அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஷூஸ்டரின் சோகம்!

``தம்பி, என்ன இது? உன் அந்தது என்ன, பெருமை என்ன, பிரதாபம் என்ன, நீ இப்படித் தனியாகத், துணையின்றிப் போகலாமா? சேச்சே! நான் தெருக்கோடியிலே நீ வருகிறபோதே பார்த்தேன், பதைத்தேன், இப்படி வரலாமா?’’ என்று, மடமடவெனப் பேசிக் கொண்டே, தோளின் மீது கை போட்டுச் சொந்தம் பாராட்டினான் சொக்கன், வீதி வழியே வந்து கொண்டிருந்த குப்பனைக் கண்டு. குப்பன் திணறிப் போனான். யார் இந்த ஆசாமி, நமக்குத் தெரியவில்லை, அவரோ, நெடுநாட்களாக நம்மைத் தெரிந்தவர் போல் பேசுகிறாரே, புகழ்ச்சியாக பேசுகிறாரே என்று யோசித்தான். குப்பனை இந்த நிலைக்குக் கொண்டு வந்த சொக்கன், சும்மா இல்லை, ``டேய்!’’ என்று வண்டியோட்டுபவனைக் கூப்பிட்டான் அதிகாரத் துடன், வண்டி வந்ததும், ``தம்பி! ஏறு வண்டியிலே’` என்று அன்பும், அதிகாரமும் கலந்த குரலிலே கூறினான். ``நடந்தே போகலாமே...’’ என்று கூச்சத்தோடு கூறினான் குப்பன். இடி போன்ற சிரிப்புடன், ``நல்ல காரியம் செய்கிறாயப்பா! குடிப்பது கூழாகயிருந்தாலும் கொப்பளிப்பது பனி நீராக இருக்கிறது, நம்ம ஊர் வாலிபப் பிள்ளைகளுக்கு நீ லட்சுமி புத்ரன், சரஸ்வதி கடாட்சம் பெற்றவன். உனக்கென்ன தலைவிதியா நடந்து செல்ல. இனிமேல் எப்போதும் நடந்தே போகக் கூடாது. வண்டியிலே தான் நீ போக வேண்டும்’’ என்று சொக்கன் கூறினான். லட்சுமி புத்ரனை ஏற்றிக் கொண்டு போகையிலே, குதிரை, `காலப்பிலே’ போக வேண்டும் என்று கருதினான் போலும், வண்டிக்காரன். சவுக்கைச் சரமாரியாக வீசினான், உள்ளே குப்பன் திணறினான். அவன் அது போன்ற, `சவாரி’ செய்து பழக்கப்பட்டவனு மல்ல. எனவே, சொக்கனின் சொல்லபிஷேகம் அவனுக்கு ஆச்சரியமூட்டிற்று. ``நிறுத்து வண்டியை’’ என்று உத்தரவிட்டான் சொக்கன், ஒரு பெரிய ஓட்டலுக்கு எதிரே! ``தம்பி, எனக்குத் தெரியும் நீ களைத்து விடுவாய் என்று. ஆனால், மற்ற ஓட்டல்களிலே காபி, கழுநீர் போல இருக்கும். ஆகவே இவ்வளவு தொலைவு, உன்னை அழைத்து வந்தேன். இறங்கு, சூடாக ஒரு கப் காபி போட்டுக் கொள்வோம்’’ என்றான் சொக்கன். ``இப்போது ஏன்? பசியில்லை’’ என்று குப்பன் கூறினான், சொக்கனிடம் பலிக்குமா இந்த வித்தை.

