அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


செத்துக் காட்டினார்! சிந்தை நொந்தோம்!

“வீரன் ஒருமுறைதான் சாகிறான் – கோழை அடிக்கடி சாகிறான்!“ – என்றோர் பழமொழி உண்டு. அதனை வாய் வலிக்கப் பேசும் அறிஞர் குழாம். ஏராளம். ஆனால், வீரச் சாவால், தன் பெயரைச் சரித ஏட்டில் தீட்டிக் கொள்வோர் தொகை மிக மிகச் சொற்பம் – காண்பது அரிது.

சாவது, சகஜம் ஆனால், ‘செத்துக் காட்டுவது‘ சாதாரண விஷயமல்ல அதிலும், தன்னுடைய கொள்கைக்காக சாவுக்குத் தன்னைத் தத்தம் செய்யும் ‘சாக்ரடீசுகளைக்‘ காண்பது, அரிது மிகமிக அரிது. அந்த அரிய சாதனையைச் செய்து காட்டி விட்டார், ஆந்திர வீரர் ஸ்ரீராமுலு, சாவுக்குத் தன்னைத் தத்தம் செய்தார்! அதுவும் தன்னுடைய கொள்கைக்காக!

‘செத்தார்‘ – இந்தச் சொல் சர்வ சாதாரணம் சிறிது நேரம் கலங்கச் செய்யும் – தேம்பி அழத் தூண்டும் – ஆனால். ‘செத்துக் கொண்டார்‘ என்பது அப்படியல்ல மனிதனின் சிந்தையில் மாறாத நினைவாகப் படிந்துவிடும் தீரர் ஸ்ரீராமுலு ‘செத்துக் கொண்டார்‘ –நமது சிந்தையல்லாம் கலங்கச் செய்து விட்டார்.

கொள்கைகளுக்காக குருதி சிந்தியோர் உண்டு! குத்திக் ்கொலை செய்யப்பட்ட தியாகிகளும் இருக்கிறார்கள்! -அவர்களெல்லாம் ‘சாகடிக்கப்பட்டவர்கள்‘ என்றே குறிக்கப்படுகிறார்கள். ஆனால், ‘செத்துக் காட்டியவர்கள்‘ அருமை அந்தச் சிறப்பறிய செயல்மூலம், தன் கொள்கை உரத்தை, உணர்த்திவிட்டார் – ஸ்ரீராமுலு சிங்காரமான சென்னையில் பிறந்தவர்! ‘பாரத மாதா!‘ என்று பாடியவர் – ஆடியவர் – சிறைக் கோட்டம் நாடியவர். அத்தகைய பொதுமக்கள் ்தொண்டர், ஒரு பொதுக் கொள்கைக்காகத் தன்னையே ‘இழந்து‘ விட்டார் பவனி வரும் தோழர்களும், பாராளும் காங்கிரஸ் நண்பர்களும், தன்னைப் பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் கண்களிலிருந்த ஒரு சொட்டு நிரும் விழாததைக் கண்டு தன்னைச் சந்தித்து நம்பிக்கை அளிக்காததைப் பார்த்து மனம் வெதும்பித் தன்னையே மாய்த்துக் கொண்டுவிட்டார்.

‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்தார்‘ என்று படித்திருக்கிறோம், கதைகளில் – வீரர், பொட்டி ஸ்ரீராமுலு, நாளொரு மேனியும் பொழுகதொரு வண்ணமுமாகச் செத்தார். விசித்திரமாக இருக்கும், இது! ஆகா, எவ்வளவு வேதனை கலந்த சம்பவம்!

