அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘சட்டநாதர்‘கள் சஞ்சலம்!

“தேவி!“

“நாதா!“

“பார்த்தாயா, மயிலாப்பூரை“

“கண்டேன், நாதா“

“ஏனிப்படி, சண்டை போடுகிறார்கள்“

“யாரைச் சொல்லுகிறீர்கள் நாதா?“

“கருப்புச் சட்டை அணிந்து உலவும் வக்கீல்களைத்தான்“

“வக்கீல்களென்றாலே, வம்புதானே நடக்கும் நாதா!“

“நம்மிடமன்றோ வம்புக்கு வருகின்றனர்“

“பக்தர்களாச்சே நாதா! அவர்களாவது, நம்மிடம் சண்டைக்க வருவதாவது“

உலகமெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவனான உலகநாதனும் தேவியும், கடந்த சில தினங்களுக்குமுன் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற மாநாட்டைப்பற்றி, உரையாடியிருந்தால், நிச்சயம் – அந்த வக்கீல்கள் பாடு ஆபத்தாகியிருக்கும் துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனும் செய்யும் ஈசன், அவர்களையெல்லாம் விட்டு வைத்திருக்கமாட்டார். ஏனெனில், ஈசுவரன் படைத்தாக இவ்வுலகைப்பற்றிக் கூறும் அவர்களே, நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டு ஈசுவர சிருஷ்டியையே பழித்திருக்கின்றனர்.

அந்த மாநாட்டிலே தென்பட்டோரெல்லாம், தென்றலை அனுபவிக்கும் வயதினரல்ல, வரண்ட வயதினர்தான் அதிகம் ‘பென்ஷன்‘ பேர்வழிகளும், ஓய்வுநேர உல்லாசிகளும், பேரன் பேத்திகளுடன் சல்லாபம் நடத்தவேண்டியவர்களுமாகக் கூடி, அந்த உலகின் போக்கைப் பற்றி, தீவிரமாக விவாதித்திருக்கின்றனர்.

மாநாட்டைத் துவக்கிவைக்கும் வாய்ப்பைப் பெற்றவர், “இந்து மதமே நமக்கு வாழ்வளிக்கும்“ என்பதற்காக, கட்சி ஒன்றை வளர்த்துக் கொண்டுவரும் இந்துமகாசபையின் தலைவர், சட்டர்ஜி என்பவர். மாநாட்டில், ‘சுப்ரீம் கோர்ட்‘ பிரதம நீதிபதியாயிருந்த பதஞ்சலி சாஸ்திரியார் தலைமை வகித்திருக்கிறார், சட்டநாதர்களான வக்கீல்கள் பலரும், கூடியிருந்திருக்கின்றனர்.

அங்குபோய், அகப்பட்டுக் கொண்டிருக்கிறார் நிதியமைச்சர் சுப்ரமணியம் பேச, அழைக்கப்பட்டிருந்தாராம்! மந்திரியல்லவா? இவரும் மகிழ்ச்சியுடன் போயிருந்திருக்கிறார்! ஆனால், கூடியிருந்தது, மந்திரிகளைவிடப் பெரிய தந்திரிகள் எனக் கருதிக் கொண்டிருக்கும் ‘மைலாப்பூரும் மாம்பலமும்‘ அதனால், அன்பர் சுப்ரமணியம் பேசும்போது, அடிக்கடி குறுக்குக் கேள்விகளை வீசி, குதர்க்கம் செய்திருக்கின்றனர். இதைக் கண்ட உமையொருபாகன், தனது இரண்டு பிள்ளைகளில் ஒருவரான சுப்ரமணியத்தில் பெயரைத் தாங்கியிருக்கும் இந்த ‘சுப்ரமணியத்தின் மீது பரிதாபப்பட்டு, “பார், பார்வதி பார்! நமது பக்தர்கள் படுத்தும்பாட்டை“ என்று காட்டியிருந்தால் – கோபம் கொண்டு தீக்கண்ணைத் திறந்து அவர்களுக்குப் புத்தி போதித்திருந்தால் – வெகு நன்றாயிருந்திருக்கும், என்று குறிப்பிட அல்ல நாம் உமையொருபாகனையும் உமாதேவியையும் அழைத்தது அகப்பட்டுக் கொண்டு விழித்த அன்பர் சுப்ரமணியம், அழாத குறையாக, ‘நான் என் கருத்தைச் சொல்லுகிறேன். அதிலுள்ள தவறுதல்களை எடுத்துச் சொல்வதை விட்டு, ஏனிப்படி, குறுக்கே, கேள்விகள் போடுகிறீர்கள்? நான் பேசிய பிறகு பேசுங்களேன்!“ என்று தெரிவித்திருக்கிறார். பிறகு, சச்சிவோத்தம சர்.சி.பி. இராமசாமி அய்யர், தலையிட்டு அமைச்சரின் பிரசங்கம் எப்படியோ ஒருவிதமாக முடிந்திருக்கிறது!.

