அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சீறும் சில்லரைகள்

பரதா! கட்டு மூட்டையை! புறப்படு போவோம்.

மூட்டை கட்டுவதா? நானா? ஏனப்பா? வெள்ளைக் காரரைத்தானே, காந்தியார் மூட்டைக் கட்டிக்கொண்டு சீமைக்குப் போகச் சொல்கிறார். நான் வெள்ளைக்காரனுமல்ல, அவர்களுக்கு வேண்டியவனுமல்லவே. நான் ஏன் புறப்படவேண்டும்?

புறப்படாவிட்டால், ஆபத்து. ஆமாம், நாமாகப் போகாவிட்டால், நம்மை வெளியே துரத்திவிடுவார்கள்

யார்? என்ன ஆபத்து? விமாத் தாக்குதலா?

இல்லை நண்பா! காத்தியாரின் வெடிகுண்டுக்கோ, பகைவரின் விமானத் தாக்குதலுக்கோ பயந்தல்ல. அகில இந்திய இந்து மகாசபைத் தலைவர்களுள் ஒருவர் மூஞ்சேயும், வாழ்ந்துகெட்ட வைத்தியர் வரதராஜுலுவும் வரிந்துகட்டுகிறார்கள் கச்சையை, வாள் எடுப்போம் என்றுரைக்கிறார்கள். நம்மை வாட்டுவராம், விரட்டுவராம். வந்ததே ஆபத்து. எனவே இன்றே கிளம்பு. எங்காகிலும் செல்வோம்

வெத்துவேட்டுக்கு இத்தனை பயமா உனக்கு? முதியோர் மூஞ்சேயும் வளையும் வரதரும் வாய்ப்பாணம் பூட்டினால், வாட்டமேன் நமக்கு? என்ன வந்துவிட்டது அவர்களுக்கு? யாது கூறினீர், கூறு குளறாது!

இந்நாட்டிலே யார் தம்மை இந்து இனமல்லவென்று கூறிக்கொள்கிறார்களோ, அவர்களுக்கு இந்த நாட்டிலே இடங்கிடையாதாம். மற்ற அன்னியர்கள்மீது போர் தொடுத்து அவர்களை விரட்டுவதைப்போல், இந்து அல்லாதவர்கள் அத்தனை பேரையும் விரட்டப் போகிறார்களாம். மூஞ்சேயுன் முஸ்தீப்பு, கோவைக் கூடாரத்தில் வல்லமைமிக்க வரதரின் மேற்பார்வையிலே ஏற்பாடாகிவிட்டது. அறிக, அறிக!!

வீரன் விளம்பிய இவ்வுரை கேட்ட நான், விஷயமென்ன வென்று விசாரித்தேன். கோவையிற் கூடிய இந்துமகா சபை மாநாட்டிலே, முஸ்லீம்களைக் கண்டித்துப் பேசிய முப்புரி நூலோரின் அற்புதக் காப்பாளர் மூஞ்சே, முஸ்லீம்கள் தங்களைத் தனி இனமென்று கூறிக்கொள்கின்றனர். இந்து இனமல்லவென்று யார் கூறுகின்றனரோ, அவர்களை இந்நாட்டிலிருக்கவிடோம் என்று கூறினாராம். திருவாரூரில் கூடிய நீதிக்கட்சி மாநாட்டிலே ஏகமனதாக நிறைவேறிய துர்மானம். தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதாகும். எனவே தோழரகளே, நம்மை, இந்து இனமல்ல என்பதற்காக, இந்து மகாசபைக்காரர்கள் நாட்டைவிட்டு விரட்டப்போகிறார்களாம். நகைக்காதுர். நாடகங்களிலே பலவகை உண்டன்றோ, அதிலே இதுவோர் வகை! சல்லடம் கட்டட்டும, சமருக்கு நிற்கட்டும், நிற்குமுன்னம், அழியா ஆண்மையாளர்; அறப்போர்க்கஞ்சா நெஞ்சினர், ஆரிய வஞ்சனைக்கன்றி பறிதொன்றுக்கம் தலைசாய்த்தறியாத நன்மையினர், தமிழர், என்பதனைத் தெரிந்துகொண்டு, பின்னர் படை திரட்டி, தோள் தட்டி, வரட்டும், பார்ப்போம்! வம்புக்கு நாம் முந்தோம், வம்பரைக் கண்டால் வழி விட்டு வாடோம். சமர் வேண்டாம், சமர்வரின் சளைக்கவும் மாட்டோம்! நெடுநாட்களாயினவே போர்கண்டு என்று இளைக்குமாம், தமிழரின் தோள்! புலிக் குலத்திலே பூனை தோன்றியிராதன்றோ! நரிக்கூட்டம் நடமாடித் திரியும் நிலையும் மாறித்தானே தீர வேண்டும்! அதற்கே போலும் ஆரியத்தின் கங்காணிகள் ஆர்ப்பரித்தனர் கோவையிலே!

