அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சிலம்புதந்த ‘திருநாடு’ ‘திருவோடு’ ஏந்துவதா?
நாஞ்சில் மாவட்ட மாநாட்டு நிகழ்ச்சிகளின், இறுதிக் கட்டத்தில், (50) டிச,30 ம் நாள் பொதுச் செயலாளர் சி.என்.ஏ.பேசினார். அவர் பேச்சின் மிக முக்கிய பகுதிகள் இங்கே தரப்படுகின்றன.

“நாஞ்சில் மாவட்டத் தோழர்கள், என்னிடம் வந்து இங்கு தி.மு.க.மாநாடு நடத்தவேண்டுமென்று கேட்டபொழுதெல்லாம் மறுத்து வந்தேன். ஏனெனில் அத்தகைய சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லையென்றே கருதினேன். மேலும், நாஞ்சில் பகுதியில் நமக்குள்ள ஆதரவிலே எனக்கு சந்தேகந்தான் ஏனெனில் இங்கு இயக்கப் பிரசாரம் மிக மிகக் குறைவு இதையெல்லாம் எண்ணித்தான் முதலில் மாநாடு நடத்த சம்மதம் தரவில்லை. ஆனால் இன்று இங்கு உற்சாக உணர்ச்சிப் பரவியிருப்பதைப் பார்க்கிறேன். கூடியுள்ள இளைஞர்களிடையே விழிப்புணர்ச்சியேற் பட்டு விட்டதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

நாஞ்சில் மாவட்ட மாநாடு, புதியதோர் நம்பிக்கை பிறக்கச் செய்கிறது இயக்க இலட்சியத்திற்கு புதிய வலிமையைத் தேடித்தருகிறது. இந்த மாநாட்டில் ஒழுங்கு முறையும், கட்டுப்பாடும் சிறந்து விளங்குகின்றன. இவைகளைக்காண பெரு மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாநாட்டை நடத்துபவர்கள் எல்லோரும் இளைஞர்கள், எனினும் ஆற்றல் மிக்கவர்கள் பணம் படைத்தோர் உதவி கிடையாது அவர்களுக்கு பதவிவகிப்போர் பக்கத் துணையாக நிற்கவில்லை. எனினும் தன்னம்பிக்கையோடு, தங்கள் சலியாத உழைப்பால், மாநாட்டை வெற்றிகரமாக்கி விட்டார்கள் இளைஞர்கள் அத்தகையோர் தொகை நாளும் வளரட்டும்!

நாஞ்சில் மாவட்டத்தில் தி.மு.க. மாநாடு நடக்கிறதென்றால் பலவித சந்தேகங்கள் நாஞ்சில் திருவிதாங்கூரில் ஒரு பகுதியாயிற்றே எப்படி திராவிடத்தில் சேரும்-கேரளத்தில் இடம் பெறுமா, தமிழகத்தில் இணையுமா என்றெல்லாம் எண்ணக்கூடும் புரியாமல் சங்கடப்படக்கூட நேரிடும்.

எல்லா மாவட்டங்களையும் போல இதனையும் ஒரு மாவட்டமாகவே கருதுகிறோம். அது எப்படி முடியும் என்று யோசிக்கக்கூடும். சிலர், திருவாங்கூரின் ஒரு பகுதியில் இப்பொழுது வாழ்ந்து வருபவர்களானாலும், ஜனநாயகப்படி தமிழகத்தின் ஒரு பகுதியாகத்தான் எதிர்காலத்தில் அமையும் ஆனால் கேரளப்பகுதிகளிலும் தொடர்ந்து மாநாடு நடத்தத் தயங்கமாட்டோம், மலையாள நண்பர்களின் மனமுவந்த ஆதரவு மட்டும் கிடைத்துவிட்டால்!

நமது செல்வங்கள்

ஓராண்டு காலந்தான், தி.மு.க.வின் வயதாகியிருக்கிற தென்றாலும் பத்து பேர் கூடிப்பேசி, புதிதாக முளைத்தோரல்ல, நாங்கள் முப்பதாண்டாக அறிவுப் பிரசாரம் செய்து வந்த பகுத்தறிவியக்கத்தின் கிளை-சென்ற ஆண்டு திராவிடர் கழகத்தினராக இருந்து. அபிப்பிராய பேதத்தால் விலகி தனியாக இயக்கத்தை நடத்தி வருகிறோம். பெயர்கள் இரண்டாக இருந்தாலும், பெரியார் திராவிட கழகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அறிவுப்படையின் இருபெரும் முகாம்களாக விளங்குகின்றன.

