அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சீடர் சிலம்பம் எடுக்கிறார்!
அதோ புள்ளிமயில் தனது தோகையை விரித்தாடும் காட்சியைக் காணும்போது ரம்மியமாக இருக்கிற. ஏன் மயில் அங்ஙனம் இடுகிறது? மனம் குளிர்ந்தது - ஆகவே இடுகிறது! அந்த நர்த்தனம் நமக்கெல்லாம் உள்ளத்திலே கொள்ளைக் களிப்பூட்டி உற்சாகப்படுத்கிறது. மயில் இடக்காரணம் அதன் மனமகிழ்வு. மகிழ்ச்சியைத் தந்தது மேகம். குளிர்காற்றும் களிப்பூட்டிற்று. குயில் கூவுகிறது. கார் கண்டு களித்து அந்தக் கீதம் கேட்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறது கொவ்வைக்கனி கண்டு கிளி கொஞ்சுகிறது! பூங்கொத்துக்களைக் கண்ட பூவையர் பூரிக்கின்றனர். புதையல் கண்ட ஏழை மகிழ்கிறான். குழவியின் கொஞ்சுமொழி தாய்க்குப் பேரின்பம் காதலியின் கண்வீச்சுக் காதலருக்குக் கண்காட்சி ஆம்! இடுமயில், பாடுகுயில், கொஞ்சும் கிள, பூரிக்கும் பூவை, இன்பம் கண்ட காதலர், களிப்பதற்குக் காரணம் மனம் குளிர்ந்தது என்பதுதான். நமது நிதியமைச்சர் சுப்பிரமணிய னாரும் ஆனந்தத் தாண்டவமாடுகிறார், மனம் குளிர்ந்தார்! தாளச் சத்தமும் தந்தினப் பாட்டுச் சத்தமும் கேட்டார், கேட்டதால் பூரிப்படைந்து, அடைந்த பூரிப்பைப் பொழிந்து தள்ளியுமிருக்கிறார். திருக்கோயில் ஒன்றிலே, புராண கதாகாலட்சேபம் நடைபெற்றதாம். அதைக்கேட்டதால் பூரிப்படைந்து, அடைந்த பூரிப்பைப் பொழிந்து தள்ளியுமிருக்கிறார். திருக்கோயில் ஒன்றிலே, புராண கதாகாலட்சேபம் நடைபெற்றதாம் அதைக்கேட்கப் பெருந்திரளான மக்கள் கூடி இருந்தனராம். கண்ணுக்கு விருந்தாகி, கருத்துக்மோர் அருமருந்தாக அமைந்த ஆக்காட்சியைக் கண்ட நிதி அமைச்சர், ஏன்னே இன்பம்! எத்தணைப் பேரின்பம்! எது இதற்கோர் உடு! என்று கூறுகிறார், கைத்தாளமிட்டுக் கானம் பாடுகிறார், கண்டறியாதன கண்டேன் என்று திருநடமாடுகிறார். காரக்கருவாடும் கலயம் வழியவழியக் காடி ஏறிய கள்ளும் கிடைத்தால் காட்டேரி கோயில் பூஜாரி களிப்படைகிறான். வைரத் தோடணிந்த சீமாட்டி, வெள்ளித் தட்டிலே, வகைவகையான பழவகைகளை வைத்து, அதனைத் தங்கவளை குலுங்கும் கரத்திலேந்திக் கொண்டு வரக்காணும் ரங்கநாதர் கோயில் அர்ச்சகர் ஆனந்தமடைகிறார் - களிப்பு ஒவ்வொருவரின் நிலைக்கும் தரத்துக்கும் தக்கபடியும், நினைப்புக்கு ஏற்ற வண்ணமும் பிறக்கிறது. நிதி அமைச்சருக்கு, நாட்டிலே செல்வம் பெருகி, வளம் கொழித்து, மக்கள் மகிழ்கிறார்கள் மற்ற மண்டலத்தார் இந்தத் திரு ஏற்பட்ட வகையாது என்று கண்டறிய இங்கு வருகின்றனர், என்று நிலைமை இருந்திடக் கண்டால் மகிழ்வது முறை - உரிமையுடன்கூட மகிழலாம் - ஏன் திறத்தின் விளைவினைக் காணீர், மக்கள் முகமெல்லாம் செந்தாரையானது எங்ஙனம் எனக்கூறுவதும் கேளீர், என்று பெருமிதத்துடன் சொற்பொழிவே கூட நடத்தலாம். ஆனால், நிதி அமைச்சர் சுப்பிரமணியனார், மகிழ்வது, இதுபோன்ற காரணத்துக்காக அல்ல. மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், பெரிய புரணாப் பிரங்கம் துவக்கப்பட்டதாம். அதற்குப் பெருந்திரளான மக்கள் வந்திருந்தனராம், அதைக் கண்டதும், மந்திரியாருக்கு மனதில் சொலலொணா மகிழ்ச்சிப் பெருக்கு ஏற்பட்டுவிட்டது. தாங்கொணாது போய்விட்டதால் போலும், வெளியே அதனைக் கொட்டியும் விட்டார்.

“எல்லாக் கோயில்களிலும் எல்லா வீதிகளிலும் என்று புராணப் பிரசங்கங்கள் ஆரம்பிக்கப்படுகின்றனவோ அன்றே நம் நாடு பழம பெருமையை மீண்டும் பெறும். பழைய உன்னத நிலையைத் திரும்ப அடையும்” என்று இந்தப் புதிய பாகவதர் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.