தமிழரே! கேண்மின்! ஒண்ட வந்த விடாரி ஊர்ப் பிடாரியை ஓட்டிற்றாம்! சேலை துவைக்க வந்த சேடி, மீட்யைக் காமாட் என்றுரைத்தாளாம்! அஃதேபோல், வயிரார உண்டுவாழ, வளமிக்க நாட்டிலே, வறியராய் நுழைந்த, வடக்கயறு அணிந்த வஞ்சனைக்காரர், வாழ்ந்து, இன்று வாழ்த்துவதைவிட்டு, நாட்டுக்குரிய நம்மவரை, நாக்கிலே நரம்பின்றி, ஏசிப்பேசியும், எதிர்த்தும் இடித்தும், ஏளனங்கூறியும் வருகின்றனர்! எற்றுக் உமது பண்டைப் பெருமை! ஏற்குமோ தமிழகம், மறக்குமோ மறத்தினை! அணைக்குமோ ஆரியத்தை! பணியுமோ பார்ப்பனீயத்தின் முன்பு!

இந்து மகா சபைக்காரர், தமிழகத்திலே இது காலை பாகிஸ்தான் திராவிடஸ்தானுக்கு ஆச்சாரியார் மூலமாக இருந்துவந்த எதிர்ப்பு இருந்த இடத்தில் புல் முளைத்துப் போகக் கண்டு, பயங்கொண்டு, கங்கை நீரைமொண்டு, தண்டுகள்மீது தெளித்து, செண்டு சூடிடும் சேயிழையார்போல் ஓர் சமயம் சூளுரைத்தும், சுருதியில் சேராத சங்கீதம்போல், அறிவுக்குப் பொருந்தாத உரை புகன்று, போரிடவுந் துணிகிறோம் என்று கூறிடக் காண்கிறோமே! என்னே காலத்தின் கோலம்!

இந்து இனமல்லாதவர்கள் இங்கிருக்க லாகாதாம்! இருக்க இனி விடமாட்டார்களாம்! என்னே இவர்தம் மடமை!! யாருடைய நாட்டிலே, யாரைப்பற்றி யார் உரைப்பது இம்மொழி! திராவிட நாட்டிலே, திராவிடரை நோக்கி, ஆரிய வர்த்தகத்தில் அலைந்து திரியும், அங்கம் ஒடுங்கிய சனாதனச் சங்கச் சுவடிக்காரர் சூள் உரைக்கின்றனர்!

நாம் இந்துக்களல்ல, எதத் திருடினோம், அந்தப் பட்டத்தைச் சுமக்க! யாரிடம் தோற்றோம், அதனை ஏற்க! நாம் திராவிடர், திராவிட நாடு! இது, இங்கு இநதுவோர் சிறு கூட்டம். அது சனாதனச் சேரியிலே வாழுகிறது. நம்மீது இந்து ஆதிக்கம், இந்து மதம் சுமத்தப்பட்டன. நமது மக்கள் ஆரிய வஞ்சனையை அறிந்துகொள்ளாமல், அவர்கள் கூறினதை நம்பி நலிந்தனர், இதுபோது நம்மவர் துயிலுகின்றார்களில்லை! ஆச்சாரியார் இதனை உணர்ந்துகொண்டார், ஆகவே மாறிவிட்டேன் என்று மொழிகிறார்.

