அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சிவநேசர்கட்கு!

(கும்மி மெட்டு)
கேளடி, மாதரசி! ஒரு சேதியைக்
கேட்டுக் களித்துக் கூறிடடி!
நூறைந்து பேர் அவர் கூடினரே
அங்கு நீறு மிகப்பூசி நிற்னரே.

பூசியது திருநீறு தாண்டி! ஆனால்
புதுமையாய்க் கண்டது என்னமோடி!
மாலைகளணிந்த மாதேவனடியார்கள்
மாநிலத்தால் குறை தீர்த்தாரோடி?

பேரறிவாளரடி பெயர் கேட்டாலே பேசாயடி எதிர்த்து நீ தான்
மாமதி மிக்கவர் ஆகுமடி அவர் மன்றத்தில் பேசினர் மதுரமடி

கேட்டால் மதுரமிருக்குமடி கண்ணே ஏட்டில் இனிக்கும் கரும்பேயடி
அது நாட்டினர் ருசித்திட ஆகுமோடி பெண்ணே
நவில்வாயடி அதை ஈண்டு முன்னே?

என்னடி ஏதேதோ பேசுகிறாய்
அவர் என்னென்ன கண்டவர் தெரியுமோடி?
பசுபதி பாசம் அறிந்தாரடி அவர்
பரமன் மொழி பாடி மகிழ்ந்தாரடி.

பசுவுக்குப் புல்லில்லை நீருமில்லை
அது பதைப்பது பதிக்குத் தெரிவதில்லை பாசமும் மிகப் பாழ்பட்டதோ அதை
பகருவாயே பசுதோகையானே?

மற்ற மதமென்று எண்ணாதேடி
இது மாமுனிவர் கண்ட சைவமடி
மெத்த உயர்வுகள் உள்ளதடி
இதில் மேதினியின்மதி ததும்புமடி

ததும்புமடி தங்காய் துதும்புமடி
தரித்திரமே எங்கும் கண்ட பேர்கள்
தயாபரன் பட்டமும் குட்டி நின்றோன்
தலைமறைந்த சேதி கேட்பாரன்றோ?

முந்தி அவர் செய்த மூள்வினையினாலே
மூழ்குவார் கஷ்டத்தில் தெரியாதோடி?
பக்தியுடன் சிவ சக்தியைத் தொழுதிடின்
முக்தி பெறுகுவர், மூலமிதே

முநதி எது பெண்ணே, பிந்தி எது?
மூளும் வினைகளும் ஏதடியோ?
அன்றும் இன்றும் என்றும் அவனருளே யன்றி
அணுவும் அசையாதாம் கேளாயடி.

நாத்திகம் பேசுகிறாய் நங்கையே நீ
பொல்லா நாட்களினால் நைந்தாய் தங்கையே நீ
பாழ்படும் புத்தியை நீக்கிவிடு
அந்தப் பார்வதி லோலனைப் பணிந்து தேடு.

உள்ளதை இரைப்பது நாத்திகமா?
அவர் உளறிட உம் எனல் ஆத்திகமோ? ஏட்டுச்சுமை தாங்கிக் கூட்டத்தினர் இங்கு நாட்டின் குறை போக்க வருவாரோடி

எத்தனை சாமிகள் எங்கெங்கு சாமிகள் எட்டி நடக்க இடமுமில்லை
எத்துணை தத்துலம் போதனைகள்
இவர் எடுக்குறார் படிக்கிறார் நித்தநித்தம்.

பாரிலே மற்றையோர் பண்பட்டனர் பரங்ககிள் ராச்யம் அமைத்திட்டனர்
பரந்த நம் ராச்யம் பூச்யமானது
பாழான போதனை படித்ததாலே

அற்புதமென்பார் அரோகரா என்பார்
ஆலயமில்லா ஊர் பாழமென்பார்
ஆலவாயப்பன் அருள் இது என்பார்
ஆலாய்ப் பறக்கும் மக்களெதிரே.