அந்தத் திருமயிலைக் கூட்டம், அமைச்சரின் ஆனந்தத்தையும் நம்பிக்கையையும் கிளறிவிடத் தக்கவிதமாக அமைந்திருக்க வேண்டும். வறண்ட தலையரும் இருண்ட கண்ணினரும் அங்கு இருந்திரார் - அங்கு நடையை நாட்டியமாக்கிக் கொண்ட நாரீமணிகளும், நாட்டிலே உள்ள சுவகைளைப் பருகிடும் சுகபோகிகளும், தொந்திசரியும் வருவத்தினராயினும் மாளிகை தரும் மகிழ்ச்சியும் மருந்து வகைதரும் கவர்ச்சியும் சேர்ந்து சுந்தரபுருஷர்களாகிக் காட்சி தரும் கனதனவான்களும் கூடி இருந்திருப்பர் எப்பக்கமும் டால் அடித்திருக்கும்! எங்கும் இனிமை மின்னிருக்கும்! திருமயிலை அல்லவா! எனவே, ஆனந்தம் மேலிட்டு, அமைச்சர், அடியாராகி, காலட்சேபம் செய்யவே முயற்சித்திருக்கிறார்!
வேலை இழந்த டிராம்வே தொழிலாளி, அல்லற்படும் அச்சுத் தொழிலாளி, ஆவதிக்காளான ஆலைத் தொழிலாளி, வேதனையில் உழலும் விவசாயி, வறுமைத் தேள் கொட்டினதால் துடித்தழும் பிற தொழிலாளர்கள், அங்குகூடி இருந்திருக்க மாட்டார்கள் - அவர்களுக்க நேரம் எது - அவரக்ளைக் கண்டால், அமைச்சருக்கு எப்படி ஆனந்தம் பிறக்கும்? அந்தக் கவலை தோய்ந்த முகங்களையும் கனல்கக்கும் கண்களையும் கண்டால் கனம் போலீசைத் துணைக்குத் கூவி அழைக்க எண்ணிருப்பாரே யன்றி, பொற்காலம் பிறக்கப் புராணம் நடாத்துக என்ற உபதேசமா பேசத் துணிந்திருப்பார். அந்தப் பஞ்சைகள், அடிக்கடி கூடுவர், அழுகுரலில் பேசுவர், ஆவதியைக் காட்டுவர், இளவந்தார் களுக்கு அறைகூவல் விடுவர், எமது உழைப்புத்தானே உமது உல்லாச வாழ்வுக்கு இதாரம் என்று கேட்பர், ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும் என்று பேசுவர், செஞ்சீனாவைப் பார், சிகப்பு ரஷ்யாவைப் பார், தழும்பேறிப் போயிருக்கும் எமது உடலைப் பார், உலக வரலாற்று ஏடுகளையும் மறுமுறை கவனத்தோடு படித்துபார் என்று ஏதேதோ பேசுவர், ஐலாதனவெல்லாம் கூவர், நமதே உழைப்பு, உழைப்பே உடைமை, தனியுடைமை, தகர்ப்போம், பொதுவுடைமை, வளர்ப்போம் என்றெல்லாம் முழக்கமிடுவர் கனத்தின் காதுகளுக்கு இவை நாராசமாகவன்றோ இருக்கும். காலையெல்லாம் கடும் வெயிலைக் குறைக்கக் கடற்காற்று, அதனை அழைத்து வந்து உறவாடச் செய்யும் தாதிபோன்ற மின்சார விசிறியும், வெல்வெட்டு மெத்தையும், பில்லை அணிந்த சேவகரும், பிரியமுடன் பேசவரும் பிரமுகரும, அமைச்சருக்குக் களிப்பூட்டின - அந்தக் களிப்பைக் கருக்கிடும் காட்சியாகவல்லவா இருக்கும் பாட்டாளிகளின் கூட்டம்! அடைந்த ஆனந்தத்தை அரை நொடியில் அழித்துக் கொள்வதா! பெற்ற இன்பத்தை, பஞ்சை பராரிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டால், இழக்கத்தானே வேண்டிவரும்! அமைச்சர் இதனை அறியாரா? நன்கறிவார்! எனவேதான், நளினிகளும் நவநிதி பெற்ற பூபதிகளும் நிரம்பிய திருச்சபைக்குச் சென்றார், அங்கு அவருடைய மனம் குளிர்ந்தது, எனவே, பண் இசைக்கிறார், பரவசப்படுகிறார்.

“ஆடுத்தாத்து ஆம்புஜத்தோட புருஷனுக்கு, ஆம்பாசிடர், வேலை வருகிறதாமடி வத்சூ! ஜவர்லால் வாக்களித்துவிட்டாராம்!

“ஆமாம் - ஐண்டி கனம் கிடைக்காது! ஆம்புஜத்தோட சித்திய யார் தெரியுமேன்னோ? ஆனந்தசயனம் ஐயங்கார்! அவருக்கு டில்லியிலே ஆமோகமான செல்வாக்கேனோ”
இப்படி ஒரு உரையாடல்.

“ஐண்டி ஐமலதா! உன் பேத்தி, நாட்டியமாடினாளாமே காணக்கொடுத்து வைக்கல்லே”

ஆமாம்! கோந்தையோட நடனத்தைக் கண்டு கவர்னர், ரொம்ப ரொம்பப் பாராட்டினார்.”

“வடநாட்டுக்காரரர் இருந்தாலும், நம்ம கவர்னர் நல்ல ரசிகர்டீ! பரத சாஸ்திரம்கூடத் தெரியுமாமே”

“வடநாடு, தென்னாடு என்பதெல்லாம் அர்த்தமற்ற பேச்சேன்னோ - இந்த நாயக்கர் கூட்டத்தவர் பேசற பேச்சு, நாட்டியத்திலே, வடநாடு என்ன, தென்னாடு என்ன! மலையாளத்துக் கதகளியானாலும், மணிப்பூர் நடனமாடினாலும், பாவம் தெரிந்து இடினா, யாரும் ரசிக்கத்தான் செய்வா”

இவ்விதம் இருவர் பேசியிருப்பர் ஒருபுறம்
“ஒய் இந்த ஆசாமி மெத்த சமத்து - என்ற சொல்றீர்”

“யாரைக் குறிப்பிட்டப் பேசறீர் - யாரை? - சுப்பிரமணியத்தையா! ஆமாம் ஆமாம், ஆனாலும் சமத்துன்னு சொல்றதைவிட நல்ல ஆதிர்ஷ்டக்காரர்னு சொல்லும்.”