ஏன், அவர்கள் குறுக்கிட்டார்கள், தெரியுமா? அமைச்சர், “பார்ப்பனியமே! பைநாகப்பாய் சுருட்டிக் கொள்! போதும், உன் திருவிளையாடல். இனி வக்கீல்கள், ‘மயிலை மாம்பல‘த் திலிருந்து மட்டுமல்ல, சிந்தாதிரிப்பேட்டை அமிஞ்சிக்கரை‘ யிலிருந்தும் வருவார்கள்! வரச்செய்வதே, எமதாசை!“, என்றெல்லாம், பேசிடவில்லை – கூடியிருந்த “சட்ட நாதர்‘கள் குறுக்கிட.

டில்லி, ஒரு திருத்தம் கொண்டு வந்திருக்கிறது – அரசியலமைப்பில்.

அந்தத் திருத்தம் தேவையெனப் பேசினார், சுப்ரமணியம்! அது கண்டு அவர்கள், எரிச்சல் கொண்டிருக்கின்றனர்!

அப்படியென்றால், காங்கிரஸ் சர்க்காரை அவர்கள் எதிர்த்துப் போர் முழக்கம், செய்ய ஆரம்பித்து விட்டார்களா? – தென்னாட்டுப் பிரிவினைக்கு ஆக்கம்தர முன் வந்து விட்டார்களா? – என்றெண்ணுவீர்கள். செச்சே! அவர்களா, வருவார்கள்! எரிச்சலுக்குக் காரணம், அதுவல்ல, டில்லி, இப்படி திருத்தக்கூடிய அளவில் ஒரு அரசியலைத் தயாரித்து வைத்திருக்கிறதே என்பதுவுமல்ல.

கொண்டுவரப்பட்டிருக்கிற திருத்தம், சொத்துரிமையைப் பறிக்கிறதாம்! மனிதன் அனுபவிக்கும் சொத்துக்களின் உரிமைக்கு ஊறு விளைவிக்கிறதாம்!!

அப்படியென்ன – நேருவின் சர்க்கார், தனிப்பட்டோரிடம் குவிந்து, கிடக்கும் நிலங்களைப் பிடுங்கியும், சிலரிடம் சேர்ந்து கிடக்கும் செல்வத்தைக் கைப்பற்றியும், ஏழைகளுக்கு வழங்க, ஏதாவது ஒரு திருத்தம் கொண்டு வந்துவிட்டதோ, அதனால்தான் எதிர்க்கிறார்களோ என்றும் எண்ணுவீர்கள்.

அப்படியெல்லாம் செய்யுமா நேரு சர்க்கார்? புள்ளிமானும் வாழும், புலியும் அருகில் உலவும் – எனும் திட்டத்தில், பொதுவுடைமைக்கும் முதலாளித்துவத்துக்கும் சம இடம் தருவதாகவல்லவா கூறிக்கொண்டிருக்கிறது. அது, செய்யுமா திட்டவட்டமாகவே தெரிவித்திருக்கிறது, “திருத்தம் கொண்டு வருவது, தனி மனிதர் உரிமையைப் பறிக்க அல்ல. அவர்களது சொத்துக்குத் தர வேண்டிய நேர்மையான, பணத்தைக் கொடுத்தே பெற முயற்சிப்போம்“ என்பதாக எனினும், இவர்கள், அத்திருத்தத்தை எதிர்த்திருக்கிறார்கள்.

