அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சேக்கிழார் ஒரு சீர்திருத்தக்காரரா?

சீர்திருத்தம் என்பது, ஒன்றிலுள்ள குறைகளைத் திருத்தியமைத்துச் செம்மைப்படுத்துவது என்ற பொருளில் துவங்கிப், பலதுறைகளிற் சென்று மக்களின் வாழ்க்கை முறைக்கு வேண்டப் படும் தேவைகளைப் புதிதாகவும் உண்டாக்குதல் இன்றியமையாத தென்பதில் வந்து முடியும். அதாவது, அறிவுக்கும் இயற்கைக்கும் பொருந்தச் செய்யப்படும் காரியங்கள் எவையாயினும், அவை மக்களின் வாழ்க்கை முறைக்குத் தேவைப்படும் போது, அவற்றைச் செய்து முடித்தலையே சீர்திருத்தம் என்று சொல்லவேண்டும்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு கொள்கையை ஒரு நாட்டு மக்கள் பல காலமாகக் கையாண்டு வருகின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட கொள்கை யும்கூட, ஒரு காலத்தில் மாற்றியமைக்கப்பட வேண்டியதாக ஏற்படுமானால், அதாவது, கால இயல்பும் மக்களின் வாழ்க்கை முறையும் அக்கொள்கையை ஒப்புக்கொள்ளாத நிலையில், அதனை மாற்றியமைப்பதே சீர்திருத்தமாகும்.

ஒரு கொள்கையை மாற்றியமைப்பது என்றவுடனே, சிலர், “நீர் அந்தக் கொள்கையை ஒப்புக்கொள்ளுகிறீர், ஆனால், அதிலுள்ள சிலவற்றை இடம்மாறி அமைத்தால் போதுமென்கிறீர், அவ்வளவுதானே” என்பதாகக்கூறி எம்மை மடக்க முயல்வர். அனால், அது, அக்கொள்கையை ஆதரிப்பவர்களின் பதட்டவுரையாகும். எப்படியென்றால், மக்களாய்ப் பிறந்தோர்க்கு ஒரு கொள்கை இன்றியமையாது இருத்தல் வேண்டும். கொள்கையில்லாத மக்கள், வெறும் என்புதோல் போர்த்த உடம்பினராவரேயன்றி ஆறறிவு படைத்த மக்களாக ஒருபோதும் கருதப்பட மாட்டார்கள். ஆகையால், மக்கட்குக் கொள்கை இன்றியமையாததென்பது இதனால் நிலைபெறுதல் காண்க. காணலே, ஒரு காலத்தில் மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட அல்லது ஒப்புக்கொள்ளும்படி செய்யப்பட்ட ஒரு கொள்கையானது, இன்னொரு காலத்தில், அதே மக்கட்கு அதே கொள்கை, கால நிலையையும், அறிவு வளர்ச்சியையும் ஒட்டி வேண்டப்படாது போகுமானால், அந்தக் கொள்கையைத் தள்ளிவிட்டுக், கொள்கையையே குறிக்கோளாக வைத்து வாழும் கட்டாயத்தை இயற்கையாகவே கொண்டுள்ள மக்கள், தங்கள் வாழ்க்கைக்குப் பொருத்தமான இன்னொரு கொள்கையை அந்த இடத்தில் அமைத்துக்கொள்வதே, மாற்றியமைத்தல் என்பதன் பொருளாகும். இதனை உணர முடியாதார், தந்நலக் கருத்திற்கேற்பப் பொருள் கற்பித்து மயங்குவதுமன்றிப், பிறரையும் அம்மயக்கில் ஆழச் செய்வர்.

இந்த மனப்பான்மை சிறப்பாக மதத்துறையில் பற்றுவைத்து மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்களிடமே இருப்பதைப் பார்க்கக் காணலாம். மதமும் அதுபற்றிய கொள்கைகளும் தோன்றுவதற்குப் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன்னரே தோன்றி வாழ்ந்துவந்த மக்கட்கு, இடையே மதக்கொள்கையைப் புகுத்தியவர்களின் நோக்கம் இதுதான் என்பதை இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

