அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சிவலோக வாசிகள்
“சர்வேஸ்வரா! இந்தப் பாவி செய்யும் அட்டூழியத்தைக் கண்டு, இவனை இப்படியே விட்டு வைக்கலாமா? கன்னியரைக் கற்பழிக்கும் காதகனைக் கல்லாய்ச் சபித்து விடலாகாதா? ரௌரவாதி நரகத்தில் தள்ள வேண்டாமா? காமப் பித்துப் பிடித்து அலைகிறானே! பெண்களை இம்சிக்கிறானே! பஞ்சமா பாதகத்திலே மிஞ்சியதான காமத்திலே புரள்கிறானே,” தன்னுடைய கபடக் கண்கள் கதியற்ற கன்னியரைச் சூறையாடுகின்றானவே. ஆண்டவனே! அபலைகளைக் கெடுக்கும் இக்காமுகனின் சிரம் ஆயிரம் சுக்கல்களாக வெடிக்க வேண்டாமா? இப்டிப்பட்ட பாவியை ஏன் இந்தப் பூமிக்குப் பாரமாக விட்டு வைத்திருக்கிறீர்? அவனிடம் சிக்கிச் சீரழிந்தவர்களின் கண்ணீர் கல்லையும் கரைக்குமே; உமது மனம் உருகவில்லையா! ஆண்டவன் ஒருவன் இருக்கிறான் என்று கூடக் கருதாமல், அக்கிரமத்தை அடுக்கடுக்காகச் செய்கிறானே இந்தக் காம வெறி பிடித்த கயவன்! இவனை இனியும் நடமாட விடுவது முறையா? பாவத்துக்கேற்ற தண்டனை தரவேண்டாமா? பரமேஸ்வரா! கண் திறந்து பார். இந்தக் காமுகனைத் தண்டித்து, எம்மைக் காப்பாற்று” என்று பக்தி மான்கள், குறிப்பாகத் தாய்மார்கள் பரம்பொருளைத் துதித்தனர். அவ்வளவு அக்கிரமம். அவன் செய்து வந்தான் காமுகன், கயவன், கபடன் இராவணனா? இல்லை! இரணியனா? இல்லை! சிசுபாலனா? இல்லை! சூரபதுமனைச் சம்ஹரித்த சர்வேஸ்வரனிடம் தாய்மார்கள், பக்தி பூர்வமாகவும், அழுகுரலுடனும் மனுச் செய்து கொண்டது - ஓர் அரக்கனின் செந்தண்மை பூண்டு ஒழுகுவதால் அந்தணர் என்று அழைக்கப்படுவதாக அலங்கார அடைமொழியைப் பெற்ற குலம், பிரமனின் முகத்திலே தோன்றிய குலம், பூதேவர் குலம் பிராமணன்! அவன் செய்த கொடுமை, காமச் சேட்டையைக் கண்டு கசிக்க முடியாமல்தான், முதல்வனை வேண்டிக் கொண்டனர் மாதர்கள்; காமுகனான அந்தப் பிராமணனுக்கு அற்புதமான பெயர் சுகுமாரன்!