ஜமீன்தாரி ஒழிப்பு போன்ற சட்டங்கள் மூலம், பெரிய பெரிய ஜமீன்களையெல்லாம் ஒழித்து, அவைகளுக்கு வேண்டிய நஷ்ட ஈடுகளையும் கொடுத்து வருகிறதல்லவா காங்கிரஸ் அரசு இதை எதிர்த்து சிலர் நீதிமன்றங்களுக்குச் செல்ல, அவை இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என்று சொல்லி, தள்ளிவிட்டன சொத்துக்களுக்கு மதிப்பிடும் பொறுப்பு, அரசாங்கத்தைச் சேர்ந்தது அல்ல என்றும் கூறின.

அதைக் கண்ட நேரு அரசாங்கம், அதைப் பங்கீடு பண்ணுகிற வகையில், அந்த அரசியலமைப்புக்கு ஒரு திருத்தம் கொண்டு வந்திருக்கிறது – நஷ்ட ஈடு கிடையாது, என்றல்ல! நஷ்டஈட்டை நிர்ணயிக்கும் அதிகாரம் சர்க்காரின் சபைக்கு உண்டு, என்று.

இதை எதிர்க்கிறார்கள்,இவர்கள். இது, கூடாதெனக் கச்சைகட்டிப் போர்க்கோலம் பூண்டிருக்கிறாக்ள்.

“அமெரிக்காவில் உண்டா?“

“தனி மனிதர் சொத்துரிமை என்பது எவ்வளவு புனிதமான விஷயம், தெரியுமா?“

“அதனருகில், நெருங்கலாமா? அதன் புனிதத் தன்மைக்க, மாசு கற்பிக்கலாமா?

“இப்படியெல்லாம் செய்தால், அரசு என்றா சொல்ல முடியும், அரசியலமைப்பைத் திருத்தலாமா? – ஒருமுறை வகுத்துவிட்டால், அது அப்படியே இருப்பதல்லவா, நீதி“.

இப்படியெல்லாம், பேசியிருக்கிறார்கள் வக்கீல்கள்! இதற்கெல்லாம் பதில் சொல்வதுபோல, அங்கே அன்பர் சுப்ரமணியம் பேச முயன்றார், “அரசியலமைப்பு, என்ன? அழியாத வஸ்துவா! மாறாத சட்டமா! அப்படித்தான், எங்கள் சர்க்கார், என்ன செய்துவிட்டது. சொத்துரிமையே யாருக்கும் கிடையாதென்றா திருத்தம் கொண்டு வருகிறது? நஷ்டஈடுதான், தர சித்தமாயிருக்கிறோமே!“ என்றெல்லாம் அதனால்தான் குறுக்குக் கேள்விகள் பூட்டிக் குதர்க்கம் விளைவித்திருக்கின்றனர்.

இதில், நமக்கு ஆச்சரியம் அளிப்பது – நேரு அரசாங்கத்தின் அதிமேதாவிலாசத்தைக் காட்டும் அரசியலமைப்புத் திருத்தமோ அல்லது அதன்மீது போர்க்கோலம் பூணும் இவர்களோ, அல்ல. ஏனெனில் நேரு தயார் செய்த அரசியல் சட்டமே, சரியானதல்ல! தலையாட்டிப் பொம்மைகள், தயாரித்தது! என்பது நம்கருத்து.

புனிதமானதாம்.

அந்த உரிமை – போகக்கூடாதாம்.

அமெரிக்காவில்கூட இப்படியில்லையாம்!