மதக்கொள்கையை மக்களிடையே பரப்பிய காலந்தொட்டு இன்றுவரை, அதனால் மக்கள் அடைந்த பயன் என்ன? மக்களின் நன்மைக்காகவென்று சொல்லி உண்டாக்கப்பட்ட மதம் மக்களின் நிலையில் ஏதாவது சீர்திருத்தத்தை உண்டாக்கிற்றா? நோய், வறுமை, பசி ஆகியவற்றைப் போக்கிற்றா? மற்றும் வாழ்க்கையில் யாதாயினும் முன்னேற்றம் உண்டாகும்படி செய்ததா? என்று பார்த்தால், பண்டைய பெருமைகளைப்பேசி, இன்றைய குறைகளை எடுத்துக்கூறி, ஏங்கும் நிலையையே மதம் உண்டாக்கிற்று என்று சொல்லவேண்டி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் எதைப்பற்றிப் பேசினாலும், ‘பண்டு நம்மவர் வாழ்ந்த நிலை என்ன, இன்று நாம் இருக்கும் நிலை என்ன’ என்றழும் கூக்குரலையே கேட்கிறோம். ‘நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே’ என்று கூறிய மரபில்லாத “நாம் இன்று, ‘நெற்றியில் பிறந்தோம்’ என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டத்தார்க்கு அடிமைகளாய், அறிவிழந்தவர்களாய் இருக்கிறோமே” என்று சொல்லிச் சோர்ந்திடும் நிலையையே காண்கிறோம். இவைதானா மதம் மக்களுக்குச் செய்த நன்மைகள்? இன்னும் பல உண்டு. எண்ணத் தொலையாது! ஏட்டில் எழுத அடங்காது!

மதம் மக்களுக்கு உண்டாக்கிய இத்தகைய செயல்களையே சீர்திருத்தம் என்று அறிவை அடகுவைத்த சிலபேர் வழிகள் இன்றும் சொல்லித் திரிகின்றனர். ‘கேட்கக் கேட்க வெட்கமாயிருக்கிறதே’ என்பதைத் தவிர, இதற்கு வேறென்ன சொல்வது.

இந்த நிலையில், சீர்திருத்தக்காரர்கள் என்று தங்களை எண்ணிக்கொள்ளும் சிலர், மதாசிரியர்களையெல்லாம் சீர்திருத்தக்காரர்கள் என்று செல்லத் துவங்கிவிட்டனர். பெரியபுராணம் பாடிய “சேக்கிழார் ஒரு சீர்திருத்தக்காரர்” என்று ஒரு தோழர் அண்மையில் சென்னையில் பேசியதாகக் கேள்விப்பட்டேன், சேக்கிழார் செய்த சீர்திருத்தங்கள், எல்லாம் பெரியபுராணத்தில் பேசப்படும் நாயன்மார்களின் வரலாறுகளிலே தான் காணமுடியும். ஒவ்வொரு நாயன்மார்களின் வரலாறுகளும் சீர்திருத்தக் கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டன வென்பது அந்தத் தோழரின் கருத்துப் போலும்! சேக்கிழார் செய்த சீர்திருத்தங்களெல்லாம் பெரிய புராண ஆராய்ச்சி நூற்களிலே தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. தோழரின் தெளிவுகருதி அவற்றில் சில இங்கு சுருக்கமாகக் கூறப்படுகிறது.

1. நம்பியாண்டர் நம்பி என்னும் பார்ப்பனர் ஒரு நாயனாரின் வரலாற்றை ஒரு பாட்டில் அடக்கினார். சேக்கிழார், அதனைப் பலநூறு பாடல்களால் விவரித்து விளக்கினார். இது ஒரு சீர்திருத்தம்.

2. நம்பியாண்டார் கூறாததை எல்லாம் கற்பனை செய்து பாடி, அவையெல்லாம் உண்மையென்று கூறியதோடு, அவற்றிற் கெல்லாம் ஆதாரம் உண்டென்று பொய்யான கல்லெழுத்துக் (சாசனங்)களை உண்டாக்கினார். இது ஒரு சீர்திருத்தம்.

3. மனமிருதியாகிய ஆரியச் சுவடியிலே வகுக்கப்பட்டுள்ள சாதிப்பாகுபாடுகள் எல்லாம் உண்மையும் இன்றியமையாமையும் என்பதைச் சேக்கிழார் வலியுறுத்தி நிலைநாட்டினார். இது ஒரு சீர்திருத்தம்.

4. தமிழ் மக்கள் எல்லாரும் சூத்திரர். அதாவது பார்ப்பனரின் வைப்பாட்டி பிள்ளைகள் - விலைக்கு வாங்கப்பட்டவர்கள் என்ற ஆரியக் கூற்றினைச் சேக்கிழார் ஒப்புக்கொண்டு, பெரிய புராணத்தின் வாயிலாக அதனை வலியுறுத்தியிருக்கிறார். இது ஒரு சீர்திருத்தம்.

5. தமிழ் நாட்டிலே தமிழ் மக்களின் பொருளைக்கொண்டு கட்டப்பட்ட கோயில்களில் தமிழ் மக்கள் நுழைவது அடாது என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறார். இது ஒரு சீர்திருத்தம்.

6. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் உள்ள கடவுளரைத் தமிழ் மொழிக்குப் புறம்பான வடமொழி (சமஸ்கிருத) மந்திரங்களாலேயே வழிபாடு (பூஜை) செய்யவேண்டுமென்பதைச் சட்டம்போல் திட்டமிட்டிருக்கிறார். இது ஒரு சீர்திருத்தம்.