“நீர் சொல்றதும் வாஸ்தவந்தான் பாருமே, ஆச்சாரியார் ராஜிநாமாச் செய்ததும், கணிகண்ணன் போகின்றான் - நீயும் உன்பைந்நாகப்பாயைச் சுருட்டிக் கொள் என்கிற மாதிரியா, இந்த ஆசாமியும் போய்விடுவார்னு எல்லோரும் சொன்னா - ஆனால் ஆதிர்ஷ்டம் பார்த்தீரா - இப்பவும் மந்திரியாத்தான் இருக்கார் யோக ஜாதகம் ஒய்! யோக ஜாதகம்”

“ஆனாலும், இந்தக்கூட்டு நிலைக்குமா எங்கிறதிலே நேக்குச் சந்தேகம்தான்”

“உம்ம சந்தேகத்தைக் கெண்டு போய்க் கடலிலே கொட்டும்! கிடைக்கிறவரையிலே அனுபவிக்கிறதா, நீடிக்குமா நிலைக்குமா என்று எண்ணி எண்ணி விம்மிண்டு கிடக்கிறதா!
இப்படிச் சிலர் உரையாடிக் கொண்டிருந்திருப்பர்.

மோடாரின் விலை, புதிய மாளிகையின் விலை, வைரமாலையின் விலை, வட்டித் தொகையின் கணக்கு, வரதட்சிணை, வர இருக்கிற புதிய வேலை, இவைபற்றிப் பேசியிருப்பர். பேச்சுப் பலரகமாக இருந்திருக்கும், ஆனால், இல்லாமை, இயலாமை, போதாமை, என்பவை அந்தப் பேச்சுகளிலே தலைகாடடி இருக்க முடியாது. சிங்காரச் சீமான்களும் அவர்களைச் சுழல் விழியால் ஆளும் சீமாட்டிகளும் நிரம்பிய திருச்சபையிலே, மல்லிகை மணமும், மனோரஞ்சித வாடையும், அத்தர் புனுகு ஆள்ளித் தரும் மணமும், ஆனந்தம் தரும் ஆழகொளியும் இருந்திருக்குமேயொழிய, வியர்வையும் கண்ணீருமா, இருந்திருக்கும்! அவர்கள் பன்னீரில் குளித்தெழுந்தவர்கள்!! அந்தப் பன்னீர், ஏழையின் கண்ணீர்தான்! இருந்தால் என்ன! அதை மறைக்கத்தான் ஆதோ பாடுகிறாரே புராணீகர், “முன்னைத் தீவினையால் மூழ்கிகúன் துயரமதில், என்னைக் கைவிடுதல் நியாயமோ என்னப்பா! உன்னைத் தொழுது வந்தேன் என்னை உடேற்ற எழுந்தருள்வாய், எம்மானே!

அமைச்சருக்கு ஏற்ற அற்புதமான அவை! அவைகளுக்கு ஏற்ற அமைச்சர்! எனவேதான், முழுத்திருப்தியுடன் முழக்கமிட்டிருக்கிறார், வழுக்கிவிழ இருந்து தப்பித்துக் கொண்ட கனம்.
அன்று அவர் அங்கு கண்ட காட்சியை அமைச்சர், என்றும் எங்கும் காணவிழைகிறார் - அப்போதுதான் பொற்காலம் பிறக்குமாம்! அவர் கூறுகிறார், எங்கும் புராணப் பிரசங்கம் நடத்தி வந்தால் பொற்காலம் பிறக்குமா, பிறவாதா என்பது ஒரு புறமிருக்கட்டும், அமைச்சர் கூறியிதிலிருந்து வேறொன்று தெள்ளத் தெளிய விளங்கி விடுகிறது! பொற்காலம் பிறக்க வேண்டுமானால், அது எம்மால் கிடைக்குமென்று எண்ணி ஏமாறாதீர்கள்! அமைச்சர்களாகிய எமக்கு, அது இயலாது! திறமையோ தகுதியோ கிடையாது! எனவே நாங்கள் பொற்காலம் ஏற்பட முயற்சிக்கவும் மாட்டோமட் - முடியாததை முயற்சிப்பானேன். பொற்காலம் பெற, எம்மை நம்பிக் காலங்கடாத்தாதீர்கள். வீதிகளிலெல்லாம், திருக்கோயில்களில் எல்லாம் காரைக்காலம்மையையும் கண்ணப்ப நாயனாரையும், கரிவலம் வந்த காட்சியையும், கரம் தேய்த்த பக்தரையும், சிறுத்தொண்டரையும், கோட் புலியையும், மண்டையை உடைத்துக் கொண்ட மகானுபாவரையும், மனைவியின் மூக்கினைக் கொய்த அடியாரையும், இல்லையே என்னாத இயற்பகையையும், பற்றிய புராணங்களை நடத்துங்கள் பொற்காலம் பிறக்கும். என்று தெளிவாக அமைச்சர் கூறிவிட்டார்!