நாஞ்சில் மாவட்டத்தில் இன்னும் பல கிளைகளை ஏற்படுத்த வேண்டும். நம் பழைய கூடாரத்தைவிட்டு, வெளியேறும் பொழுது எத்தகைய வசதியுமில்லை. பணமுமில்லை எனினும் ஈடுபட்டோம் காரியம் தடைப்பட்டதா? இல்லை பணம் எப்படிக் கிடைத்தது? நமக்குக் கிடைத்துள்ள செல்வங்கள் நம் தோழர்கள் என் அருமைத் தம்பிமார்கள்! பணம் இரும்புப் பெட்டிகளிலே கிடக்கும் இந்தச் செல்வங்களோ மக்களின் இதயப் பெட்டிகளிலே நடமாடும் செல்வங்கள்! ஆகவேதான் இயக்கம் வேகமாக வளர்கிறது கொள்கைகள் பளபளப்பையடைந்துள்ளன!

நம் கொள்கைகளை மறுப்போர் தொகை குறைந்து விட்டது. நேர் மாறாகத் தூற்றுவோர் பிதற்றல் வளர்ந்துவிட்டது. இது குறையக் குறைய அது வளரும். இது இயற்கை கொள்கைகளை எதிர்த்துப் பேச, தடுத்துரைக்க எவரும் இல்லை-அவைகளை அலட்சியப்படத்தலாம், கொள்கைகள் தெளிவாகத் தெரியாததால், கேலி பேசலாம், சரியாக உணராததால், ஒழித்துவிடலாம் என்று எண்ணிக் கிடக்கலாம். அரசியல் சூதாட்டத்தில் அதிக நம்பிக்கையிருப்பதால், ஆனால் எதிர்த்து மட்டும் பேச முடியாது!

கேரளத்தார் கேட்கவில்லையே, ஆந்திரத்தார் ஆதரிக்க வில்லையே உங்கள் கொள்கைகளை என்கின்றனர். நமக்கு அவர்களும் கொஞ்சம் தொலைவு நெருங்கிப்பேச நேரமும், வசதியும் இன்னும் வாய்க்கவில்லை. ஆனால், அவர்களுக்கும் நமக்கும் மன வேற்றுமை என்று அர்த்தமல்ல. திராவிட முரசு விரைவில் ஆந்திர, கேரள, கன்னடப்பகுதிகளில் நிச்சயம் கேட்கும்.

நாமும் ‘அவர்களும்’
இவர்கள் ஒன்றோடு நிற்கவில்லையே, எல்லாவற்றையும் தொடுகிறார்களே என்று நினைக்கக்கூடும். கல்வியைப் பற்றி, மதமாசுக்களைக் குறித்து, கடவுள் நிலையை விளக்கி, காங்கிரசின் எதிர்காலப் போக்கை எடுத்துக் காட்டி ‘டெல்லி’ ஆட்சியின் கோணங்களைத் தெளிவாக்கி இப்படித் தோழர்கள் பேசியுள்ளார்கள். ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஒன்றை மட்டுமே பேசினர். சுதந்திர சுயராஜ்யம் என்றனரே ஒழிய எதுவும் கூறவில்லையே! இவர்கள் விசித்திர புருஷர்களாக இருக்கிறார்களே இவர்கள் பேசாத பொருளில்லையே என்று ஆச்சரியப்படக் கூடும்.
ஒரு ஓவியக்காரன் இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். எதிரில் திரை, பல வண்ணக் கரங்கள், தீட்டுகோல்கள், ஓவியம் தீட்டுபவர்-பிறகு சிகப்பைத்தடவுவார்-நீலத்தைக் கொண்டு நரம்பு கட்டுவார். பொறுமையாக இருந்து கடைசிவரை காத்திருந்தால்தான் திரையிலே தீட்டப்படும் சித்திரம் என்னவென்று தெரியும். ஒன்றை மட்டும் பார்த்து விட்டோடுபவர் அந்த நிறத்தை மட்டும் கூறுவார். ஆனால் பல வர்ணங்களால் ஓவியர் சித்தரிக்கும் அற்புத, ஆனந்தச் சோலை அவருக்குத் தெரியாது. அவரது தீட்டு கோலிலிருந்து ஒழுகவிட்ட சிகப்பு புள்ளிகள். வெள்ளைப் புள்ளிகள் காட்டிலே ஓடும் புள்ளிமானின் உடலிலே உள்ள புள்ளிகளாக இருக்கலாம். அதைப் போலத்தான் தி.மு.கவின் திட்டங்களைத் துண்டு துண்டாக சேர்த்துப் பாருங்கள். தெளிவடையலாம்.

