அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


செயலாற்றுங்கள்
“சிறைவாசம் ஏன் பொது வாழ்க்கையிலே, இது முதல் முறையல்ல. ஆச்சாரியார் ஆட்சிக் காலத்திலே, இந்தி எதிர்ப்பு நடைபெற்றபோது, சென்னைச் சிறையிலே இருந்திருக்கிறேன நான்கு மாதங்கள் சைதாப்பேட்டை சப்ஜெயிலிலே இருந்திருக்கிறேன் - ஒருவாரம் கவர்னர் ஜெனரலாக ஆச்சாரியார் இருந்தபோதும் சில நாட்கள் இருந்திருக்கிறேன். பலமுறை சிறைசென்று மனமெருகேறிய பெரியாருடன் பழகி இருக்கிறேன். எனவே, சிறை என்னைச் சிதைத்துவிடாது”

1950 செப்டம்பர் மாதம் ஆரிய மாயையால் ஆறு மாத சிறைதண்டனை பெற்றபோது மேலே கூறியதுபோல் கூறி விடைபெற்றார்! 1953 செப்டம்பரில், ஆச்சாரியார் கருணையால் மூன்று மாதச் சிறைவாசம் பெற்றுச் சென்றிருக்கிறார்! அன்றும், இன்றும் அவர் நமக்குக் கூறிச் சென்ற வாசகம்.

“மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை”

நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை

“சென்று வருகிறேன், செயலாற்றுங்கள்!

தன்னந்தனியே அல்ல - எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் தரும் நால்வருடன் சென்று வருகிறúன் - எதிர்பார்த்தது தான், எனவே ஐக்கம் எழக் காரணமில்லை, அறப்போரின் விளைவு இது. அகமகிழவே காரணமிருக்கிறது.”

“கண்ணீருடன் பிறந்தோம் - காடு மேடுதான் நம் எதிரில் - தூய நோக்கமும், தளராத எக்கமுமின்றிப் பிறிதோர் துணை இல்லை துவக்கத்தில் இன்றோ, இல் போல் தழைத்து ஆறுகுபோல் வேர் விட்டிருக்கிறது தி.மு.கழகம்.

வேறு எந்தக் கழகத்திலும், கட்சியிலும் காணக்கிடைக்காத குடும்பப் பாசம் தி.மு. கழகத்தில் இருக்கிறது, கழகத்தின் வலிவும் பொலிவும் பெரும்பகுதி இதிலேதான் இருக்கிறது.

“நாங்கள் உள்ளே இருக்கும்போது, கழகத்தின் கண்ணியத்தைப் பன்மடங்கு பொலிவுள்ளதாக்கும் வகையில், பணியாற்றுங்கள்.”

“இல்லந்தோறும், நல்லவர் உள்ளந்தோறும் தி.மு.க. சென்று இடம் பெற வழிவகை செய்யுங்கள்.”
நாங்கள் ஒவரும், சிறை செல்வது குறித்து, மனக் கொதிப்போ கஷ்டமோ கொள்ள வேண்டாம் - ஏறத்தாழ, ஐயாயிரவர் சிறை சென்றுள்ளனர் - ஆறுவர் மாண்டனர் - கரமிழந்தார் ஒரு தோழர், காலிழந்தார் மற்றொருவர், திராவிடம் இரத்தக் காணிக்கை செலுத்தி இருக்கிறது, விடுதலைப் போரிலே ஒரு கூட்டம் - விடி வெள்ளி முளைக்கும் கட்டம்.

நாம் கொண்டுள்ள கொள்கை சிலாக்கியமானது - மேற்கொள்ளும் முறைகள் அறநெறியினின்றும் வழுவாதன - நமது கழகம், கண்ணியத்தையும், அமைதியையும் கடைப்பிடித்து ஒழுகும், மகத்தானதோர் மக்கள் சக்தி எனவே, நாம், நமது கடமையைச் செய்கிறோம், ஆதிக்கக்காரர் அஞ்சுகின்றனர்! அடக்குமுறை கிளம்பித் தாக்குகிறது, பணி பயனளிக்கிறது என்ற முறையிலே, ஆடக்முறையை வரவேற்கிறோம் - வெற்றிப்பாதை கருத்துக்குப் புலனாகிறது, தெளிவாக!

இந்த அரிய பணியிலே, பங்கேற்கும் வாய்ப்புப் பெற்ற நாங்கள் உண்மையிலேயே, பூரிப்படைகிறோம். இனி, நாங்கள் மேற்கொள்ளும் சிறைவாசம், இந்தப் பணியிலே ஒரு பகுதியே, என்று நம்புகிறோம் - அந்த நம்பிக்கையே எமக்குச் செந்தேன்.