நிதியமைச்சர் இளைஞர், எனவே திறமையைத் தேடிப் பெறக்கூடியவர். வழக்கறிஞர் எனவே, பிரச்சினைகளின் நுட்பங்களை இயந்தறியவல்லவர், எனவே நாட்டின் பிணிகளான வறுமை, வேலையில்லாக் கொடுமை, ஆகவிலை, தொழில்வளம் நசித்து வருவது போன்றவைகளைப் போக்கிடப் புது வழிவகை காண்பார். பல்வேறு நாடுகளிலே ஆள்வோர் நடத்திவரும் முறைகளை எல்லாம் கண்டறிந்து இந்நாட்டுக்கு, இதுபோது, எம்முறை தக்க பலனை மெத்தச் சிரமமின்றித் தரவல்லது என்று கண்டறிந்து புகுத்துவார், அவருடைய திறமையால், கண்ணீர் துடைக்கப்படும், வாட்ட வருத்தம் ஓட்டப்படும், வாழ்விலே மலர்ச்சி ஏற்படும், பொற்காலம் பிறக்கும் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கக் கூடுமல்லவா அவர்களுக்கெல்லாம் தலையில் குட்டி அறிவிக்கிறார் அமைச்சர், மதியிலிகளே! நானா அந்தக் காரியம் செய்யவல்லவன்! பொற்காலம் பிறக்க வேறு வழி தேடுங்கள் - நல்ல வழி நானே கூறுகிறேன் - கூடுங்கள், ஐயன்புகழ் பாடுங்கள் - தேடுங்கள் திருவருளை நாயன்மார்களின் காதைகளைக் கேளுங்கள் - பஜமை மடம் சேருங்கள் - என்று அமைச்சர் அறிவித்துவிட்டார். அவர்மீது இனிஎவரும் குறை கூறுவதில்லை - அவர், தம்மால் மக்களை வாழவைக்க, நாட்டிலே நல்ல நிலைமையை உண்டாக்க செழிப்பைக் காட்டிட இயலாது என்பதைத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். நம்மால் இனி இகாது - புண்புரையோடிவிட்டது - காரமருந்து வைத்துப் பார்த்தேன் பலன் காணோம் - இனி ஆபரேஷன் செய்து பாருங்கள் என்று கூறிடும் கட்டுமாத்திரை கந்தசாமிப் பண்டாரம் போலவும், ஆபரேஷன் செய்தும் பார்த்தாகி விட்டது, குணம் தெரியக் காணோம், இரூடக்காரனைக் கூப்பிட்டுக் கேட்டுப்பாருங்கள். இயுள் பாக்யம் எப்படி இருக்கிறதோ என்று கூறிவிட்டுச் செல்லும் டாக்டர் போலவும், அமைச்சர், திட்டவட்டமாகக் கூறிவிட்டார், நாட்டின் பொதுச் செல்வத்தைப் பெருக்கி, தொழில் வளத்தைப் பெருக்கி, மக்களுக்குப் புதுவாழ்வு தர என்னால் இயலும் என்று எண்ணிக் கொண்டு இருந்துவிடாதீர்கள்! இப்போதே சொன்னேன், பிறகு ஏன்மீது குறை கூறாதீர்கள், உங்கட்கு வாழ்வளிக்க, வேறு வழி நாடுங்கள், திருப்புகழ் பாடுங்கள் என்று கூறிவிட்டார்! அங்ஙனமாயின், ஐயா! எம்மை வாழ்விக்கும் வகை அறியாத உமக்கு அமைச்சர் பதவி எதுக்கு? பொற்காலம் காண பஜனைமடம் போதும் என்றால், பாராளுமன்றம் எதற்கு? அடியார்களின் கதைகளைக் கேட்டு இன்புற்றால், ஆவதிகள் யாவும், காய்கதிரோன்முன்பட்ட பனியாகும் என்றால், கனம்கள் எதற்கு? என்று கேட்கத தோன்றும் உங்கட்கு! கேட்டுத்தான் பாருங்களேன், கனம் கண்ணைச் சிமிட்டிப் புன்னகை செய்துவிட்டுக் காரில் ஏறிக்கொண்டு போய்விடுவாரே தவிர, பதலளிக்கமாட்டார்! நமது ஏமாளித்தனத்தால் கனம் ஆகிவிட்டவர்களிடம், நாம், இதைவிட வேறு என்ன எதிர்பாபர்க்கமுடியும். உலகிலே, பாரத் மட்டுமல்ல, பலப்பல நாடுகள் உள்ளன - பண்டைப் பெருமை வாய்ந்தவைகளும் உள்ளன - புதுயுகச் சித்திரங்களும் உள்ளன - அங்கெல்லாம் கூட அமைச்சர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் - நிதி அமைச்சர்களும் உள்ளனர் - நிதிப்பிரச்சினையைப் புரிந்து கொண்டுள்ள - புரியவாதவருக்குப் புரியவைக்கும் ஆற்றலும் படைத்த நிதி அமைச்சர்கள் உள்ளனர் - அவர்களில் யாரும், நமது நிதியமைச்சர் தந்த அந்த மதிமிகு திட்டம்போலப் பேசினாரில்லை, பேசிடத் துணியவும் செய்யார், பேசிடமுனைந்தால், பேசிடத் துணியவும் செய்யார், பேசிட முனைந்தால், மக்கள் வாளா இருத்தலும் கிடையாது. ஒரு நாளும் நாம் கேள்விப்படுவதில்லையே, பிரிட்டிஷ் வியாபாரம் செழிக்க, பண்டங்களின் உற்பத்தி பெருக, பால் தேவலாயம் சென்று பஜனை செய்து வாரீர், என்று பேசும் பிரிட்டிஷ் நிதி அமைச்சரைப் பற்றி! வளர்ந்தள்ள பிரிட்டனைத் தள்ளி விடுவோம்! இருண்ட கண்டம் என்று ஐளனம் செய்யப்படும் ஆப்பிரிக்காவில் ஒரு பகுதியாக இருக்கும் ஆபிசீனிய நாட்டு அமைச்சர்கள்கூட, பொற்காலம் பிறக்க பஜனை செய்வீர் என்று பேசிடக் கேட்டதில்லை இங்குதான் காண்கிறோம், இத்தகைய விசித்திரக்கதை!

