அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சிறையில் ராதா

கொள்கையின்படி நடந்து கொள்வது, வேடிக்கையல்ல, பொழுது போக்கல்ல! பழைமையின் பலமான பிடியிலே சிக்கிக் கொண்டுள்ள நாட்டிலே, முற்போக்குக் கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்க விரும்புபவர், எத்தகைய இன்னல்களையும் இழிமொழிகளையும் பழிச்சொற்களையும் தாங்கிக் கொள்ள வேண்டி நேரிடும் என்பதை எல்லாம் அறியாதார் இல்லை. எனினும், இன்னல் வந்து மிரட்டுகிறபோது, வீரம் உலர்வதும், புதியவாதங்கள் பிறப்பதும் காண்கிறோம்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா சிறையில் இருக்கிறார் – கொள்கையில் உள்ள உறுதி, உரத்த குரலில் பேசுவதில் மட்டுமில்லை, ஊராள்வோரின் கோபத்தைத் தாங்கிக்கொண்டு, கஷ்டநஷ்டத்தை ஏற்றுக் கொள்வதிலேதான் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில்.

கலை உலகில் இதுபோலச் சம்பவங்கள் அடிக்கடி காண முடியாது.

கலை உலகு இங்கு ஒரு பிரச்சினையாகிவிட்டது என்பதை, ராதாவின் சிறைவாசமும், நாடகத் தடைச் சட்ட ‘முஸ்தீபும்‘ நன்றாகக் காட்டிவிட்டன.

ராதாவின் ராமாயணம் தங்கள் மனதைப் புண்படுத்துவதாகக் கூறி கொதித்தெழுந்தவர்கள், அந்நாடகத்தில் காட்டப்படும் காட்சிகளுக்கு ஆதாரங்கள் கேட்டாலும் தருவதாக தோழர் ராதா பகிரங்கமாகக் கூறியிருப்பதை கவனிக்கவில்லை.

வீணாக பகையும், குரோதமும் வளருவது, சமூகத்துக்கு நன்மை பயப்பதல்ல என்ற நன்னோக்கம் இருந்திருக்குமானால், தோழர் ராதாவைத் தனியே சந்தித்து, விளக்கம் கேட்டிருக்கலாம், திருத்தம் கூறியிருக்கலாம் ஆதாரங்களைக் கொட்டிக் காட்டியிருக்கலாம். இந்தமுறை, பொது மக்களிடம் பணியாற்றும் புனிதத் தன்மைக்குக் காப்பளித்திருக்கும். ஆனால் நடைபெற்றது, அமளி! சட்டம் குறுக்கிட்டுவிட்டது – தடை உத்திரவு பிறந்தது – எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை தனக்கு இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்ளும் வாய்ப்பு தோழர் ராதாவுக்கு ஏற்பட்டது – தடையை மீறப்போவதாக அறிவித்தார் – சிறையில் கொண்டு போய்ச் சேர்த்தனர் சர்க்கார்!

திராவிட கழகம் திட்டம் ஏதும் தீட்டா முன்பு, பெரியார் வெளிநாடு சென்றிருக்கும் தருணத்தில், கிளர்ச்சி எழுவதைத் தாம் விரும்பவில்லை என்று நடிகர் ராதா மனதாரக் கருதுகிறார் எனினும் தன்மானத்தை அழிக்கும் வகையில் தடை! தடை! தடை!! என்று, எந்தத்திக்கிலிருந்தும் சட்டம் முழக்கமிடும் போது, கொள்கையில் உறுதி கொண்டிருப்பதைக் காட்ட, தடையை மீறுவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்பதை விளக்கி விட்டே, சிறை சென்றிருக்கிறார்.

இந்நிலையில், முதலமைச்சர் காமராஜர் செய்யக்கூடியது என்ன இருக்கிறது என்று சிலர் கேட்கின்றனர்.

ஏன் இல்லை! முதலாவதாக முதலமைச்சர், பொது மக்களிடம் எழும்பியுள்ள இந்தப் பிரச்னைப்பற்றி, தமது கருத்து யாது, என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிப்பதன் மூலம், நிலைமையைத் தெளிவுபடுத்த முடியும் – தெளிவு படுத்த வேண்டும்.

காமராஜர் ஆட்சிக்குத் தொல்லை தரமாட்டோம் – என்று வெளிப்படையாகவே கூறும், கழகத்தவர் ராதா.

மற்ற மற்ற முதலமைச்சர்கள்போல் மக்களிடமிருந்து நெடுந்தூரம் விலகி நிற்பவரல்ல காமராஜர். எனவே, அவருக்கு, நடிகவேள் ராதாவையோ, அவரை எதிர்த்துக் கிளர்ச்சிகளை மூட்டி வருவோரையோ, அழைத்துப் பேச இயலாது என்று, கூறிவிடுவதற்கில்லை.