நாங்கள் மிக சிக்கலான பேர்வழிகளாகக் கூடத்தோன்றும், இந்நாட்டு நெசவாளிகளைப்போல, மூன்று நூல்களைக் கொண்டு பட்டாடை தயாரிக்கும் பணியிலே ஈடுபட்டுள்ளோம். ஓரத்திலே கலை, இடையிலே அரசியல், குறுக்கிலே சமூகவியல் ஆகியவைகளைக் கொண்டு அங்கு பட்டுத்துணி நெய்கிறோம். இடையிலே தறிக் குழியிலேயே தூங்கியிருக்கிறோம்! நூல் இல்லை எனினும் எப்படியும் பெறுகிறோம். எந்தப் பாடுபட்டாலும், நம் ஆயுளிலே அந்தப் பட்டாடையை அணிந்து மகிழத்தான் போகிறோம்.

திராவிடர் என்ற சொல் அர்த்தமற்றதுமல்ல-புதிதுமல்ல! மொழியால் நால்வர், இனத்தார் ஒருவர்-அவர்களே திராவிடர். திருநெல்வேலி, பாளையங்கோட்டை மேலப்பாளையும் பகுதிகளில் வாழ்கின்றவர்களைப் பார்த்து, ‘நீங்கள் யார்?’ என்று கேட்டால், ‘நாங்கள் திருநெல்வேலி மாவட்ட மக்கள்’ என்றுதானே விடை தரவேண்டும்! அதுபோல உலகத்தின் முன் நாம் திராவிடர் எனக் குறிப்பிடப்படுவோம்.

இங்கு கூடியுள்ளோரில் யார் கேரளர், யார் தமிழர் என்று எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. ஆனால், ஒரு குஜராத்தியைக் கண்டுபிடித்து விடலாம். அவன் உடையாலே, வெள்ளையனைக் காண முடியும், நிறத்தாலே நீக்ரோ என்று சொல்ல முடியும். தடித்த உதட்டால், மங்கோலியனைக் காட்டமுடியும். வட்டவடிவமான முகத்தால் ஜப்பானியனைக் காண்பிக்க இயலும், குள்ள வடிவால் சீனனைக் காட்ட முடியும். விசித்திர மூக்கால் சிலோனியனைப் பிரிக்கமுடியும், அவனது விசித்திர சட்டையலங்காரங்களால்! ஆனால், திராவிடரைப் பிரித்துக் காட்டமுடியாது. மொழியாலன்றி!

கலாசாரத்தால் பண்பால், பழக்க வழக்கங்களால், உடையால், உள்ளத்தால் ஒருவரே, திராவிட இனத்தவர். வித்தியாசம் சிறுசிறு அளவிலிருக்கலாம். அது காடைக்கும் கவுதாரிக்குமுள்ளதைப் போல, கிளிக்கும் புறாவுக்குமுள்ளதைப் போல, மைனாவுக்கும் குயிலுக்கும் உள்ளதைப்போல! மலையாளி குயிலாக இருக்கலாம். தமிழன் மைனாவாக இருக்கக்கூடும். ஆனால், வித்தியாசம் குயிலுக்கும் கோட்டானுக்கும் உள்ளதைப்போலல்ல-வல்லூறுக்கும் புறாவுக்கும் உள்ளதைப் போலல்ல இதை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

