அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சத்திய சோதனை!
அவர் உடையைப் பாரீர், அவர் மோகனச் சிரிப்பிலே மக்கள் மயங்குவதைக் காணீர், பின்னரேனும் அவர் ஆத்ம சக்தியை அறிவீர், தெளிந்து அவர் வழியே சிறந்ததெனக் கொள்வீர் - அவர் தூய சிந்தனையினர், அவர் காணும் தெய்வம், இயேசுவின் இன்றைய மறுபிறப்பு, ஆகிம்ஸா தர்மத்தின் இருப்பிடம், சத்திய சோதனையில் தேர்ந்தவர், அவரைக் கண்டு களிமின், ஜன்மம் கடைத்தேறுமின், அவர் காட்டும் பாதையைப் பின்தொடர்ந்து பேறு பலவும் பெறுமின்.

இவ்வாறு எல்லாம் காந்தியரை அர்ச்சித்து, நம்மையும் அப்பணியை மேற்கொள்ள வேண்டுமெனத் தூண்டும் அநேகர் இந்நாட்டில் உண். இந்நாட்டில் மட்டுமல்ல, வேற்று நாட்டிலும் அத்தகு மாண்பினர் உள்ளனர். இந்த அரும்பணியை உறக்கத்திலும் மறவாது கடைப்பிடித்து நடப்பதே இன்று முன்னணி வேலையாகக் கொண்டுள்ளனர் சிலர் பெற்ற பதவி - அடைந்த கீர்த்தி, நசித்துவிடாமல், பாதுகாத்துக் கொள்வதற்கே, இப்பெரும் பணியையாற்றி வருகிறார்கள் எனப் பொருள் படப் பேசுவோர் உண்டு. இச்செயலுக்கு, நாம், அவ்வாறு பொருள் கொள்ளமாட்டோம். நமக்கு அத்தகு சிறுமதி இல்லாத காரணத்தால், ஆனால் நாம் ஒன்றுமட்டும் கேட்போம், அதாவது மகாத்மா உள்ள வரை நமக்குப் பயமில்லை ஜெயமுண்டு - உலகில் அவரைவிட வேறு சமதர்மி கிடயாது - அவரைப் பின்பற்றுவதே நமது கடமை - என இன்று உரத்துப் பேசுகிறவர்கள், என்றாவது அவர் சொல்படி நடந்ததுண்டா, வாய் திறந்து தகுந்த உத்தாரம் தாரும் ஒயே என்றே கேட்போம். பதில் கிடைக்காதென்பதை அறிவோம். சிற்சில ஒயே என்றே கேட்போம். பதில் கிடைக்காதென்பதை அறிவோம். சிற்சில சமயங்களில், காந்தியார் போக்கில் குற்றம் கண்டதும், அதனைச் சகிக்காது சுயேச்சையாக நடந்து கொண்டதும், நாடறியும், நாமும் அறிவோம். இத்தகையவர்கள்தான் முன்னால் நடந்துகொண்ட முறையே மற்நது, மற்றவர்க்கு அண்ணலைப் பின்பற்றுக எனச் சொல்மாரி பொழிகிறார்கள்.

காந்தியார் போக்கு எத்தகு விளைவுகளைக் கொடுக்கின்றன - கொடுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிடுகிறோம். பின்னராவது அவரை எப்படிப் பின்பற்றுவது? எனும் நமது சந்தேகம் நியாயமானதுதான் என முடிவிற்கு வரட்டும் - மக்கள்.