பேதங்கள் பீடைகள் போக்கிடவோ
அந்தப் பெரியார்கள் முன் வரமாட்டாரடி
ஆமை இயல்பினர் அல்லவோடி அவர்
ஆயிரங்கற்றும் ஆவ தென்னடி?

கும்மி மெட்டிலே அஇப்பாட்டை அமைத்துள்ளேன். இரு பெண்கள் பாடுவதாகப் பாவனை ஒரு பெண் கேட்க மற்றவள் பதில் கூறுவதாக உள்ள நடை இது. சீர்காழியிலே நடைபெற்றதே, சைவ சித்தாந்த மகாசமாஜ மாநாடு, அது குறித்து இரு மாதர்கள் வாக்குவாதம் நடத்திய முறையிலே எழுதினேன். இதைப் பிசுரிக்கப் போகிறீரா இல்லை அந்த நீறுபூசிகளுடன் சேர்த்து கொண்டு, சிவவிவாவென்று காதுகளைப் பொத்திக் கொள்ளப் போகிறீரா என்று வீரன் கேட்டான். மறுபடியும் பாடலைப் படித்தேன் சிரித்துக கொண்டே வீரா! இரண்டு திருததங்களுடன் வெளியிட... என்று இழுத்தேன். இரண்டென்ன இருபத்தேழுகூட இருக்கட்டும். விஷயம் மட்டுமு சுடச்சுட வெளிவர வேண்டும். என்ன திருத்தம் சொல்லு கேட்போம் என்ற வீரன் கேட்க, நான் சொன்னேன். 12-வது பதிகத்திலே, அவர் உளறிட என்று இருப்பதை அவர் உரைத்திட என்றும் அதிலேயே சுமைதாங்கி என்றிப்பதைச் சுவைதாங்கி என்றும் திருத்த வேண்டும். இல்லையானால் நம்மைச் சிற்றினம் பேய்க்குரல் என்று சில கனல் கக்கிகள் கூறும் என்றேன்.

சரி! விஷயம் வெளியாகட்டும். சீயாழிப் பதியிலே கூடிய சிவநேசச் செல்வர்கள். செல்லரித்த ஏடுகளைக் கட்டி ஆழட்டும். ஆனால் பகுத்தறிவுப் பலகணியைத் திறக்க வேண்டோமோ என்று கேட்டுவிட்டு வீரன் போனான். பிறகு நான் சீர்காழி சைவசித்தாந்த மாநாடு சம்பந்தமான நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். சித்தஞ் சோர்ந்தேன். ஆண்டு தோறும் கூடி அம்மையப்பனின் அருளை நாடி அரனடியைத் தேடிடும் அந்த அன்பர் குழாம். ஆத்திகத்திலும் அறிவு உண்டு என்பதையாவது நிரூபிக்கக்கூடிய சொல் பேசி, செயல்புரியக் கூடாதோ என்று சோகித்தேன். புலமையும் அனுபவமும் நாவன்மையும் சீலமும் கொண்ட அப்பெரியார்கள் மக்களுக்கு வழிகாட்டு வோராக வேண்டாமா? மூர்மார்க்கெட் மனப்பான்மை அவர்களைவிட்டு ஒழி வேண்டாமோ? பழமை - பழமை - பழமை - அதிலே துருவித் துருவிப் பார்த்துக கிடப்பதைவிடத் துயருற்று. மனதைக் குழப்பிக் கொண்டுள்ள மக்களக்க அறிவூட்ட முன்வரலாகாதா? ஏன் இவர்கள் தமது ஆற்றலை விழலாக்குகின்றனர் என்று விசனித்தேன். சைவத்தை அலசிப் பார்த்துச சித்தாந்தத்தைச் சிதைத்துச சாறு பிழிந்தெடுத்துக் காலந்தள்ளுவதைவிட, ஒழுக்கமே மதம் - ஒழுக்கம் இவ்விதத்தது - என்று திட்டமாகக் கூறி, இவர்கள் தமது முத்திரையைப் பொறித்திடலாகாதா? சைவம் என்றால் என்ன? என்ற கேட்டாலோ, சண்டமாருதமெனக் கிளம்பி, சிவஞானர் செப்பியது. திருமூலர் திருவாய் மலர்ந்தருளியது என்ற ஏடுகளை வீசுகின்றனர். சாதியைச் சைவம் ஒப்புக்கொள்கிறதா? என்று கேளுங்கள் ஒரு சைவரை! சாதியா? இல்லையே! சைவத்திலே சாதியா? பாலிலே விஷமா? சிவ! சிவ! என்று கூறுவர். வீட்டிலேயோ சாதி தாண்டவமாடும். நாட்டிலே உள்ள சாதி பேதத்தைப் போக்கவோ சிறு விரலும் அசையார்.

