அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சென்னையில் ‘இராம ராஜ்யம்’!

பொதுமக்கள் மீது தடியடி
டில்லி மந்திரிவருகையின் பரிசு!!

வண்ணப் புறாவைக் காண வல்லூறு சும்மாயிருப்பதில்லை, பசுவைக் கண்டால் புலி பாயத்தான் செய்யும். எலிக்கும் பூனைக்கும் எப்போதும் ஒத்து வராது-இது சகஜம்.

ஒன்றையொன்று எதிர்த்துப் பாய்ந்து, வீழ்த்தப் போரிடும் ஆனால், அங்கு, பசுமீது பசுவே பாய்ந்தது! வண்ணப் புறாவின் கூட்டைச் சேர்ந்த மற்றொரு புறாவே கொத்தித் துரத்திற்று! பசு உரு மாறிற்று! பச்சாதாபம், பரிதாபம் எதுவுமில்லாத இரத்த வெறிகொண்ட புலிபோலப் பாய்ந்தனர்-அடித்தனர்-வீழ்ந்தனர்-வதைத்தனர்!

குதிரைகளின் குளம்படிச் சப்தம், வேழங்களின் அலறல், விரோதிகளின் விலாவிலே பாய்ச்சியை அம்பால் ஏற்படும் கூக்குரல், சிந்தும் இரத்ததைச் சிறுநரிகள் நக்கிக் குடிக்கும்போது உண்டாகும் ஊளை-அத்தனையும் காணப்படுமாம். தமிழகத்தின் வீரர்கள், பண்டைய நாட்களில் விரோதிகளின் மீது பாய்ந்து, படையெடுக்கும் பொழுது.

சென்னையில் 24.10.50 அன்று, ‘அவர்கள்’ படையெடுக்கவில்லை ஆனால், அந்தக் காட்சி தென்பட்டது. குதிரைகளின் குளம்படிச் சப்தம், அதன் மீது அமர்ந்து மக்கள் மத்தியில் பாய்ந்து செல்லும் ‘காங்கிரஸ் அதிகாரஅம்பு’களின் ‘ஓடு!ஓடு!!’ என உடைந்த மண்டைகளின் சப்தம், ஓடமுடியாது தேம்பித் திகைத்த சிறு குழந்தைகளின் அலறல், சிங்கத்தின் மத்தியில் சிக்கியமான் போல் மருண்டு வீழ்ந்த மங்கையர் குரல், ‘அடிக்காதே! அய்யய்யோ!!’ என்று கூக்குரல் போட்ட கிழவிகளின் ஓலம்-அத்தனையும் கேட்டது.

தாக்கியோர் விரோதிகளல்ல! வேற்று நாட்டிலிருந்து வந்து இந்நாட்டை முற்றுகையிட்டோருமல்ல! எங்கிருந்தோ வந்து புகுந்த எதிரிகளுமல்ல! இங்கேயே பிறந்தவர்கள், இந்த நாட்டிலேயே வாழ்பவர்கள் வாழ்ப்போகிறவர்கள்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சகோதரர்கள்! எனினும், அடித்தார்கள், ‘அதிகார அம்புகள்’ மூலம் அடித்தார்கள்! இரக்கமெனும் பொருள் இதயத்தின் இல்லாதவர் போல் அடித்தார்கள்! அடித்தார்கள்!! அடித்தார்கள்!!! அடித்துக் கொண்டேயிருந்தார்கள்!!!!

கொடுங்கோலனும் கூசும் இக்கொடுமைச் செயலுக்குக் காரணமாயிருப்போர் குரூபிகளல்ல குடும்ப வாழ்க்கைத் துறந்தவர்களல்ல! அண்ணன் தம்பிகளோடு பிறந்தவர்கள், ஆசை முகங்காட்டும் மனைவி, அன்பை அள்ளி வீசும் தாய், அருமையோடு போற்றும் தங்கை, தத்தைமொழியால் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குழந்தைக் கிளிகள் ஆகியவர்களோடு வாழ்பவர்கள்! பெண்ணின் பெருமை தெரியும் அவர்களுக்கு, பெரியோரைப் போற்ற வேண்டும் என்ற புத்திமதிகளைப் படித்தவர்கள் தான். “கனவிலும் கருதாதே கன்னியருக்குப் பொல்லாங்கு செய்ய” என்ற விவேக சிந்தாமணி அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அடித்தார்கள்! இதயத்தை இரும்பாக்கிக் கொண்டவனும் கூசும் “கொடுமை” களால் தாக்கினர்!

பெண்களைத் தாக்கினர்!

நரைத்த மூதாட்டிகளைத் தாக்கினர்!

நல் இளம் காளைகளைத்தாக்கினர்!

