அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சாயம் வெளுக்கிறது!

சண்டையின் காரணமாக இப்போது சரியான கெட்டிச் சாயங்கள் கிடைப்பதில்லை. கிடைப்பதெல்லாம் போலிச் சாயங்களே. சாய உற்பத்தி நிலையங்களெல்லாம் இப்போது சண்டைக்கு வேண்டிய கருவிகளை உற்பத்தி செய்யும் நிலையங்களாக மாறிவிட்டதால், கெட்டிச்சாயம் கிடைப்பதரிதாகி விட்டது. ஆகவே, இப்போது உற்பத்தி செய்யப்படுவதெல்லாம் போலிச் சாயமே. இந்தப் போலிச் சாயம், பழைய சாயம்போல் நீடித்து நிற்பதில்லை. மிகவிரைவில் வெளுத்து விடுகிறது. இதனால் சாயத்தை நம்பித் துணி வாங்குபவர்கள் ஏமாந்து போகின்றனர். ஆனால், இன்னோரு சமயம் சாயத்துணி வாங்க விரும்பும்போது, “சாயத்துணிகளை வாங்கலாமா, கூடாதா? இந்தச் சாயமும் வெளுத்துவிட்டால் என்ன செய்வது” என்று யோசிக்கிறார்கள். சாயம் வெளுத்தாலும் பரவாயில்லை துணி கெட்டுவிடுமே என்று பயப்படுகிறார்கள். இந்த நிலையில் சாயத்துணிகளை விற்பனை செய்வோரும் ஓரளவுக்கு உண்மையைச் சொல்லியே துணிகளை விற்றபோதிலும், “இந்தச் சாயம் நீங்கள் முன் வாங்கியது போலன்று, இது கொஞ்சம் கெட்டியான சாயம் அதை பார்க்கிலும் இது அதிக நாளைக்கு உழைக்கும்” என்று சொல்லி விற்று விடுகிறார்கள். சாயத்துணிகளில் மோகம் கொண்டவர்களும் அவர்கள் கூறுவதை நம்பி வாங்குகிறார்கள். இந்தச் சாயமும் முன் வாங்கிய சாயம்போல், வெளுத்தது கண்டு ‘ஓ அவன் நம்மை ஏமாற்றிவிட்டான். இனி அவன் கடைப்பக்கமே திரும்பிப் பார்க்கக்கூடாதென்று முடிவு செய்து வேறு கடைக்குப் போகிறார்கள். அங்கும் அவர்கள் ஏமாற்றமே அடைகிறார்கள். இந்த ஏமாற்றங்கள், அவர்களை இனிச் சாயத் துணிகளே வாங்கக்கூடாதென்ற முடிவுக்குக் கொண்டு வந்துவிடுகிறது. என்றாலும், சாயத் துணிகளையன்றி வேறு துணிகளைக் கட்டுவதில்லை என்று சில பிடிவாதக்காரர் சாயத்தில் ஏமாற்றமே அடைகின்றனர். இந்த ஏமாற்றம் இப்போது நடக்கும் சண்டை காரணமாக ஏற்பட்டதாகும். ஆனால், சண்டை முடிந்து, உலகம் பழைய நிலைமையை அடையும்போது இந்த ஏமாற்றம் நீங்கிவிடும். பழையபடி கெட்டிச் சாயங்கள் உற்பத்திச் செய்யப்பட்டு ஏமாற்றத்தை நீக்கிவிடும்.
இன்னொரு சாயமும் இப்போது சிறிது சிறிதாக வெளுத்து வருகிறது. இந்தச் சாயம் வெளுப்பதற்கும் ஒரு சண்டைதான் காரணமாய் இருக்கிறது. ஆனால் இந்தச் சண்டை இப்போது நடக்கும் சண்டைபோல் இன்று நேற்றுத் தொடங்கியதன்று. இங்கு பேசப்படும் சாயமும், சண்டைக்கு முன் கெட்டியாய் இருந்து, சண்டை காரணமாக வெளுப்படைந்து, சண்டைத் தீர்ந்ததும், கெட்டிச்சாயமாக மாறிவிடக்கூடியதுமன்று.

இப்போது நடக்கும் சண்டை, தனக்கிருப்பது போதாதென்ற பேராசையின்பாற் பட்டதாகும். பேராசை காரணமாகச் சாயத்தொழில் முதலான கைத்தொழில்கள் கைவிடப்பட்டதால், கெட்டிச்சாயத்துக்கு முட்டு வந்தது. இந்தப் பேராசை ஓரளவு தீர்ந்துவிட்டால் பழையபடி கெட்டிச்சாயமும் வந்துவிடும்.

