிட்டால், குடி முழுகியா போகும், என்ற எண்ணத்தையும் எவருங் கொள்ளமாட்டார்கள். தமிழகத்தின் தாழ்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அடிகோலியதே, பிராமணருக்குத் தானம் தருவது, அவர்களுக்குச் சலுகை காட்டுவது, அவர்களுக்கு வசதிகள் செய்து தருவது, என்ற போக்கை மன்னர்களும், பூமான்களும் கொண்ட நிலைதான். இந்த நம் வாதத்திற்கு, ஆதாரம் ஏராளம், சரிதத்தில் ஆராய்ச்சியில், வெறும் ஏடுகள் மட்டுமல்ல, கல்லிலே பொறிக்கப்பட்ட ஆதாரங்கள், செப்புப்பட்டயங்களிலே செதுக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் உள்ளன. இதோ கேளீர், தமிழர், பூதேவருக்குத் தானமளித்த வரலாற்றினை! பிற்காலச் சோழ, பாண்டிய மன்னர்களும், விஜயநகர வேந்தரும், கிராமங்கள் பலவற்றை விலைக்கு வாங்கி, பிராமணர்களுக்குத் தானமாகத் தந்தனர். நாலு வேதம் ஓதும் பிராமணர்களின் இருப்பிடம் என்பதைக் குறிக்க, இத்தகைய தானப்பிரதேசங்கட்குச் சதுர்வேதி மங்கலம் என்று பெயரிடப்பட்டது. அக்ரகாரம், பிரம்ம தேசம், பிரம்ம மங்கலம் என்ற வேறு பல பெயர்களும் மேற்படி கிராமங்களுக்கு உண்டு. இத்தகைய பல கிராமங்கள் பிராமணர்களுக்குச் சர்வ மான்யமாகக் கிடைத்ததை நிரூபிக்கும், ஆதாரங்களான, சில சாசனங்களும், கல் வெட்டுகளும், பல உள்ளன. தஞ்சைக் கோயில் தெற்குப் பிரகாரச் சுவரிலே காணப்படும் சாசனம்.

சுங்கந்தவிர்த்த சோழநல்லூர் எனும் கிராமதான சாசனம்.

சுங்கந்தவிர்த்த சோழநல்லூர், 108 பிரிவுகளாக்கப்பட்டு, 106 பிரிவுகள், பிராமணர்களுக்குத் தானமாகத் தரப்பட்டது. இந்தத் தானம், சமந்த நாராயண சதுர்வேதி மங்கலம் என்ற கிராமத்திலுள்ள பிராமணர்களுக்குத் தரப்பட்டது.

மற்ற 2 பாகங்கள், மேற்படி கிராமக் கோயிலுக்கு மான்யமாக்கப்பட்டது.

இந்தத் தானத்தைச் செய்வதற்காக, மன்னர், தமது உயர்தரமான அதிகாரியை அனுப்பி, மேற்படி கிராமத்தை அதன் பூர்வீக வாரிசுதாரரிடமிருந்து விலைக்கு வாங்கச் செய்தார்.

இந்தச் சொத்து பிராமணர்களுக்குச் சர்வமான்யமாக்கப் பட்டது. அதாவது விற்க ஈடுகட்ட, அவர்களுக்குப் பாத்யதை தரப்பட்டது - என்ற தகவல் தரும் சாசனம் கிடக்கிறது.

4 வேலி நிலமும் அதிலுள்ள மரம், நீர், நிலை, பாதை உள்பட விலைக்கு வாங்கப்பட்டு அதிலே 108 பிராமணக் குடும்பம் தங்குமிடமும், தொழுகைக்கு ஒரு கோயிலும் கட்டப்பட்டதுடன், புளியங்காடு எனப்படும் ராஜாசிகாமணிநல்லூர் எனும் கிராமத்திலே 117 3/4 வேலி நிலம் வாங்கப்பட்டு அந்த 108 பிராமண குடும்ப சம்ரட்சணார்த்தத்துக்காகத் தானமாகத் தரப்பட்டது - என்ற தகவல் கூறும் மற்றோர் சாசனம் ஆராய்ச்சியாளரால் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. சத்தாவளி சதுர்வேதி மங்கலம், ஜனபரிபாலபுரம் எனும் காவனூர் ஆகிய இடங்களில், அக்கிரகாரம் அமைத்துத்தர, பத்தரை வேலி நிலத்தை திருவாலங்காடு உடையாரிடமிருந்து காளப்பல்ல ராயன் பெற்றதற்கு ஈடாக, வரி செலுத்த தேவையில்லாத உரிமையுடன் கூடிய ஒன்பதரை வேலி நிலத்தை மன்னரால் தரப்பெற்றான். இது திருவாலாங்காடு சிலாசாசனத் தொகுப் பிலுள்ளது. இது போன்ற பல தானங்கள், பிராமணர்களுக்குத் தரப்பட்டதுடன், அக்கிராம சேவைக்காக அங்கு மற்ற வகுப்பினர் ஊழியர்களாகத் தங்க வழி செய்யப்பட்டது.