சேரநாடுதான் இன்று கேரள நாடாக இருக்கிறது என்பதை எவரும் மறுக்கமுடியாது. தங்களை மலையாளிகள் என்று கூறிக்கொள்வோர் அனைவரும் சேர பரம்பரையினரே. நல்லதொரு தமிழ்க் காப்பியம் தந்த இளங்கோவடிகள் இங்கே உலவினார். அவர் தந்த சிலப்பதிகாரத்தைக் கேரளம் மறந்தாலும் தமிழகம் மறக்கவில்லை. ஆகவேதான் திராவிடர்கள் என்றாவது ஒருநாள் ஒன்றுபட்டே தீர்வார்கள் என்ற நம்பிக்கையோடு பணியாற்றுகின்றோம். ஆகவே திராவிடர் என்ற சொல் கற்பனையல்ல. கனவுலக கண்டுபிடிப்புமல்ல காவியத்தில் உள்ள சொல்-சரித்திரத்திலே வருகிற பெயர்-இனத்தின் பண்டைய நாள் பெயர் அந்தப் பெயரைத்தான் சொல்கிறோம், அரசியல் சூதாட்டப் பெயரையல்ல!

நாஞ்சில் மாவட்டத் தமிழர்களுக்கு அதிகப் பொறுப்புகள் உள்ளன. அவர்கள் தான் கேரளத் தோழர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்றுள்ளார்கள். அவர்கள் மலையாளத்தாரும் புரிந்து கொள்ளும் வகையில் நம் இயக்கக் கருத்துகளை சிறு சிறு துண்டு வெளியீடுகள் மூலம் விளக்கவேண்டும். மருட்சி ஏற்படாத வகையில், குழப்பம் சூழாத வகையில் அதற்காகக் கொள்கைகளை விட்டுக் கொடுக்கச் சொல்லவில்லை. சிறிது சிறிதாக விளக்குகள் என்கிறேன். அத்தகைய ஆர்வம்மிக்க இளைஞர்கள் ஆயிரமாயிரமாக இங்கு கூடியுள்ளனர். ஆகவே, மலையாள, நண்பர்களுக்கு ஏற்படுகிற சந்தேகங்களைப் போக்கும் கடமை அவர்களுடையது என்று அறிவித்துக்கொள்கிறேன்.
பரவாதது, ஏன்?

திராவிட நாட்டுப் பிரச்சினை, தமிழ் நாட்டில் தான் பேசப்படுகிறது என்று கேட்பர். இதனாலேயே மற்றவர்கள் ஆதரிக்கவில்லையென்று அர்த்தமில்லை கேரளத்தார் சம்மதம் கிடைக்கவில்லை. இன்னும் கேட்காததால், கன்னடத்தார் ஒப்புதல் வரவில்லை, அவர்களைக் காணாததால், ஆந்திரத்தார் ஆதரவு பெறவில்லை. அவர்களை அணுகாததால்! கேட்டு மறுத்ததில்லை. நாம் சொல்லி எதிர்த்ததில்லை. பழகி அவர்கள் வெறுத்ததில்லை அப்படியே மறுப்பதாக வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், திராவிட நாடு எல்லை குறையுமே தவிர, பிரச்சினை மறைந்து விடாது. சாகிற நேரத்தில் திராவிடநாடு பிரஜையாகவே சாவோம் என்பது மட்டும் நிச்சயம். இதற்குக் காரணம் படைபலமா என்றால் இல்லை-வெளிநாட்டு உதவியா என்றால் இல்லை. அதற்கான காரணங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கின்றன. மாகாண மக்கள் அனைவரும் புரிந்தும் கொண்டனர். விழித்தும் கொண்டனர். மாகாண ஆட்சியாளரும் மனங் குமுறியபடியே உள்ளனர். சொன்னால் நேரு கோபிப்பார் பிரசாத் பதறுவார்... இப்படி எண்ணி அடங்கியிருக்கின்றனர். ஆகவே இத்தகைய பீதியால், மருட்சியால் வாய்மூடி யிருக்கிறார்கள். பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும். ஆம் அத்தகைய நிலை பிறக்கத்தான் போகிறது. சொல்லத்தான் போகிறார்கள். இது கேலிப் பேச்சல்ல, கற்பனைச் சரக்கல்ல, அரசியல் தந்திரமல்ல-உண்மை!