நிதியமைச்சர் இங்ஙனம் பேசியபோது, தமது நிலைமை முன்பு இருந்ததைவிட ஒருபடி உயர்ந்து விட்டதாகக் கருதிக் கொண்டு ஆறும்பூதெய்தி இருக்கக்கூடும் - இளைஞர் ஆகையால் ஆறுமாந்துமிருக்கக்கூடும் - ஏனெனில் திருக்கோயிலில் இங்ஙனம் பேசியபோது அவர் முன்பு ஆச்சாரியார் மேற்கொண்டிருந்த வேலையைச் செய்யும் உயர்நிலை தமக்குக் கிடைத்திருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பார்! ஆச்சாரியார் இரண்டாண்டு காலம் இந்த ஆண்டி அகவல் பாடிú அனைவரையும் ஏய்த்துவிடாலாம் என்றுதான் எண்ணினார் - அந்தோ! பரிதாபகரமான தோல்வி அடைந்தார் - குரு குப்புறவிழுந்த பிறகு இந்தத் சீடப்பிள்ளை முண்டா தட்டிக் கொண்டு கோதாவில் இறங்குகிறது! சீறிய சிறுத்தை குகைக்குள் ஓடி ஒளிந்த பிறகு சிறு நரி எளையிட்டு உலவிடும் காட்சி போலிருக்கிறது இது! வேத வேதாந்த சிரோமணி, தத்துவ விளக்கம், ஊரைப்பதில் அவர் மகா பண்டிதர், ஞான போதனை செய்யத்தக்க தகுதிவாய்ந்தவர், மகான் என்று ஐடெல்லாம் புகழ்ந்தன ஆச்சாரியாரை, அவரும் செல்லுமிடமெங்கும், ஜெகத்குரு சங்காரச்சாரியார் போலவே, மண்ணை மறந்திடுங்கள்! விண்ணகத்தை எண்ணுங்கள்! ஆசைகளை அகற்றுங்கள்! ஆத்மார்த்தை நாடுங்கள்! என்று பேசினார் பேசினாரா? உபதேசமே செய்தார். பத்தி பத்தியாக பக்கம் பக்கமாக அவருடைய பஜகோவிந்ததை ஏடுகள் வெளியிட்டன. புதிய வரிபற்றிய பிரச்சினையா னாலும் புதுக் கல்வித் திட்டவிளக்கமானாலும், ஜனநாயகம் பற்றிய பேச்சானாலும் வெளிநாடடு விவகாரமானாலும், எதற்கும் ஆச்சாரியார் ஒரே பல்லவி பாடி வந்தார். அது மெத்தப் பயனளிக்கும் என்றும் மனப்பால் குடித்தார். அந்தப் பேச்சினால், அவரால் என்னை சாதிக்க முடிந்தது? கொதிப்பும் கொந்தளிப்பும் குறைந்தனவா? கிளர்ச்சியும் எழுச்சியும் நசிந்தனவா? கேள்வியும் எதிர்ப்பும் பட்டுப்போயினவா? இல்லையே! மாறாக அவர், மகான் வேஷம் போடப் போட, மக்களின் முழக்கம் வலுவடைந்தது - அவர் மதபோதனை செய்யச் செய்ய, எமது வேதனை தீர வழி கூறுவந்தீரா, இவை ஆண்டவன் சோதனை என்ற ஆண்டிப் பேச்சுப் பேச வந்தீரா, நீர் யார், அமைச்சரா, இலயப் பூசாரியா? என்று மக்கள் கேட்கலாயினர்! பதவிûயே இழந்தவிட நேர்ந்தது! குருவின் கதி இது! குட்டித்தம்பிரான், ஆவரிடம் கேட்டு, நெட்டுருப் போட்டவைகளைக் கக்கிக் காணப்போவùன்ன?

ஆழ்வாராதிகளும் நாயன்மார்களும், அருளாளர்களும் அருமறை கற்றோரும், உலவி உபதேசம் செய்து, ஊராரின் உள்ளத்திலே பஜனையை நிரப்பி வைத்த காலம் பொற்காலம் என்று நம்பச் சொல்கிறார், அமைச்சர்! அந்தப் பொற்காலம் மீண்டும் காண மீண்டும் திருக்கோயில்களிலே புராணங்களை நடத்துங்கள் என்று கூறுகிறார்.