ஆனால், நாம் கூறும் சண்டையோ எவ்வித பேராசையோடும் கூடியதன்று. நம்முடைய உடைமை பறிபோய் விட்டது. அதை மீட்பதற்கே இந்தச் சண்டை நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. எந்தச் சண்டை? ‘ஆரியர் - திராவிடர்’ என்ற சண்டையைத்தான் நாம் இங்குக் கூறுகிறோம்.

வயிற்றுப்பிழைப்பை நாடி எங்கிருந்தோ வந்த ஆரியர், திராவிடர்மீது ஆதிக்கம் செலுத்தி, வருகின்றனர். கடவுள் மதம் - புராணம் - இதிகாசம் என்று சாயங்களால் திராவிட இனம் நிறம் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தச்சாயம் வெளுக்கடிக்கப்பட்டு, உண்மைத் திராவிட இனத்தைக் காண்பதே இப்போராட்டத்தின் நோக்கமாகும்.

ஆரியம் - திராவிடத்தை அணுகிய மிகப் பழைய காலத்திலிருந்தே இச்சாய வெளுக்கடிப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. என்றாலும், இன்றைய போலிச்சாயங்களில் ஏமாறும் மக்கள் இருப்பது போலவே, கட்டாயத்தின் பேரிலும், ஏமாந்த இயல்பின் பேரிலும், கடவுள் மதம் ஆகிய வேண்டாச் சாயங்களை அன்றும் ஒப்புக்கொள்ளும் மக்களே இருந்தனர்.

அதனால், இந்தச் சாயத்தை இலகுவில் வெளுக்கடிக்க முடியாமற் போய்விட்டது.

ஆரியரால் கொண்டுவரப் பட்ட கடவுள் - மதம் - புராணம் - இதிகாசம் - மோட்சம் - நரகம் - புண்ணியம் - பாவம் ஆகிய சாயங்கள் வெறும் போலியென்றும், அவற்றைத் திராவிட மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாதென்றும் கூறிய ஒரு சில பெரியார்களின் கூற்றும் ஆடிக்காற்றில் அகப்பட்ட இலவம்பஞ்செனப் பயன்படாது போயிற்று.

இயற்கை அமைப்பு ஒன்றே உலகத்தை இயக்கிச் செல்கின்றதென்ற மறுக்கமுடியாத உண்மை கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே, இச்சாய வெளுக்கடிப்பு வேலைக்கு உலகில் ஓரளவு ஆதரவு உண்டாயிற்று. இவ்வேலை, ரஷ்யா முதலான நாடுகளிலே முழு வெற்றியடைந்ததைக்கண்ட நாமும், இத்திட்டத்தை நம் நாட்டிலும் கொண்டுவந்து, கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக வேலை செய்ததன் பயன், இச்சாயத்தை அறவே இல்லாமற் செய்து விடலாம் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

அறிவுக்கும் இயற்கைக்கும் மாறான இவ்வைதீகச் சாயத்தை வெளுக்கடிப்பதற்குத் துவக்கப்பட்ட போராட்டம், பகுத்தறிவைத் துணையாகக் கொண்டதாகையால், வெற்றியின் அடையாளங்கள் விரைவில் வந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாதென்ற சிறந்த எண்ணம் பலரிடையே வேரூன்றி வருவதையும் காண்கிறோம்.

கம்ப இராமாயணம், பெரியபுராணம் போன்ற மதநூல்கள் ஒரு காலத்தில் எந்த நிலையில் இருந்து நம்மவரின் வாழ்க்கையை வளைத்ததென்பதையும், இன்று அவை எந்த நிலையில் உள்ளனவென்பதையும் நாம் காண்கிறோம்.