மலையாளிகளை நசுக்கவே, தனிநாடு கேட்கிறார்கள், தமிழர்கள். இப்படியும் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அது தவறு மட்டுமல்ல, பயங்கரப் பித்தலாட்டம். திராவிடக் கூட்டாட்சி அவரவர் உரிமை. கலை, மொழி இவைகளில் கை வைக்காது, அங்கங்கே அந்தந்த வட்டாரமொழிகள் பயிலப்படும் அகில உலக தொடர்பிற்குக் கூட்டாட்சி விவகாரங்களுக்கும் ஆங்கிலம் இருக்கும்.
தனிநாடு என்கிறார்களே-அதற்கான தகுதிகள் நமக்குண்டா? என்கிறார்கள். முதற்காரணம் நம் விருப்பம்! காரணம் சொல்லத் தேவையில்லை. நாம் குற்றவாளியில்லை. நீதிக்கூடாரத்திலே நிற்பவர்களுமல்ல-தனியினம், ஆண்டவர்கள், தன்னாட்சியை இன்று இழந்தவர்கள், ஆகவே, தனிநாடு பெறுவோம் என்பது நம் இதய கீதம் இதற்குவாதமே தேவையில்லை.

நாம் நாட்டைப் பெறும் வீரம் உள்ளவர்கள்-நாம் யோகம், யாகத்தை நம்பியவர்களல்ல-நாம் வர்ணாஸ்திரம், அக்கினியாஸ்திரம் பெற்றுத்தான் வெற்றிபெற்றவர்களல்ல! சேரன் செங்குட்டுவன் அன்றொருநாள் இமயம்வரை சென்றான். அதற்காக யாகம் செய்யவில்லை. ஆரியர்கள் தமிழரைப் பழித்துப் பேசுகிறார்கள் என்றவுடன் சேரன் செங்குட்டுவன் கண்களிலே கடுங்கோபம். அவனது தோள்வலிமையிலே அவனுக்கு அபாரநம்பிக்கை. ஆகவே முழக்கமிட்டான். சிங்கத்தின் கூட்டமெனப்படை கிளம்பி விட்டது. கங்கைக்கரையிலே கனகவிசயரைச் சந்தித்தனர். கல்லேற்றினர். அவர்கள் வாளை, அவர் தம் தோளை நம்பியே, எதிரிகளை, தங்கள் தாளிலே விழச்செய்யமுடியும் என்ற உறுதி கொண்டவர்கள் ஜபமாலையை நம்பி யாரும் வாழ்ந்ததில்லை.
திராவிடநாடு சிறுநாடு என்று கூறுகிறார்கள். நாஞ்சில் மாவட்ட அளவுள்ள நேபாளத்தின் உரிமை பற்றி நேரு பேசுகிறார். திபேத் பிரச்சினையை அலசுகிறார். பூட்டான், பெர்ஷியா இன்னும் எத்தனையோ சின்னஞ் சிறுநாடுகள் தனித்து வாழ்கின்றன. ஆனால் சகல தகுதிகளும் உள்ள திராவிடநாடு அந்நியருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கக் வேண்டுமென்கிறார்கள்!

என்னுடைய பொருளை ஒருவரிடம் ஒப்புவிக்க வேண்டுமானால், ஒன்று அந்த ஆள் யோக்கியராக இருக்க வேண்டும். இன்றேல் என் பொருளைக் காக்கும் வல்லமையாவது உள்ளவராக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் திரும்பித் தருவார் என்ற நம்பிக்கையாவது, இருக்க வேண்டும். தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத வடநாட்டிடம் எப்படி, நம் அருமைத் திராவிடத்தை ஒப்படைப்பது? அதனால் தான் திராவிடநாடு கேட்கிறோம்.
பொதுதான்; ஆனால்!

உலகம் பொதுதான். எனினும் நாட்டுக்கு நாடு எல்லையிருக்கிறது. முதல் வீட்டு மேனனும் பக்கத்து வீட்டு பணிக்கரும் நாள் முழுவதும் உறவாடுகிறார்கள். பேசுகிறார்கள். பணியாற்றுகிறார்கள்! இருந்தாலும் இரண்டு வீட்டிற்கும் சுவர் இருக்கிறது. அது மட்டுமா, இரவு பத்துமணிக்கு மேல் படுக்கப போகிறவர் தெருக்கதவைச் சாத்தித் தாளும் போடுகிறார். ஏன்? இது விரோதத்தின் அறிகுறியா-இல்லை உரிமையின் எல்லை இதனால் ஒருவரையொருவர் திருடர் என்று எண்ணுகிறார்களா, இல்லையே! ஒரு வீட்டிற்கு முன்னும், பின்னும் கதவுகள் ஏன்? தாழ்ப்பாள்கள் ஏன்? ‘காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா’ என்று பாடுபவரும் கதவை இழுத்துச்சாத்தடா’ என்று தானே உத்திரவு போடுகிறார். ஆனால் நம் வாதங்களை மறுக்கமுடியவில்லை. தூற்றுகிறார்கள். அதனால் தளர்ந்து விடமாட்டோம். சகிப்புத்தன்மை நமக்கு ஏராளம் உண்டு என்பதை அவர்கள் உணரவேண்டும்.

