அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சிறைச்சாலை என்ன செய்யும்?

ஆணவம்
இந்த சூத்ராளுக்கு வேறுகதி ஏதுங்காணும்! நம் பாத பூஜைதானே அவாளுக்குப் பகவத் பிரசாதம். நமக்குச் சேவை செய்யத்தானே, அவா சிருஷ்டிக்கப்பட்டா.

கிலேசம்

ஏங்காணும்! இந்தச் சூத்ரப் பயல்கள் சொத்து சுதந்திரம் தேடிக்கொண்டா. சூரத்தனமா காரியம் நடந்தறா. நம் யாக யோகாதிகளுக்கு அவா தயவை நாட வேண்டி நேரிட்டுவிட்டது காலம்போற கோக்கைப் பார்த்தீளோ!

சஞ்சலம் கலிகாலமன்னோ! பாருமே, இந்தச் சூத்திரப்பயல்கள் பண்ற காரியத்தை! நீ என்ன ஒசத்தி நான் என்ன மட்டம் என்று சட்டம் பேச வந்துட்டா. தர்க்கம் பண்றா ஓற், தர்க்கம்! முகத்திலேந்து நீ குதிதாயோன்னு கிண்டல் பேசறா! கும்பல் கூடிக்கூடி, நம்மை கேலி செய்யறா! தலைகீழா மாறும் போலிருக்கே ஆசாரம்; பக்தி, சேவா சிந்தனை, ஒண்ணும் காணோம். நீ யார், நான் யார், நீ என்ன அதிகாரம் செய்வது, நான் என்ன கேக்கறது என்ற அளவிலே வந்துட்டா. காலம் ரொம்ப கெட்டுப்போச்சு.

அச்சம்
ஓய்! வாரும், போகலாம். அதோ வாரா பாரும, இரண்டு பேர் அவா, எதிரே நின்றோமோ, அவ்வளவுதான், பார்ப்பான் இப்படி அப்படி என்று வைவா. வாரும் போவோம். நம்ம காலம் போயிடுத்து. பலிகாலம் முற்றிவிட்டதோன்னோ. அவாளை சூத்திரான்று சொல்லப்படாது இப்போ! சொன்னா. அவா ரொம்ப ரகளை பண்றா. அடிக்கக்கூட வர்ரா ஓய்! சில பேரை அடிச்சும் விட்டாளாம். தர்மம் போயிடுத்துங்காணும். நாத்தீகாளாயிட்டா! நம்மபாடு திண்டாட்டமாயிடுத்து! ராஜ்யம் அவாளுடையதாயிடித்து. நமக்குச் சர்வமும் சூன்யமாச்சு. வாரும் போவோம்.

ஆரியர்கள், ஆதிநாட்களில், அதாவது தமது ஆதிக்கம் உச்சநிலையில் இருந்த நேரத்தில், ஆணவமாகப் பேசினார். தமிழர சிந்திக்கத் தொடங்கியபோது, மனக்கிலேசம் கொண்டனர். தமிழர்கள் ஒன்றுகூடி கிளர்ச்சி நடத்துவது கண்டு சஞ்சலமடைந்தனர். சுயமரியாதைச் சுடர் தோன்றிய பிறகு அச்சங்கொண்டனர். அந்தந்த மனப்பான்மைக் கேற்றபடி அவர்களின் மொழி இருந்தது. அதைத்தான் நான் மேலே தீட்டிக் காட்டினே. ஆரியருள்பட ஆமாம்! அப்படித்தான் இருந்தது. இருக்கிறது என்றே ஒப்புக் கொள்வர். இந்த மாற்றம், முடிவான இலட்சியமான, மானிடத்தன்மை, மக்கள் சமத்துவம், என்பதிலே வென்றிருக்கவேண்டும். செல்லாதபடி தடுத்தது எதுவென்றால், இடையே மிக மும்முரமாக, ஆரிய மூளையும், வடவாட்டு முதலும் சேர்ந்து கிப்பிய, பிடுதலைக் கிளர்ச்சி என்ற வேகமேயாகும்! மக்களின் நேரமும் நினைப்பும், அந்தப் பக்கம் திருப்பிவிடப்பட்டதால், ஆரியகான சபா புத்துயிர் பெற்று, பரமாத்மா என்ற பதத்துக்குப் பதில் பாரத மாதாவென்றும், மகரி என்பதற்கப் பதில் மகாத்மாவென்றும், மோட்ச சாம்ராஜ்யம் என்பதற்கப் பதில் சுயராஜ்யம் என்றும், பூசுராள் என்பதற்குப் பதில் தேசீயவாதி என்றும், பெயர்களை மாற்றிக்கொண்டு, தமது தேய்ந்துபோன செல்வாக்கை மீண்டும் வலிவாக்கத் தொடங்கிவிட்டனர். ஓரளவு வெற்றியும் பெற்றவிட்டனர்.