சக்தி சாய்ந்தாலும, யுக்தி சாயலாகாது! பல்லின் கூர்மையும், நகத்தின் கூர்மையும் மழுங்கி, பாயும் சக்தியற்று, தேயும் உடல் பெற்ற பின்னர் புலி, தன்னை கண்டதும் பிறருக்குக் கிலி இருக்குமே என்ற ஒரே எண்ணத்தை நம்பினால், வேலுக்கோ, வாளுக்கோ, தடிக்கோ இறையாகிவிடுமன்றோ! சக்திக்கேற்றபடி தானும் பக்திகூட! யுக்தியற்ற பேர்வழிகள் இதனை உணராது ஊராரின் சீ கேட்டு, உறுமிக் கெடுவர். ஆச்சாரியார் இந்த ரகத்தைச் சேர்ந்தவரல்ல! புலிபோல் பாய்ந்தார் முன்பு! இன்றோ வலி குன்றியதாலோ, வளங்கெட்டதை உணர்ந்ததாலோ, வருவது வந்தே தீரும் என்ற பாடங் கேட்டதாலோ சலசலப்பைப் காட்டாது. சாந்தோபதேசியாய், சமரச ஞானியாய், சத்வகுணபோதனாய் காட்சியாக இருந்துவிட்டு, கணத்திலே மறையும் வனவில் போன்றதோ! சாணக்கியமோ! சதுரங்கமோ! யாதோ அறியோம்! எதுவாயினும், இன்று அவர், கனல் கக்கம் வழியிலே, கனிவுமொயி கண்டதைச் செப்பும் வாயினால் உண்மை உரைகளை மெள்ள மெள்ளப் பேசிக்கொண்டு உற்றார் உறவினரும், சீடரும் தோழரும எதிர்ப்பினும், பிடேன் என்றுரைக்கிறார்! வல்லரசர், வலிமைமிக்க தளபதியை நம்பி ஓர் வட்டாரத்தை ஒப்படைக்க, குழப்பமிக்க நேரத்தில் கொற்றவனின் கோல் தடுமாறக் காண்கையில், தளபதி, தன் ஆட்சியிலே விடப்பட்ட தரணிக்குத் தானே அதிபனாவது, சரிதத்திலே பலப்பல தேயங்களில் நடந்தன. காந்தியார், தமது தளபதியாக ஆச்சாரியாரைக் கொண்டார், இன்று தளபதியின் தனி அரசுரிமை கண்டு, தடுமாறகிறார், திளறுகிறார், மோசம் போனோமே என்று முகத்திலறைந்து கொள்கிறார். அவருடைய வார்சு காசியில் காலும் மாஸ்கோவில் மனமும் கொண்ட ஏட்டுச்சுரை வீரர், எதிர்ப்பில்லா நேரத்தில் எக்காளமிடுத்தீரர், நேரு, தனது பாத்யதையிலே, ஆச்சாரியார் குறுக்கிடுவதுகண்டு, கலங்கிக் கொதித்து, காய்ச்சல் கொண்டுக்குளநி, கட்கமெடுப்பேன் கவண் விடுவேன், கரிபரி திரட்டுவேன் கடல் கலக்குவேன் என்று கர்ஜனை செய்கிறார். இந்நிலையிலே, சில்லரைகள் சிந்து, சீறி, சில்லுண்டிக் குணத்தைக் காட்டி, சிந்து பாடிடும் சேட்டை கண்டு. சிரிக்கச் சிரிக்க, வயிறு நோகுதேயன்றி, நகைப்பு அடங்கவில்லை. அம்மியுங் குழவியும் ஆகாயத்திலே பறக்கும்போது . . . என்பார்களே, பழமொழி! அந்தக் கவனம் எனக்கு வருகிறது. சக்தியற்ற இந்தச் சில்லரைகள் சற்று யுக்தியாகக்கூடவா நடந்து கொள்ளக் கூடாது; அவர் போனாலென்ன? நாங்களில்லையா? சும்மா இருப்போமா, சோர்வு சொள்வோமா? என்று சொல்லித் திரிகின்றளர்.

