அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சிந்தனைக்கு...

நான், அறியாமை, நம்பிக்கை என்ற உயிரற்ற அமரிக்கையைவிட, எண்ணம், துணிவு, செயல் என்ற புயல் காற்று, அமளி, சண்டமாருதம், இவைகளை விரும்புகிறேன்.

மனித சிந்தனை ஏதாவது பயனுடைத் தாயிருக்க வேண்டுமானால் சுதந்திரமுள்ளதாக இருக்க வேண்டும். பயத்தினால் மூளை கட்டுப் பட்டுப் போய் விடுவதால் தானாக விசாரித்துப் பொருள்களை ஆய்ந்து முடிவிற்கு வருவதற்குப் பதிலாக மற்றொருவர் சொல்வதை அப்படியே நடுக்கத்துடன் ஒப்புக் கொள்கிறது.

சந்தேக உதயமே முன்னேற்றத்திற்குக் கர்ப்பமாகவும், தொட்டிலாகவுமிருந்தது. அதிலி ருந்து மனிதன் முன்னேற்றமடைந்து கொண்டே யிருக்கிறான்.

பகுத்தறிவாளர் கொள்கையில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதுதான் இவ்உலகத்திற்குத் தக்க புனிதமான இயக்கமாகும். மனோ வளர்ச்சிக்கும், அறிவுப் பொருளின் சேமிப்புக் கும், மூட நம்பிக்கையின் பாற்பட்ட பயத்தினின்று மனிதன் தன்னை விடுவித்துக் கொள்வதற்கும், இயற்கைச் சக்தியின் அனுகூலங்களை மனிதன் அடைந்து கொள்ளுவதற்கும், அவைகளின் மூலமாக உலகை அலங்கரித்துப் போஷிக்கவும், பகுத்தறிவுக் கொள்கையே பொருத்த முடையதாகும்.

சமுதாயத்தின் தளர்ச்சிக்கு மக்களின் வைதீக வெறியே காரணம்.

பயமே பலி பீடம் கட்டுகிறது. பதவியும் கொடுக்கிறது. ஆலயமேகி மனிதர் தம் தலைவணங்கச் செய்வதும் பயமே! பயமே அன்பு போல் பாசாங்கு செய்வதும்.

மதம் மனிதனுக்கு வேண்டிய தன் மதிப்பு, மனிதத் தன்மை, சுதந்திரம், தைரியம், தன்னம் பிக்கை இவைகள் போன்ற சுயேச்சை எண்ணங் களை எண்ணப் போதிப்பதில்லை. மதம் மக்களை அடிமையாக்கி, கடவுளை எஜமானாக்குகிறது. ஆனால் கற்பிக்கப்பட்ட எஜமானாகிய அந்தக் கடவுள், மக்களை அடிமைத் தளையால் நிரந்தரமாகப் பிணைக்க அவ்வளவு ஆற்றல் உள்ளவரல்லர் என்பது மாத்திரம் திண்ணம்.

மதமென்பது மக்களை மயக்கும் ஓர் பைசாசம்.

மக்கள் துயரமடைவதற்கும், நாட்டில் பல அநீதிகள் நிகழ்வதற்கும் மதங்களே காரண மாகும்.
கடவுளை நேசிப்பதைவிட மனிதர்களை நேசித்தால் சாலச் சிறந்தது.
- இங்கர்சால்

செயலுக்கு!

1. உங்கள் ஊர் வைதிகக் குடும்பங்களில் ஒரு வருஷத்தில் சுமார் எவ்வளவு பணம் செலவிடுகிறார்கள்? உங்கள் ஊர் கோயில் களிலே ஆண்டுதோறும் எவ்வளவு பணம் செலவாகிறது? என்ற கணக்கைச் சேகரம் செய்து, காஞ்சித் திராவிடர் கழகத்துக்கு அனுப்புங்கள்.

2. உங்கள் ஊரிலே, ஜனத்தொகை என்ன? கல்விச் சாலைகள் எத்தனை உள்ளன? ஆண்டு தோறும் எவ்வளவு பணம் கல்விக்குச் செலவாகிறது? மாணவர்கள் தொகையிலே, பார்ப்பனர் எவ்வளவு, மற்றவர் எவ்வளவு? ஆசிரியர்களிலே பார்ப்பனத் தொகை என்ன? என்ற புள்ளி விவரம் சேகரித்து எமக்குத் தெரிவிக்கவும்.

3. உங்கள் ஊர்ச் சேரியிலே ஜனத் தொகை என்ன? அங்கு பள்ளிக்கூடம் உண்டா? வைத்ய வசதி உண்டா? குடிதண்ணீர் வசதி உண்டா? என்ற விவரத்தை நேரடியாகப் போய்ப் பார்த்து எமக்கு எழுதியனுப்புக.

4. வாரத்திற்கொருமுறை, நமது இயக்கப் பத்திரிகைகளை, படிப்பறியாதாருக்கும், பத் திரிகை வசதி இல்லாதவருக்கும், ஒரு பொது இடத்திலே அவர்களைக் கூட்டிவைத்துப் படித்துக் காட்ட வேண்டும், ஆரம்பத்தில் ஆட்கள் சேருவது கஷ்டமாக இருக்கும். பிறகு, மக்கள் கூடுவர். தெளிவாகப் படித்துக் கூறும் தோழர்கள் இந்தக் காரியத்தில் ஈடுபட வேண்டும்.

5. உங்கள் ஊரில் படித்துவிட்டு வேலை யின்றி இருக்கும் பார்ப்பனர் தொகை என்ன? பார்ப்பனரல்லாதார் தொகை என்ன? என்ற புள்ளி விபரத்தைச் சேகரித்து அனுப்புங்கள்.

6. உங்கள் ஊரிலே நிலச்சுவான்தாரர்கள் எவ்வளவு தொகை? நிலமே இல்லாதவர்கள் எத்தனை பேர்? என்ற புள்ளி விவரம் சேகரியுங் கள்.

7. உங்கள் ஊர், சர்க்கார் நிலையங்கள், பாங்கிகள், நகர சபைகள், ஆஸ்பத்திரி முதலிய வற்றிலே, வேலையிலிருப்போர், என்ன்னென்ன வகுப்பினர் என்ற விவரத்தைத் திரட்டித் தாருங்கள்.
தோழர்களே! உங்கள் ஓய்வு நேரம் பொதுப்பணிக்குப் பயன்படடும்!

(திராவிட நாடு - 3-10-1943)