விடுதலை வேட்கை கொண்டவர்களிடம் நான் பெருமதிப்புக் கொண்டவன். அவர்களிடும் கட்டளைகள், கரும்பென இனிக்கும் என்பேன். அவர்கள் காட்டும வழி கரடுமுரடாக இருப்பினும், கல்லும் முள்ளும் கொண்டதாயினும், சரியே. கவலை இல்லை. ஆனால் வேதியக் கூட்டம் விடுதலைக்கு மார்க்கம் காட்டுகிறது என்றால், விலா நோகிறது சிரித்துச் சிரித்து! கன்னக்கோலனுக்குக் கை விளக்குக் கொடுக்கும் கதைபோல், காலமெல்லாம், கருத்தழிந்த மக்களைக் கைப்பாவைகளாக்கிக் காலந்தள்ளிய ஒரு கூட்டம், உலகம் எவ்வளவோ மாறியும் ஒரு துளியும் தான் மட்டும் மாறாமலிருக்கும் கூட்டம், வாள் கொண்ட வல்லரசுகள் கவிழ்ந்தும் வஞ்சக வல்லரசை இன்னமும வளர்த்துவரும கூட்டம், மக்களாட்சி எங்கெஞ்கும் ஏற்பட்டும மத ஆட்சியைவிட மறுக்கும் கூட்டம், முடிதரித்த மன்னரை, நிதிபத்த குபேரரை, மண்டல புருடர்களை, நில்! பதில் சொல்! நீதியே வெல்! என்று உலகில் மக்கள் கூறி, மடக்கிய பிறகும், முடிதர்த்தோரும், நிதியுடையோரும், குறுநில மன்னரும், எவரும், குனிந்தே நடக்கவேண்டும் என்று கட்டடையிட்டுக் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் கூட்டம், விடுதலைக்கு நாங்கள் வழிகாட்டிகள் என்று விளம்பிடக் கேட்டால், சிரிக்காதிருக்க முடியுமோ! ஒரு பெரிய இனத்தை, கருவிலிருக்குங் காலந்தொட்டு காடுபுகுந்த பின்னரும், தொடர்ந்து சென்று, சிறைப்படுததும் கூட்டம், உலகில், ஆரியரன்றி வேறு யர்! அவர்கள் அழைக்கிறார்கள், தமது அடிமைகளை நாட்டின் விடுதலைக்காக நாம் சிறைபுகுவோம், சட்டம் மீறுவோம், வாரீர் என்று! வெள்ளையனை விரட்டிடுவோம், விடுதலை பெறுவோம் என்று வீரம் பேசுகின்றனர. தேசீயத்திலே தவழும் தோழரொருவர், ஜஸ்டிஸ், லீக் கட்சியினர், சிறைபுகப் பயந்தே, காங்கிரசில் சேரவில்லை என்று செப்புகிறார். சரீரத்தின் மீது ஆசை இல்லாத வீரதீரரை, சிரைச்சாலை என்ன செய்யும்? என்று கொடுமுடி கோகிலம், கோழையும் வீரனாக வேண்டுமென்று குதித்தெழும் உணர்ச்சி பொங்கப் பாடிடக் கேட்ட தோழர்கள் பலர் இருப்பர்.

