அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சென்னைச் சிறையில் ‘எதிர்கால உலகம்’

வீர மரபினர் வெஞ்சிறை புகுந்தனர்!
37 செயல் வீரர்களுக்குக் காவல் தண்டனை புன்சிரிப்போடு புகுந்தனர் சிறைக்குள்!

24.10.50 அன்று டில்லி மந்திரி ஆச்சாரியாருக்குத் திராவிடத்தின் அதிருப்தியைக் காட்டும் நோக்குடன் கருப்புக்கொடிகளைத் தாங்கிச் சென்றிருந்த பல்லாயிரக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தொண்டர்களில், அகப்பட்டோரையெல்லாம் ஆங்காங்கு காங்கிரஸ் அரசாங்கம் கைது செய்து, போலீஸ் ஸ்டேஷன்களுக்குக் கொண்டுபோயினர். அவர்களில் பலரை பிறகு வெளியே போகுமாறு விட்டுவிட்டு கீழ்க்கண்ட 34 தோழர்கள் மீதும், போலீசாரால் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.

மேற்படி தோழர்களின் மீது, ஆபாசமான வார்த்தைகளைப் பேசியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவித்ததாகவும் கல்லெறிந்ததாகவும், பல குற்றச்சாட்டுகளைப் போலீசார் காட்டினர்.

25.10.50 புதன்கிழமை காலை 11 மணிக்கு சென்னை முதல் மாகாண மாஜிஸ்டிரேட் முன்னிலையில் மேற்படி தோழர்கள் கொண்டுவரப்பட்டனர். அங்கு, சிறிதுநேரம் விசாரணை செய்யப்பட்டபோது, தங்கள் மீதும் கூறப்படும் குற்றங்கள் சரியல்ல வென்றும் தாங்கள் அமைதியான முறையில் கருப்புக்கொடி பிடிக்கச் சென்றிருந்ததாகவும் தோழர்கள் கூறவே, மேற்படி வழக்கின் விசாரணையை மூன்றாவது மாகாண மாஜிஸ்டிரேட்டுக்கு அனுப்பினார்.

கோர்ட்டில் இராயப்பேட்டை வட்டம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டரும் மயிலாப்பூர் வட்டம் போலீஸ் அதிகாரியும், ஆஜராகியிருந்தனர்.

போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார்களென தோழர்கள், டி.கோவிந்தன், அ.தர்மலிங்கம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதற்கு தோழர்கள், தாங்கள் நடைபாதையில் அமைதியாகச் சென்று கொண்டிருந்ததாகவும் தங்கள் நோக்கம் ஆச்சாரியாருக்கு கருப்புக்கொடி காட்டுவதுதானென்றும் கூறினர்.

அதன்பேரில், அவர்கள் வழக்கு விசாரணை 7.11.50 க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பிறகு கொண்டித்தோப்பு, ராஜகோபால் சம்பந்தம் மயிலை ப.சானகிராமன் ஆகியோர் மீது கெட்டவார்த்தைகளைப் பேசியதாகவும், போக்குவரத்துக்குத் தடைசெய்ததாகவும், குற்றஞ்சாட்டப்பட்டது. ‘அது உண்மையா?’ என்று மாஜிஸ்டிரேட் கேட்டதற்கு, “அது போல் தாங்கள் நடந்ததில்லையென்றும், தங்கள் அதிருப்தியைக் காட்ட கருப்புக்கொடி தாங்கியிருந்ததாகவும்” தோழர்கள் பதில் கூறினர். அதன்மீது வழக்கு விசாரணை 7.11.50க்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிறகு, ஆபாசமான வார்த்தைகளைப் பேசியதாகவும் கல்லெறிந்ததாகவும் தோழர்கள் ராயபுரம் ஆர்.பக்தவத்சலு, ராயபுரம் எ.ராஜு, சூளை விசுவநாதன் மீது குற்றம் சாப்பட்டப்பட்டிருப்பது பற்றி மாஜிஸ்டிரேட் கேட்டார்.