புதிதாக டாக்டர் வருகிறார் ஊருக்கு-நோயாளிகள் அவரிடமே அதிகமாகச் செல்கின்றனர். அதற்கு முன் அங்கு ‘ஏகராஜா’ வாக இருந்த சித்தவைத்தியருக்குக் கோபம் வரத்தானே செய்யும். அவரிடம் இருக்கும் சூரணம், செங்கல்தூளாயிற்றே, அவர்தரும் மூலிகை, புறக்கடையிலே இருக்கும் கீரைகள்தானே என்ற இவை நினைவிற்கு வருவதில்லை! ஆமாம், பழைய செல்வாக்கை இழந்து சரிந்துகொண்டிருப்பவர்களுக்கு புதிதாக வளர்ந்திருப்போரைப் பார்த்தால் வயிற்றெரிச்சல் வரும். ஆகவே நம்மைத் தூற்றுகிறார்கள்.

இங்கு மாநாடு கூடியிருக்கிறோம். பணம் படைத்தோர் இல்லை. பெரிய மிட்டா மிராசுகள் இல்லை. ஜரிகைத் தலைப்பாகைகள் இல்லை. மோட்டார் வரிசையைக் காணோம். வெளியில்! பந்தலில் அலங்காரப் பஞ்சமிருக்கலாம் அறிவுப் பஞ்சம் மட்டுமில்லை!

சிலர் இப்பொழுது நம்மைத் தூற்றுவதையே தொழிலாகக் கொண்டு திரிகிறார்கள். அத்தகைய வசைமொழிகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும். எதையும் தாங்கும் இதயம் வேண்டும். அவர்கள் ஏன் தூற்றுகிறார்கள். தெரியுமா? அப்படிப் பேசுவதால் நம் தோழர்கள் ஆத்திரத்தினால் சண்டைக்கு வருவார்கள். அதைக்கொண்டு 144 தடையுத்தரவு போடலாம். பிறகு இம்மாதிரிக் காரணங்களைக் காட்டி, இயக்கத்தையே சட்ட விரோதமாக்கலாம் என்று திட்டமிட்டு செய்கிற சதிவேலை.

ஆந்தை அலறுகிறது என்பதற்காக மனிதர்கள் சண்டைக்குப் போவதில்லை. நரி ஊளையிட்டால், அதனைத் தடுக்க எவர் முயற்சி செய்வர்? சந்திரன் பூரண ஒளி வீசும்பொழுது பலருக்குப் பல எண்ணங்கள் உண்டாகலாம். ஆனால் திருட்டு எண்ணமுள்ளவனுக்கு இருட்டு இல்லையே என்ற ஏக்கத்தால் நிலவைக் கடிந்துரைப்பான். அதுபோல நம் வளர்ச்சியைக் காணும்பொழுது வாழ்விழந்தவர்கள் சிலர் தூற்றுகிறார்கள். அவர்கள் அதைத்தான் பேசுவார்கள், பேசமுடியும் பேசத்தெரியும். அவர்கள் திட்டந்தீர்ந்துவிட்டது. ஆகவே சில்லறைகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது.

வசைமொழிகளால் நாம் ஒழிந்து விடுவோம் என்றால், ஜின்னாவைப் பாருங்கள். பேனா எடுத்து எழுதத் தெரிந்தவர்கள் எல்லோராலும் தாக்கப்பட்டவர், பேனா பிடித்தவர்கள். அனைவராலும் பிரபந்தம் பாடப்பட்டுபோற்றப்பட்ட காந்தியாரே, நேரில்வந்து பிறகு பேசவேண்டியதாயிற்று! ஆகவே தூற்றல் நம்மைத் துளைத்து தூளாக்கிவிடாது.