தான் தூக்கி வளர்த்த மூவர்ணக் கொடி, அழகாகப் பறக்கிறது. அரசாங்க மாளிகையில் – அதன் கீழே தான் வளர்த்த கட்சியின் அரசாங்கம் நடக்கிறது. கொஞ்சும் குழந்தைகளின் மழலை ஒலிக்கிறது! அலையோசை எழுப்பும் நீலக் கடல் காட்சி தருகிறது! அழகான ஆகாயம்! அங்கே பறந்து செல்லும் புள்ளினம்! நண்பர்களின் இன்முகம்! அவர்களோடு விளையாடிய தித்திக்கும் நாட்கள்! -இவைகளை எண்ணி எண்ணி நைந்து நைந்து, தன்னுடைய உள் ஜோதியை அணைத்துக் கொண்டுவிட்டார். ஐம்பத்து எட்டு நாட்கள் பட்டினி கிடந்தாராம்! உணவு கிடைக்காததால் அல்ல – உண்ண உணவும், அதைப் படைக்க ஆரூயிர்த் தோழர்களும் ஏராளம் ஆயினும் பட்டினி கிடந்தார்! தன்னுடைய கொள்கையை நிறைவேற்றுவதற்காக!

ஒருவேளை உணவு கிடைக்காவிடில் துடிக்கும் மனிதர்கள் உண்டு. ஆனால், அவர் 58 நாட்கள் அன்ன ஆகாரமின்றிக் கிடந்தார். மாளிகை வாசம் கேட்டுப் பெற அல்ல – மந்தகாச வாழ்வு வழங்குமாறு கோரி அல்ல, சம்பள உயர்வுக்காக அல்ல, சர்க்காரில் ‘பீடம்‘ பெற அல்ல – தன்னுடைய கொள்கைக்காக.

இந்தத் தியாகம்தான் எல்லோரையும் உலுக்குகிறது பொது வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்தார் – ஆயுள் முழுதும் பணியாற்றினார் – ஆயுளையும் அதற்காக இழந்து காட்டி விட்டார்.

அரசியலில் வளர்ந்துவரும், அலட்சிய அலை, ஒரு அழகான ஓவியத்தை அழியச் செய்துவிட்டது.

அதனால்தான் அவரது ‘வீரச் சாவு‘ கேட்டதும் கலங்கினோம்! கண்ணீர் வடிக்கிறோம்.

தியாகி ஸ்ரீராமுலு மேற்கொண்ட உண்ணாவிரதம் சரியா, தவறா? – அது வேறு விஷயம். அவர், கோரிய விருப்பம் தகுமா, தகாதா? – அது வேறு பிரச்னை. கூடிக் கலந்து பேச வேண்டியது.

ஆனால், அவரது உடல் மெலிகிறது! உயிர் ஊசலாடுகிறது!! என்று அறிந்தும், ஊராள்வோர், அவர்பால் காட்டிய அலட்சியம், கொடிது. மிகமிகக் கொடிது.

பண்டிதர் வருத்தம் தெரிவிக்கிறார் – முதலமைச்சர் அனுதாபம் அனுப்புகிறார் – தேசீய ஏடுகள் தீட்டிவிட்டன. வருத்தம் தெரிவித்து. ஆனால், இவையனைத்தும், ‘சாவு‘க்குப் பின்னெழுப்பும் சரசக் குரல்கள்! இன்று, சண்டமாருதமெனக் கூவும், இவர்களின் கருத்தும் கவனமும் எங்கே போயிற்று, அவர் ‘அணு அணுவாக‘ச் செத்துக் கொண்டிருக்கிறார் எனும் செய்திகள் பரவியபோது? தீட்டினவே ஏடுகள்! உத்தமரின் பட்டினியைப் பழித்தும் இழித்தும்.

அந்த உலுத்த உள்ளம்தான்,ஸ்ரீராமுலுவின், உயிர் குடித்துவிட்டது என்போம். சாகும் நேரத்தில், அந்த தீரரின் இதயம், எவ்வளவு பாடுபட்டதோ! என்னவெல்லாம் எண்ணியதோ!

ஆந்திர மாகாணப் பிரிவினை, மறைந்த வீரரின் விருப்பம் அதனை, ஆக்கித் தருவதில் பிரச்னைகள் இருக்கலாம் – ஆலோசிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கலாம். ஆனால், அவரைச் சந்தித்து, விஷயத்தை விளக்கி, அவர் உயிரைக் காப்பாற்ற ஏன் முயலவில்லை. இந்தியாவின் ஜோதிகள்? எதெற்கோ, பறந்து செல்லும் பண்டிதல், ஒரு இலட்சிய வீரரரின் உயிரைக்காக்க ஏன் ஒருமுறை வரக்கூடாது வற்புறுத்தியிருக்கக் கூடாது!