ஆண்டவர் என்ன செய்தார்! இந்தப் பிரார்த்தனையைக் கேட்டுச் சோகித்திருப்பார் என்று எண்ணுகிறேன். சம்ஹரிக்கவில்லை! சபிக்கவில்லை! அவனை நல்வழிப் படுத்தவுமில்லை! நாசத்தைத் தரவுமில்லை! எனவே, ஏதும் செய்ய முடியாத நிøலையிலே இருந்திருப்பார் என்றும், அதனால் ஏக்கம் கொண்டிருப்பார் என்றும் யூகிக்கத்தானே வேண்டும்? ஏக்கத்திலே எம்பிரான் என்ன எண்ணியிருப்பார்? “ஏதடா இது பெரிய நெருக்கடியாகி விட்டது! ஏந்திழையார் அழுத கண்களுடன் நின்று தொழுகின்றனர். அந்தத் தூர்த்தனோ அழிக்கப்பட வேண்டியவன் ஐயமில்லை. ஆனால், நான் என்ன செய்வது? அவன் அரக்கனாக இருந்தால் அரை நொடியிலே அவனை அழித்து விட்டிருக்கலாம். மற்றொரு புராணமும் ஏற்பட்டு விடும். இந்தக் காமுகனோ, பிராமணனாக இருக்கிறானே! மா பாதகம் செய்யினும், மறையோனை நான் என்ன செய்வது?” என்று அவர் எண்ணியிருக்கக் கூடும். எது எப்படி இருப்பினும், சுகுமாரன் என்ற அந்தப் பார்ப்பனன் செய்த பாபக்கிருத்தியங்களுக்காகப் பரமன் அவனைத் தண்டிக்கவில்லை; அவன் செய்த அக்கிரமங்களிலே ஆயிரத்திலே ஒரு பாதகம் செய்தாலும் போதும், அரக்கனாக இருந்தால் அரனோ, அரியோ, அவர் தம் ஏவலரோ, நொடியிலே பஸ்மீகரம் செய்து விட்டிருப்பர். காமுகனான சுகுமாரனை ஒழிக்கும்படி கன்னியர் கடவுளைத் தொழுதும் பயன் இல்லை. அவர் அவனை அக்கிரமத்திலேயே புரளத்தான் விட்டு வைக்க முடிந்தது. ஆண்டவனின் கோபம் அவனை அணுக முடியவில்லை? பாவம் அவர்தான் என்ன செய்ய முடியும்? புற்றிலே இருக்கும் பாம்பைக் கொல்ல எத்தனை பேர் கிளம்புவர்? கொசு அடிக்கவோ எக்கோழையும் தயார்! அதுபோலத்தான், அரக்கனை அழிப்பது என்றால் ஆண்டவனுக்கு அரை நொடி வேலை; ஆரியனிடம் அவ்வளவு எளிதிலே அவர் அணுக முடியாதே!

காமம் பிடித்த பார்ப்பனனை அவ்வூர் அரசன் நாடு கடத்தினான். சுகுமாரன் காடு சென்றான்; அவ்விடத்தையும் காமவேள் நடனசாலையாக்கினான். எப்படி? இதோ பாருங்கள்.

“ஐயோ! நான் புலைச்சி!”

“இல்லை! வலைச்சி! உன் அழகெனும் வலை வீசி இந்தப் பூசுரனைப் பிடித்து விட்டாய். புலைச்சியல்லள்; நீ என்ன...”

“ஐயையோ! அடுக்காதுங்க இந்தப் பாவம்! நீங்க பூலோகச் சாமி குலம்; நான் பூலோகப் பாவி குலம்; என் மேலே இச்சை வைப்பது கேவலம்.-”

“எவன் சொன்னான் இந்தப் பிச்சைப் பேச்சை! குலமும் கோத்திரமும் குப்பை! குலாவிட ஏற்றவளே எனக்குத் தேவை”

“நான் பு...”

ஆம்! காட்டிலே கண்டான் ஒரு மாதை! அவள் இழிகுலம் என்று மதவாதிகளால் ஒதுக்கி வைக்கப் பட்ட வகுப்பு. அவளை அழைத்தான்; மறுத்தால் விடவா செய்வான்? அவனோ காமுகன். இடமோ அடவி. அணைத்தான்; அணுச்சஞ்சலமேனும் இல்லாத இடம் சென்றான். புலைச்சி புலைச்சியாமே இப்போது... என்று! பிறகு கொஞ்சிடாமல் அவன்தான் இருந்திருப்பானா? அவனுடைய அணைப்பைப் பெற்ற பிறகு அந்த மாதுதான் “நீயும் நானும் ஜோடி. விளையாடுவோம் வா கூடி” என்று பாடாமல் இருந்திருப்பாளா? நாட்டிலே அவன் காமுகனாக இருக்கவே காடு போ என்றான் காவலன்! காடு, அவனுக்கு விபச்சார வீடாயிற்று. விட்டானில்லை தன் பழைய வேலையை. பரமன் என்ன செய்தான்? என்ன செய்தானா? என்ன செய்ய முடியும்.