ஆம்! சிறைச்சாலை என்ன செய்யும்! சிந்தனையை எங்ஙனம் சிறையிலே தள்ள முடியும்! உடலை வாட்டலாம், வதைக்கலாம், உயிரைக் குடிக்க ஈட்டி முனையையோ, துப்பாக்கியையோ ஏவலாம்! உள்ளம்! அதை யார் என்ன செய்ய முடியும்? உலகில், பல்வேறு இடங்களிலே உரிமைப் போர் நடந்த காலையியில் இத்தகைய எண்ணங்கொண்டோர், வீரர், இருந்ததாலேயே வெற்றிவாடை வீசிற்று. சுயநலக்காடு அழிந்தது, சுதந்திர ஒளி வீசிற்று. சிறைச்சாலை என்றால், இன்றுள்ள சிங்காரச் சாலையல்ல,ட சான் குறிப்பிடுவது சுந்தரகாண்ட பாராயணத்துக்கும், சந்திரபிம்பவதிகளைப் பற்றிய சரசக்காதைகள் பேசிடுவதற்கும், சட்டசபை ஸ்தானங்களைப் பங்குபோடுவதற்கும், யாரைச் சாய்த்துவீட்டு எவரை உயர்த்துவது என்ற சதி தீட்டுவதற்கும், ஏகாந்தமாக இருந்து, என்னென்ன செய்து, எதை எதை அடைவது என்ற ஏற்பாடுகளை வகுப்பதற்கும், நிம்மதியான இடமாகச் செய்யப்பட்டுள்ள, இன்றைய சிறைச்சாலையல்ல! செந்தேள் போல் கொட்டி, செந்நாய்போல் கடித்து, இரத்தத்தைச் சுண்டவைத்து, உடலை உருக்கி, எலும்பும் தேய்ந்துவிடுமளவு இன்னல் சூழ்ந்தது ஏ.பி.சி. முறைகள் இல்லதது, டாக்டரும் விசிடரும் நுழைய முடியாதது, சவுக்கும் கொறடாவும் தாண்டவமாடி, இருளும் மருட்சியும் இளித்து காவலரும் சேவகரும் கடிந்துரைத்து, கலங்கவைக்கும் காவற்கூடம்! பழங்காலத்துப் பயங்கரச் சிறைக்கூடம்! பழிவாங்கும் இடம்! பதைக்கச் செய்து, சித்திரவதை புரியும் இருட்டுக்கிடங்கு!

