அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சிறையிலே தங்கம்!

“ஒழுங்கோடு நிலவும் சுதந்திரத்துக்குத்தான் ஜனநாயகம் என்று பெயர். கட்டுப்பாடில்லாத சுதந்திரம் ஜனநாயகமல்ல.”

பண்டித் நேரு, இத்தகைய விளக்கம் தந்திருக்கிறார், இந்திய சட்டசபையில், பேச்சுரிமை எழுத்துரிமை சம்பந்தமான திருத்த மசோதாக்களை நிறைவேற்றுமுன்.

சுதந்திரம் கட்டுப்பாடோடு இருக்க வேண்டுமாம்! வீட்டு மனைவிக்குச் சொல்ல வேண்டிய வார்த்தை! ஆனால், வீரர் பண்டிதர், மக்களுக்குத் தெரிவிக்கிறார்!

வரப்பில்லாத வயல், முறையில்லாத அரசு, கரையில்லாத ஆறு இருக்கவேண்டுமென்று எவரும் கூறார். அதேபோல, மனித சமுதாயத்துக்கும் ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் வேண்டும்.

ஆனால், கட்டுப்பாடு என்ற பெயருடன், மக்களை மந்தைகளாக்கினால்!

பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவைகள், காங்கிரஸ் ஆட்சியில் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. எதிர்க்கட்சிகள் என்றாலே, அவர்கள் கூட்டங்களுக்குத் தடையும், பத்திரிகைகள் மீது பாணமும், வீசிய வண்ணமே உள்ளனர். இந்நிலையில் நேரு, ஜநநாயகம் பற்றி புதுத் தத்துவம் தருகிறார்.

சுதந்திரம் கட்டுப்பாடோடு இருக்க வேண்டுமாம்! ஆகவே, பத்திரிகைகள் இப்படி இப்படித்தான் எழுதவேண்டும் என்று வரையறுத்துத் தரவேண்டுமென்று, திருத்த மசோதாவில், இந்த ஷரத்தும் சேர்க்கப்பட்டதாம்.

தெரிவிக்கிறார் அவர்! எழுத்துரிமைக்காகவும், பேச்சுரிமைக்காகவும் வெள்ளையராட்சியிலே பலமுறை வேதனைகளைத் தாங்கிய நேரு.

முன்புள்ள சட்டமோ ஒரு கிளிக்கூண்டு! இப்போது புதுத் திருத்தங்கள் மூலம், கூண்டைப் பெரிதாக்கி, இரும்புக் கம்பிகளையும் இணைத்திருக்கிறார்கள். பத்திரிகைகள்-பொதுமக்களின் எதிரொலிகள்! அவைகள் மென்னியைப் பிடிப்பதென்பது, மக்களின் குரலை அடக்குவதொன்றுதான் அர்த்தம். இது தெரியாதவர் அல்ல நேரு. இருந்தும், சுதந்திரத்துக்குப் புது வியாக்யானம் தருகிறார்! சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட வேண்டுமாம்!!

புண்மீது ஈட்டிகள்-புறப்பட்ட வண்ணமே உள்ளன, நம் போன்றோர் மீது.

பல நூல்களுக்குத் தடை! நமது கழகத் தோழர்கள் பலருக்குச் சிறை! அபராதம்! இந்த வேதனை வளர்ந்து கொண்டேயுள்ளது சுயராஜ்ய ஆட்சியில் பண்டித நேரு, ஜனநாயகத்துக்குப் புது வியாக்யானம் தந்த அதே வாரத்தில், தூத்துக்குடித் தோழர் நம் இயக்க முன்னணியிலே நின்று பணியாற்றும் நண்பர் தங்கப்பழம் சிறைக்கு அனுப்பப்பட்டார்!

முன்னெல்லாம், சிறைக்கு செல்வோர், யார் யாரென்றால், அந்தப் பட்டியல் வேறாக இருக்கும்! இப்பொழுது சிறையே சிறப்படைந்து வருகிறது! ஏன் தெரியுமோ? இப்பொழுது சிறையில் கிடப்போர், கள்வர், கயவர், பொய்க் கையெழுத்திட்டவர், கொலைஞர், கொடூரத் தொழில் புரிவோரல்ல நூல் எழுவோர் பொது மேடையில் பேசுவோர். மக்கள் பிணி நீக்குபவர். மக்கள் பணியாற்றுபவர், நாடகமாடுவோர். பாடல் பாடுவோர், புத்தகம் வெளியிட்டவர், அதற்குச் சித்திரம் வரைந்தவர். இப்படியல்லவா இருக்கிறார்கள்! சிறைக்கு இது பெருமை தானே!

தோழர் சிறையில் இருக்கிறார் ஏன்? சவுக்கடி என்ற நூலை எழுதினார். அதற்காக அவர் மீது நீண்ட நாட்கள் வழக்கு நடந்தது. அவருக்கு ஒரு மாத சிறைவாசமும் ரூ.200 அபராதமும் தண்டனையாக அளிக்கப்பட்டுள்ளது. அபராதமும் கட்டமுடியாதெனக்கூறி, தோழர் சிறை சென்றுவிட்டார்.

கட்டுப்பாடோடு இருக்கவேண்டுமென காரணம் சொல்லி, எழுத்தாளர்களையும், பேச்சாளர்களையும், ‘கூண்டுக்கிளி’ களாக்குவதுதான் சுயராஜ்யம் போலும்!

சாதாரண எழுத்துக்கள் அவைகளுக்காகப் புதுப்புதுச் சட்டங்கள், சிறைவாசம், தண்டனை, புது வியாக்யானம்!

கொடுமை! கொடுமை!! மக்கள் சுதந்திரத்தை மண் தூசுகளென நினைக்கின்றனர். காங்கிரஸ் தலைவர்கள்.

எவ்வளவு நாட்களுக்கு நீடிக்க முடியும் இக்கொடுங்கோலாட்சி!

இந்த ஆட்சியில்தான் எழுத்தாளர்கள் சிறையில் கிடக்கிறார்கள்! அதுவும், ஆட்சியிலே உள்ளோர், தி.மு.க. என்றாலே அடக்குமுறைகளை வீசுகிறார்கள். வீசட்டும் கை ஓயும்வரை. ஆனால் நாம் ஓயமாட்டோம் என்று கூறிடுவதுபோல, தோழர் சிறைபுகுந்து விட்டார்.

சிறையிலே நம் இயக்க தங்கம்-சிங்கத்தை கூண்டிலே அடைத்து விட்டு அடக்குமுறை ஆர்ப்பரிக்கிறது! ஆனால், அதனால் அவர் உணர்ச்சி மங்கிடாது! பொங்கிடத்தான் செய்யும்.
கொடுமையைத் தாங்கினார். அதனால் மங்காப் புகழ்பெற்றார். தங்கப்பழம்! அவர் ஆட்சி கோணல்களுக்குக் கொடுத்தார். சுளீர் சவுக்கடி! நாம் தருகிறோம். அவருக்கு நமது அரிய பாராட்டுதல்களை! வாழ்த்துக்களை!

(திராவிடநாடு 10.6.51)