“அங்கு” ஏது?
“இல்லை! அதுபோல நாங்கள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுபவர்களல்ல. எங்கள் கழகத் திட்டப்படி கருப்புக்கொடி காட்டவே போயிருந்தோம். பிடித்து வந்துவிட்டார்கள்” என்று பதில் தந்தனர். ஒரு தோழர், “தார் ரோடில் ஏதுங்க கல்?” என்று கேட்டபோது கோர்ட்டில் கூடியிருந்தோரெல்லாம் நகைத்தனர்.

மேற்படி மூன்று தோழர்கள் வழக்கும் 7.11.50க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதன் பிறகு கூட்டமாகக் கூடி நின்று போக்குவரத்தைத் தடை செய்ததாகவும், உணவுப் பங்கீட்டுக் கடைக்கெதிரில் நின்றுகொண்டு வந்து போகுபவர்களுக்குத் தொல்லை தந்து கொண்டிருந்ததாகவும் ஓட்டேரி எ.ஜி.சம்பந்தம், ராயபுரம் குப்பராஜூ, பாலகதிரரன், ஜயனாவரம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

தோழர்கள் மேற்படி குற்றங்களை மறுத்து, “நாங்கள் எங்கள் அதிருப்தியைக் காட்டவே போனோம்” என்றார்கள்.

மாஜி: என்ன கொடி காட்ட...?

பதில்: கருப்புக்கொடி எங்கள் அதிருப்தியைக் தெரிவிக்கக் காட்டப்படவேண்டுமென்பது எங்கள் கழக முடிவு அதன்படி காட்டப்போனோம்.

மாஜி: சி.ஆர். இங்கிருந்து போய் அங்கு மந்திரியாக இருப்பவர் தானே?

பதில்: ஆமாம்!. ஆனால் வடநாட்டு ஆட்சிக்கு ஒத்தாசையாகவல்லவா இருக்கிறார். யாராயிருந்தாலும் கோரிக்கையான ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்பதற்கு எதிரிடையாக இருக்கும் டில்லி மந்திரிகளுக்கு கருப்புக்கொடி காட்டி எங்களது அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்வதென்பது எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முடிவு.

மாஜி: அதற்காக.

பதில்: கருப்புக்கொடி காட்டப் போனோம். ஆச்சாரியார் மீது எங்களுக்கு சொந்த விஷயத்தில் வெறுப்பில்லை. இப்போது கூட எங்கள் நாட்டுக்குச் சேவை செய்ய, தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தாரேயானால் வரவேற்கத் தயார்!

என்று, தெளிவாகத் தோழர்கள் விளக்கினர். பிறகு அவர்கள் வழக்கும் 7.11.50 அன்று விசாரணைக்கெடுத்துக் கொல்ளப்படுமென மாஜிஸ்ட்டிரேட் அறிவித்தார்.

பிறகு தோழர்கள் ஜி.எஸ்.சம்பந்தம், பா.தங்கலிங்கம், கே.ஜயராம், டி.மகாதேவன், எம்.சிவலிங்கம், பி.வடிவேலு, கே.ராஜு, ஆர். வாசுதேவன், பி.சுந்தரம், எஸ்.பி.அழகரசு, கே.வி.கே.சாமி, சாந்தமூர்த்தி ஆகியோர் மாஜிஸ்டிரேட் முன் கொண்டுவரப்பட்டனர். போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாகவும், நகரில் போட்டிருக்கும் தடையுத்தரவை மீறும் வகையில் கூடி நின்றதாகவும் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

தோழர்கள் மேற்படி குற்றச்சாட்டை மறுத்ததோடு தாங்கள் அமைதியாக கருப்புக்கொடி பிடிக்கவே போனதாகவும் தெரிவித்தனர். இவர்களது வழக்கு 6.11.50 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படுமென அறிவித்தார்.

மேலே குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்ட தோழர்களை ஜாமீனில் வெளியே போகத் தயாரானால் தாம் விடுவதாகவும் இல்லையென்றால் அதுவரையில் ரிமாண்டில் வைக்கப்படுவார்களென்றும் கூறினார்.