அத்தகைய குழியில் தள்ளப்பட்டபோதும், வீரர்கள் குனிய மறுத்து, குன்றாது நின்று, குவலயத்தாரின் மேன்மைக்காக, தமது இரத்தத்தை, சதையை, ஈந்து இளமையை இழந்து, இன்னலை வரவேற்று, குடும்பத்தை மறந்து, வாழ்வை இழந்து, வதைவது கண்டும் வணங்க மறுத்து, நாமார்க்குங் குடியல்லோம் என்று கூறினதால் மட்டுமே, குன்றின் மேலிட்ட விளக்கென இன்று அவர்களின் எண்ணங்கள், கொள்கைகள், திட்டங்கள், முறைகள், ஒளிவிட்டு வருகின்றன!
பக்தர்களுக்காவது கஷ்டங்கள் ஏற்பட்டபோது, எல்லாம் அவன் செய்ல என்ற ஆறுதலும, கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற நம்பிக்கையும், அரசன் அன்று கொன்றால் தெய்வம் நின்று கொல்லும் என்ற எண்ணமும் துணை செய்தன. புராணங்களின்படி, இத்தகைய பக்தர்களின் கஷ்டத்தைப் போக்க, பரமசிவன் இடபமேறியோ விஷ்ணு கருடனேறியோ, வந்து ரட்சித்துவிடுவர்!
நாட்டு விடுதலைக்கோ, உரிமைக்கோ, மக்கள் விடுதலைக்கோ, மானத்துக்கோ, போரிட்ட வீரர்கள், வெஞ்சிறையில் வீழ்ந்தபோது, அவர்களுக்கு அத்தலோகம் தரும் ஆறுதலும் கிடையாது. அரன், அரி, ஏசு வந்து வந்து வரமளிப்பதுங் கிடையாது. இந்து மார்க்கத்தில் தவிர, ஏனைய, இஸ்லாமிய, கிருஸ்தவ மார்க்கங்களிலே கடவுள், கதை ஏந்தியோ, கத்தி தாங்கியோ, சக்கரம், சூலம், கோதண்டம் முதலிய ஆயுதங்களுடனோ இருப்பதில்லை. எனவே, பக்தர்கள் பாடுபட்டால், வாகனமேறி வந்து, சக்கரத்தை ஏவி பாவியின் சிரசைத் தூண்டிக்கச் செய்து, பக்தனே! மெச்சினேன் என் திறத்தை! பரமபதம் வா என்று அழைப்பதில்லை. ஏசுவிடம் முறையிட்டால் என்ன சொல்வார்! என்னைச் சிலுவையிலே அறைந்தது அறியாயோ! என் கொள்கைக்காக உனக்குக் கஷ்டம் விளைவித்தால், யார் என்ன செய்ய முடியும்! கொள்கையிலே உறதி இருந்தால் சுடுநெருப்பும் குளிரும்! என்றுதான் கூறமுடியும்! முகமதுவிடம் முறையுட்டால், அவர் மச்சகூர்ம அவதாரம் எடுக்கப் போவதில்லை. மெக்காமெதினா பாதையிலே என் மீது வீசப்பட்ட கற்கள் கொஞ்சமல்ல! உலகம் உன் கொள்கையின் உயர்வை உணர்ந்து பின்பற்றும் வரையிலே, உன்னைத் துன்பந்தான் தழுவும். அதைச் சகித்தலே வீரம் என்ற சன்மார்க்கமே போதிப்பார்!

நம் நாட்டு நாயன்மார்கள், பக்தர்கள், ஆழ்வாராதிகள் ஆகியோருக்கு, நஞ்சிட்டால் ஆண்டவன் அருளால் நஞ்சு அமுதமாக மாறும். வெளி உலகிலே அப்படி நேரிட்டதில்லை. சாக்ரடீசுக்குத் தந்த விஷம், திராட்சை ரசமாக மாரிவிடவில்லை! உயிரை இழந்தார். நெருப்பிலே தள்ளுவர், தாமைரையாக மாறும் தணர்! நீரிலே தள்ளுவர். மாளிகையாகிவிடும்! நமச்சிவாயா! என்றயதம் நஞ்சு அறுசுவை உண்டியாகும்! நாராயணா! என்றதும், கம்பம் வெடிக்கும். கர்ஜனையுடன் சிங்கம் வரும! அது, இங்கு, இந்து கற்பனைக்கு இடமளித்த இளித்தவாயர்களின் இருப்பிடத்திலே! உறதி, உழைப்பு என்பவற்றை நம்பிய உலகிலே, வீரர்கள் ந்துயர் உற்றபோது இத்தகைய அற்புதங்கள் நடக்கவில்லை. ஆபத்து, ஆபத்தாகவே இருந்தது. ஆகவே, சிறைச்சாலையும் சிங்காரச் சாலையாக இராமல், ஆறுதல் அளிக்க அவனருள் உண்டு என்ற பற்று இல்லாமல், அற்புத நிகழ்ச்சிகளும் இல்லாமல், உழன்று, உருமாறி உழைத்த உத்தமர்கள், உலகுக்குச் செய்திருககும் உன்னதமான தொண்டு மறக்கற்பாலதோ!!