சந்தித்துப் பேசுபவர்கள் மனதிலே, நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கூட ஏற்படும்படி நடந்து கொள்ளும் திறமை அவரிடம் நிரம்ப இருக்கிறது என்பது, நாடக தடை மசோதா சம்பந்தமாக, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் அவரைச் சந்தித்த போது, நன்றாக விளங்கி இருக்கிறது. எனவே, முதலமைச்சர், முனைந்தால் இந்தப் பிரச்னையில், தெளிவு நிச்சயம் பிறக்கும் என்று நம்புகிறோம்.

நாடகத் தடை மசோதா போன்ற பிரச்னைகளில் கல்வி மந்திரியாகவும் ஆச்சாரியாரின் நிழலாகவும் இருந்து வரும் கனம் சுப்ரமணியம் அவர்களுக்கு மட்டுமே அவசர ஆர்வமும், அளவு கடந்த அக்கரையும் இருப்பதாக நாடே பேசுகிறது!

ஒரு மந்திரி சபையில் உள்ள ஒரு மந்திரிமீது மட்டும் கொதிப்பும் வெறுப்பும் இருக்கும் நிலைமை, அடிக்கடி காணக் கூடியதல்ல நாடகத் தடைமசோதா கண்டன ஊர்வலத்தில், மந்திரி சபை ஒழிக என்றோ, காமராஜர் ஆட்சி வீழ்க என்றோ, முழக்கம் இல்லை – மந்திரி சுப்ரமணியத்தைக் கண்டித்து மட்டும் முழக்கம் இருந்தது. இந்த நிலை, விசித்திரமானது என்பது மட்டுமல்ல, வீணாக இதனை வளர விடுகிறார்கள் என்றே நாம் எண்ண வேண்டி இருக்கிறது.

கோடீஸ்வரர்களின் கோட்டமான கோவை மாவட்டத்தைத் திருப்திபடுத்தவோ, வெளியிலிருந்தால் விஷமத்தனங்களுக்கு விளைநிலம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தாலோ, இளைஞர், வழக்கறிஞர், எதிர்க்கட்சிகளைத் துச்சமாக மதிப்பவர் என்பதற்காகவோ எதன் பொருட்டோ ஆச்சாரியாரின் அந்தரங்க நண்பராகவும், அவருடைய சகல கோட்பாடுகளுக்கும் ஆதரவாளராகவும் இருந்து வந்த கனம் சுப்ரமணியம் காமராஜர் மந்திரி சபையில் இடம் பெற்றிருக்கிறார்!

இடம் பெற்றாரா – தரப்பட்டதா – இடம் பிடித்துக் கொண்டாரா – என்றெல்லாம் கூடமக்கள் பேசிக் கொள்கின்றனர் – முதலமைச்சர் ஆகிவிட்ட போதிலும் காமராஜரின் செவியில் மக்களின் குரல் தெளிவாகக் கேட்கிறது என்றே நம்புகிறோம்.

இந்நிலையில், கனம் சுப்ரமணியம் மந்திரிசபையில் இடம் பெற்றிருப்பானேன்!!

திராவிடப் பெருங்குடி மக்களின் பாதுகாப்புப் பாசறைகளாக உள்ள கழகங்கள் விளக்கமறியாதாரும், விஷமிகளும், எத்துணை ஏசலும், ஏளனமும் செய்யினும், காமராஜர் ஆட்சிக்கு எதிர்ப்பு செய்யாமலிக்கும் போக்கை, கனம் சுப்ரமணியனாரின் நோக்கும் போக்கும் குலைத்து விடும் என்று நாம் அஞ்சுகிறோம்.

கல்வியில் கை வைத்தார், கவிழ்ந்தார், கருப்புக் கண்ணாடியார்!

கலையில் கை வைக்கிறார் காமராஜர்....! என்று நாடு, பேசுகிறது!! இது நல்லதல்ல என்று மட்டும் முதலமைச்சருக்குக் கூறிக் கொள்கிறோம்.

தோழர் ராதாவை விடுதலை செய்வதுடன், நாட்டிலே கிளம்பியுள்ள இந்தக் குழப்பத்தைப் போக்கத் துணிந்து, முதலமைச்சர், தமக்கு இன்று கிடைத்துளள நல்ல சூழ்நிலையைப் பயன்படுத்தி, வெற்றிகாண வேண்டுமென்று விருமபுகிறோம்.

திராவிட நாடு – 26-12-54