“வெய்யில் சுட்டாலே வெம்பி விழும் மலர்க்குலம் போன்றவர்கள் பெண்கள். அவர்களைத் தெய்வமெனப் போற்று, தினையளவும் தீங்கு செய்ய நினையாதே-பெண் சாபம் பொல்லாது!” என்று பேசும், பாகவத சிரோன்மணிகள் சிஷ்யர்கள் தான். அவர்கள்! இருந்தும், பெண்களைத் தாக்கினர்! கீழே விழுந்து கெஞ்சியபோதும் விடவில்லை தாக்கினர்!

துள்ளித் திரிந்து பள்ளி செல்லும் பருவத்தினரை, காடு வாவா வீழு போ போ’ என்றுரைக்க உலவும் கிழவிமார்கள், வயது முதிர்ந்தோரை, வழிப்போக்கரை, வந்தவர் போனவரை, வழியில் கண்டோரை எல்லாம் தடியால் அடித்துத் தாக்கினர்! அடி தள்ளு உதை என்று அவர்களது கால் பூட்சுகளும், கைத்தடிகளும், வேலை செய்து கொண்டேயிருந்தன! விரோதிகளோடு மோதும் வீரர்களுக்குக் கூட இருக்காது அவ்வளவு வீராவேசம் ஆனால், அவர்கள் ‘தடியடி தர்பார்’ நடத்தியபோது இருந்தது!

இரத்தம்! மனித இரத்தம், மண்ணிலே சிந்திற்று நெற்றியிலே வழிந்தோடி துயரக் கண்ணீரோடு கலந்து கருநிற மேனியை எல்லாம் சிவப்பாக்கிற்று!

விரோதியின் வாள் வீச்சிலும், வெஞ்சமர் வேகத்திலும் சிந்த வேண்டிய இரத்தம் வீணாகச் சிந்திற்று!

இரத்தம்-ஒரு வீண்பொருளல்ல மனித வாழ்வின் ஜீவசக்தி அது சிந்திற்று-சிந்தும்படிச் செய்யப்பட்டது!

சகிக்காத சம்பவம்! காணப்படாத காட்சி! கொதிப்பூட்டும் நிகழ்ச்சி! வேதனையூட்டும் விசித்திரம் ஆனாலும் நடந்தது!

ஒரே ஒரு ஆள் அந்தஸ்து காப்பாற்றப்படுவதற்காக நடந்தது. மனித சமுதாயத்தின் ஒரு தனி நபருடைய ‘மந்திரிப் பெருமை’ க்காக மனிதக் கூட்டத்தின் பலருடைய கால்கள் ஒடிந்தன. கைகள் முறிந்தன. முதுகுகள் வீங்கின. மண்டைகள் உடைந்தன. மார்புகளிலே காயம் இரத்தம்! இரத்தம்!! இரத்தம்!!!

நெஞ்சு கொதிக்கும் நிகழ்ச்சி, பசுவே பசுவைத் தாக்கிச் சிதைக்கும் பரிதாபக்காட்சி எனினும் நடந்தது.

24.10.50 காலையிலும் மாலையிலும் சிங்காரச் சென்னையின் வீதிகளிலே நடந்தது. காந்தியார் பெயரைச் சொல்லித் திரியும் ‘கண்ணியவான்கள்’ ஆட்சியிலே நடந்தது. காங்கிரஸ் மந்திரிமார்களின் ஆட்சியிலே சுதந்திரம் பெற்று சுகவாழ்வு நடத்தும் தியாகிகளின் அரசாட்சியிலே நடந்தது நாடும் மக்களும் “பாதிக்குதே பசி நாதியில்லை எமக்கு!!” என்று வீதிக்கு வீதிநின்று கதறி, அழுது, மடிவதைக் கண்டும் ‘மகோன்னதமாக ஊர்ப்பவனி” வந்துகொண்டிருக்கும், மகா தியாகிகளின் ஆட்சியிலே, நடந்தது.

காங்கிரஸ் பெயர் சொல்லி காந்தியாரின் பெருமைபேசி, ஆட்சியிலமர்ந்திருப்போர் மரக்கட்டைகளல்ல மனிதர்கள் தான் ‘மனிதன்’ என்பதன், பொருள், உணர்ந்தவர்கள்தான் உயிருக்குள்ள மதிப்பு அவர்களுக்கும் தெரியும்!

ஏழைகளின் கண்ணீர், பெண்களின் பெருமூச்சு குழந்தைகளின் ‘குய்யோ, முறையோ’ என்ற கூக்குரல் கேட்டுச் சகித்துக்கிடக்க அவர்கள் ‘ஹிட்லர்’களல்ல! இதயமில்லாதவர்களல்ல ‘எது’ வும் இல்லாதவர்களல்ல! இருந்தாலும் சென்னையிலே ‘பஞ்சாபை’ க் காட்டினார்கள்! ஜாலியன் வாலாபாக்’கைச் செய்து காட்டினார்கள்! ‘வெலிங்டன் ராஜ்யத்தை’ நடத்திக் காட்டினார்கள்.

(திராவிடநாடு 29.10.50)