பொற்காலம் என்பதற்கு அமைச்சர் கொண்டுள்ள பொருள் என்ன என்று நமக்குத் தெரியவில்லை - அவர் தெரிவிக்கவில்லை - தெரிந்துகொண்டிருக்கிறாரோ என்பதே ஐயப்பாடுதான். பொற்காலம் என்றால், மக்கள் துயரின்றி, இன்புற்று வாழ்வது, இயற்கைச் செல்வத்தை, அறிவு நுட்பத்தாலும் தொழில் செய் திறமையாலும், வகையும் வளமும், பயனும் உருவும் உடையதாக்கி, மக்களின் வாழ்வு சுவையை அதிகமாக்குவது, எத்தனும் ஏமாளியுமின்றி, சுரண்டிப் பிழைப்போனும், சூதுமதியினனும், உழைத்து உருக்குலைந்தவனும் ஓட்டாண்டியானவனுமின்றி, எல்லாரும் ஒப்பப்பர் என்ற நிலை அடைந்து, பொது ஒழுக்கம், நீதி, நாணயம், நேர்மை, அன்பு, அறம் என்பவைகள் தழைத்திருக்கும் பண்பு நிறைந்த நிலை ஆடைவது, பொற்காலம் என்று கூறப்படலாம். மாளிகைகள் மமதையைக் கக்கிக் கொண்டும், குடிசைகள் வேதனையை வெளியிட்டுக் கொண்டும், ஆடலழகிகளின் சிரிப்பொலியைக் கேட்டுத் தேய்ந்த தையலர் திகைத்துக் கொண்டும் உள்ள நிலை, பொற்காலம் இகாது! தங்கக் கோப்பையில் ஊற்றித் தந்தாலும் நச்சு நீர் இருப்பின் அதை மந்த மதியினரும் உட்கொள்ளார். அதுபோல, பொற்காலம் என்ற முலாம்பூசி நச்சு நினைப்பினர் நாட்டைப் கெடுக்கத் தக்க கருத்துகளை வழங்கினால், வகையறியாதாரும் விளக்கம் பெறாதாரும், மனமயக்கம் பெறுவரேயன்றி, சூது, சூழ்ச்சியைக் கண்டறியும் திறன் படைத்த எவரும் திண்டார், சீந்தார். எனவே பொற்காலம் என்று கூறிவிட்டு, புராணகாலத்தை நினைவுபடுத்துவதை அறிவுடையார் எவரும் ஏற்கார், மடம் உடையார், சடை முடி உடையார், அவர்தம் உறவு உடையார், கோயில் சொத்தைக் குத்தகையாக உடையார், குறை மதியினரைச் சூறையாடும் போக்கு உடையார், எனப்படுவோர் வேண்டுமானால், பலே! பலே!! என்று கூறி வரவேற்பர், காரணம் தமது சுயநலத்துக்கும் சுகபோகத்துக்கும் புராண கால நிலை பாதுகாப்பளிக்கும் என்ற எண்ணத்தால் அமைச்சர் பதவியிலிருந்து கொண்டு இருப்பதால் பாகவதராகிக் காட்டும் சுப்பிரமணியனார், நெஞ்சு நெக்குருகப் பேசிடும் புராணங்கள், திராவிடத்தைப் பொறுத்தமட்டில் இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகட்கு முன்புதான் கட்டப்பட்டன என்பதை சைவமும் ஆராய்ச்சியும், வைணவமும் தெளிவும் கொண்டவர் எவரும் மறுத்திடார். மேலும், தமிழ் மொழியில் உள்ள பெரும் பாலான புராணங்கள், வடமொழியிலிருந்து பிழியப்பட்டன என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் மறுப்பதில்லை.

இந்த ஆயிரம் ஆண்டுகளிலே பொற்காலம் எது, எவ்வண்ணம் இருந்தது என்பதை அமைச்சர் விளக்கக் காணோம் - விளக்கம் பெற்றதாகவும் தெரிவிக்கக் காணோம்.

பண்புகள் சிறந்திருப்பது பொற்காலம் என்று கூறுவரேல், இந்த ஆயிரம் ஆண்டுகாலமாக, பண்பு கெட்ட தன்மையற்று இருந்தகாலம் எது என்பதை அறிய ஆசைப்படுகிறோம்.

பஞ்சம் பட்டினி, பசியின்றி, மக்கள் சுகப்பட்டு இருப்பது பொற்காலம் என்றால், இந்த ஆயிரம் ஆண்டுகளிலே பஞ்சம் பட்டினி ஏற்பட்டு மக்கள் பதைத்து, சிறகொடிந்த பறவைகள் போல, தீயில் வீழ்ந்த குழவிபோலத் தவித்த காலம் உண்டு, என்று நாம் எடுத்துக் காட்ட இயலும் - மறுத்திட முன்வருவாரா அமைச்சர்.

பொற்காலம் என்றால், கலைச்செறிவும் காவிய வளமும் கொண்டதோர் நிலை எனக்கூறுவரேல், அந்நிலை, அந்த ஆயிரம் ஆண்டுகளிலே மின்னுவதைக் காட்டிலும், அழகும் பயனும் மிக ஒளி தந்த காலம், தொல்காப்பியம், அகம்புறம், பத்துப்பாட்டு எட்டுத்தொகை எனக் கூறப்படும் காலத்தில்லவா என்று கேட்கிறோம்.

பொற்காலம் எது என்ற அவர் கூறினாரில்லை, அதன் தன்மை யாது என விளக்கிடவுமில்லை, புராணத்துக்கும் பொற்காலத் தன்மைக்கும் என்ன தொடர்பு எனச்செப்பவுமில்லை. எனினும், எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டவர்போல, அந்தத் திருச்சபையிலே நடித்திருக்கிறார், வாழ்வுப் பிரச்சனை எதுமற்ற சுகபோகிகளின் கூட்டத்தில் பேசுகிறோமென்ற துணிவால், புராண மூலம், பொற்காலம் மீண்டும் பிறக்கும் என்று இரூடம் கூறுகிறார். குறைமதி எவ்வளவு துணிவுதரும் என்பதற்கோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது அமைச்சரின் இலயப்பேச்சு.

பொற்காலம் ஒன்று இருக்கத்தான் செய்தது - அமைச்சர் கருதுகிறபடி புரணா காலமல்ல - தமிழக வரலாறு ஆயிரம் ஆண்டுகள் மட்டும் கொண்டதல்ல - புராண இதிகாசங்கள் புகாமுன்னம், பூந்தோட்டத்தில் நச்சரவம் புகா முன்னாம், திராவிடத்தில் ஓர் பொற்காலம் இருக்கத்தான் செய்தது - அதனை அறிவிக்கவும் மீண்டும் பெறவும் ஓர் நன்முயற்சி நடைபெற்ற வண்ணம் இருக்கிறது - அந்த நன்முயற்சியைத் தான், நாவலிவும் அறிவுக்குறைவும் கொண்டவர் நாத்திகம் என்று நிந்திக்கிறார்கள்.

அந்த நாட்களில், திராவிட நாடு திராவிடருக்கு இருந்த காலத்தில், பசும்புற்றரையில் பால்வண்ண உடை உடுத்தி, பண்பாடி, காதலுக்கும் கடவுளுக்கும் பேதமுமில்லை, கால வேறுபாட்டால் அவை அழிவதுமில்லை என்று இசைத்து, இன்ப வாழ்வு வாழ்ந்தான் திராவிடன். அவன் தோள் வலிமைகண்டு, தோகையர் சொக்கினர், கவிகள் உருகினர், ஓவியக்காரர் களித்தனர், எதிரிகள் திடுக்கிட்டனர்.

