அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


“சென்றேன்! வந்தேன்!!”

எதிர்பார்த்தது நடைபெறுகிறது சென்று வருகிறேன் சிறைக்கு என்று, என் அருமைத் தோழர்களுக்கு, “திராவிடநாடு” மூலம் தெரிவித்த நான், எதிர்பாராத முறையிலே விடுவிக்கப்பட்டு வெளியே வந்திருக்கிறேன் என்ற செய்தியைத் தெரிவிக்கும் நிலை பெற்றுள்ளேன்! விசித்திரமான நிலைமை!! இந்த “விடுதலை” களிப்பூட்டும் சம்பவமல்ல இது நிச்சயமாக ஒரு கேள்விக்குறி! ஆமாம், நம்மை நோக்கி வந்துள்ள ஒரு கேள்விக் குறி!

சில திங்கள் சிறையிலே இருக்க வேண்டி நேரிடும் என்ற நினைப்பிலே, ‘திராவிடநாடு’ அலுவலகம், கழகக் காரியாலயம் ஆகியவற்றினை நடத்திச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு திருச்சி சென்றேன். சிறைக்குள் தள்ளப்பட்டேன். பத்தாம் நாள், சிறைக்கதவு திறக்கப்பட்டுவிட்டது! ஏன்? நான் அறியேன் பராபரமே! நாடாள்வோரின் நெஞ்சிலே எப்படி, எப்போது, எதன் மூலம், இந்த எண்ணம் ஏற்பட்டது என்பது, ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.

வழக்குத் தொடுத்தார்கள்-ஏன்? விளங்கவில்லை ஏடு தீட்டி ஆண்டு ஆறு சென்ற பிறகு, பதினைந்தாயிரம் ஏடுகள் நாட்டிலே பரவியான பிறகு, ஏட்டின் துணையில்லாமலே, அதிலே நான் பொறித்திருந்த கருத்துக்களை, விளக்கவுரை, விரிவுரையுடன் மக்கள் மன்றத்திலே, மாற்றாரும் ஏற்றுக்கொண்டு தீரவேண்டிய முறையிலே எடுத்துக் கூறுவதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்பட்டான பிறகு, ஏடு தீட்டிய என்மீது வழக்குத் தொடுத்தார்கள் ஏன்? அதுவும் கேள்விக் குறியாகத்தான் இன்றுவரை இருந்துவருகிறது!

தண்டித்தார்கள் தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்த நேரத்தில், துரைத்தனத்தார் தஸ்தாவேஜுகளைப் பார்த்து இதுவரை அனுபவித்த தண்டனை போதும் என்று கருதி, விடுதலை செய்தனர் விடுதலையா? பொருத்தமான முறையிலே கூறவேண்டுமானால், விடுதலை அல்ல வெளியே போகச் சொல்லிவிட்டார்கள். தஸ்தாவேஜுகளைத் துரைத்தனத்தார் படித்தார்களாமே! ஏன்? புரியவில்லை! ! படித்த பிறகு, பத்து நாட்கள் இருந்தது போதும் என்ற முடிவுக்கு வந்தார்களாமே. அது ஏன்? புரியவில்லை! எல்லாம் ஒரே கேள்விக்குறி மயம்!! வெளியே போகச் சொல்லியான பிறகு சர்க்கார் மேற் கொண்டு என்ன செய்வதாக உள்ளனர்? புரியவில்லை! கேள்விக்குறிதான் இங்கும்!! அபராதம் கட்டித்தான் தீரவேண்டும். வசூலித்தே தீருவோம், என்று சில அமைச்சர்கள் ‘அடாணா’ பாடும் காரணம் என்ன? புரியவில்லை! இவ்வளவு வீரமாகப் பேசும் இந்த விந்தையான மந்திரிகள், ஏன் ‘சிறைக்கதவைத் திறந்துவிட்டோம், சென்று விடுங்கள் வெளியே’ என்று சிந்துபாடினார்கள்? தெரியவில்லை! கேள்விக்குறி!!