“எப்படியோ நம்மிருவருக்குள் சம்பந்தம் ஏற்பட்டு விட்டது; இன்பமாக இருந்தோம்! கண்ணாளா! இந்த வாழ்வு இதோ முடிகிறது! நான் சாகிறேன்... ஆம்! இனி நான் பிழைக்க முடியாது” என்று மரணப் படுக்கையில் கிடந்து குளறினாள். காட்டிலே கிடைத்த காமவல்லி காலம் முடியும் நேரத்தில் சுகுமாரனை அருகழைத்து அவன் பெற்ற பெண்களைப் பக்கத்தில் நிறுத்தி, “நான் போகிறேன்! என் மக்களை உன்னிடம் ஒப்படைத்து விட்டுப் போகிறேன், இவர்களை நீதான் ரட்சிக்க வேண்டும்” என்று கூறினாள். “இனி நீயே இந்தப் பெண்களுக்குத் தாயும் தந்தையும்” என்று கூறித் தலை சாய்த்து விட்டாள். பிறகு சுகுமாரன், அப்பெண்களுக்குத் தாயும் தகப்பனும் மட்டுமல்லன், நாயகனுமானான், தாயை இழந்தபோது தவித்து, “ஐயோ அம்மா! என்று அலறிய அப்பெண்கள், பிறகு அவனுடைய காமச் சேட்டையினால் உண்டான அலுப்புக் காரணமாக, “ஐயோ! அப்பா!” என்று அலறி வாழ நேரிட்டது. அவனோ, தாய் இருந்தவரை அவளோடு வாழ்ந்தோம். தாய்க்குப் பிறகு மகள் தொண்டு செய்கிறாள் என்று எண்ணியிருப்பான். ஈனத்தனமான இக்காரியத்திலே ஈடுபட்டு அக்காமுகன் இருந்தபோதாவது இடி கிடைத்ததா இறைவனிடமிருந்து. இல்லை.

பிறகு அவன் வழிப்பறி நடத்தினான்; எதிர்ப்பட்டோரைத் தாக்கினான். அவர்களின் கூக்குரலும் தோத்திரமும் அவனுடைய வெற்றிச் சிரிப்பின் சத்தத்தினால் ஆண்டவன் செவியில் ஏதும் செய்யவில்லை.

இந்நிலையில் காட்டுக் கொள்ளைக்காரனான சுகுமாரனைக் காவலாளிகள் பிடிக்க வந்தனர்; மிரண்டோடினான் வேறொரு காட்டுக்கு.

“சரி! கடைசியில் காவலரிடம் சிக்கினான்; அவர்கள் அவனைக் கொன்றார்கள். அடாது செய்தவன் படாது படுவான் என்ற பழமொழி பொய்யாகவில்லை” என்று கதை முடிகிறது என்று கருதிவிடாதீர்கள். வேறு ஒரு காட்டிலே அவன்போனபோது, நாககன்னியர் அங்குச் சிவபூஜை செய்து கொண்டிருந்தனர். தரிசித்தான்; இறந்தான்; கொல்லப்படவில்லை.

“ஒழியட்டும், இறந்தானல்லவா, பிறகு பூலோகத்திலே அவன் செய்த பாவங்களுக்காக, அவனைக் கடவுள் நரகத்திலே தள்ளித் தண்டித்திருப்பார்” என்ற அவசர முடிவுக்கு வந்து விடாதீர். பாவம் செய்தவன் நரகம் சேர்வான் என்ற நியதியின்படி, அவனுக்கும் நடக்கும் என்று முடிவு செய்து விடாதீர்கள். அப்படி ஒன்றும் அவனுக்கு நரக வேதனையும் தரப்படவில்லை.

சுகுமாரனின் கெட்ட நடத்தையைப் பற்றிக் கேட்டதும், அப்பாவிக்கு நரகம்தான் என்று பலரும் அவசர முடிவுக்கு வரக்கூடுமே, அதுபோலவே சுகுமாரனின் தீய செயல்களைத் தெரிந்திருந்த யமபடர்கள், இறந்தவனை இழுத்துச் செல்ல வந்தனர். ஆனால், எதிர்ப் புறத்திலே வந்து நின்றனர் சிவகணங்கள்! “தொடாதே! இவன் சிவானுக்கிரகம் பெற்றவன். சிவபதம் அழைத்தேக வந்திருக்கிறோம்” என்றனர் கணங்கள். “இவனா? இக்காமுகனா? கள்ளனா? புலைச்சியைப் புணர்ந்தவனா? தாயையும் கூடி மகளையும் கூடிச் சேர்ந்த மாபாவியாம் இவனா சிவானுக்கிரகம் பெற்றவன்?” என்று கேட்டனர் யமபடர்கள். “ஆம்! இவன் ஆவிபிரியப் போகும் நேரத்திலேயே சிவ பூஜை தரிசனம் செய்தான்; எனவே, சிவபதம் சேர வேண்டும்” என்றனர் சிவகணங்கள். யமபடருக்குச் சிவகணங்களை எதிர்க்க முடியவில்லை. எனவே, சுகுமாரன் சிவபதம் அடைந்தான். இப்படியொரு புராணம் இருக்கிறது. இதிலுள்ள புளுகு கிடக்கட்டும் ஒரு புறம்; பார்ப்பனன் மாபாதகம் செய்த போதிலும், கடைசி வரை திருத்தமே அடையாமலிருந்த போதிலும், சாகும்போது தன் பாவச் செயலுக்காக மனம் வருந்தாது இருந்தபோதிலும், நாககன்னியர் சிவபூஜையை நடாத்தியதைக் கண்டதற்காக, அந்தப் பாவிக்கு நரகம் இல்லாமல் போனதுடன், சிவபதம் கிடைத்ததாம்! இந்த நீதியை நாதன் அளித்தான் என்றால், நாதனாக இருக்க முடியுமா? ஆண்டவன், இப்படிப்பட்ட அக்கிரமக்காரரை அழிக்காமல் ஆதரிக்கலாமா? பாவியானாலும் பார்ப்பானாக இருந்ததற்காகப் பரமன் பயப்படுவதா?