“சங்க இலக்கியங்கள் எல்லாம் ஆரியக் கலப்பற்றவை, அவை எல்லாம் தமிழ் மக்களுடைய சிறந்த இலக்கியங்கள்” என்ற இடைக்காலக் கூற்றுக்கூட இப்போது மறுக்கப்பட்டு, அவைகளிற் பெரும்பாலான நூல்கள் எல்லாம் ஆரீயக் கதைகளையும் ஆரியக் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டன வென்பதை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டுவதையும் காண்கிறோம். “சிலப்பதிகாரம்” “மணிமேகலை” போன்ற சங்க இலக்கியங்கள் எல்லாம் வடிகட்டிய ஆரியக் கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டன என்பது இன்றைய ஆராய்ச்சி உலகால் நன்கு புலப்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே, மக்களின் வாழ்க்கை முறைக்குத் தேவைப்படாத கடவுள் மதம் முதலான சாயங்கள் இப்போது வெளுக்கத் தொடங்கி விட்டன. இனி அவை வெளுத்தே தீரும். ஆனால் இது கடைகளில் விற்கப்படுவனபோன்ற கெட்டிச் சாயமுமன்று, போலிச் சாயமுமன்று. இது ஒரு கூட்டத்தாரின் சுகவாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சிச் சாயமாகும். சூழ்ச்சி யென்றால் எப்படிப்பட்ட சூழ்ச்சி என்று நினைக்கிறீர்கள்! நூல்களுக்குச் சாய மேற்றுவோர், தூய வெண்மையான நூலிலே பல திறப்பட்ட சாயங்களை ஏற்றுவது போல், மக்களின் பளிங்கொத்த அறிவிலே, கடவுள் - மதம் - புராணம் - மோட்சம் - நரகம் - பாவம் - புண்ணியம் ஆகிய முட்டாள்தனத்தைக் கற்பிக்கும் ஆரியச் சூழ்ச்சிச் சாயங்களைப் பதியவைத்து விட்டனர். இதனை வெளுக்க வைப்பதில் பல துன்பங்கள் நேரிடலாம். இத்துன்பங்களைப் போக்குவதற்குப், பகுத்தறிவு - இயற்கை அமைப்பு - உலகப்போக்கு - கால இயல்பு ஆகிய கருவிகளையே துணையாகக் கொள்ளவேண்டும். மானம் வீரம் - இன உணர்ச்சி ஆகிய பாசறைகளை நம்முடையதாக்கிக்கொள்ள வேண்டும். அப்போது திராவிட இனத்தின்மீது பூசப்பட்ட இவ்வேண்டாச் சாயம் வெளுத்துத் தனித் திராவிட நிறத்தைப் பெறுவோம். இதில் வெற்றி காண உழைப்பவனே உண்மைத் திராவிடனாவான் என்று கூறுவேன்.

மதம் - கடவுள் ஆகியவற்றை விளக்க எழுந்த நூல்களே, ஆரிய மொழியாகிய வடமொழியை இரவல் வாங்கிக் கொண்டுவந்து தமிழ்மொழியிற் கலந்து விட்டன. வடமொழியின் உதவியின்றிக் கடவுள் மதம் ஆகியவற்றை விளக்க முடியாதென்பதை அம்மத நூல்களே நன்கு எடுத்துக்காட்டுகின்றன. கடவுளின் தன்மையையோ, மதத்தின் இலட்சணத்தையோ விளக்க வரும்போது வடமொழிச் சொற்களே பயன்படுத்தப்படுவதைக் காண்கின்றோம். ஆரியச் சூழ்ச்சியாகிய சாயம், திராவிட இனத்தை மட்டுமன்று, திராவிட மொழியாகிய தமிழையும் உருமாற்றி விட்டது. கடவுளும் அதுபற்றிய பிற கொள்கைகளும் தமிழ்நாட்டில் பரவாதிருந்தால் தனித்தமிழ வளர்ச்சி குறித்த கிளர்ச்சி இப்போது உண்டாகியிராது.

தனித்தமிழிலேயே பேசுதல், எழுதுதல் வேண்டுமென்று கூக்குரலிடும் தமிழ்ப் புலவர்கள், தனித்தமிழ் வளர்ச்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் கடவுள் - மதம் ஆகியவற்றை விளக்கும் நூல்களே என்பதை உணர்வார்களானால், இதுவரை மதத்தைக் கட்டியழுத மதியீனத்திற்காக வருந்தி, ஆரியச் சூழ்ச்சியாகிய இச்சாயத்தை வெளுக்கடிக்கும் இத்தன்மானப் போரில் எம்முடன் சேர்ந்துழைப்பார். இதை விடுத்து, “மணற்சோற்றில் கல் ஆராய்வது” போல், தனித் தமிழ் வளர்ச்சியில் நெளிவது ஒரு சிறிதும் பயன் தராதென்றும் கூறுவேன்.

11.7.1943