சுதந்திரம் பெற்றவர்கள் நாம் இவர்கள் யார் எங்களைத் தட்டிக் கேட்க என்ற பல்லவியை எங்கும் இவர்கள் பாடுகிறார்கள். இவர்கள் கஷ்டப்பட்டார்கள். ஒத்துக்கொள்கிறோம். பகவத்சிங் தூக்குமேடை ஏறினார். அலிபுரம் சிறையில் அவதிப்பட்டார்கள், அடிபட்டார்கள், உதைபட்டார்கள், சிறைக் கொடுமைகளைத் தாங்கிக்கொண்டார்கள். திருப்பூர்குமரனைப் பலியிட்டார்கள்-எல்லாம் நமக்குத் தெரியும். ஆனால் சுலபத்தில் பெற வேண்டியதை கடினமாக்கிக் கொண்டுவிட்டார்கள்! ஜின்னா ஆடை நலுங்கவில்லை. சிகரெட் புகைப்பதைக் கூட நிறுத்தவில்லை வளைந்து குழைந்து எவரிடமும் பேசவில்லை. தனது ராஜதந்திரத்தால் அட்லாஸையே மாற்றியமைத்தார். இதற்கு இரத்தம் சிந்தவில்லை. ராஜ தந்திரத்தைக் கொண்டே சாதிக்க முடியாததைச் சாதித்தார். இவர்களோ கஷ்டப்பட்டார்கள். கஷ்டப்பட்டும் கேட்ட இந்தியா கிடைக்கவில்லை. பட்ட கஷ்டத்திற்கு பாராட்டுகிறோம். பெற்ற சுதந்திரத்தை நன்முறையில் நடத்தவேண்டும் என்கிறோம். வேறு பல சுதந்திர நாடுகளில் இம்மாதிரி எதிர்ப்புப் பிரசாரம் செய்கிறவர்களை சுட்டிருக்கிறார்கள். நாங்கள் விட்டு வைத்திருக்கிறோம் என்கிறார்கள். சுடாததற்குக் காரணம் ஜனநாயக உரிமை தருவதற்காகவல்ல, துப்பாக்கிப்பிடிக்கும் பழக்கம் இன்னும் வராததால்! ஆனால் அவர்கள் சுடப்பழகிக்கொள்கிற பொழுது நாங்கள், குண்டு பாய்ந்தாலும், மார்பைத் துளைக்காத மார்க்கம் காண்கிற அளவு வளர்ந்துவிடுவோம்.

சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள் என்பதற்காக, எங்கள் வாழ்வைச் சூறையாடவும் அனுமதிக்க முடியுமா? வீடு கட்டுகிறான் கொற்றன் அதற்காக மாலையிடுவோம், மரியாதை செய்வோம். பரிசு தருவோம் ஆனால் மறுநாள் இரவே கையில் கன்னக்கோலோடு வந்து திருட முயற்சி செய்தால் விடமுடியுமா?

சுயராஜ்ய கர்த்தாக்கள் இவர்கள் என்றாலும், வாழ்வை நசுக்க அனுமதிக்க முடியுமா?

இவர்களிடம் வீரமில்லையென்பது மட்டுமல்ல ஆளும் விவேகமும் இல்லை. நிர்வாகத்திறமையில்லை என்பதற்கு எவ்வளவோ உதாரணங்கள். கிடைத்த நேரத்தை மிருகம் சாப்பிடும்-தேவைப்பட்ட நேரத்தில் உண்பான் மனிதன். இவர்கள் ஆட்சியில் மனிதன் மிருகமாகிறான். ஒரு விஷயத்தில் மட்டுமல்ல. உணவு, உடை, சகலவசதிகளிலும் இதே நிலை ‘டெல்லி’ மந்திரிகளுக்கோ ஆளவும் தெரியவில்லை ஒரு உதாரணம் பாருங்கள். ஜீப்கார்ளுக்கு ‘ஆர்டர்’ தந்தார்கள். 250 கார்கள் மட்டும் வந்தன. மற்றவை வருமுன் அந்தக் கம்பெனி கலைக்கப் பட்டுவிட்டதாம். இப்பொழுது அதுபற்றிய விசாரணை நடத்த ஒரு கமிட்டியாம். இதற்கு எவ்வளவு இலட்சங்கள் செலவு? இவர்களிடம் தான் நம் திராவிடநாடு சிக்கிக் கொண்டுள்ளது என்று நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது.