ஆச்சாரியார் தாட்சண்யத்துக்குக் கட்டுப்பட்டு கைகளையும் வலயையும் கட்டிவிட்டாளே என்று கூறி, கொண்ட கொள்கையை, வகுத்துக் கொண்ட திட்டத்தை விட்டுக்கொடுப்பவல்ல என்பது எனக்குத் தெரியும். தோழமை, நேர்மை, நீதி முதலிய எத்தனையோ பந்தங்கள் குறுக்கிட்டும, ஆச்சாரியார், தாம் தேவை என்ற எதை விரும்புகிறாரோ, அதைப் பெற முயற்சி செய்வதில் மட்டும் தயங்குவதில்லை! நான் ஆள்வதா, இந்த இராமசாமி ஆள்வதா என்பதைத் தான் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று இந்தி எதிர்ப்புக் காலத்திலே, ஏறுபோல் கூறியவர், பின்னர், மாறுவேடம் அணியாமலே மனதிலிருப்பதைப் பற்றி பிற என்ன கருதுவர் என்பதைப் பற்றியும் கவலைப்படாமல் பெரியாரின் இல்லம் ஏகினால்! இது பெருங்குணமாகவுங் கொள்ளப்படுகிறது!! பெருமையைக் காட்டுவதோ அன்றி சமயத்திற்கேற்ற சாகசம் தேவை என்ற ஆரியத்தைக் காட்டுகிறதோ என்பதை அராய்வது, இன்று, ஆச்சாரியாரையும் நம் கட்சியையும் சேர்த்துவைக்கும் நிலையைக் கெடுத்துவிடும் என்றும் அஞ்சும் நெஞ்சகர் உள்ளனர். நம்மிடையில், எனக்கென்ன ஆச்சாரியார் முது வீண் கோபமா! அவர் ஆதரவு தேவை என்று கருதும் உள்ளம் எனக்கு மட்டும் வராமற்போகுமா! நான் மட்டுமா! நீங்களுந்தான். நெஞ்சிலே கைவைத்துக் கூறுங்கள் உங்கள் மனதிலே, அந்நாள் நினைவுகள் உலவவில்லையா! அந்தக் காலம் மலை ஏறிவிட்டது! உண்மை ஆனால், மனதைவிட்டு அந்த எண்ணங்கள் அகலா!! அகற்ற முயற்சிகள் செய்வது எளிது. வெற்றி பெறுவது துல்லபம்! ஆண்டவனை நம்புங்கள் ஆனால் ஒட்டகத்தையுங் கட்டி வையுங்கள் என்ற இஸ்லாமிய மொழிபோல், நானுங் கூறுகிறேன். ஆச்சாரியாரின் பேச்சைக் கேட்டுப் பூரியுங்கள், நான் குறுக்கிடவில்லை, ஆனால், சற்று உஷாராகவும் இருங்கள் அவர் விஷயத்திலே என்று. இது நமது இனத்தின் எதிர்காலத்தின் பொறுப்பை உணர்ந்ததால் எழும் எண்ணம், ஏளனமல்ல! நமது கட்சிக்கும் ஆச்சாரியாருக்கும் இடையே மலைபோல் நிற்கும் வலிவுடையேன் அல்லேன், ஆனால் நான் குறுக்கிடாமலே, பெகு வெகு விரைவிலே அவரது பாதை வேறு, நமது பாதை வேறு என்பது விளங்கி விடத்தான் போகிறது என்ற துர்மான எண்ணங்கொண்டுள்ளேன்; என் எண்ணத்திலே தவறு இருப்பின் காலம் தீர்ப்பளிக்கட்டும் தேசத்தின் இடையே நான் தடையாக நில்லேன். ஆனால் தேசம் நீடித்து நிற்குமென்று சொல்லவல்லேன் அல்லேன் கூடி வாழ்வதைச் சொல்லேன். ஆனால் நீரும் பாலும் கலந்தும் பிரியும் தன்மையது என்பதை எங்ஙனம் மறப்பேன்!

ஆச்சாரியார், விஷயமாக என் போன்றார்க்கு தொண்டர் கட்கு - இத்தகைய யோசனைகளும், சந்தேகங்களும், சஞ்சலமும் இருக்க, காங்கிரசில் காத்தீய ஏடுகளும், நடமாடும் தம்பட்டங்களும், நமது கட்சியையும், தலைவரையும் தாக்க ஆச்சாரியாரின் புதுக் கருத்தையும் ஓர் சாக்காக்கிக் கொண்டு, சாக்குருவி வேதாந்தம் பேசித் திரிகின்றது!

