அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


செல்லாது!

அகாலித்தலைவர், மாஸ்டர் தாராசிங் சென்ற திங்கள் சிறையிலடைக்கப்பட்டார். அவர் சிறையிலே தள்ளப்பட்டதற்குக் காரணம் அவர் மேடையிலேறிப் பேசியதுதான்!

தாராசிங் பேசினார் சிறையில் தள்ளப்பட்டார்! சட்டம் அவரைக் கொட்டிற்று. அவர் பேச்சிலே ‘குற்றம்’ கண்டு பிடித்து விட்டது.

கீழ்பஞ்சாபிலுள்ள ஷஹாபாத், லூடியானா என்ற இடங்களிலே அவர் பேசிய பேச்சு சட்ட விரோதமெனத் தீர்மானித்தனர்.

அவர் பேச்சினால் புரட்சி வருமாம்! புயல் வீசுமாம், எரிமலை வெடிக்குமாம“, கடல் குமுறுமாம், கொந்தளிக்குமாம்-சட்ட விரோதமான பேச்சாம்! சொல்லிவிட்டனர்!

சீக்கியத் தலைவர் தாராசிங் விடுதலை வீரர், சீக்கிஸ்தானம் பெற்று காங்கிரஸ் எதேச்சாதிகாரத்திலிருந“து தனது மக்கள் விடுதலைபெற்று வாழவேண்டும் என்ற திடமான நம்பிக்கையோடு போராடி வருபவர். எனவேதான், இந்தச் சர்க்கார் அவரைத் தங்களது ‘விரோதி’ யெனக் கருதி, அடக்குமுறை அம்புகளை அவர்மீது வீசுகின்றனர். நம்மை நோக்கி வீசும் ‘வகுப்புத் துவேதி’ என்ற பழிச்சொல்லை வீசி அவரைப் படாதபாடு படுத்துகின்றனர். அதன் ஒரு பகுதிதான். அவர் ராஜத்துவேஷம் ஏற்பட்டு வகையில் பேசியதாகக் குற்றஞ் சாட்டி வழக்குத் தொடர்ந்தனர்.

153 கி நமக்குப் பழக்கமான சட்டப்பிரிவு-நமது சர்க்காருக்கு நம்மைத் தாக்க ‘வழக்கமான’ கிடைக்கும் ஆயுதம். இதனைத்தான் தாராசிங் மீதும் வீசினர்.

ஆனாலும், ‘அப்பீலில்’ இது செல்லாது, இனி இது நீதிக்குமுன் எதிர்த்து நில்லாது என்று சொல்லிவிட்டனர் கீழ்ப்பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதிகள். அதுவும், சட்டபுத்தக ஏடுகளைப் புரட்டி, பக்கம், வரி, எழுத்து என்று அழுத்தத் திருத்தமான ஆதாரத்தோடு இன்றைய புதிய இந்திய அரசியல் சட்டம் 19வது ஷரத்தின் மூலம் தரப்படும் பேச்சு சுதந்திரத்தைப் பறிப்பதாகும் மேற்படி நடவடிக்கை என்று ‘பட்டவர்த்தனமாகத்’ தீர்ப்பளித்து விட்டனர்.

ஆனால் நம்மாகாணத்திலே இதனை ஏதோ பெரிய ‘பிரம்மாஸ்திரம்’ என்று நினைத்துக்கொண்டு ‘குரங்காட்டம்’ ஆடுகிறார்கள். ஆடி ஓயட்டும்!

ஒரே இந்தியா ஒரேவகை சட்டதிட்டம் ஒரு மாகாணத்தில் அது செல்லாது கூறிவிட்டனர். இங்கு மட்டும் எத்தனைநாள் செல்லுமென்று நீதி நிமிர்ந்து கேட்கிறது. நேர்மை அதட்டிக் கேட்கிறது. அடக்குமுறை தன் தலையைத் தாழ்த்திக் கொள்கிறது.

தாராசிங்கை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று தீர்ப்பளித்து விட்டனர். அவர் வெளியில் வந்துவிட்டார் நேற்று பேசியதை நாளை பேசப்போகிறார்.

நம் மாகாணத்திலே நடக்கிற ‘அடக்குமுறை’ ‘நாடகத்தையும்’ இதனையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

(திராவிடநாடு 10.12.50)