இப்படி, எதற்கும் கேள்விக்குறி மயமாக இருப்பது, முதலிலே பார்க்கும்போது, ஆச்சரியமாகவும், புதிர் போலவுந்தான் தோன்றும் அலசிப்பார்த்தால் விளங்கும் சர்க்காரின் நிலைமை. அப்படியாகிவிட்டது என்பது உண்மை அவர்களால் எதுவும் செய்யாமலும் இருக்க முடியவில்லை. எதையும் சாதிக்கவும் முடியவில்லை, கோபம் ஒரு கணம், சோகம் மறுகணம், ஆத்திரம் ஒரு விநாடி, அச்சம் மற்றோர் விநாடி நெறித்த புருவம் ஒரு சமயம் கவிந்த முகம் மற்றோர் சமயம் பல்லை நற நறவெனக் கடித்திடும் நிலைமையில் உள்ளனர் ஒரு சமயம், பல்லை இளித்திடும் நிலையில் உள்ளனர் மற்றோர் சமயம். உறுமல் ஒரு சமயம், உளறல் மற்றோர் சமயம், ஹிட்லராகிறார்கள். ஒரு சமயம், டோஜோவாகிறார்கள் மறு சமயம் இப்படி, இன்னிறந்தான் இவ்வண்ணத்தான் என்று கண்டுகொள்ளமுடியாத “உயர்ந்த நிலையை” அடைந்துவிட்டார்கள். ஊராளும் உத்தமர்கள்-எனவேதான் அவர்களின் போக்கு ஒவ்வொன்றும் ஒரு கேள்விக்குறியாகிறது!! பித்தர்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, இவ்வளவு சுற்றி வளைத்துத் தீட்டுகிறேன் என்று எண்ணிட வேண்டாம்! அமைச்சர்களின் அதியற்புத நடவடிக்கைகளைப் பார்க்கிறபோது, உங்களுக்கு ‘பித்தர்’ செயல்தான் நினைவுக்கு வரும் ஆனால் தயவு செய்து வெளிப்படையாகக் கூறிவிடாதீர்கள் கூறினால் உலகம் நமது மக்களைத்தான் கேலியாகப் பேசும், இப்படிப்பட்டவர்களை நாடாள்வோராக்கினீர்களே, எப்படி ஏற்பட்டது இந்தப் பித்தம், என்று கேலி பேசும்!

கேள்விக்குறி-இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் என்றேன்! இவர்களின் நடவடிக்கைகள் மட்டுமல்ல, இவர்களே கேள்விக்குறிகள்! ஆம், உண்மையிலேயே கேள்விக் குறிகள்!! இந்த அமைச்சர்கள், நம்மைப் பார்த்து, ‘வகுப்புத் துவேஷி’ என்று கூறுகிறார்கள்! ஆனால் இவர்களைப் பார்த்து நாட்டிலுள்ள வைத்தியநாதர்கள், இந்த மந்திரிகள், முகமூடி அணிந்த வகுப்புவாதிகள் என்று பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்! அமைச்சர்கள் நம்மை நிந்திக்கிறார்கள், வகுப்புவாதிகள் என்று ஆனால் இதே அமைச்சர்கள், நீதி மன்றத்தின் நெடிய படிகளிலே ‘பயபத்தி’யுடன் ஏறிச்செல்கிறார்கள். ‘வகுப்பு வகை’ ஜஸ்டிஸ் கட்சியின் திட்டமாகிய ‘கம்யூனல் ஜி.ஓ’ வைக் காப்பாற்ற! நான் ‘ஆரியமாயை’ எப்படிப்பட்டது என்பதை நாட்டுக்குக் கூறி விட்டேன் என்று என்னைத் தண்டிக்கிறார்கள் அதேபோது, அமைச்சர் கோபாலர், வர்ணாஸ்ரமம் அழிந்தாகவேண்டும் என்ற அறிவாண்மையுடன் பேசுகிறார்! நம்மை நோக்கும் போது, தேசீயக் கோலம் காட்டி மிரட்டுகிறார்கள், அதேபோது வேறோர் புறமோ, தியாகர், நாயரிடம் பாடம் கேட்டவர்களாகக் காட்சி தருகின்றனர்! விந்தையான மனிதர்கள்! விசித்திர சித்தர்கள்!! மனித உருவிலே உள்ள, கேள்விக்குறிகள்!!