உள்ளே போய் உட்கார்ந்த உடனே, சொக்கன், ``அம்பி’’யைக் கூப்பிட்டார். ``அம்பி! இதோ பார், இன்று காப்பி கனஜோராக இருக்க வேண்டும். வரவேமாட்டேன் என்றார், நான் வற்புறுத்தி அழைத்து வந்தேன், நம்ம மானத்தைக்க் காப்பாற்று’’ என்று அம்பிக்குச் சொக்கன் கூறினார். அம்பி, ``அப்படியே’’ என்று பதிலுரைத்து விட்டுத் திரும்புவதற்குள், சொக்கன், ``அம்பி! இன்றைக்கு ஸ்பெஷல் என்ன?’’ என்று கேட்டான். ``அருமையான கோவா லாடு, ஆனந்த ஜிலேபி, ரம்மியமான ரசகுல்லா’’ என்று அம்பி அடுக்க ஆரம்பித்தான். குப்பன் இடையிலே புகுந்து, வெறும் காபி போதும் எனக்கு. இவருக்கு ஒரு ரசகுல்லா கொண்டு வாரும் என்றான். ``ரொம்ப சரி அம்பி! அவர் பேச்சுப்படியே எனக்கு ஒரு ரசகுல்லா கொண்டு வா. கோவா லாடு அவருக்குக் கொண்டு வா’’ என்று உத்தரவிட்டார். அம்பிக்கு அதிகம் சொல்லவா வேண்டும். இனிப்பு முடிந்ததும், கொஞ்சம் `காரம்’ நடந்தது, பிறகு, காபி, ``பத்தணா அங்கே, பத்தணா இரண்டு பேர்’’ என்று அம்பி, துந்துபி முழங்கினான், சொக்கன் சொகுசாக நடந்தான். குப்பனுக்கு வழிகாட்டுவது போல, ``பில் தரவேண்டிய இடத்திற்கு வந்ததும், ``அடடா! ஆனைதாண்டவபுரம் ஜெமீன்தார் போகிறார், தம்பி! இங்கே, இரு, இதோ வந்துவிடுகிறேன்’’ என்று கூறினான் சொக்கன். அவசர அவசரமாக வெளியே போய்விட்டான். அம்பி, ``பத்தணா இரண்டு பேர்’’ என்று மீண்டும் கூவினான், குப்பன் பணத்தைக் கொடுத்துவிட்டுப் பேந்தப் பேந்த விழிக்கிறான், சொக்கன் வந்தால்தானே! வழியிலே, வரும் ஏமாளியிடம் வாய்ச் சல்லி அடித்து, வயிற்றைக் கழுவும் வர்க்கம், அந்தச் சொக்கன், முகஸ்துதீ கேட்டு இளித்த வாயனாகும் இனம், குப்பன். குப்பனைச் சொக்கன், முன்பின் கண்டதுமில்லை, ஆனாலும் முகக் குறியி லிருந்தே தெரிந்து கொண்டான், இவன் ஓர் ஏமாளி என்று!

சர். ஜார்ஜ் ஷுஸ்டர், அப்படி நம்மை முன்பின் தெரியாதவரல்ல! பழக்கமுள்ளவர், இங்கு அதிகாரம் செலுத்தியவர். எனவே, குப்பனுடைய குணத்தைச் சொக்கன், தெரிந்து கொண்டதைவிட, ஷுஸ்டருககு இந்தப் பூபாகத் தின் குணம் தெரியும். எனவே, அவர், ``இது புராதன நாடல்லவா! இதற்கு ஒரு கெடுதி சம்பவிக்கலாமா! இதனைக் துண்டாடலாமா? இந்தத் துயரை நான் சகிப்பேனா? எதிர்காலம் சரியாக இராதே! இதை எண்ணினாலே, எனக்கு ஏக்கம் அதிகரித்துத் தூக்கம் வர மறுக்கிறதே’’ என்றெல்லாம் பேசியிருக்கிறார். இலண்டன் பட்டினத்திலே. பிரிட்டனுடைய எதிர்காலத்தைப் பற்றி, பிரிட்டிஷார் பிரிட்டனிலே பேசிக் கொள்வது முறை. ஆனால், இந்தியா ஒரு `இளித்தவாயன்’ என்பது தானே, ஏகாதிபத்தியச் சொக்கன்களின் எண்ணம். எனவே இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி இலண்டன் பட்டினத்திலே, ``துரைமார்’ பேசுகிறார்கள்! குப்பனைச் சொந்தம் கொண்டாடியும் சுகம் விசாரித்தும், புகழ்ந்து பேசியும் துணையாகச் சென்றும், சொக்கன், தன் நட்பைக் காட்டிக் கொண்டது, எதன் பொருட்டு, நாவின் ருசியை உத்தேசித்து! அதுபோலத்தான், ஏகாதிபத்தியம், அடிக்கடி, ``இந்தியா பூர்வ பெருமை உள்ள நாடாயிற்றே! இதனைப் பாகிஸ்தான் என்றும் திராவிடஸ்தான் என்றும் பல பல பிரிவுகளாகச் செய்வதா? இதனால் இந்தியாவின் எதிர்காலம் கெட்டுவிடுமே! என்று பேசுவதன் கருத்து, ``இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை ஓய்ந்தபாடில்லை! சுயாட்சியை வழங்க வேண்டுமென்ற எண்ணமோ எங்கட்கு குறைந்தபாடில்லை. சுயாட்சியைத் தந்துவிடுவோ மென்றாலோ இந்தியாவின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயம் எங்களை விட்ட பாடில்லை’’ என்று கூறிக் கொண்டே இருப்பதன் மூலம், இங்கு கூடாரமடித்துக் கொண்டு, கொலு வீற்றிருக்கலாம், என்பதுதான். இது குறை மதிக்குப்பன்களுக்குத் தவிர, மற்றையோருக்கு நன்கு தெரியும். இந்த இயல்பைத் தெரிந்து, இங்குள்ளதலைவர்கள், தமக்குள் இருக்கும் இடர்ப்பாடுகளை, நீக்கிக் கொண்டால் ஷுஸ்டர் களின் சுருதி குறையும்! இந்தியாவிலே உள்நாட்டுப் பிரச்னை இல்லை, அது தீர்க்கப்பட்டு விட்டது. ஒரு இனத்தை மற்றோர் இனம் ஆள்வது என்ற ஆணவம் அழிந்தது. முஸ்லீம்களுக்குப் பாகிஸ்தான் தேவை என்பதை இந்துக்கள் ஒப்புக் கொண்டனர். இந்துக்களுக்கு இந்துஸ்தான் தேவை என்பதை முஸ்லீமும், திராவிடரும் ஒப்புக் கொண்டனர். திராவிட நாடு திராவிட ருக்கே என்பதை இந்து, முஸ்லீம் ஆகிய இரு சாராரும் ஏற்றுக் கொண்டனர். யார், யாரை ஆள்வது? எப்படி ஆட்சி இருப்பது? என்ற பிரச்னைகள் இனி இல்லை. உள்நாட்டுக் குழப்பம் இல்லை, வகுப்புப் பூசல் இல்லை. எனவே, துலாக் கோல் தூக்கி நிற்கத் துரைமார் இனித் தேவை யில்லை, என்று கூறும் துணிவு, இங்கு உண்டாகாத வரை, சொக்கன், குப்பனை ஏய்த்த கதை போல ``இந்தியாவின் பூர்வ பெருமை, இந்தியாவின் ஒருமித்தத் தன்மை இந்தியாவின் எதிர்காலம்’’ என்ற மொழியிலே ஷுஸ்டர்கள் பேசுவார்கள், அமெரிகள் ஆள்வார்கள், ஆகாகான் மாளிகை கள் இருக்கும், அரசியல் நெருக்கடி நீடிக்கும். தனை அழகுற எடுத்துரைத்திருக்கிறார், லீக் காரியதரிசி நவாப் சாடாலியாகத் அலிகான், டில்லி மத்திய