பாகிஸ்தான் தனக்குக் கிடைக்கும் சணலைக்கொண்டு, உலகத்திடம் செல்வாக்கு தேடுகிறது. திருவாங்கூரில் கிடைக்கும் ரப்பரைக் கொண்டு அத்தகைய பெருமையடைய முடியும். ஆனால் இந்தியாவோ பேராசைக்கார அமெரிக்காவின் முன்னோடும் பிள்ளையாக இருக்கிறது. ஆகவே திகிலோடு வாழ வேண்டியுள்ளது.

நா திராவிட நாடு பிரிந்தால் இன்னின்ன நன்மைகள் என்று சொல்கிறோம். அதுபோல், திராவிடநாடு கூடாது என்பவர்கள் சேர்ந்திருப்பதால் உள்ள நன்மைகளைச் சொல்லட்டும்-பிரிந்தால் வரும் நஷ்டங்களை எடுத்துக் காட்டட்டும். இங்கே எல்லாம் வடநாட்டு சாமான்கள் ஆணிமுதல், பெரிய தண்டவாளங்கள் வரை டாடாவினுடையது சிமெண்ட் டால்மியாவுடையது. பஜாஜ், பிர்லா ஆடை இப்படி எல்லாம் அவர்கள் பொருள்களுக்கு திராவிடநாடு ‘மார்க்கட்டாக’ மாறிவிட்டது. மூலப்பொருள்கள் எல்லாம் வடநாட்டுக்குப் போய்விடுகின்றன. ஆகவே தொழில் வளம் இல்லை எனவே தொழிலாளிக்கு வேலையில்லை. இங்கு ஒரு நீக்ரோ குப்பை கூட்டுகிறானா? ரிக்ஷா இழுக்கிறானா? சேரன் வழி வந்தோன். பாண்டியன் பரம்பரையினர் என்று பாராட்டப்பட்டோர். சோழ மன்னரின் சந்ததியினர் என்று உயர்த்திப் பேசப்பட்டோர் சிலோனில் சேனாநாயகாவின் கேலிச் சவுக்கடிக்கிடையே ரிக்ஷா இழுக்கிறானே! தென்னாப்பிரிக்காவிலே திகிலோடு வாழ்கிறானே! பர்மாவிலே பதைப்பதைப்போடு உலவுகிறானே! ஏன்? பஞ்சாபியோ, குஜராத்தியோ அங்கு இழிதொழில் செய்யவில்லையே. வட்டிக்கடை வைத்திருப்பதைத் தவிர, வடநாட்டினர் இங்கு வாழ்கின்றனர். நாட்டுக் குடையோரோ, கடல் கடந்து தூரதேசங்களில் கூலிகளாய் உழல்கிறார்கள்! ஏன்? இருவரும் அந்நிய நாட்டிலே தானே உலவுகிறார்கள். தரித்திரம் என்றால் சிலரைத் தேள் போலக் கொட்டுவதும், வேறு சிலருக்குத் தேன்புட்டியாவதும் ஏனோ? இந்த சூதின் காரணம் என்ன?

முதலாளி, பெரிய மார்க்கட் தேடுகிறான். நேரு முதலாளியில்லை பெரிய நாடு கேட்க! எனினும் தொழிலாளிகள் விஷயத்தில் அவரது சர்க்கார் முதலாளியாகவே நடந்து வந்துள்ளது. வெட்கம், துளியுமின்றி, பயம் சிறிதுமின்றி, தொழில்களை தேசீய மயமாக்கப் போவதில்லையென்று சொல்லி விட்டார்கள். ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை நாட்டினில் என்று பாடியவர்கள் அவர்கள்!

இத்தகைய நிலைமைகளை ஆய்ந்தோய்ந்து பார்ப்பவர்கள் எவரும் இந்திய ஆட்சி தென்னாட்டிற்குத் தேவையென்று சொல்ல மாட்டார்கள். திராவிட நாடு பெறுவது நம் பிறப்புரிமை தடுத்துப் பேச பலம் இருக்கலாம். அவர்களுக்கு ஆனால் அதிகாரம் கிடையாது. அவர்களுக்கு நம் உரிமையைப் பறிக்க முடியாது!” என்று கூறி தன் உரையை முடித்தார்.

(திராவிடநாடு 7.1.51)