சில நாளைக்கு முன்பு காந்தியார் பிரார்த்தனைக் கூட்டத்தில் கட்டுப்பாடு நீங்கின உடன் மணங்கு ஒன்றுக்கு ரூ. 34 ஆக இருந்த சர்க்கரை ரூ. 24 ஆகக் குறைந்துவிட்டதெனக் குறிப்பிட்டார். அதனை மறுத்துப் பம்பாய் சர்க்கரை வியாபாரிகள் சங்கத் தலைவர், காந்தியாருக்குத் தந்தியொன்று கொடுத்தார். விற்பனைக்கு ஏகபோக உரிமையுடைய இந்திய சர்க்கரை சிண்டிகேட், தம் கைவசமுள்ள மூட்டைகளில் நான்கு இலட்சம் மூட்டைகளை ரூ. 35-7, வீதம் விற்பனை செய்துவிட்டதாகவும், பம்பாயிலுள்ள சர்க்கரை ஆலைகள் மூட்டை ஒன்றுக்கு ரூ. 40 வீதம் விற்பனை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தது அத்தந்தியில் இதற்கு நாளதுவரையில் காந்தியார், பிரார்த்தனைக் கூட்டத்தில் பதிலாக எதுவும் பேசவில்லை. வேண்டுமென்றே, இதனை அவர் செய்கிறார் என்று நாம் குற்றங் கூறவில்லை.

இந்தச் சர்க்கரையின் உண்மை வரலாறுதான் என்ன?

சர்க்கரைக் கட்டுப்பாடு நீக்கப்படும் எனும் செய்தி பத்திரிகையில் வெளிவந்த உடனே, கான்பூரில் விலை ரூ. 42, இக்ராவில் ரூ. 60, பம்பாயில் ரூ. 40 லிருந்து ரூ. 50 வரையில், சென்னையில் ரூ. 37 எனும் நிலையில் உயர்ந்துவிட்டது. அதே நேரத்தில் ஒக்கியமாகாண சர்க்கார், ஏற்கெனவே தொழிற்சாலை விலை ரூ. 20-14-0 ஆக இருந்ததை ரூ. 35-7-0 ஆக உயர்த்த உத்தரவிட்டுவிட்டது.

சர்க்கரை சிண்டிகேட் செயலாளரும், கைவசம் ஒன்பது இலட்சம் மூட்டைகள் இருப்பதாகவும், ரூ. 34 வீதம் விற்க சம்மதிப்பதாகவும் கூறினார். மத்திய அரசாங்கம் விலையேற்றத்தைத் தடுக்கப்போகிறது எனும் காரணத்தைக் காட்டி, இருக்கும் மூட்டைகளை எல்லாம் எடுத்துக் கொண்டதாக அறிவித்துவிட்டது. இவ்வாறு இந்திய சர்க்கார் கூறி நாட்கள் பல ஆயின. மேற்கொண்டு சர்க்கரை பற்றின தகவல் ஒன்றும் அதிகார பூர்வமாக வெளிவரவில்லை. ஆனால், இன்று சர்க்கரை, ஏற்கெனவே கள்ள மார்க்கெட்டில் கிடைத்த விலைக்குத் தர்ம நியாயமான முறையில் கிடைக்கிறது. இனிமேலும் இது விஷயத்தில் இந்திய அரசாங்கம் ஏதாவது செய்யுமென்று எதிர்பார்ப்பதற்குமில்லை.

இந்திய சர்க்காரின் நிதி அமைச்சர், தென்னிந்திய வர்த்தக சங்கக் கமிட்டிக் கூட்டத்தில் பேசும் பொழுது,

“ஒரு மணங்குக் கரும்பு விலை ரூ. 1-4-0 வீதத்தில் கொண்டு சர்க்கரை விலையை நாங்கள் நிர்ணயித்தோம். ஆனால், கரும்பு விலையை மணங்குக்கு ரூ. 2 ஆக ஒ.மா, பீகார் சர்க்கார்கள் உயர்த்திவிட்டன. ஆதோடு தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.25லிருந்து ரூ. 45க்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆகவே, சர்க்கரை விலை உயர்ந்திருப்பது கண்ட்ரோல் விலை ஒழிப்பினால் அல்ல. என இணித் தரமாகக் கூறிவிட்டார். சர்க்கரை விலை ஏறினதற்குக் காரணமாகக் காட்டப்படும். கரும்பு விலையேற்றத்தையும் தொழிலாளர் கூலி உயர்வையும் மட்டும் குறிப்பிட்டாரேயன்றி, சர்க்கரை ஆலை மன்னர்களின் இலாபம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது எனும் பள்ளி விவரத்தையும் கூறி இருந்தால், சர்க்கரை விலை ஏற்றத்திற்கு எது உண்மையான காரணமென்பதைப் புரிந்து கொண்டிருக்க முடியும். ஆனால், அதை அவரால் எப்படிச் செய்ய முடியும்? வர்க்கபாசம் தொண்டையை அடைத்துவிடாதா?