அவன் அந்நாளில், “நாமார்க்குங் குடியல்லோம்” என்று வாழ்ந்தான். “நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” என்று உரைத்தான். “எல்லோரும் ஓர் குலம்” என்றான். ஜாதியில்லை, ஜாதிப் பூசலில்லை குருட்டு நம்பிக்கையில்லை, குள்ளமனப்பான்மை இல்லை கோழத்தனமில்ல, காட்டில் வாழ் மிருகங்கள் அவன் கைக்குத் தவிடுபொடி! காதல் வாழ்வு அவன் பிறப்புரிமை! நாட்டைக் காத்தல் அவன் கடமை என்று இருந்தது.

அவன் தீமூட்டித் தெந்தினம் பாடி, தேவரை அழைத்து எதிரியை அழிக்கச் சொல்லி வாழ்ந்தானா? எதிரிகள் அழிய, யாகயோகம் செய்தானா? சூது வஞ்சனை சூழ்ச்சி அறிவானா? பித்தலாட்டம் பேசினானா? இல்லை, இல்லை. திராவிடன், அவைகளை அறியான், புராணிகளிடம் அவைகள் இருக்கக் கண்டு, கைகொட்டி நகைத்தான்! திராவிடன் உள்ளம், வெள்ளை! அவன் புராணிகக்கு இந்நாட்டையும் தன்னையும் கொள்ளை கொடுக்காமுன்னம் அவனே குறுநிலக் கொற்றவனாக வாழ்ந்து வந்தான்.

தமிழ் மொழியே தேன் என்றான். தமிழர் வாழ்வுக்கே, தன்னை ஆர்ப்ணம் செய்தான். சங்கமும் அமைத்தான். நூற்கள் இயற்றினான். கோட்டை ஏழுப்பினான். அகழி வெட்டினான், உழவு, வாணிபம் சிற்பம், மதலிய ஏத்தொழிலும் அவனுக்கு நற்றொழிலே! வெளிநாட்டு மன்னரோடு, சரிநிகர் சமமாக வாழ்ந்தான். அவன் ஆண்டகாலத்தில், பொன் கணடான், பொருள் கண்டான், முத்துக் குளித்தெடுத்தான், நாகரிக முற்றத்தில் வாழ்ந்தான்.

எப்பக்கம் நோக்கினும் அவன் ஆட்சி. எங்கு பார்ப்பினும் அவன் சிற்பம். யாரைக் கேட்கினும் அவன் பெருமை ஆம்! அந்த நாளை இன்னமும் சரியாக உணர நம்மவரால் முடிவதுமில்லை. சொன்னால் சோர்ந்துவிடுவர் சிலர். கதையா? என்பர் பிறர், பயன் ஏன்? என்பர் பிறிதும் சிலர். ஆனால் நாம் புகல்வது புராணமல்ல! சரிதம்! நம் நாட்டுச் சரித்திரம்! நாம் “வாழ்ந்த” காலத்தில் நிகழ்ந்த நடப்புகள்.

இன்று அது இழந்த காதலாயிற்று, தேய்ந்த கனவாயிற்று! சாய்ந்த நமது தனிச்சிறப்பை மீண்டும் பெற உறுதி கொள்ளத்தான் நாம் திராவிட நாடு திராவிடருக்கே, என்று பரணிபாடச் சொல்கிறோம்.

அன்றொருநாள் வாழ்ந்த அழகினை மட்டும் எண்ணி எதும் செய்யாதிருத்தல் பயன்தராது. கண்ணாடி முன் நின்று, கட்டுத் தளர்ந்தவன், தன் பழைய முகம் எங்கே எனக்கேட்டுப் பயன் உண்டோ! ஆஅதன்று நம் கருத்து. பின்னர் என்னை? தன்னை அறிந்து இன்புற வேண்டுகிறோம். மீண்டும், திராவிட நாட்டை திராவிடருக்காக்குவோம், அதற்காகப் புனலில் புகுவோம். கனலில் குளிப்போம், கஷ்ட நஷ்டமேற்போம் என்று உறுதிகொள்ள வேண்டும். விடுபட்டால் சுகப்படுவோம் என்று கூறவேண்டும்.

கொற்றவனைக் கோழையாக்கி, தோள்வலிமை உள்ளவனை, வாள் வலிமை கண்டவனை, வரண்ட உள்ளத்தினனாக்கி, நாடு ஆண்டவனைக் காடாள்வோனாக்கி, நல்வழி கற்றபனை புல்லரின் போகப் பொருளாக்கி, ஜாதிபேதமற்றவனை, ஜாதிக்குழியில் புகுத்தி, ஆபாசத்தை வெறுப்பவனை அதன் அடிமையாக்கி, பிச்சைவாழ்வு வேண்டானைப் பித்தனாக்கி, பெருநெறி கொண்டானைப் பேதையாக்கி, திராவிடனை சூத்திரனாக்கி, தனது நாட்டிலேயே தாழ்வு அடைந்து, தனக்கென இருந்தனவற்றை எல்லாம் இழந்து தன் நிலையையும் மறந்து தாசனாகி செத்த வாழ்வு வாழும்படி செய்தது வைதீகக் கூட்டம்!

வாட்போரில் விழவில்லை நாம்! வீணரின் வஞ்சகப் போரில் வீழ்ந்தோம். நமது கோட்டைகளை இழக்க நாம் கோழைகளல்ல! நம்மைக் கோழைகளாக்க, நமக்குக் கோணம் புத்தியைப் புகட்டினர். நிலஉலகில் நிமிர்ந்து நடத்த நம்மை ஆண்டத்தைப் பார், இகாயத்தைப் பார் என்றுரைத்து ஏய்த்தனர். பொன்னிலும் மணியிலும் புரண்டு வாழ்ந்த நம்மை, புற்றிலும் புதரிலும் நுழையச் செய்தனர்!