சபையிலே, பேசுகையில், நவாப் சாடா, காங்கிரஸ் தலைவர்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்தால் அவர்கள் லீகின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுவார்கள் என்பதற்கு ஒரு அறிகுறியும் காணோம். சரோஜினி தேவியாரின் அறிக்கையிலேயும் இந்த அறிகுறி இல்லை. இந்நிலையிலே நாங்கள் என்ன செய்வது, பத்துக் கோடி முஸ்லீம்கள், தங்களின் தனியான கலாச்சாரத்துடன் தனியாக அமைத்துக்கொள்ள, வழி வேண்டும். அதற்கு மட்டும் காங்கிரஸ் தலைவர்கள் இசைவதாக ஜாடை காட்டினால் போதும், அவர்களைச் சிறை யிலிருந்து விடுவிக்கும் முயற்சிக்கு எங்களாலான எல்லா உதவிகளையும் செய்வோம், என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். இதனை உணர்ந்து, ``உரத்தகுரலிலே பேசும் பெரிய கட்சிக்காரர்’’ நடப்பதானால், உள் நாட்டுப் பிரச்னை ஒழிக்கப் படும், அது ஒழிந்து போனால், ஷுஸ்டர் போன்றவர்களின் `சொக்கன்வேலை’’ நடை பெறாது. எப்போது இதனை உணரப் போகி றார்களோ தெரியக்காணோம்.

இந்தியாவின் எழில் பற்றியும், பழமையைக் குறித்தும், பலபல பேசிடும், சொக்கன்களுக்கு, எந்த அளவு அன்பு இந்தியாவிடம் இருக்க முடியும், என்பது யாருக்குத் தெரியாது! பஞ்சணைக்கு இழுக்குமுன் பாவையிடம் கொஞ்சிடும் காமக்கூத்தன் போல, நாட்டின் பூர்வ பெருமையைக் கூறிவிட்டு, அது என்றென்றும் வெளிநாட்டானின் காலடியிலே வீழ்ந்து கிடக்க வேண்டுமென்று விரும்பும் அரசக் கூத்தர்கள், ஆங்கில நாட்டிலே உள்ள சில ஏகாதிபத்யக் காரர்கள், அவர்களில் ஒருவரே ஷுஸ்டர். அவருக்கு மனம் வேதனைப்படுகிறதாம், இந்தியா பல பிரிவுகளாகப் போவது! எவ்வளவு அன்பு பாருங்கள்! இந்திய பூகோளப் படத்தைக் காப்பாற்றும் புனித காரியத்துக்காகவே, பூவுல கிலே இந்தப் புண்யாத்துமாக்கள், அவதார மெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது! அணடை யிலே இருக்கும் ஐரோப்பாவிலே, ஐம்பதுக்கு மேல்பட்ட தனி அரசுகள் இருப்பது, ஷுஸ்டருக்கு மண்டைக் குடைச்சல் தரவில்லை. இந்தியாவில்தான், தனி அரசுகள் 3 ஏற்படுவது அவருக்குத் தலை வேதனையாக இருக்கிறது. இந்தியா ஒரே நாடாக இருக்க வேண்டும் என்ற தர்மோபதேசத்தை இத்துரைமகன், ஐரோப்பா விலே செய்து பார்ப்பது தானே அவ்வளவு தொலைவு சென்று தொல்லைப்படத் தேவை யில்லை, அடுத்த வீடு இருக்கிறதே அயர்லாந்து, அங்கே, காட்டுவதுதானே, இந்த உபதேசத்தை! அயர்லாந்திலே, ஒரு பகுதி. அல்ஸ்டர் என்று பிரிக்கப்பட்டுத் தனி அரசாக அமைந்திருக் கிறதே, இதனைக் கண்டு, ஷுஸ்டர் துரைக்குச சோகம் பிறக்காத காரணம் என்ன?

(திராவிட நாடு - 19.2.1944)