இப்படியெல்லாம், ஒரு தனி மனிதனுக்கு இருக்கும் சொத்தைப்பற்றி, கச்சைக்கட்டி, அமெரிக்காவையும்கூட இழுக்கின்றனர்! என்ன செய்வது – அமெரிக்காவில் இவர்களைப்போல, அய்யர்கள் கூடத்தான் இல்லை! அதைப்பற்றி எண்ணவில்லை, எனினும், நேருவின் இச்சிறு திருத்தம் எங்கே தமது பழை பாரம்பரிய முறைகளில் கைவைத்து விடுமோ – கம்யூனிசப் பாதையில் இழுத்துச் சென்றுவிடுமோ, என்று அஞ்சுகின்றனர் அதற்கு, இப்போதே, சிறு காரியமானாலும் முட்டுக்கட்டைப் போட்டு தமது எதிர்ப்பைக் காட்ட வேண்டுமெனப் புறப்படுகின்றனர்! அதற்காக வக்கீல்கள் மாநாடு ஒன்று கூட்டி சஞ்சல முகாரி எழுப்பியிருக்கின்றனர்!

இப்படி எழுப்பிய எவரும் நாஸ்தீர்களல்ல – நாத்தீக நாத்தழும்பேறியவர்கள் என்று அனுதினமும் ஏசி, அதற்கான சட்டங்கள் மூலம் நம்மை அழிக்க, அரசுக்க இடம் தேடிக் கொடுக்கும், வல்லுநர்கள், அவர்கள். சொத்துரிமை பற்றி போர் முழக்கம், செய்வதுதான் ஆச்சரியமாயிருக்கிறது?

“சர்வேஸ்வரன் – தயாபரன் – ஜீவராசிகளை ரட்சிக்க வேண்டி இந்தப் பூலோகத்தைப் படைத்தார். பொன்னையும், விண்ணையும் படைத்தார். தூணும் நானே! துரும்பும் நானே! புழுவும் நானே! தருவும் நானே! என்றார். என்று கோர்ட்டுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் உட்கார்ந்துகொண்டு விஸ்தாரமான விவாதம் நடத்துபவர்கள்! ‘உலகெல்லாம், அவனது படைப்பு என்று கண்ணைமூடி ஜபித்த வண்ணம். பூஜை நடத்துபவர்கள்! அவர்கள், ‘தனி மனிதனின் சொத்துக்கு‘, சல்லடம் கட்டுகிறார்கள், மாநாடு வட்டி, சங்கநாதம் செய்கிறார்கள்.

இதனை அவர்கள் நம்பும் ஈஸ்வரன் கண்டிருந்தால், தேவியிடம் பேசும் வாய்ப்பைப் பெற்றிருந்தால் – என்னென்ன சொல்லி, வேதனைப்படுவார். ‘உலகமே, நான், நானே, உலகம், அங்குள்ள பொருள்கள் யாவும், எனக்கே சொந்தமெனச் சொல்லும் இவர்கள், அடிக்ககின்ற கொட்டத்தைப் பார். ஒருவனின் தேவைக்கே இத் தேசம் இருக்க வேண்டுமாம் – நமது படைப்பில் ஒரு மனிதன் இல்லாதவனாக வீதியில் கிடந்துழலும் போது, இன்னொருவன் ஏழடுக்கு மாடியில் கிடந்து சுகபோகம் அனுபவிக்க வேண்டுமாம். அப்படிப்பட்ட சொத்துரிமை, நிலைத்து நீடிக்கவேண்டுமாம். அப்படிப்பட்ட சொத்துரிமை, நிலைத்து நீடிக்கவேண்டுமாம். பார்த்தாயா, பக்தர்களெனும் இப்பாவிகளை“ என்று சொல்லி, தீக்கண்ணையோ, சூலாயுதத்தையோ, வீசாமலாயிருப்பார் எங்கே, செய்கிறார், அந்த ஈசன்? அந்தத் தைரியந்தான், சட்டநாதர்களுக்கு மனிதர்களுக்கு நீதிவழங்க வேண்டிய சட்டங்களைக் கற்று, அவனுக்கு அநீதி வழங்கும் ஏற்பாடுகள் அழியாமற் காக்க சல்லடம் கட்டுகிறார்கள். நல்ல, சட்டநாதர்கள். இவர்களைப் பெரியவர்களாக்கி வைத்திருக்கின்ற, நல்லநாடு, இது.

திராவிட நாடு – 9-1-55