உன் குரு நமது சீடன்! என்றானாம் வீரனொருவன். அதுபோல், இந்தச் சில்லரைகன் சிந்தனையில் விதை விதைத்து, கருத்திலே மூக்கணாங்கயிறிட்டு, இழுத்துச் சென்ற ஆச்சாரியாரே, இன்று, எதிர்த்து இளைத்து, கர்ஜித்துக கனைத்து, காவடி கவிழ்ந்ததால் சலித்து, யுக்தியே இனி நம் சக்தி என்றுரைத்துக்கொண்டு, பெள்ளைக்கொடி ஏந்தி வீதிவலம் வருகிறாரே, அவர் சொல்லிக் கொடுத்ததைச் சொல்லிக் கொண்டு, அவர் கண்சிமிட்டுடியதும் கடுக அவர்பின் ஓடி, அவர் திருவடி தரிசம் திவ்யமான தேவப்பிரசாதம் என்று திருப்பல்லாண்டு பாடிக் கொண்டு திரிந்த கூட்டம், இன்னமும தில்லுமுல்லு பேசிக்கொண்டு, திரிவதைக் கண்டு, மண்டுகளே! பண்டு மொழிந்த பார்ப்பனர் கண்டுகொண்டாரே உண்மையை, உங்களின் மரமண்டைகளில் மட்டும் ஏனோ இன்னமும் உண்மை புகவில்லை என்று கேட்டிட என் மனம் துடிக்கிறது. அங்ஙனம் கேட்டால், அவர் மனம் புண்படுமே என்ற எண்ணம் மேலிட்டு, எனது ஆசையைத் தடுக்கிறது! இந்த சீறும் சில்லரைகள் சேட்டையை மூட்டைகட்டி வைத்துவிட்டு, நாட்டு நிலை உணர்ந்து, பாட்டுமொழித் தமிழரின் கேட்டுக்கோர் படையாக இருக்கும் பாதகராய், கருத்திழந்த காதகராய் இராது. கண்பெற்று, கருத்தும் பெற்று, காலத்தின் போக்கறிந்து நடக்க வேண்டுகிறேன். அதைப்போலவே தமிழரை இளித்த வாயராக எண்ணிக்கொண்டு, இந்து இனத்தின் வல்லமை பற்றிப் பேசிடும் இங்கிதமறியாதவர்களையும், இனி உமது எண்ணம் ஈடேறாது என்று கூறி எச்சரிக்கிறேன்.

எவ்வளவு துணிச்சல் இந்த தர்ப்பாசூரர்களுக்கு! இந்துக்கள் நாமல்ல, நம்மை ஓட்டிவிடுவராம்! நமது வீட்டைவிட்டு!! பேஷ்! பேஷ்!! திராவிட நாட்டிலே, ஆரியருக்கு ஏன் ஆதிக்கம் என்று மட்டுமே இன்றளவு வரை கேட்கும் திராவிடன், இனி, அவரவர் நாட்டுக்கு அவரவர் போதலே முறை என்று இத்திரவு பிறப்பிக்க முன் வந்தால் என்ன குற்றம் இருக்க முடியும் என்ற கேட்கிறேன்.

இந்துஸ்தானம் அல்லது ஆரிய வர்த்தம். இமயத்துக்கும் விந்தியத்துக்கும் இடையே உள்ள இடம். இருக்கு, யஜுர், சாமம், அதர்வனம் பயின்ற இருடிகளும், இராமர் முதலாய ஆரிய சிரேஷ்டர்களும், சாணக்கியன் போன்ற அரசியல் சூதுக்காரரும, காளிதாசன் போன்ற ஆரியக் கவியும் இருந்த இடமே அது. விந்தியத்துக்கும் குமரிக்குமிடையே உளது திராவிட நாடு. இங்குளோர் திராவிடர், இந்துவல்ல! இங்கு வந்து சிந்து நதிமிசை சந்தம் பாடி வந்த கூட்டம் கொக்கரிக்கக் காண்கிறோம், ஈதென்ன கொடுமை!

