அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சின்னான் சினிமா பார்க்கிறான்

“சின்னானை, அழைத்துக் கொண்டு சினிமா போயிருந்தேன். பழைய புராணக்கதைத்தான், ஆனால் படம் புதிது.

“இமாங்க! இது எப்படிப் படமாக்கிக் காட்டுகிறாங்க” என்று கேட்டான் சின்னான்.

“இவர்களெல்லாம் இடுவார்கள் ஒரு இடத்திலே வேஷம் போட்டுக் கொண்டு, அதைப் போட்டோ எடுக்கிறார்கள். அதுபோலவே சத்தத்தையும் சேர்த்து, வேறோர் மெஷின் மூலம் நமக்கெல்லாம் காட்டுகிறார்கள்” என்று நான் சொன்னேன்”.

“என்னென்னமோ அதிசயமெல்லாம் நடக்குது இந்த நாளிலே” என்றான் சின்னான். அந்தச் சமயத்திலே இராமருடைய பாததூளிபட்டுக் கல்வெடித்து அகலிகை வெளிப்பட்ட காட்சி நடந்தது. ஏன் பக்கத்தில் இருந்த ஒருவர், சின்னானைச் சீண்டிவிட்டு, “அதிசயம் நடக்குது என்று சொன்னாயே அப்பா! இப்பதான் அதிசயம்னு நினைச்சுக்காதே. பார்த்தயேல்லோ, கல்லு வெடிச்சு அகலிகை வந்ததை, இது அந்த நாளிலே நடந்தது நம்ம நாட்டிலே, இது அதிசயமில்லையோ” என்று சொன்னார் வெற்றியுடன். பளீர் என்று பதில் சொன்னான் சின்னான், நானே திடுக்கிடும்படி, அதிசயம் சரிங்க! ஆனா அது சாமி இல்லவா செய்யுது, ஐயா சொல்ற அதிசயமெல்லாம், மனுஷங்க, நம்மைப்போல இருக்கறவங்க இல்லவா செய்யறாங்க. சாமி எதையும் செய்வாரு. மனுஷனும் செய்யறானே, அதுதானே அதிசயத்திலும் அதிசயமாக இருக்கு” என்றான். சின்னானைச் சீண்டியவர், வாயை மூடிக் கொண்டார்.

தேவலோகக்காட்சி நடந்தது, சின்னான் வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். “ரொம்ப ஜோராக இருக்குதங்க தேவலோகம்” என்று பூரிப்புடன் கூறினான். “இதைவிட ஜோரா செட்டிங் காட்டுவார்கள் சென்ட்ரல் ஸ்டூடியோ படத்திலே” என்று நான் சொன்úன்ன. “செட்டிங்களா?” என்று கேட்டான் சின்னான். தேவ லோகம் போலே, ஜோடிச்சுத்தானே போட்டோ எடுக்கணும். அதனாலே ஒரு சினிமாக்காரர் தேலோகத்தைக் காட்டுவதுபோலே இன்னொரு சினிமாக்காரன் காட்டுவதில்லை. ஒவ்வொரு சினிமாக்காரருக்குள்ளே போட்டி ஏற்பட்டுத் தேவலோகம் வரவர ரொம்ப ஜோராகிவிட்டது என்று நான் சொன்úன்ன.

“ஒரு சந்தேகங்க எனக்கு. இவங்க இந்தத் தேலோகம் கைலாசம் இதெல்லாம் படத்திலே காட்டுகிறாங்களே.....” என்று சின்னான் இழுத்தான், எனக்குச் சிரிப்பு, “இந்த லோகத்துக்கெல்லாம் இவர்கள் போய்வந்தார்களா என்று கேட்கறியா? என்றேன், “நீங்க ஒரு வேடிக்கைக்காரருங்க! நான் என்ன அவ்வளவு முட்டாளா? அங்கே எல்லாம் செத்தாதானே போக முடியும்! அதுகூடவா எனக்குத் தெரியாது. நான் அதைக் கேட்கலே, தேவலோகம் இதெல்லாம் இப்படி இப்படி இருக்கும்னு இவங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது? என்றுதான் கேட்க ஆசைப்பட்டேன்” என்றான். “ஏன்! புத்தகத்திலே இருக்குது வர்ணனை, அதுபோலவே இவர்கள் ஜோடிக்கிறார்கள்” என்றேன் நான். சின்னான் திருப்தி அடையவில்லை. “புத்தகத்திலே இருக்குதுங்க, எனக்குக்கூடத்தான் அண்ணக்கி, காலட்சேபத்திலே ஐயரு சொன்னது கவனம் இருக்குது. புஸ்தகம் எழுதினவனுங்களுக்கு மட்டும் எப்படித் தெரிஞ்சுது” என்று கேட்டான்.

“என்னமோ தெரிந்ததுபோலத்தான் எழுதினார்கள்” என்றேன் நான். சின்னான் யோசனையிலேயே மூழ்கினான், என்ன யோசிக்கிறே சின்னான்? என்று நான் கேட்டேன். “ஒண்ணுமில்லை, பார்க்காமே கொள்ளாமே எப்படி இதை எல்லாம் இப்படி இப்படி இருக்குதுன்னு எழுதுறாங்கன்னுதான் யோசிச்சேன். என்றான். “எப்படி எழுதினா, யாரு சின்னான் அவர்களைக் கேட்கப் போறவங்க! இப்ப நாய்னு சொல்லி கன்றுக்குட்டியைக் காட்டினா, நீ காரித்துப்புவே. ஏனென்றால், நீ நாயையும் பார்த்து இருக்கிறதே, கன்றையும் பார்த்து இருக்கிறதே. தேவலோகம்னு சொல்லி, எந்த மாதிரி ஜோடிச்சுக் காட்டினா என்ன? யாரு, இப்படியா தேவலோகம் இருப்பது, என்று கேட்க முடியும், யாரு இருக்கறாங்க அங்கே போய்வந்தவங்க. இருந்தாத்தானே போய்வர! என்றேன் நான்.
“அதைச் சொல்லுங்க! சுத்தப் புளுவு இந்தத் தேவலோகம் கைலாசம் அது இதுன்னு எழுதி வைத்துகிட்டது” என்று சின்னான். சு.ம. பிரச்சாரமே செய்யத் தொடங்கினான்.

(திராவிடநாடு - 17.2.46)