நாடு, கொந்தளிப்பிலேயே இருக்கிறது - அறப்போர்க் கோலத்தில் இருக்கிறது - ஆதிக்காரர்களின் ஆர்ப்பரிப்பும் சாகசமும் மாறி மாறிக் கிளம்பிக் கொட்டியபடி உள்ளன - திராவிடம், எதையும் தாங்கிக் கொள்ளும் உள்ள உரம் படைத்திருக்கிறது, எனவே, ஆறுதி வெற்றி நமக்கே - அஞ்சேல்!
இப்போதே கூடத்தான், வெற்றி நமக்குத்தான் ஆதிக்காரருக்கு அல்ல. நாடு அவர்களின் போக்கைக் கண்டிக்கிறது, நல்லவர்கள் கண்டிக்கின்றனர் - உலகம் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கிறது.
ஒரு இனம் (திராவிடம்) தன் விடுதலைக்காக அறப்போர் துவக்கி விட்டிருக்கிறது, என்ற வரலாற்றுச் செய்தி, உலகுக்குத் தரப்பட்டாகி விட்டது - முக்கியமான செய்தி, தோழர்களே! மிக முக்கியமான செய்தி.

அலட்சியம், நெரித்த புருவம் இவை போதுமானதாகத் தோன்றவில்லை ஆட்சியாளர்களுக்கு அடக்குமுறையைத் துணைக்கு அழைத்திடவேண்டி இருக்கிறது - நமது வளர்ச்சியின் அறிகுறி இதுவென்போம்.

எனவே, சிறைபுகுமுன், செய்த பணியும், பெற்ற வெற்றியும் சாமான்யமானவை அல்ல என்ற திருப்தியுடன் செல்கிறோம் - விட்ட இடத்திலிருந்து தொடங்கி வெற்றிப் பாதையிலே நடந்து, வாகை சூடிடும் ஆற்றல் படைத்த உங்களிடம், கழகத்தை ஒப்படைத்துவிட்டு கழகத்தின். அகமும் புறமும உங்கட்கு நன்கு தெரியும் - புன்னகைப் புலிகளும், நயவஞ்சக நரிகளும் உலவுகின்றன - எனினும், கடமைக் கணைகொண்டு, அவைகளை விரட்டிடும் ஆற்றல் உமக்கு உண்டு, என்பதை உணர்கிறோம், மகிழ்கிறோம்.

நாங்கள் உள்ளே இருக்கும்போது கழகத்தின் கண்ணியத்தைப் பன்மடங்கு பொலிவுள்ளதாக்கும் வகையில் பணியாற்றுங்கள்.

பலாத்காரத்துக்குத் துளியும் இடம் தராதீர்கள், தாக்கினால் (தாக்குவர்) தாங்கிக் கொள்ளுங்கள் - தாயகத்தின் தளைகளை உடைத்தெறியும் பணியில், ஈடுபட்டுள்ளோருக்கு, இந்த நெஞ்சு உரம் நிச்சயம் தேவை.

கழகத்தின் அன்றாடக் காரியங்களை, நாங்கள் வெளியே இருப்பதாக எண்ணிக்கொண்டே, எப்போதும் போல் செய்து வாருங்கள். கழக இதழ் நம் நாடு வளரும் ஏடு - அதனை வனப்புள்ளதாக்கும் பெரும் பொறுப்பும் ஊஙக்ளைச் சார்ந்ததே - அந்தக் கடமையை மறவாதீர்.

கழகத்தின் தலைமை நிலையப் பொறுப்புகளை ஏற்று நடத்த தோழர் ஏ.கோவிந்தசாமி, எம்.எல்.ஏ. முன் வந்துள்ளார். அவருக்குக் கழகத் தோழர்களும், கிளைக் கழகங்களும் முழு ஒத்துழைப்பை நல்கி, கழகத்தின் செயல் முறைகளையும், கட்டுப்பாட்டையும் வெற்றிகரமாக நடத்தித்தர வேண்டுகிறோம்.

தூத்துக்குடி, கல்லக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்ற சம்பவங்களைப் பொறுத்து, வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகளை வெற்றிகரமான முறையில் நடத்த, கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களாலான எல்லாவிதமான உதவிகளையும் - பொருள் உதவி உள்பட, செய்யவேண்டும்.

போராட்டங்களில் ஈடுபட்டு மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசாங்கத்தார் தக்க நஷ்டஉடு அளிக்கும்படி செய்வதுடன், கழகத் தோழர்களும் தங்களாலான உதவியைச் செய்ய வேண்டுகிறோம்.

சென்று வருகிறோம், தோழர்களே! சென்று வருகிறோம், செயலாற்றுங்கள்.

(திராவிட நாடு - 6-9-53)