அன்புதானே சிவம் என்ற கேளுங்கள் ஆமாம்! அன்பு வேறு சிவம் வேறு என்றுரைப்பர் அறிவிலார். அன்பே சிவம். மலருக்கு மணம்போல் உள்ளதப்பா அது என்று உருக்கமாகப் பேசுவர். அவர்கள் அணிந்துள்ள அந்தத் தங்க ஓடு போர்த்துக்கொண்டுள்ள உருத்திராக்க மாலைக்கு வாயிருந்தால் சொல்லும் அன்பின் யோக்யதையை! சமணரிடம்ன காட்டிய அன்பு தெரியாதோ என்று கேட்கும்.

சைவம், பல தெய்வ வணக்கத்தை ஆதரிக்குமா? என்று கேட்பின், சிவநேசச் செல்வர். முழுமுதற் கடவுளை மட்டுமே ஏற்கும் சைவம் என்று கூறுவர். ஆனால், மரத்தடிப் பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போடுவதை நிறுத்தமாட்டார். மலையுச்சி முருகனுக்கும் துபதீபம் நடத்துவார். தேவி பூசையும் விடமாட்டார். தத்துவம் வேறு. நடைமுறை வேறு இருக்கம். இதை மாற்றச் சிவநேசச் செர்வர்கள் தமது மாநாட்டிலே என்ன செய்தார்கள். வந்தவர்கள் தத்தம் புலமையைக் காட்டிப் புன்சிரிப்பூட்டிப் போயினரேயன்றி, நாட்டுக்கும் காலத்துக்கும் ஏற்றதான திட்டமென்ன செய்தனர் என்ற கேட்கிறேன். வீரன் நையாண்டி செய்கிறான். செய்யாமல் இருப்பானோ இவர்கள் செய்த காரியம் கண்டு.
அன்பே சிவமெனக் கண்டவர்கள், எம்மதத்தின் சாரமும் சைவத்திலே இருப்பதாகக் கூறுபவர்கள். சைவத்தைப் பரப்பும் நோக்கத்துடன் எழுதப்பட்ட ஆபாசக் கதைகளைக் கொளுத்த வேண்டாமா. அந்த மாநாட்டிலே. சமணர்கள் இருக்கும் திக்க எலாம் நோக்கித் தெண்டனிட்டுச் சைவத்தை அன்பு நெறியென்று கண்டோம். அன்று உமது மதத்தை ஒழிக்க, உம்மவரைக் கழுவிலேற்றினதற்காகக் கண்ணீர் விடுகிறோம்; கை கூப்பித் தொழுகிறோம், மன்னிப்புப் பெறுகிறோம் என்று கூறவேண்டாமா?