நாக கன்னியர் தாம் நல்வழிப்படச் சிவனைப் பூஜை செய்தனர். இவனோ கள்ளன், காமுகன். காட்டிலே ஓடி வரும்போது இப்பூஜை நடைபெறக்கண்டான் தற்செயலாக! இவன் பூஜை செய்தானா? இல்லை. மனம் உருகி மன்னிப்புக் கேட்டானா? இல்லை! இவ்விதமிருக்க இவன், பிறர் சிவ பூஜை நடத்துவதைக் கண்டதையே பாதகம் துடைக்கும் மார்க்கமாக்கிக் காட்டிய மடமை, மாநிலத்திலே பாவிகளை அதிகரிக்கச் செய்யுமா? குறைக்குமா? கள்ளக்கையொப்பமிடுபவனும், கொள்ளையடிப்பவனும், வஞ்சிப்பவனும், பொய்யனும், “இவை பாவமன்றோ! உனக்கு நரகமன்றோ சம்பவிக்கும்” என்று எவரேனும் கூறினால், “நாமென்ன அவ்வளவு அதிகமான பாவம் புரிந்தோமா? சுகுமாரனைப் போலக் கெட்டு அலைந்தோமா? அப்படிப்பட்ட சுகுமாரனுக்கே சாகும் நேரத்திலே சிவபூஜை தரிசனம் கிடைத்த ஒரே காரணத்துக்காகச் சிவபதம் கிடைத்ததாமே, நமக்கென்ன பயம்? நாம்தான் கிடைத்த பொருளிலே, சிறிதை எடுத்துக் கிருத்திகையன்று சிவன் கோயிலிலே, கைங்கரியம் செய்திருக்கிறோமே, பாவம் பஸ்மீகரமாயிருக்காதா?” என்றுதானே எண்ணுவான்!

எந்தவிதமான நீதியின்படி, சுகுமாரனுக்குச் சிவபதம் தந்தார் சிவபெருமான்? சைவத்தின் பெருமை இதுவா? செய்யத்தகாதன செய்பவனானாலும், சாகும்போது சங்கரா என்று பிறர் கூறும் சத்தத்தைக் காதிலே கேட்டாலே சிவபதமா? இது நீதியா? முறையா? நேர்மையாகுமா? வலிந்து பிறன்பொருள் கொண்டான் அடையும் தீ நிறைந்த இருப்புச்சால் இருக்கிறதாம் நரகலோகத்திலே! அந்த அக்கினிக் குண்டத்திலே அல்லவா வழிப்பறிக் கள்ளனாம் சுகுமாரனைத் தள்ளியிருக்க வேண்டும்! புணரக் கூடாதவரைப் புணர்ந்தவர் அணைத்துக் கொள்ள இரும்புக் கம்பம் உண்டாம் நரகத்தில்; வச்ரகண்டமாம் அதற்குப் பெயர். அந்த வேதனையை அல்லவா அந்தக் காமுகன் பெற்றிருக்க வேண்டும்! முட்களால் கொத்துண்ணும் நரகம் ஒன்றும் - பெயர் சான்மலி என்பதாம், இங்கு உயர்வு தாழ்வு கருதாது புணர்ச்சி செய்தோன் தள்ளப்படுவானாம், புலைச்சியைக் கூடிய இப்பூசுரனை இதிலேயல்லவா போட்டிருக்க வேண்டும்! இது ஏதும் இல்லை; சிவபதமாம் இந்தச் சீர்கேடனுக்கு! காமுகனுக்குக் கடவுள் அருளாம்! கள்ளனுக்குக் கைலாய பதமாம்! மாபாதம் செய்தவனுக்கு மகேஸ்வரனின் அருளாம்! இது கடவுள் கொள்கைக்கு உகந்ததா? மனித நீதிக்கு அடுக்குமா? அறிவுக்குப் பொருந்துமா?