பர்மியர் இந்தியரைப் போவென்றுரைக்கவும், இலங்கையரும் அதுபோலவே கூறவும், வெள்ளையரைக் காந்தியாரும் அதுபோல் கூறவும் கேட்ட தமிழர், ஆரியரை, வட நாட்டாரை, தமிழகத்திலே இனியும் என்ன வேலை என்ற கேட்கும் காலம் பிறக்கவே, மூஞ்சே, இங்ஙனம் நம்மவருக்கு ரோஷம் எழும் ரணகளப் பேச்சுப் பேசினர் போலும், டாக்டர் வரதராஜுலு போன்றவர்கள் தம்மை இந்துவென்று கூறிக்கொள்வர். அது அவர்களின் தடித்த தோலைக் காட்டும் தன்மையது! இந்து என்ற சொல், ஓர் ஆபாச அவியலைக் குறிப்பதாகும். கிறிஸ்தவர் எனில், ஒரே ஆண்டவன், ஏசு, ஓர் வழிகாட்டி, பைபிள் என ஓர் வேதம், உண்டு என வரையறுத்துக் கூறலாம். முஸ்லிம் எனில், நபிகள் நாயகத்தை வழிகாட்டியாகவும், கோரானை வேதமாகவுங் கொண்டு, உருவமற்ற ஏக தெய்வத்தை வழிபடுவோர் என்று கூறலாம். இந்து, என்றாலோ! யாரைக் குறிப்பது, எவ்விதம் விளக்குவது! இனமென்பதா? மதமென்பதா? இயல்பு என்பதா? உரைமின், சபையீரே! ஓய்! வைத்திய வரதராஜுலுலே, சொல்லும் நீர் யாரை இந்து என்கிறீர், எந்த ஆதாரத்தைக் கொண்டு? இந்துமதம் என்றால் எது? அதற்குக் கொண்கை கோட்பாடு என்ன? என்று கேட்டால், அவர் பாவம், எதைக் கூற முடியும்!

அகம் பிரம்மம் என்று கூறும் வேதாந்தியும், ஆண்டவன் அரூபி என்றுரைக்கும் தத்துவவாதியும், பசுபதிபாசம் பேசும் சைவசித்தாந்தியும், பக்திப் பிரபாவம் பேசிடும வைணவரும், ராமநாமமே கற்கண்டு என்று பாடி ஆடும் பஜனைக்காரரும், காளி, மகமாயி என்று உடுக்கை அடித்து, வேப்பிலை வீசும் காத்தவராயனின் திருக்கூத்தரும், திருக்கைலாய பரம்பதையிலுதித்த மடாதிபதிகளும், சங்கரர்ர வார்சுகளான சங்கராச்சாரிகளும், ஜீயர்களும், ஆழ்வார்களின் வாழையடி வாழைகளும், பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திர குலத்தவரும், இன்னமும, ஏதேதோ கூறிடும் பேர்வழிகளும் இந்துக்கள்; திட்டம் எல்லலை வரையறை கட்டு கிடையாது. தத்துவங்கள் கிடக்கட்டும இந்து மார்க்கத்தின்படி பேசப்படும கடவுளின் கதைகள் நம்மை இந்து என்று கூறிக்கொள்வதிலே பெருமை தரக்கூடியதாக இருக்கிறதா, வெட்கித் தலை குனிந்து மேயோவை எண்ணி மெய்சிரிர்த்து வாழும் நிலை தருகிறதா என்பதையும் இந்துமகா சபைக்காரர் எண்ணிப் பார்க்க வேண்டாமா! ஒரே ஒரு சாம்பிள்! பலகூறு கூசுகிறேன், குமட்டல் கொள்வீர் என்று அஞ்சுகேறேன். திருப்பாற்கடலிலே ஆதிஷேசயனனாக உள்ளாராமே மாவிஷ்1, அவர் விஷயம் அது. ஆத்திரப்படாமல் கேளுங்கள்!

விருந்தை என்றோர் அழகிய அரக்கப்பெண், சலந்திரன் என்பவனை மணம் செய்து கொண்டு வாழ்ந்தாள். சலந்திரன் இறந்தான், உடனே விஷ்ணுவிக்கு விருந்தையின் மீது விருப்பமுண்டாயிற்று. என்ன செய்தார் தெரியுமா? தூகணங்களைக் கூப்பிட்டு, புலி உருக்கொள்ளச் செய்து அழகி ருந்தையை மிரட்டச் செய்தார். அதே நேரத்திலே அவரே ஓர் சந்நியாசி வேடம் பூண்டு சென்றாராம். பயந்த பாவை, சாதுவிடம் தஞ்சமடைந்தான். விஷ்ணுவுக்குச் சந்தோஷம் சொல்லுந் தரத்ததா! சலந்திரனின் புணத்தைத் தருவித்து அதிலே புகுந்து கொண்டாராம், சர்ப்ப சயனர். சரசமும் சல்லாபமும் ஜாம்ஜாமென நடந்தேறின. பிறகோர் நாள் விருந்தை விஷ்ணுவின் சூதைத் தெரிந்துகொண்டு சபித்தானாம்! இந்து மகாவபை அன்பர்காள். இத்தகைய மதத்தை நம்பும் மடத்தனம் எமக்கு ஏன் என்று தமிழர் கேட்கின்றனர்.