அது, முடியாதே!
தாங்கள் ஜாமீனில் செல்லத் தயாராக இல்லை என்று எல்லாத் தோழர்களும் ஒருமித்துக் கூறினர்.
அடுத்தபடியாக மேலும் பதினொரு தோழர்கள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு கொண்டுவரப்பட்டனர். அவர்கள், காஞ்சிபுரம் கே.டி.எஸ்.மணி, வி.பரமசிவம், கே.வடமலை, கே.பி.கணபதி, எம்.ராதாகிருஷ்ணன், அப்துல்லா, ஆர்.டி.சாமி, பி.லோகநாதன், ஜி.கன்னியப்பன், பி.கே.கபாலி, ஆகியோர் இவர்கள் ஆபாசமான வார்த்தைகளால் தூஷனை செய்து கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

தங்கள் மீது இந்தக் குற்றங்கள் வேண்டுமென்றே சாட்டப்படுகிறது என்று கூறி தோழர்கள் மறுத்ததோடு, தாங்கள் ராயப்பேட்டை சென்றதன் நோக்கம் கருப்புக்கொடி காட்டி, தங்கள் அதிருப்தியை ஆச்சாரியாருக்குக் காட்டத்தான் என்பதாகத் தெரிவித்தனர்.

இதைக் கேட்ட மாஜிஸ்டிரேட் வழக்கை 6.11.50 க்கு ஒத்திவைப்பதாகக் கூறினார்.

‘காவலில்’ இருப்போம்!
பிறகு, தோழர்களை ஜாமீனில் போகிறீர்களா என்று மாஜிஸ்ரேட் கேட்டதற்கு தோழர்கள் தாங்கள் ஜாமீனில் போகத்தயாரில்லை யென்று கூறினார்கள்.

“ஜாமீனில் போவதென்றால் பணம் கட்டவேண்டாம் எழுதித் தந்துவிட்டாலே போதும். விட்டுவிடுகிறேன். வழக்கு விசாரணைக்கு வந்துவிடுங்கள். போகிறீர்களா?” என்று கடைசியாக தோழர்களை, மாஜிஸ்டிரேட் கேட்டார்.

தோழர்கள் அனைவரும் தாங்கள் வழக்கு முடியும்வரை காவலிலேயே இருப்பதாக, புன்சிரிப்போடு கூறினர்.

கடைசியாக, மேற்படி தோழர்களின் வழக்கு விசாரணையும் 6.11.50க்கு போடப்பட்டிருப்பதாகக் கூறினார்.

பிறகு, அனைவரையும் அதுவரையில் காவலில் வைக்குமாறு உத்திரவு பிறப்பித்தார்.

கோர்ட் அறையைவிட்டு வெளியே போகும்போது நமது தீரர்கள் காட்டிய உணர்ச்சி வேகம், கிழவனையும் குமரனாக்கும்! அமைதியோடு சாந்தமாக, கோர்ட்டிற்கு வந்து குழுமியிருந்த கழகத் தோழர்களிடம் கைகூப்பி சென்று வருகிறோம் என்று விடை பெற்ற காட்சி, இரும்பு நெஞ்சத்தையும் உருக்கிவிடும். “அருமையான வீரர்கள், தமிழ் வீரத்தின் சின்னங்கள், அன்புச் சகோதரர்கள்” என்ற பேரார்வம் நமது இதயத்தில் வீசி, ஆனந்தக் கண்ணீர் வடிக்கச் செய்தது!

தோழர்கள் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், இராம.அரங்கண்ணல், திருச்சி முத்துகிருஷ்ணன், டி.எம்.பார்த்தசாரதி, பஞ்சாட்சரம், சி.வி.ராஜன், சிந்தாதிரிப்பேட்டை கபாலி, எஸ்.வி.லிங்கம் பெத்து நாயக்கன் பேட்டை சிவஞானம் நமசிவாயம் ஆகியோர் காலை 10 மணி முதல் கோர்ட்டிலேயே இருந்து, எல்லா நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

தோழர் பஞ்சாட்சரம் சிறைக்கஞ்சா சிங்கங்களுக்கு என்னென்ன வேண்டும் என்று கேட்டு, அவைகளை வாங்கிவந்து உபசாரம் செய்தார்.