இந்தச் சதுர்வேதி மங்கலம் எனப்படும் அக்கிரகாரத்தில் சுயாட்சியுடன் பிராமணர்கள் இருக்க அனுமதிக்கப்பட்டது. இக்கிராமங்களில், நிலத்துக்குப் பார்ப்பனர் மிராசு பாத்யதையுடை யோராகவும் “சூத்ரர்” வேலை செய்து ஜீவிப்போராகவும் இருந்தனர். ஊர்ப் பரிபாலனம், பிராமணரிடம் இருந்தது. ஆக, தமிழரின் சொத்து, மன்னர்களின் பக்தி எனும் பித்தத்தின் விளைவாகப் பார்ப்பனரிடம் போய்ச் சேர்ந்ததுடன், நாடாண்ட தமிழர்கள் நாய்போல் கிடக்கவும், இடந்தேடித் திரிந்த இனம் ஏடா! வாடா! போடா! என்று கூறித் தமிழரை ஏவலராகக் கொள்ளவுமான இரட்டை அநீதியை உண்டாக்கினர். மனையை இழந்ததுடன், மானத்தையும் மறத்தமிழர் இழக்கும்படி நேரிட்டது. மன்னர்களின் பக்தியின் விளைவு அது.

இங்ஙனம் தானம்பெற்ற, பார்ப்பனர், தானமளித்தவனை வாயாரப் புகழக்கேட்டு, மற்றவர்களும் அதைப்போலச் செய்து பெயரெடுக்க முனைந்தனர். நாளாவட்டத்தில் தானந்தருவதிலே போட்டிப் பந்தயம் ஏற்பட்டது போலாகிவிட்டது. கடாக் (நிணீபீணீரீ) என்ற ஜில்லாவை, ஹரிஹா என்ற ஆட்சியாளன் 66 கிராமங்களாக வகுத்து, மூன்று பகுதிகளாக்கி, ஒரு பகுதி தான் வைத்துக் கொண்டு, மற்றொரு பகுதியைக் கடாக் நகரக் கோயில் இரண்டுக்கு மானியமாக்கி, மூன்றாம் பகுதியைப் பார்ப்பனருக்குத் தானமளித்தான். இந்தத் தகவல் தாம்பல் சாசனத் தொகுதியில் காணப்படுகிறது. ஆண்டவனையும், ஆரியனையும், ஒரே நிலையாக்கின அரசனின் அறிவே நம்மவரை இக்கதிக்குக் கொண்டுவந்துவிட்டது.

இந்தப்போக்கு வந்த காரணம் என்ன? பார்ப்பனர் மெல்ல மெல்லத் தமது கற்பனையை, புராண இதிகாசம், ஸ்மிருதி சாஸ்திரம் என்ற பல்வேறு பெயர்களால் புகுத்தியதுதான். அதைக் கர்ணா மிருதமாக இருக்கிறதென்று கேட்ட ‘கலாரசிகர்கள்’ காட்டிய வழியே இன்று நாட்டினரை இந்நிலைக்குச் சேர்த்திருக்கிறது. அக்கிரகாரம் அமைத்துத்தருவது புண்ய காரியமென்றும், மன்னர்கள் அதனைச் செய்யக் கடமைப் பட்டிருக்கிறார்களென்றும், மீதாக்க்ஷரம் எனும் வடமொழிச் சட்டம் கூறுகிறது. அதைக் கேட்டுக் கட்டுப்பட்ட காவலரின் போக்கு இதுபோலத்தானே இருக்கும். அந்த மன்னர்கள் மாண்டார்கள், ஆனால் அவர்கள் காலத்திலே ஏற்பட்ட அநீதி இன்னமும் மாளவில்லை.

தானம் தரும் மன்னர்கள் எங்கெங்கு கிளம்பினார்களோ அங்கெல்லாம், பிராமணர்கள் சென்று தங்கலாயினர். ஏற்கனவே ஓரிடத்தில் தானமாக நிலம் பெற்றிருந்தாலும் அதனை விற்கும் பாத்யதை அவர்களுக்கு இருந்ததால், தான நிலத்தை விற்றுவிட்டு, வேறு மண்டிலத்திலே குடியேறினர் குடும்பம் குடும்பமாக. இங்ஙனம், பார்ப்பனர் ஒரு மண்டிலத்தை விட்டு மற்றொரு மண்டிலம் சென்ற மனப்பான்மை அவர்களுக்குப் பொருள் பறிப்பதிலிருந்த பேராசையைக் காட்டுவதுடன் அவர்களுக்குத் தமிழகம் தாய் நாடு அல்லவா ஆகையால் எங்கும் போய்த்தங்க மனம் இடங்கொடுத்தது என்பதையும், அவர்கள் ஒரு நாடோடி இனம் என்பதையும் காட்டுகிறது.
பெல்லாரி ஜில்லாவில் நீருகுண்டா என்ற கிராமத்தில் முந்நூறு பிராமணக் குடும்பங்கட்குப் பூதானம் தரப்பட்டது. குண்டூரில் 60 பிராமணக் குடும்பங்கள் பூதானம் பெற்றன - என்ற செய்தி பொறிக்கப்பட்ட செம்புப் பட்டயம், ஆராய்ச்சி நிலையத்திலே காணப்படுகிறது.