இத்தகைய பாவ கிருத்தியங்களைச் செய்தும், பரமனருள் பெற்றவர்கள் பார்ப்பனர்களன்றி வேறு வகுப்பினர் காணோமே எந்தப் புராணத்திலும். அது ஏன்? நமது கண்ணப்பர், கண்ணைத் தோண்டித்தந்தார் கடவுள் அருள் பெற. நமது காரைக்காலம்மை உடல் தேய உதிரம் ஒழுக உருண்ட பிறகு சிவனருள் பெற்றார். சுகுமாரன் போன்ற பார்ப்பனர்கள் மட்டும் கேட்கவும் குலை நடுங்கும் கேடுகள் செய்தும், மிக மிகச் சாமான்ய-அறிவுக் கொவ்வாத காரணத்துக்காகப் பாவம் துடைக்கப்பட்டுப் புண்ணியபதம் பெறுவதாகப் புராணங்கள் இருப்பதன் மர்மம் என்ன? சுகுமாரன் ஒருவன் மட்டும்தானா? தாயைப் புணர்ந்து தகப்பனைக் கொன்ற மாபாவிப் பார்ப்பனனுக்கு ஆலவாயப் பனின் அருள் கிடைத்ததைத் திருவிளையாடற் புராணம் செப்புகிறதே! ஏன் இதுபோல ஆண்டவன் ஓரவஞ்சனை செய்பவனாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறான்? இது பக்திக்கோ - யுக்திக்கோ ஏற்றதாகுமா? பார்ப்பனன் எக்காரியம் செய்தாலும், அவன் விஷயத்திலே ஆண்டவன் அருள் சுரக்கிறான் ஏன்? அந்தப் பார்ப்பனக் குலத்துக்கு மகிமையைக் கற்பிக்க, மற்றக் குலத்தைத் தாழ்த்த ஏற்பட்ட நிகழ்ச்சிகள் இவை.

“போ! பரதா! ஏதோ! ஒரு சுகுமாரன் கதையைக் கூறி, ஒயேடியாக அதிலிருந்து பொது முடிவு கட்டுகிறாயே, ஒரு மரம் தோப்பாகாது பார்” என்று சிலர் கூறக்கூடும். எனவே, இதோ மற்றோர் மகாபாவியை அறிமுகப்படுத்துகிறேன். சொல்லொணாத் தீச்செயல் புரிந்தவனுக்குச் சுகுமாரன் என்ற பெயர் இருந்தது. இதோ இவனுக்கும் அழகான பெயர் குணநிதி. என்ன குணம்? என்ன நிதி? என்று நீங்களே பிறகு யோசிக்கலாம். கேளுங்கள் இவன் கதையை!

இவன் பிறந்த இடமே புண்ணிய பூமி கோசலநாடு. கோசல நாட்டிலே கிரிநாதன் என்பவனின் மகன் குணநிதி என்பவன் இருந்தான். இப்பார்ப்பனன் குரு பத்தினியைக் கற்பழித்தான். சல்லாபம் கெட்டு விடுமோ என்று அஞ்சிக் குரு இருக்கும் வரை தொல்லைதானே என்று கருதித் துணிந்து குருவையே கொலையும் செய்தான். இவை மட்டும் குணமெனும் நிதியைத் தராது என்று எண்ணினான் போலும் இக்குணநிதி. எனவே, தாய் தந்தையரைக் கொன்றான். என்ன நடந்தது? குணநிதிக்குக் குட்டம் வந்ததா? குலைநோய் கண்டதா? கண் கெட்டதா? கைகால் பட்டுப் போயிற்றா? இல்லை! இறைவன்; அவனைக் காட்டிலே விரட்டினர். அங்கு அவன் இறந்தான்.
“ஒழிந்தானா பாவி! அவனுக்கு அந்தக் கதிதானே கிடைக்கும்”! என்று கூறிவிடாதீர். கதை முடியவில்லை. குணநிதி இறந்த உடனே யமபடர் வந்தனர். குருத் துரோகியை – பெற்றோரைக் கொன்ற பேயனை - குரு பத்தினியைக் கற்பழித்த காமுகனை, அவர்கள் எந்தெந்த நரகத்திலே தள்ள எண்ணினரோ தெரியவில்லை. யமபடர்கள் அவனை இழுத்துச் செல்லத் தொடங்கியதும், சிவகணங்கள் வந்து விட்டனர்.

