அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சென்னையில் எழுத்துரிமைப் போர்!

நூல் விற்றது ‘குற்றமாம்!’
மூன்று வாரக் கடுங்காவல்

‘ஆரியமாயை’ ‘ஆரியமாயை’ என்று கூவினர். அந்தக் கட்டிளங் காளைகள்! ‘ஆட்சியாளரை ஆட்டிவைக்கும் ஆரியமாயை’ ‘அடக்குமுறை ஏவிக் காத்த ஆரியமாயை’ ‘திராவிடன் வாழ்வைப் பறிக்கும் வகை விளக்கும் ஆரியமாயை, ‘எங்கள் பொதுச் செயலாளரைச் சிறைக்கனுப்பிய ஆரியமாயை!’ என்று அடுக்கடுக்காக சொற்களை வீசியபடி இருந்தனர். அவர்கள் மக்கள் திரன் திரளாகக் கூடியபடியே இருந்தனர்.

‘காந்தியார் சாந்தியடைய’ வேண்டுமா? வகுப்பு வெறியர்களின் கோரக்கூத்தை அம்பலமாக்கிய ‘காந்தியார் சாந்தியடைய’ வாங்குங்கள்! ஆசைத்தம்பியின் சிகையைக் கெடுத்த ‘காந்தியார் சாந்தியடைய’ படியுங்கள் அந்த ‘அரும்பு மீசையினர்’ அழகழகாக விளக்கியபடி நின்றனர்.

போலீசாரின் படை வரிசை நெருங்கிக் கொண்டே இருந்தது. அவர்கள் மலர்ந்த முகத்திலே இன்னும் மகிழ்ச்சி தாண்டவமாடிக் கொண்டே இருந்தது.

26-9-50 ல் சென்னை வண்ணாரப்பேட்டை தி.இளைஞர் மன்றத்தினர் கூடி ஆட்சியாளர் பேச்சுரிமையைப் பறித்திடும் வகையில் எடுத்துள்ள நடவடிக்கைகளை எதிர்த்து அறப்போர் தொடுத்து விடுவது என்று முடிவு செய்தனர். அதனைப் பொது மக்களுக்கும், ஆட்சியாளருக்கும் அறிவித்தும் விட்டனர்.

அறப்போர் வீரர்கள், எஸ்.ஸி.மணி, பி.மணி, ராஜா, ஆகிய மூவரும், வழக்கு தொடரப்பட்டுள்ள நூல்களான ‘ஆரியமாயை’ ‘காந்தியார் சாந்தியடைய’ இரண்டையும் நல்ல மக்கள் கூட்டத்திற்கிடையில் நின்றுவிற்றனர். விலை கூறியபடி இருந்தவர்-அதில் புதைந்துள்ள கருத்துக்களைப் படித்துக் காண்பித்தனர்-விளக்கினர்!

கூடியிருந்த மக்களோ, உணர்ச்சி வேகத்தால் வாழ்த்தொலிகளை வானதிர முழக்கினர்.

மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு மலர்மாலைகளிட்டு மக்கள் சமுத்திரம் வாழ்த்துக்களை அலையோசையும் தோற்றிடும் வகையில் கிளப்பினர். வீரர்களோ, விழியிலே இலட்சிய வெறியைக்காட்டி, முகத்திலே துள்ளும் மகிழ்ச்சியைத் தவழவிட்டு லாரியிலே ஏறினர்.

அன்று 11 மணிக்கு அவர்கள் மூவருக்கும் நூல்விற்ற குற்றத்திற்காக மும்மூன்று வார கடுங்காவல் தண்டனை தந்ததோடு திருப்தியடைந்தனர் பேச்சுரிமையால் பீடமேறிய ஆளவந்தார்!

(திராவிடநாடு 22.10.50)