ஊர் சுற்றும் பார்ப்பனருக்கு இதுபோலத் தானங்கொடுக்கும் மன்னர்கள் வாழ்ந்த அதேகாலத்திலே, பஞ்சத்தால் அகவிலை ஏற்பட, குடும்பத்தை நடத்த முடியாமல், கோயில் பணத்திலிருந்து 110 காசு கடனை பெற்றுக்கொண்டு, அக்கடனுக்காக, தன்னையும் தனது இரு பெண்களையும் கோயிலுக்கு ஒரு வேளாளன் விற்று விட்டான்! இதற்கும் சாசனம் இருக்கிறது.

பிராமண குடும்பத்துக்குச் சென்ற இடமெங்கும் தானம்! தமிழ்க் குடும்பம் அடிமையாதல்! இது தமிழ் ஆட்சியிலே காரணம் என்ன? ஆண்டது தமிழர், ஆட்சிமுறை ஆரியம்!

இங்ஙனம் சதுர்வேதி மங்கலங்களை அமைத்துத்தந்து, பார்ப்பனரை வளரச் செய்த மன்னர்களின் ஆட்சி முறையிலே மீதாக்ஷரநீதியே, பரிபாலனத்துக்குத் துணை செய்தது. அதன்போக்கு ஆரியருக்கு சிரேஷ்டந் தரத்தக்கதாக இருந்த தென்பதைக் கூறத் தேவையில்லை. ஒரு விசித்திர உதாரணம் - ஆனால் உண்மை - ஆதாரமுள்ள விஷயம். யாஞ்ஞவல்க்கியரின் சட்டம் கூறுகிறது “தாழ்ந்த வகுப்பான், பாப்பராகிக், கடன் தரமுடியாது போனால் அவன் யாரிடம் கடன் பட்டானோ அவனுக்கு ஊழியம் செய்து அக்கடனைத் தீர்க்கக் கடவான். ஆனால் ஒரு பார்ப்பனன் அந்நிலை அடைந்தால், அவன் சக்தியானுசாரம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக அக்கடனை நாளாவட்டத்திலே திருப்பித்தரலாம். மீதாக்ஷரம், நியாய வட்டி, அநியாய வட்டி, என்று இருகூறாக வட்டி முறையைப் பிரித்துக் காட்டியிருக்கிறது. 15% வட்டி, தர்ம வட்டியாகக் கருதப்பட்டது. ஆனால், இந்த வட்டி விகிதம், உயர் ஜாதிக்காரர் விஷயத்திலே குறைந்திருக்க வேண்டும் என்று மீதாக்ஷரம் கூறுகிறது. அதாவது பார்ப்பனரிடம் மற்ற வகுப்பாரிடம் வாங்கும் வட்டி வாங்கக்கூடாது. அவர்களிடம் குறைந்த விகித வட்டியே கேட்கவேண்டும். தாழ்ந்த வகுப்பு 5% வட்டி செலுத்தினால் உயர் வகுப்பான பிராமணரிடம் 2% வட்டி மட்டுமே பெறவேண்டுமென்று மீதாக்ஷரம் கட்டளை யிடுகிறது. காவலர்களுக்கு அதுவே தேவவாக்கு. அது மட்டுமா? பலரிடம் கடன்பட்டவன், கடனைத் திருப்பித் தருகை யிலே முதலிலே பிராமணனிடம் பட்ட கடனையே திருப்பித்தர வேண்டும்; மற்றவரின் கடனைத் திருப்பித்தர முடியாவிட்டால் அவர்களுக்கு ஊழியம் செய்து கடனைத் தீர்க்க வேண்டுமென்பதும் மீதார்க்ஷர திட்டம். இதுபோல் ஆதாரம் அநேகமுள்ளன. அன்று நிறுவப்பட்ட சதுர்வேதி மங்கலங்களில், ஆர்வம் ஊட்டி வளர்க்கப் பட்டதன் விளைவு என்னவெனில் இன்று தமிழகமே, சதுர்வேதி மங்கலமானது தான்! சர்வமான்ய உரிமையுடன் ஆரியர் இன்று ஆட்சி செய்கின்றனர். எனவேதான், நாம் இப்பிரச்னையை முக்கியமான தென்று கூறி, இந்நிலை போக்கக் கிளர்ச்சி செய்கிறோம். இது தவறா?

4.7.1943