கரைபுரண்டோடும் ஆற்றிலே, தோணியில், தோகையருடன் சென்ற திராவிடன், மரக்கலம் அமைத்து சந்தனம், ஆகில், முத்து, பவளம் முதலியன ஏற்றிக் கொண்டு சிலோன், சிங்களம், நுôவா, சுமத்திரா முதலிய திரைக்கடல் கடந்த நாடுகளுக்குச் சென்ற திராவிடன், நெருப்பாற்றின் மீது மயிர்பாலம் கட்டப்பட்டிருக்கிறது, அதன்மீது உன் மூதாதையர் ஆவி செல்லவேண்டும், அதற்காக ஒரு கோதானம் கொடு என்று வைதிகர் சொல்லக் கேட்டான், கெட்டான்.

திராவிடத்துக்கும் சுமத்திராவுக்கும் எத்தனை நாள் பிராயணம்! ரோமுக்கும் புகாருக்கும் எவ்வளவு நாட்களில் போகலாம் என்று பேசிய திராவிடன், வைதீகக் கோளாறினால், இந்திர லோகம், பிரம்ம லோகம், அதல கதல பாதாளம் என்று பேசலானான். அவைகளுக்குச் செல்லவேண்டுமானால், பூஜை செய்யவேண்டு மென்று எண்ணினான்! இடர்ப்பட்டான்!!

ஆண்டவன் ஒருவனே! அவனுக்கு உருவமில்லை என்று கூறிவாழ்ந்தவன், ஆண்டவ்ன, மச்சவராக நரசிங்கரூபம் எடுத்தார், என்று எண்ணி நிலை குலைந்தான்.

ஜாதியில்லை! பேதமில்லை என்று கூறியவன், பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்ற நாலு வருணம் உண்டு, முதலாமவன் பிரம்மனின் முகத்தில் உதித்தான், கடைசி வருணத்தான் காலில் தோன்றினான். முதலாமவன் நான், கடைசி வருணத்தான் நீ, முதலாவனுக்குத் தொண்டு செய்வதே சூத்திரன் ஜென்மசாபல்யம் அடையும் மார்க்கம் என்றான், வைதீகன், அழிந்தான் திராவிடன்.

மார்பில் புண்பட உடலத்தை எதிரிகளின் ஆம்புகள் துளைக்க, ரத்த வெள்ளத்தில் புரண்டேனும் சுதந்திரத்தைக் காப்பேன் எனப் புகன்றவனை, எதிரிவரின் வருகிற வழியிலே துளசியைக் கொட்டு, மீறிவந்தால் புறக்கடைக் கதவை நாடு என்றாக்கிறது.

பெண், வீரத்துக்குப் பேழை காதலுக்குக் கண், வாழ்க்கைக்கு வழிகாட்டி, கல்விக்குக் கருவி என்றான் திராவிடன் சமத்துவம் தந்தான் தவத்தைக் கெடுக்கவும், தன்னினம் வளரப் பிறனைக் கூடவும், அரசனை மயக்க இடவும், ஊர்வசி உண்டு, ரம்பை, திலோத்தமை, மேனகை உண்டு என்றான் புராணிகன்.

பாடுபட்டால் பலன் உண்டு. உழைத்தால்தான் வாழ முடியும். இல்லாததைப் பெற முடியாது என்று கூறிய திராவிடனிடம் காமதேனு உண்டு, கேட்டதைத் தரும், கற்பக விருட்சமுண்டு, நினைத்ததைக் கொடுக்கும் என்றான்.

பூமிக்கும், பிற கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து கொண்டிருந்தவனிடம், ஆயிரம் தலைகொண்ட இதிசேஷன் பூலோகத்தைத் தாங்ககிறான் எனப் புகன்றான்.

மானென மருளும் கண்களும், மயில் தோகை எனப்பிரகாசிக்கும் உடலும், பிடி இடையும், பெடை நடையும், குயில் மொழியும் கொண்ட குமரிகளை, கண்டு காதலித்து மதயானையை அடக்கி, புலியைக் கொன்று கோட்டையைத் தகர்த்து தனது வீரத்தைக் காட்டி மணந்த திராவிடன், இன்று கட்டை வெட்டியும், பங்கா இழுத்தும் வாழவும், பெண்கள், கூட்டுவதும் வழிப்பதும், குலைவதும் ஏதனால் வந்த வினை?

மொழி, நாகரிகம், கலை பிற நாகரிகத்தின் ஆதிக்கத்தினால், கெட, அத்துடன் கெட்டான் திராவிடன்.

முழுமதிதான்! ஆனால் மேகம் மûற்தால், அதன் பால்நிறம் மங்காதா! மணிதான். ஆனால் குப்பையுள் புகந்துவிட்டால், அதனொளி வெளிவருமா? வீரன்தான்! ஆனால் மனதைப் பறிகொடுத்துவிட்டால், அவன் என்ன செய்வான்?

திராவிடன் தனிச்சிறப்புப் பெற்றவன்தான்! தரணி ஆண்டவன்தான்! இன்று அடிமைதான்! புராணிக நகாரீகத்தினால்தான், இந்நிலை பெற்றான். அதனின்றும் விடுபட்டால்தான் சுகப்படுவான், முன்னாள் நிலைபெறுவான்.

ஏழுங்கள் திராவிடரே, வைதிகத்தை விட்டோம், விடுதலை பெற்றோம் எனக் கூறுங்கள். விடுபட்டோம் சுகப்பட்டோம் என்று சொல்லுங்கள் என்று கூறிவருகிறோம்.

இந்த முயற்சயை முறியடிக்கக் குரு முயன்று குப்புற விழுந்தார். இப்போது சீடர் சிலம்பம் எடுக்கிறார்!

(திராவிடநாடு - 9.5.54)