எனவேதான் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நாட்டிலே, எப்போது எது நடைபெறும், எது எப்படி நடைபெறும் எதற்காக எது நடைபெறும், என்ற நிலை இல்லை தெளிவு, திட்டம் முறை நெறி, காணோம் என்மீது வழக்கு தொடுக்கப்பட்டதும் தண்டனை விதிக்கப்பட்டதும் திடீரென விடுவிக்கப்பட்டதுமான, ‘சம்பவங்கள்’ கேள்விக் குறிகள் நாடாள்வதால் ஏற்பட்ட விளைவுகள்!!

நமது நிலைமையோ, கேள்விக்குறியில் இல்லை! பாதை தெளிவாகத் தெரிகிறது! பயணம் துவக்கப்பட்டாகி விட்டது!

திருச்சியிலிருந்து-சிறையிலிருந்து சிவகெங்கை, மதுரை, காஞ்சிபுரம், சென்னை-இப்படிப் பயணம் தொடர்ந்து இருக்கிறது பணி நடந்த வண்ணம் இருக்கிறது நாட்டை ஆரியமாயையிலிருந்து விடுவிக்கும் நற்பணி தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. நாட்டு நிலைமையோ, நமது பணி, தக்க பலனை, கோரியபலனை, இன்பத்திராவிடத்தைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையைத் தருகிறது! பட்டி தொட்டிகளில் எல்லாம் விழிப்புணர்ச்சி வீரம்-ஆர்வம்-விடுதலை வேட்கை!! இளைஞர்கள் எஃகுக் கம்பிகளாகிவிட்டனர்! பள்ளிகள் பாசறைகளாகிவிட்டன! கலைக்கூடங்கள், பகுத்தறிவுக் கதிர் பரப்பும் விஞ்ஞான நிலையங்களாகி விட்டன! தெளிவும் ஆர்வமும் மட்டுமல்ல, செயல்திறம் மிகமிக அரிய முறையிலேயும் அளவிலேயும் வளர்ந்து விட்டிருக்கிறது நாடு, தலைநிமிர்ந்து நிற்கிறது நமது இன உணர்ச்சி எங்கும் காணப்படுகிறது! பேரார்வம் மட்டுமல்ல, பேரார்வம் அறப்போரைக் குறிப்பிடுகிறேன் எங்கும் கொந்தளித்த வண்ணம் இருக்கிறது. திராவிட இயக்கம் இரண்டுபட்டதால் ஆர்வம் இறந்துபடும் என்று எண்ணியவர்கள் ஏமாளிகளாயினர்! விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் தவிர, மற்றவர்கள், திராவிடத்தின் பொது நலனைக்கருதி, சில்லறைப் பூசலை வெறுத்து ஒதுக்கி விட்டனர்! சுருங்கக்கூற வேண்டுமானால், ஒருநாடு விடுதலை பெறுவதற்கான பக்குவம் நிச்சயமாக உருவாகிக் கொண்டு வருகிறது! “நல்ல சமயமடா! இதை நழுவ விடுவாயோர்!!” என்று நாட்டின் பொது நலத்திலே பற்று கொண்டவர்கள் கேட்கின்றனர் திராவிட முன்னேற்றக் கழகத்தினரே! விடை தாருங்கள் செயலால்! விடுதலை முரசு கொட்டுங்கள். கேள்விக்குறிகள், கேலிச் சித்திரங்களாகிவிடும்! அச்சமூட்டுவோர் அஞ்சி ஒதுங்கும் நிலை ஏற்பட்டுவிடும். அறப்போர்க்களம், நம்மை அழைக்கிறது, அணிவகுப்பைத் திறனுள்ளாத்துங்குள்!