பொட்டி ஸ்ரீராமுலு – ஒரு புரட்சிக்காரரல்ல. அகிம்சாவாதி! உத்தமர் காந்தியின் உண்மைத் தொண்டர்களில் ஒருவர்! தான் சரியென நினைக்கும் ‘ஆசை‘ நிறைவேறாததால், அந்த ஆசையை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பிலிருப்போரின் கவனத்தைக் கவர உண்ணாவிரம் மேற்கொண்டார் – ஒரு நாளல்ல – இரண்டு நாளல்ல – 58 நாட்கள்! இந்த விஷயத்தை, பார்லிமெண்டு உறுப்பினர்கள், உரைக்காமலுமில்லை பண்டிதரிடம் இருந்தும், ஏன் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை? ஒரு உயிர்! - போய்விட்டது. ஒரே ஒரு உயிர் தானே? – எனும் அலட்சியம்தானே! அத்தகைய அலட்சிய மனோ பாவம்தானே, கோபத்தோடும், வேகத்தோடும். ஆந்திர மாகாணம் குறித்துப் பதில் கூறச் செய்கிறது, பண்டிதரை.

ஸ்ரீராமுலு அவர்களின் விஷயத்தில் மட்டமல்ல, நீதி கோரும் எவருடைய பிரச்னையிலும் இவ்வித அலட்சியத்தைக் காட்டுவதே. இன்றைய ஆட்சித் தலைவர்களின் போக்காக இருக்கிறது.

இந்த அலட்சியத்தாலேயே, ஒரு உயிர், அநியாயமாக நம்மிடமிருந்து, பிரிக்கப்பட்டுவிட்டது – இந்த அலங்கோலத்துக்கு ஆளான, ‘சுயராஜ்ய‘ பூமியை நினைத்து கலங்குகிறோம்! கண்ணீர் வடிக்கிறோம்!

பொட்டி ஸ்ரீராமுலுவின் வீரமரணத்தால், ஆந்திர இதயங்கள் வீறுகொண்டெழுந்திருக்கின்றன – விபரீதமான விளைவுகளும் சம்பவித்துக் கொண்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. வீரரை, ‘அலட்சியம்‘ சாகடித்தது – வீரச்சாவு கேட்டு கொதிப்படைந்தோரில் பலரை ‘வேட்டுச்சப்தம்‘ சாகடித்துக் கொண்டிருக்கிறது. இந்த விசித்திர வேதனைகளால் அல்லல்படும் ஆந்திரத்தில், அமைதி அரசோக்க, இனி மேலாவது அரசியல் தலைவர்கள் முன்வர வேண்கிறோம் – ஆணவ பீடம், அழித்தது ஒரு உயிரை ஆத்திரவேகம் அழிக்கக்கூடாது பூமியை!

இந்த வேண்டுகோளை, அரசாங்க பீடத்துக்கும், ஆந்திரத் தலைவர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். வீரர், செத்துக் காட்டிவிட்டார்! நம்மோடு கலந்த விட்டார்! அவர் காட்டிய அன்பு மார்க்கம், தழைக்கட்டும் – அதன்மூலம் அரசியல் நோக்கங்கள் நிறைவேறட்டும்.

தீரர் ஸ்ரீராமுலுவின் தியாகத்துக்கு, கலங்கும் கண்களைத்துடைத்துக் கொண்டு, நமது மரியாதைகளைத் தெரிவித்துக் கொள்ளும் இந்த நேரத்தில், ஆட்சிப் பீடத்தாருக்கும் ஒன்று அறிவித்துக் கொள்ளுகிறோம் – “எதையும் அலட்சியமாகக் கருதும் போக்கால் ஒருவரை இழந்துவிட்டோம்! இனியாவது, இந்த மனோபாவம் நீங்கட்டும்! அரசியல் தொண்டர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்“

திராவிட நாடு – 21-12-52