7. பெரியபுராணத்தில் பேசப்படும் ஒழுக்கங்கள் எல்லாம் பார்ப்பன ஒழுக்கம் ஆகையால், அவற்றைப் புறக்கணிப்பது, பார்ப்பனரின் அடிமைகளாகிய தமிழ் மக்களுக்கு அடாது என்பதை நிலைநாட்டியுள்ளார். இது ஒரு சீர்திருத்தம்.

8. கைம்பெண்கள் அதாவது விதவைகள் மறுமணம் செய்வது தவறு என்பதை எடுத்துக் காட்டிச், சுந்தரர் மணஞ்செய்துகொண்ட சங்கிலியார் என்பவளை ‘நூல்போன சங்கிலி’ என்று இழித்துப் பேசியிருக்கிறார். இது ஒரு சீர்திருத்தம்.

9. ஒருவன் தன்னுடைய மனைவியை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுப்பது போன்ற மேலான செயல் வேறொன்றுமில்லை என்று கூறியிருக்கிறார். இரு ஒரு சீர்திருத்தம்.

11. மனைவியை விலைக்கு விற்பது; மனைவியைக் கொல்வது; பிள்ளையைக் கொன்று கறி சமைப்பது; கண்ணைப் பிடுங்கிக் கொள்வது; தற்கொலை செய்துகொள்வது; ஊரார் உடைமையைத் திருடுவது; சூதாடுவது; பொய் பேசுவது; ஏமாற்றுவது; நயவஞ்சகம் பேசுவது, நல்லவர்களை வைவது ஆகிய காரியங்கள் எல்லாம் மக்களாய்ப் பிறந்தோர் செய்யவேண்டியவையே என்பதைச் சேக்கிழார் நன்கு வலியிறுத்தியிறுக்கிறார். இவையும் சீர்திருத்தம்தான்.

நான் மேலே எடுத்துக்காட்டியவையன்றி, இன்னும் பல உண்டு. அவற்றை எல்லாம் ஈண்டு விரிப்பிற் பெருகும். ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ என்பதுபோல் சுருக்கமாக எடுத்துக் காட்டினேன். எனவே, இவை எல்லாமா சீர்திருத்தம் என்பதைச், சேக்கிழார் ஒரு சீர்திருத்தக்காரர் என்று கூறிய தோழர் தம்முடைய அறிவுக்குக் கூர்மையும், ஓய்வுக்கு வசதியும் கொடுத்து ஆய்ந்து பார்க்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.

இனிச், சீர்திருத்தம் என்பது குறை நிறைத்தல் என்ற பொருளிலும் வரும். அதாவது, ஒரு கொள்கையில் ஏதாவது ஒரு சிறுகுறை மட்டும் இருந்து, மற்றவை எல்லாம் ஒப்புக்கொள்ளக் கூடியனவாக இருந்தால் அக்கொள்கையைத் திருத்தியமைத்துக் கொள்வது முறையும் நெறியுமாகும். ஆனால் மதக்கொள்கைகளிலே அவ்வித திருத்தம் செய்யமுடியாத முழுக்குறையாகவே ஒவ்வொரு கொள்கையும் வகுக்கப் பட்டுள்ளன. மதத்துறையல்லாத பிற துறைகளிலே திருத்தப் பிரேரேபனைக்கு இடமுண்டு. இங்கு அதற்கிடமில்லை. எனவே, மதத்தில் சீர்திருத்தம் செய்வ தென்பதற்குப் பொருள், மதத்தை அடியோடு ஒழித்தல் என்பதேயாகும். இந்தத் திட்டம் நிறைவேறும்வரை, எந்தச் சீர்திருத்தத்தையும் மக்கள் வாழ்க்கையிலே காணமுடியாது.

உலகப் பொதுமறையென்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட திருக்குறளையே திருத்தியமைக்க வேண்டுமென்ற அறிவுச் செம்மல்கள் தோன்றியுள்ள இக்காலத்தில், ஓர் இனத்தை (சமணர்களை) அழித்து இன்னொரு இனத்துக்கு (ஆரியருக்கு) ஆக்கம் உண்டாக்க வேண்டுமென்ற குறுகிய தந்நல மனப்பான்மையோடு தமிழ் நாட்டில் ஒரு சிலரைத் தவிர வேறெவரும் அறியாத - அறிவதற்கு வேண்டப்படாத மூடக் கொள்கைகளையும் முட்டாள் தனங்களையுமே அடிப்படையாகக்கொண்ட பெரியபுராணத்தைப் பாடிய சேக்கிழாரை, ஒரு சீர்திருத்தக்காரர் என்று சொல்வதற்கும் சிலர், அறிவுத்துறையில் நின்று ஆராய்ச்சி உலகைக்காணும் இவ்விருபதாம் நூற்றாண்டிலும் இருக்கின்றனர் என்றால், இதைவிட வெட்ககரமான செயல் வேறொன்றுளதோ!

27.6.1943