“ஆஹா! என்ன ஆணவம்? யமபடகர்களா! எம் சிவனடியாரை அணுகும் துணிவை எங்ஙனம் பெற்றீர்?”

“சிவனடியாரை நாங்கள் இம்சிக்க வருவோமா? இவன் குணநிதி - குருத் துரோகி.”

“எந்தத் துரோகியாக இருப்பினும் எமக்கென்ன? இவன் சிவானுக்கிரகம் பெற்றுவிட்டான்; சிவலோகம் அழைத்துச் செல்லப் போகிறோம்.”

இதுபோல உரையாடல் நடந்தது. யமபடகர்கள், “அவன் எப்படிச் சிவனருள் பெற்றான்?” என்று கேட்கச் சிவகண நாதர்கள் செப்புகின்றனர். (சிரிப்பை அடக்குங்கள்!) “இந்தக் குணநிதி கொலை செய்தவன்; குருவைக் கொன்றவன்; அவர்தம் பத்தினியைப் புணர்ந்தவன். பாவம் இவை. ஆனால், இந்த வனத்திலே உருத்திராட்ச மரத்தின் காற்றுப் போக்கில் இருந்ததால் இவன் சிவனருள் பெற்றான்-” என்று கூறிவிட்டுக் குணநிதியைச் சிவலோகம் அழைத்துச் சென்றனர் என்று சிவலோகமகிமையைக் கூறுகிறார் ஒரு புராணிகர். சுகுமாரன் சிவபூசையைக் கண்டான், சிவபதம் பெற்றான். குணநிதியின் உடலிலே உருத்திராட்சத்தின் மேலே உராய்ந்து வந்த காற்றுப் பட்டது. இதற்காக இக்கொடியவனுக்குச் சிவலோகம். அறிவா? அழகா? நீதியா? அன்றி ஆரியனுக்கு உயர்வு ஆணவக் கருத்தா? ஆர அமர யோசியுங்கள்.

இப்படிப்பட்ட மாபாவிகள் உலவும் இடம் சிவலோக மானால், சீலர்களுக்கு அங்கே என்ன வேலை இருக்கிறது? சிவலோகத்தில் சுகுமாரனும், குணநிதியும் போன்ற மா பாவிகள் மகேஸ்வரன் அனுமதித்ததால் சென்று தங்கியுள்ளனர் என்று புராணம் கூறும்போது, “சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்!” என்று பஜனை பாடுவது தகுமா? சிவபதம் தேவை என்று சித்தம் உருக ஜெபிப்பதில் அர்த்த முண்டா? அந்தச் சிவலோகத்திலே இருவர்களின் யோக்கியதைக்கு இரு எடுத்துக் காட்டுகள் தந்தேன். அத்தகையவர்கள் வாழ்வதாகச் சொல்லப்படும் இடத்துக்குப் போக வேண்டும்” என்று இனியும் கருதும் “மெய்யன்பர்கள்” இருப்பரேல், மெய்யல்ல நண்பர்களே, இனம் இனத்தோடு என்பதற்கேற்ப அவர்கள் நாடுகின்றனர் என்றே கருதிவிடவேண்டும்! தீயாரைக் காண்பதுவும் தீதாமே! சுகுமாரனும், குணநிதியும் சென்ற இடத்துக்குச் செல்வது தீதினும் தீது என்று நான் எண்ணுகிறேன். பன்றியும், எருமையும் புரண்டு கொண்டிருருப்பதைக் கண்ட பிறகும், அந்தக் குளத்திலே நீர் பருக யாருக்கு மனம் இடந்தரும்? மதுக் குடத்திலே பாலூற்றியிருந்தால் பருகுவார் யார்? மலங் கொட்டும் குழி என்று தெரிந்த பிறகும், அஞ்சு மனை அமைக்க எவன் விரும்புவான்! அதுபோல், சுகுமாரனும், குணநிதியும் சென்றடைந்த சிவலோகத்தில், பாடுபட்டுப் பிறனை வஞ்சிக்காது, பாபம் புரியாது, கேடு செய்யாது உள்ளவர்களுக்கு வேலையில்லை; விரும்பவும் செய்யார்.

13.5.1945