இளைஞனாக உள்ளே சென்று, வயோதிகனான பிறகே, சிறையினின்றும் வெளியே வந்தவர்கள் எத்தனை பேர்! திடகாத்திரராகச் சிறை சென்று, கண்மங்கி, கைகால் இளைத்து நடை தளர்ந்து, நரையுடன் வெளிவந்தவர்கள் எத்தனைபேர்! குடும்பத்திலே ஒரு மணிவிளக்காக இருந்துவிட்டுச் சிறையினின்று வெளிவந்தபோது குடும்பத்தவரிலே ஒருவருமில்லையே என்ற கதறும் நிலை பெற்றவர் எவ்வளவு, பூங்காவை விட்டுப் போய்ச் சிறையிலே வாடி, வெளியே வந்து பாலைவனத்தைக் கண்டு பரிதவித்தவர் எவ்வளவு! சீமானாக இருந்து சிறை சென்று, வெறிவந்தபோது, செப்புக் காசுமின்றி, சென்று தங்க இடமுமின்றி, நாடோடியானவர்கள் எவ்வளவு! கருகிப் போன தங்கம்! கசங்கிய மலர்கள்! வறண்டு போன வயல்கள்! சரிந்த சபா மண்டபங்கள்! மணமேடான மாளிகைகள்! நரம்பொடிந்த வீணை! நதியற்ற நகரம்! எனத்தக்க நிலை பெற்ற நற்குண நாகங்கள் நம் வணக்கத்துக்கு உரியரன்றோ! வாழ்க அவர் நாமம்! அத்தகையோரின் முரசுதான், நிறைச்சாலை என்ன செய்யும்? என்பது! குன்றாத, குரல் கொண்டோர் மட்டுமே அந்த வீரமொழி புகலும் பான்மையினராக இருக்க முடியும்! அவர்களே நமக்கு வழிகாட்டிகள்.

அத்தன்மையான ஆண்மை யாளர்களிலே சிலருக்காவது, அவர்களின் அந்திய காலத்திலேயோ, அவர்கள் மறைந்த பிறகோ, கீர்த்தி ஏற்பட்டது! உலகு புகழ்கிறது! உத்தமர்கள் என்று போற்றப்படுகின்றனர்.

பலர் பாடுபட்டனர். ஆனால், ஊர் பேர் தெரியாதவர்களாகிவட்டனர். அவர்களின் கல்லறைகளைக் காலம்கவ்விப் பெயர்த்தெடுத்தும் விட்டது. பாமாலையோ, மூலையோ, போட ஆட்களும் இருப்பதில்லை. காட்டு ரோஜா பூத்து, மணம் வீசி, தானாக உதிர்ந்து, சருகாகி, காற்றுடன் கலந்து போவதுபோல், உழைத்து, உருமாறி சிறைப்பட்டு வாழ்வு கெட்டு, மடிந்து, மறக்கப்பட்டும் போன மாவீரர்கள் எண்ணற்றவர்கள்! ஆனால் சுதந்திரச் சுடரொளியிலே அவர்களே பொறிகள்! விடுதலை விளக்குக்கு அவர்களின் வாழ்வே திரியாக்கப்பட்டது. போரின் வெற்றிக்குப் பிறகு படைத்தலைவரின் பெயர் மட்டுமே புகழப்படும். ஆனால், அந்தக் களத்திலே கீர்த்தி பூத்திட, தமது உடலை எருவாக்கி, உயிரை நீராக்கிய உத்தம வீரர்கள் எண்ணற்றவர். எனினும் அவர்களின் பெயர் தெரிவதில்லை. ஜுலியஸ் சீசரை உலகு அறியும். ஆனால் சீசரை உலகுக்கு அறிவித்திட தமது உயிரைக் களத்திலே கழுகுக்கும் நரிக்கும் பங்கிட்டுத் தந்த போர் வீரர்களின் பெயர்கள் எவையோ, யார் கண்டார்? அவனி அலெக்சாண்டரைப் புகழ்கிறது! அவனாணைக்கு அடங்கி, உயிரழந்த வீரர்களின் வரலாற்றுரைகள், எவர்க்குத் தெரியும்! அஃதேபோல, உரிமைப் போரில் கலந்து, புரட்சிப் புயலில் பங்கு கொண்டு, சொல்லொணாத் துயரைக் கண்டு, மாண்ட மணிகளின் பெயர்கள் வெளிவரவில்லை பல பூச் செடிகள் கூடினாலே பூங்கா! பல மரவகைகள் இருந்தாலே சோலை! அதுபோல், அத்தகைய வீரமணிகள் பலர் இருந்தாலேயே, ஒரு சில உலகத் தலைவர்கள்! அத்தகைய உத்தமர்களின் உணர்ச்சி பொங்கும் உரைதான், சிறைச்சாலை என்ன செய்யும்! என்பது.