புதிய பொறுப்புகள் நம்மை நோக்கிவருகின்றன. பேச்சுரிமையை இனிக் காத்துத்தீருவது, சர்க்கார், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்குத் தடை உத்தரவு விதித்தால் 144 போட்டால் மீறுவது என்ற சிவகெங்கையிலே தீர்மானித்தாகி விட்டது. புதியதோர் பொறுப்பு!! ஆனால் தவிர்க்க முடியாத கடமை!! திராவிடத்தின் நிலைமையை, திராவிடநாடு திராவிடருக்கே என்ற மூலாதாரப் பிரச்சினையின் தன்மையை, நேரு சர்க்கார் உணரும்படிச் செய்வதற்காக வடநாட்டு மந்திரிகளுக்குக் கருப்புக்கொடி காட்டுவது என்ற செயல்திட்டம் வேறு இருக்கிறது பொறுப்புடன் செய்யப்படவேண்டிய காரியம் அது. திராவிடர் திரண்டெழுந்து செய்யவேண்டியகாரியம். வேலை நிரம்ப இருக்கிறது வீரர்களுக்கு! வேலை நிரம்ப இருப்பதால் தான் வெற்றிப் பாதையிலே ஏறெனச் செல்லவேண்டி இருப்பதால்தான் வீணரின் விஷமத்துக்கு மதிப்பளிக்காதீர் என்று அடிக்கடி நினைவூட்டுகிறேன்! வாருங்கள் திரண்டு, வேலை நிரம்ப இருக்கிறது! இந்தத் திங்கள் 25 ம் தேதி, ஆச்சாரியார் வருகிறார்! வேலையில்லா மந்திரி வருகிறார், நமக்கு வேலை தருகிறார்! ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களைச் சிறையிலே தள்ளியவர் வருகிறார்! தாளமுத்துவையும் நடவாஜனையும் பிணமாக்கித் தந்த பெருமையைத் தேடிக்கொண்டவர் வருகிறார்! பெல்லாரி ஜெயில், உடம்புக்கு நல்லது என்று கேலிபேசிப் பெரியாரைக் கொடுமைக் காளாக்கியவர் வருகிறார்! நமது அனைவரும் ‘திராவிடர்கழகமாக’ இருந்த போது கழக நிர்வாகக் குழு முழுதும் சிறைக்குள்ளே தள்ளப்பட்ட பிறகு பவனிவந்தாரே அதே ஆச்சாரியார் வருகிறார் காட்டுங்கள் கருப்புக்கொடி!!

திட்டப்படி பலாத்காரமற்ற தன்மையில், தூய உள்ளத்துடன் நாம் நமது கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருப்போம் கேள்விக் குறிகள், சிறைக் கதவை திறப்பதும் மூடுவதும், திகைப்பதும் தடுமாறுவதுமாகக் காலந்தள்ளப்டும் கவலையில்லை வந்தேன் வெளியே, வாரீர் தோழர்கள்! பணியாற்றுவோம் என்று அழைக்கிறேன்.

நமது பணி, யாது என்ற கேள்விக்குறி இல்லை தெளிவாக இருக்கிறது திட்டம் எனவே புதிய பொறுப்புகளை அறிந்து பணி புரிய வாரீர்! என்று அழைக்கிறேன். உரிமைப் போர்ப்பாதை வகுத்தாகிவிட்டது! தீரமிக்க தோழர்காள்! திராவிடம் பெற வாரீர்!! என்று அழைக்கிறேன் வருவீர்களா, என்ற கேள்விக்குறி மனதைக் குடையும் நிலையில் அல்ல வருவீர்கள் என்ற திடநம்பிக்கையுடன்!

அண்ணாதுரை

(திராவிடநாடு 8.10.50)