அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சிவபூஜையில் கரடி!

சிவபூஜையில் கரடி என்று பேச்சுக்குச் சொல்வார்கள் - அலங்கார உருவிலே, ஒருமுரணான நிலையினை விளக்க. ஆனால், இப்போது, நிஜமாகவே சிவபூஜையிலே கரடி புகுந்து காலம் விளைத்துவிட்டது. உண்மை நிகழ்ச்சி - கட்டு அல்ல, கதை அல்ல. லட்சுமணபுரியில், ஒரு கரடி, யாராலோ, வளர்க்கப் பட்டு வந்தது. அது திடீரென்று, என்ன எண்ணிக் கொண்டதோ தெரியவில்லை, கட்டுகளை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. துரத்தினர் சிலர். பலரைக் கரடி துரத்திற்று. மக்கள் பயந்து போயினர். கரடி, வெற்றிக் களிப்புடன், நேரே, ஒருகோயிலுக்குச் சென்று, அங்கு விக்ரஹத்துக்கு எதிரே, அருகாமைல் உட்கார்ந்து கொண்டதாம். கரடி வேடிக்கை செய்யும் அளவுக்கு, அதைப் பழக்கி வந்தவன், கட்டு அறுத்துக் கொண்டு ஒடின கரடியைத் தேடிக்கொணடிருக்கிறான், லட்சமணபுரியில், கரடியோ, கோயிலிலே, உருவச்சிலைக்க எதிரே உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

வழக்கமாகக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அன்றும் வந்தனர், பக்தியுடன் பரமனைத்தொழ, அவன் நாமத்தைப் பஜிக்க, கோயிலுக்குள்ளே சென்றதும், ஐயோ, என்று அலறி அடித்துக் கொண்டோடினர் - கடவுளுக்கருகில் கரடி இருக்கக் கண்டு! பக்தர்களைக்கண்ட கரடி, அவர்களை விரட்டி அடித்ததாம். கரடியைப் பழக்கியவனே வந்தான், கரடி அவனுக்கும் அடங்க மறுத்துவிட்டது. கரடி, தன்னிடம் பலநாள் அடங்கிக் கிடந்ததுதானே, இப்போதும், மிரட்டினால், பணிந்து விடும் என்று எண்ணினான். கரடியோ, அவனைத் தாக்கிக், காயப்படுத்தியும் விட்டது - அவனும் ஓடிவிட்டான். பிறகு, போலீசார் நுழைந்து, மிகுந்த கஷ்டப்பட்டுக், கரடியைப் பிடித்துச் சென்றனர். பிறகு பக்தர்கள், பயம் நீங்கிப்பர மனைத் தொழவந்தனர். சம்பவம், நல்ல வெளையாக, நமது நாட்களிலே நடை பெற்றது - சின்னாட்களுக்கு முன்பு. இதே சம்பவம், நமது மூதாதையர் காலத்திலே, - மூதாதையர் என்றால் மிகமிகப் பழம்காலத்திலே என்று கூட எண்ணிவிடவேண்டாம் - நமது பாட்டனார்காலத்திலே, நடைப்பெற்றிருந்தால், அதிலும் லட்சுமணபுரியிலே நடைபெறுவதற்குப் பதிலாக, இங்கு, தமிழ் நாட்டிலே நடைபெற்றிருந்தால், இன்னேரம், கரடீஸ்வரர் ஆலயம் கட்டும் திருப்பணியும், கரடீஸ்வரர் திருவந்தாதி பதிப்பிக்கும் புண்ய காரியத்தையும், ஏற்றுக் கொண்டு, பலாபணி புரிய முன்வந்து விட்டிருப்பர். “கரடி, உண்மையிலே கரடி அல்ல - பூர்வஜென்மத்தில், ஒருதவசி, நெடுங்காலமாக நெருப்பிலேயே நின்று கடுந்தவம் செய்து வந்தார். அவருடைய உறுதியைப் பரிசோதிக்கவேண்டிக், கடவுள், பிரசன்னமாகாது இருந்ததுடன், அவருக்கு, மனமயக்கம் எவ்வளவு இருக்கிறது என்று சோதனை செய்ய, மானசீகமாது ஒருவளைச் சிருஷ்டித்து, முனிவர் எதிரே அனுப்பினார். முனிவர், அந்தமாதின் கூந்தல் அழகைக் கண்டு, மயங்கி, அவளை அணுகிக் கொஞ்சிடலானார். கூந்தலைக் கோதி முடித்து, காட்டுரோஜாவை அதிலே செருகி, அந்தக் காட்சியைக் கண்டு இன்புற்றார். கடுந்தவம் புரிந்து வந்தவர், கற்றைக்குழலாளைக் கண்டு காமுற்றது கண்ட கடவுள், கடுங்கோபம் கொண்டு, ஏ! காமாந்த காரத்தைவிரட்டத் தெரியாத கசடனே! எந்தக் கூந்தலைக் கண்டு, நீ உன் மனதைப்பறி கொடுத்தாயோ, அந்த ரோமம் உடலெங்கும் கொண்ட கரடியாக நீ பிறந்து உழலக்கடவாய்” என்று சாபமிட்டார், என்பதாக கதை புனைந்து, கவிதை இயற்றி, அந்தக் கரடியேதான், சாபவிமோசனத்துக்காக, லட்சுமணபுரிக் கோயிலிலே சென்று, பூஜை செய்தது, என்று கூறி விளக்கமறியா மக்களை நம்பும்படி செய்து, பூஜை செய்தது, என்று கூறி விளக்கமறியா மக்களை நம்பும்படி செய்து, உடனே கரடீஸ்வரர் கோயில் கட்டுவதற்கான துவக்க விழாவை நடத்தியிருப்பர். அந்தத் திருப்பணிக்குக், கனதனவான் கள் பணம் தந்திருப்பர் - இசைவாணர்கள் தமது இசையை வழங்கி இருப்பர் - கோகிலகானங்களும், கோமளவல்லிகளும், நான், நீ, என்று போட்டியிட்டுக் கொண்டு, கச்சேரிகள் நடத்தி யிருப்பர். நல்லவேலையாக, சுயமரியாதை உணர்ச்சியும், அறிவு ஒளியும் சற்று அதிகமாகப் பரவி இருக்கிற காரணத்தால், கோயிலுக்குள் கரடி புகுந்தது - பக்தர்கள் மிரண்டோடினர் என்ற அளவோடு எழுதிவிட்டனர். சிவபூஜையில் கரடிபுகுந்தது என்ற பழமொழி, நிஜமொழியுமாகிவிட்டது.

திராவிடநாடு - 12-10-1947