நிலத்திலே இருக்கும் கரும்புக்கும், அதனை இனிமேல் சர்க்கரையாக மாற்ற இருக்கும் தொழிலாளருக்கும், இனிச் செய்யப் போகும் செலவுத் தொகையைப் புதிதாகத் தயாராகும் சர்க்கரை மீதல்லவா ஏற்ற வேண்டும்! மணங்கு ஒன்றுக்கு ரூ. 1-4-0 கொடுத்துக் கரும்பை வாங்கவும், ரூ. 25 வீதம் தொழிலாளருக்குக் கூலி கொடுத்தும் தயார் செய்து முடிந்து போன கைவசமுள் ஒன்பது இலட்சம் மூட்டைகளின் விலையை ஏனையா கூட்டினீர்கள் என எவரும் கேட்கவில்லை. கேட்டிருந்தால், அப்போது தெரிந்திருக்கும், நிதி அமைச்சரின் புள்ளி விவரம் கூறும் ஜாலவித்தை!

கையிரப்புச் சர்க்கரை மூட்டைகளை விலை கூட்டி விற்பதால் ரூபாய் மூன்று கோடி பத்தொன்பது இலட்சம் அல்லவா, நிதி அமைச்சரின் நண்பர்களுக்குப் போகிறது! இதனை எப்படி வெளிப்படையாக சண்முகம் கூறுவார்?

நிதி அமைச்சரே கூறுகிறார் கண்ட்ரோல் விலையைக் காட்டிலும் கூடுதலாக இன்று சர்க்கரை விலை இருக்கிறது என்று, காந்தியாரின் பரிபூர்ண இசிர்வாதத்தைப் பெற்ற, அவர் இணைப்படி கண்ட்ரோலை நீக்கிய, பண்டிதநேரு தலைமையிலும் பட்டேல் ஆதிக்கத்திலும் நடக்கும் இந்திய யூனியன் அரசியலில்தான், நிதி அமைச்சராக சண்முகம் இருக்கிறார். அவரே குறப்பிடுகிறார். கண்ட்ரோல் நீக்கப்பட்ட பின் சர்க்கரை விலை உயர்ந்துவிட்தாக இவ்வளவிற்குப் பின்னரும், காந்தியாருடைய சத்திய சோதனை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

உண்மை நிகழ்ச்சிகளுக்கும் காந்தியார் போக்கிற்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்கவில்லை. ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கிடக்கிறது. இந்நிலையில் அண்ணலைப் பின்பற்றுக என ஊருக்கு உபதேசம் கிளப்புகிறார்கள். ஒரு காலத்தில் மக்களால் பின்பற்ற முடியாத, தலைவர்களாக இருந்தும் தாங்க முடியாத ஒன்றைச் சுமந்து திரியுங்களெனக் கட்டளை இடுவது ஆடுக்குமா? ஆகுமா? நடக்குமா?

இவ்வளவையும் கண்டு வழிகாட்டி வாய் மூடியே இருக்கிறார். கட்டடளைத் தம்பிரான்களோ கண்ட கண்ட வழியெல்லாம்ட சென்று, மக்களைக் காடுமேடெல்லாம் சுற்றி அடிக்கின்றனர். இந்நிலையில் காணீர் காந்தியாரை - அவர் பாதையே சமதர்மபுரிக்கு இட்டுச் செல்லும் நேர்வழி - பின்பற்றுக எனக் கட்டளை பிறப்பிக்கிறார்கள் சிலர். காந்தியாரின் சத்திய சோதனை இதிகாசத்தின் ஒரு சருக்கம் போலும் இதுவும்! இது கண்டனமல்ல. விஷய விளக்கம்.

(திராவிடநாடு - 28.12.47)