கனியிருக்கக் காயும், கரும்பிருக்க இரும்பும், விளக்கிருக்க மின்மிளியும், வேண்டுவரோ, விவேகிகள்? தமிழ் இருக்க, தமிழர் நெறியிருக்க, தருக்குமிக்க ஆரியமேன் எமக்கு! கிளியும் குயிலும், மாடப்புறாவும், மைனாவும் ஒரே சோலையிலே உல்லாசமாக வாழும், ஆனால் வல்லூறு வட்டமிடக் கண்டால், அதுவும் நம்மைப் போல் ஓர் பட்சிதானே என்று அவை கருதா, வட்டமிடும் வல்லூறு, நம்மை வதைக்கும் என்பதறிந்து! அதுபோலவே, திராவிடப் பெருங்குடி மக்கள் தம்மில் சிற்சில வேறுபாடு கொண்டாராக இருப்பினும், ஒரே வட்டாரத்திலே வாழ இசைவர். ஆனால் தமது சுயமரியாதையைச் சூறையாடும் ஆரியருடன் தோழமை பூண்டு வாழ இசையார். ஆயிரம் மூஞ்சேக்கள் ஆர்பரிப்பினும் நடவாது!

அறங்கிடந்த நெஞ்சும், அருளொழுக கண்ணும், மறங்கிடந்த திண்டோன் வலியும் கொண்ட தமிழர, ஆரியரின் ஆரப்பரிப்புக்கு அஞ்சார்! அதோ தெரிகிறதே சேரி! அங்குள்ள மக்களைப் பார்! அவர்களுடன் இருப்பது வறுமை, வாட்டம், பஞ்சம், பிணி, சே, செந்தேள், சிறகொடிந்த பறவைகள் போல், கண்ணிழந்த கன்றுகள்போல், குலர் இழந்த குழந்தைகள் போல் உள்ள அந்த மக்கள் - உன் அதிகாரப்படி, இந்து! ஆனால், இதோ இருக்கும் குளத்திலே அவர்கள் நீர் மொள்ளக்கூடாது. தெரு வழி நடக்காதே, தேவாலயம் குபகாதே, பஞ்சமனைத் தொடுவது மகாபாவம். ரவுரவாதி நரகமே சம்பவிக்கும், என்று ஈவு இரக்கம், நீதி நாணயமின்றி பேசிடும் இந்து தர்மம்! அதன்படி ஆட்சி நடப்பின், மக்கள் மாக்களாவதன்றி வேறென்ன நடக்கும்! இந்து என்று தமிழர் ஒப்பினால், பார்ப்பனர் நீங்கலாக, பிறர் தாழ்ந்தோர், தமிழர் சூத்திரர்! இது தகுமா, முறையா, அறிவா!! நரைத் தலை, ஆனால் நகைத்த முகம், நெற்றியிலே திலம், தசையிலே சுருக்கம், மூதாட்டி, தன் கணவனின் கால் பிடித்துக்கொண்டே பேச, மூதாட்டியின் மகள் மூலையிலே விம்முகிறாள் விதவையாகி, மஞ்சளிழந்து மகிழ்விழந்து, மறுமணம் புரியலாமோ என்றால் மாபாதகம், சாஸ்திர விரோதம் என்று பாமரரைப் பாழாக்குகிறாயே நீயும் இந்து, உன் பேச்சைக் கேட்டு உன்னைத் தொழுபவனும் இந்து! ஈளை கட்டி, ஈ எறும்பு மொய்ப்பதுவும் தெரியாது கிடந்து, உயிருடன் கடைசிப் போர் நடத்தும் நோயாளியைக் கண்டு, விம்மி, கண்கசக்கி, பெண்டு பிள்ளையும் உற்றார் உறவின் முறையோரும் ஏங்கியிருக்கும் வேளையிலே, உடலைவிட்டு ஜீவன் பிரியாமுன்னம், ஓர் நல்ல பசுவைத் தானமாகத் தா, ஆதமா சாந்தியடையும் என்று கூறி, கட்கத்திலே பஞ்சாங்கக் கட்டுடன் தெருத் திண்ணையிலே உட்காரும் புரோகிதன், இந்து! மலைச்சாரலருகேயுள்ள மலர்ச்சோலை, அதன் மருங்கே ஓர் தாமரைத் தடாகம், மலர்கள் மரகதமணி போன்றுள்ளன. மணத்தைப் பரப்பி வருக! வஐக! என அழைக்கின்றன! வந்தோம், கண்டோம் என்று கூறிக் களிப்பன போல் குயில் கூவி, மயில் ஆடி, கிளி பொஞ்சிடுகிறது. அருவியின் பக்கமேளம்! மேலே விரைந்து செல்லும் மேகமும் மகிழ்ந்து, முத்து முத்தாக நீரைத் தெளிக்கிறது. பரிசாக, இத்தகைய தடாகத்திலே மூழ்குவதை விடுத்து, முட்புதருக்கருகே, கற்பாறைகள் நிலைந்த வழியிலே, காததூலம் கெட்டவாடை வீசும் சேற்றக் குபம்பாக இருக்கிறது ஓர் குட்டை. அதை நாடி, ஆடி அசைந்து வருகிறது எருமை. சேறு அதற்குச் சந்தனம்! இந்தச் சுபாவம், மக்களில் உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பததுதான், இயற்கை அழகையும், உழைப்பின் உயர்வையும், சமத்துவத்தையும் சாகா இளமை உணர்ச்சியையும், அறத்தையும் மறத்தையும், அரிவையரின் அகத்தையும் ஆண்களின் போர்த் திறத்தையும் எடுத்துக் கூறும் தமிழ் இலக்கியங்களை விடுத்து, எருது ஏறுவோன், பருந்தேறித் திரிவோன், நாக்கிலே நங்கையை வைத்தோன், தபோதனர்களின பத்தினிகளை இச்சித்தோன் என்பனவான உட்கதைகளும், பாலும் பழமும் பாழக்கு, பல்லக்குத் தூக்கு, பார்ப்பனரின் பாதந்தாங்கு என்ற ஆழமிக்க கருத்துரைகளும், பெதமும பிளவும் போற்றுதற்குரியன என்ற போதனையும், வான் சுரரை விட்டே பூசுரர் வந்தார் என்றுரைக்கும், சாதனையும் சாற்றும் ஆரியக் கற்பனைகளைக் கற்றும், கேட்டும், நம்பி நம்மர் நலிவது இது இனி நடவாது.