சைவம் என்றால், இதைக் கொள்வது இதைத் தள்ளுவது என்ற வரையறை இருத்தல் வேண்டாமோ. அதைச் செய்யச் சமாஜிகள் ஏன் முயலவில்லை என்று கேட்கிறேன். என்னைப் பால். என் அழகைப் பார் என்று பிரதாபன் கூறுவது போல, ஈரேழு பதினாலு லோகத்திலும் எமது சைவத்துககு இணை ஏது? என்று கூறுவதற்குத்தான், புலமை மிக்கவரும் பெரு நிலக்கிழாரும் கூடிப் பேசினரா என்று கேட்கிறேன். உலகம் மாறுகிறது. இவர்கள் உறங்குகின்றனர்!! சைவத்திலே ஆரீயர் ஆதிக்கம் இருப்பதை இன்றைக்குப் பதினாறாண்டுகட்கு முன்பே சிவாலயங்களிலே கமார்த்தக் கலப்பு இருப்பது பற்றிச் சைவசீலர் தமிழறிவாளர் தேழர் கா.சுப்பிரமணிய பிள்ளை ஏழுதினார்கள். என்ன பலன் கித்தது? இவ்வளவு சைவம் பேசிப் பசுபதி பாசவிளக்கமாற்றி, திருமுருகாற்றுப் படையை உருப்போட்டு உள்ளமுருக்கும் குரலிற் கூறினாலும், கட்டுக்கட்டாக நீறணிந்து குண்டலம் அச்தாடக் கோலமாய் உருத்திராக்கமாலை புரள வெளிவந்ததாலும், இச் சைவர்கள், முப்புரிகள் முன்னம் சூத்திரர்தானே! முப்புரி மூலவனைத் தொட்டுப் பூசிக்க, இச் சைவர்கள் எட்டி நின்று எழுசீரடி பாடி இறைவா போற்றி! இமையவனே போற்றி போற்றி என்று கூவிக் கிடக்கத்தானே நிலை உளது. சமுதாத்திலே உள்ள சாக்கடை இவர்கள் கண்முன் தென்படவில்லையா?

மார்டின் லூதர் செய்த மாபெரும் மதப் புரட்சி கிருஸ்துவத்தைக் கருக்கிவிடவில்லை. ஏன் இச் சைவர்கள் மட்டும் கிடைத்த எந்த ஏட்டுக்கம் பொருள் புகுத்தத் தத்துவம் நுழைக்க முன்வருமனவு தைரியமாகச் சைவத்தைச் சீர்திருத்த முன்வர மறுக்கிறார்கள். தொட்டால் சிணுங்குவானேன்? கேட்டால் கோபிப்பதேன்? கண்டனம் பிறந்தால் கதறுவது எதற்கு? இவ்வளவு மூடுபனியிலே எத்தனை காலம் தங்கியிருக்க முடியும்? அன்பே சிவமானால், அன்பை வளர்க்கப் பாடுபடுவதுதானே சைவர் கடமை, வேறு எதற்கு? அன்பு வளர, அறிவு வேண்டும். பேதம் ஒழிய வேண்டும். ஆதிக்கம் செய்வோர் அழிய வேண்டும். வறுமை போக வேண்டும். வாட்டம் தீரவேண்டும். ஒருவரைச் சுரண்டினால்தான் மற்றவன் வாழ முடியும் என்ற முறையிலே உள்ள அமைப்புகள் மாறவேண்டும். அன்பு அப்போதுதான் வளரும்; அதைச் செய்ய, நாடெங்கும் கோயில் ஏன்? அங்கு கொட்டு முழக்கும் கூத்தும் ஏன்? அதைக் காட்டிப் பிழைக்க ஒரு ஆரியக் கூட்டம் ஏன்? அது கட்டிவிட்ட கதைகள் ஏன்? ஆறுகாலப் பூசையும் அபிஷேக விசேடமும் ஏன்? அன்பு வளர இவை அவசியமா? அன்றி ஆலயங்களிலே அடைபட்டுள்ள பொருளை, வறுமை போக்கும் வளமான திட்டங்கட்குச் செலவிடல் முறையா என்பது பற்றிச் சிவநேசச் செல்வர்கள் சற்றே சிந்திக்கலாகாதா? என்று கேட்கிறேன்.

ஏன் சத்தம் அவர்கள் செவிபுகுமோ, புகாதோ, நானறியேன்.