கவி பாரதிதாசன் கூறுவதுபோல், அவர்களுக்கு, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை நம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்பதே எண்ணம். சிறைச்சாலை மட்டுமா? தூக்கு மேடையுந்தான் அவர்களை என்ன செய்யும்! செங்கரும்போ இந்த ஜீவன் என்று சீறினர்! உயிர் தித்திப்பல்ல உரிமையின் மகிமை கொஞ்சமல்ல என்று முழக்கம் செய்தனர். மரணத்தைத் தழுவிட மனங் கூசினாரில்லை. கோழையாகிக் கண்ணீர் கசிவதை விரும்பவில்லை. வீரராக விளங்கி, ந்நீர் புரண்டாலும், சிரித்து நின்றர்! உலக வீரர் கோட்டத்திலே, முதல் வாயிற்படியிலே, சிறைச்சாலை என்ன செய்யும்? என்ற எழுத்தே பொறிக்கப்பட்டிருக்கும்!

அவளை ஓட்டு! இவனை ஏற்றுக்கொள் என்பது விடுதலைப் போரல்ல! வியாபாரம்! அவனை விரட்டு, பிறகு என்னை நம்பு என்பது விடுதலையல்ல, புதுவிலங்கு! அவனை விரட்ட நீ வேலைசெய். அறுவடைக்கு நான் வருகிறேன் என்று கூறுவது விடுதலைப் பேச்சல்ல, வஞ்சகம்! அவனை முதலில் விரட்டுவோம். பிறகு நமக்குள் இருக்கும் தகறாருகளைத் தீர்த்துக் கொள்வோம் என்பது விடுதலைப் போர் அழைப்பல்ல, ஏமாளியின் உழைப்பை ஏய்த்துப் பெற்று, வீணர் பிறகு கொழுக்கத் திட்டமிடும் தந்திரம்!

இன்றைய காங்கிரசின் விடுதலைக் கிளர்ச்சியின் கருத்து இவை போன்றவையாக இருப்பது பற்றியே, சிறைச்சாலை என்ன செய்யும் என்ற கேட்கும் கூட்டம், பிடுதலைக் கிளர்ச்சியில் கலக்க மறுக்கின்றனர். வீரக் குறைவல்ல அது. விவேகத் தெளிவு! அறியாமையல்ல, அனுபவம் தந்த பாடம்!

முஸ்லீம் லீக் காரியதரிசி நவாப் சாடாலியாகத் அலிகான் சென்ற வாரம் டில்லி சட்ட சபையிலே பேசுகையில் இதைத் தெளிவுபடக் கூறினால். இந்துக்களே! இந்தியாவிலே முக்கால் பங்கு உமக்கு, கால் பங்கு எமக்கு, இதை ஒப்புக் கொள்ளுங்கள். பிறகு முழு இந்தியாவும் வெள்ளையரிடமிருந்து விடுவிக்க, நாமிருவரும் ஒன்றுகூடி அவனிடம் போரிடுவோம் என்று கூறினால். இன்னம், ஏன், விடுதலை விரும்பிகள் சந்தேகங் கொள்வது என்று கேட்கிறேன். முஸ்லீம் தலைவர் சொன்னது போலவே நீதிக்கட்சியும் ஐயன்மீர்= திராவிடத் திருசாட்டினிலே ஆரிய அரசு கூடாது. அதற்கான திட்டத்தை அமைக்க . . .

(திராவிட நாடு - 27.09.1942)
(குறிப்பு: இதற்கு மேல் ஏடு கிடைக்கவில்லை. வைத்திருப்போர் அருள் கூர்ந்து கொடுத்து உதவினால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் சேர்த்துக கொள்வோம்.)