வரட்டுத் தவளை கத்துவது வான்மதியின் போக்கை மாற்றாது! இடிந்த மண்டபத்திலே இருட்டு நேரத்திலே முரட்டுக் கள்வரே புகுவர்! பாழடைந்த மாளிகையில் பறக்குமாம் வவ்வால்! சரிந்த சுவற்றில் வளை அமைத்து வாழுமாம் பாம்பு! குப்பை மேடே தேடும் குக்கல்! குழியிலே நெளியும் தேள்! அதுபோலவே, ஆபாசக் கருத்துக்களில், அறிவுக்குப் புறம்பான புராணங்களில், இழுக்கைத் தரும் இதிகாசங்களில், புல்லரும், சுயநலமிகளும் புகுந்துகொண்டிருப்பர். இந்து என்பது அவர்கள் இட்டுக் கொண்ட பெயர். அது நமக்குப் பொருந்துமா! பழமுதிர்ச் சோலையும், பால்வண்ண நீரோடையும், பலவின் கனியும் மணமும் மாமணமும் வீசிடும் சாலையும் இருக்க, வேம்பும், எட்டியும் விண்முட்ட வளர்ந்திடும் பாழூர்ப்பாதை புகுவோர் பேதையரன்றோ!

அமைவுள்ள திராவிட நாட்டில் சற்றும்
ஆண்மையில்லாதவர் வந்து
நமர் பசிக்கொள்ள நம் சோற்றை உண்ண
நாக்கைக் குழைப்ப துணர்ந்தோம்
என்றார் கவி.

உயிர்க்கவி, தமிழரின் தூயமணியின் துந்துபி அது! (தூயமணி - சுப்பு ரத்தினம் என்ற பாரதிதாசன்) தமிழரின் உள்ளத்திலே மூண்டு விட்ட விடுதலைத் தீ, ஆரியத்தைக் கருக்கிவிடும்! சில்லரைகள் சினமும, இந்து சபையின் சீற்றமும் இதைத் தடுக்கா.

(திராவிடநாடு - 28.06.1942)