சுமார் ஒரு மணிக்கு, 34 கழகக்காளைகளும் போலீஸ் லாரியில் ஏற்றப்பட்டனர். நனைத்த முகத்தோடு, குழுமிக்கிடந்த கூட்டத்தினரிடம் ‘கைகூப்பி’ வணக்கம், செலுத்திக் கொண்டு, போலீஸ் லாரியில் ஒவ்வொருவராய் ஏறினர்.

போலீஸ் லாரி மவுண்ட்ரோட் வழியாக சென்டிரல் ஸ்டேஷன் அருகிலுள்ள பெனிடென“ஷியரி சிறைக்குச் சென்றது.

இலட்சிய கீதம்!
வழிநெடுக, லாரியில் இருந்தபடியே “வடநாட்டாதிக்கம் ஓழிக” “திராவிடநாடு திராவிடருக்கே!” அடக்குமுறை ஆட்சி ஒழிக!” என்பதான இயக்க முழக்கங்களை சிறைக்குச் சென்ற தோழர்கள் உணர்ச்சியோடு எழுப்பிக்கொண்டு சென்ற காட்சி மவுண்ட்ரோடையே கலக்கிவிட்டது.

சிறைச்சாலை அதிகாரிகளிடம் உத்திரவைக்காட்டி உள்ளே அனுப்ப சிறிது அவகாசம் இருந்தபடியால் அனைவரும் வெளியில் உட்கார வைக்கப்பட்டனர்.

தோழர்கள் அனைவரும் இன்னும் சாப்பாடு இல்லாமலிருப்பதையறிந்த தோழர் அரங்கண்ணல், போலீஸ் அதிகாரிகளிடம் அனைவருக்கும் உணவு வசதி செய்துதர, அனுமதி கேட்டார். அவர்களும் ஒப்பவே, பெத்துநாயக்கன் பேட்டை சிவஞானம், நமசிவாயம் ஆகியோரோடு தோழர்களுக்கு வேண்டிய உணவு வசதிகளைக் கவனித்து செய்து தரப்பட்டன.

தோழர்களுக்கான எல்லாச் செலவுகளும், திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தோழர்கள் அனைவரும் சிறைக்கு வெளியே வரிசையாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது, திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அண்ணாதுரை, பிரச்சாரக்குழுச் செயலாளரான இரா.நெடுஞ்செழியன், சட்டதிட்டக் குழுச் செயலாளரான கே.ஏ.மதியழகன் ஆகியவர்களோடு, சிறைக்கு வெளியிலிருந்த கழக வீரர்களைக் கண்டார்.

பொதுச் செயலாளரைக் கண்டதும் எல்லோரும் பூரிப்போடு ‘வணக்கம்’ கூறி வரவேற்றனர்.

யாவருக்கும் தனது அன்பு நிறைந்த வணக்கங்களைச் செலுத்திவிட்டு “வரட்டுமா?” என்று சி.என்.ஏ.கூறிக்கொண்டு விடைபெற்ற பொழுது “சென்றுவாருங்கள். தங்கள் தம்பிகளாகிய நாங்கள் எதற்கும் தயங்கோம்” என்று சிறை வாசலில் நின்று கூறியது, உணர்ச்சியூட்டக் கூடியதாயிருந்தது.

பொதுச்செயலாளர் விடை பெற்றுக்கொண்டு சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் சிறைக்கதவு திறந்தது. தேய்ந்த திராவிடத்தின் விடுதலை உருவங்கள், வெற்றிச் செல்வங்கள் ஒருவர்பின் ஒருவராக சிறைக்குள் சென்றனர். வெற்றிச்சிரிப்போடு நுழைந்தனர். “சுயராஜ்ய ஆட்சி” யின் சிறைக்கதவுகள் மூடிக்கொண்ட காட்சி உள்ளத்தைக் குலுக்கிற்று!

பல இடங்களிலும்
23.10.50 மாலை வண்ணாரப்பேட்டை தி.மு.க. தோழர் சி.எஸ்.திராவிடமணி கருப்புக்கொடி காட்டுவது சம்மந்தமான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இதுபோல் நகரின் பல பாகங்களிலும் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் எனத் தெரிகிறது. விபரம் பிறகு.

(திராவிடநாடு 29.10.50)