அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஸ்லட் நதிக்கரையில்!

எத்தனை ஆண்டவன்? ஏனிந்த ஆபாசம்? ஆண்டவனுக்கு உருவம் கற்பிப்பது கயவர் செயல். சாத்திரமும் சடங்கும் சாமியாட லும் சழுக்கரின் சூது. தல யாத்திரை என்பது சோம்பேறிகளைப் பிழைக்கச் செய்யும் சூட்சி, ஜாதி பேதம் என்பது அநீதி அக்ரமம், பக்தியின் பேரால் பாரமார்த்தீகத்தின் பேரால் வீரத்தை இழந்தோம், கோழைகளானோம். பேதத்தால் கெட்டோம். மூட நம்பிக்கையால் அழிகிறோம். இந்துக் கடவுள்களை விட்டொழியுங்கள். விக்ரகங்களை வணங்க வேண்டாம். வீணருரையான புராணாதிகளைப் படிக்க வேண்டாம். சமத்துவராக, சன்மார்க்க நெறியினராக வாழுங்கள். மும்மூர்த்தியும் இல்லை, அதற்குத் தரகு செய்ய முப்புரியுந் தேவையில்லை, தலங்கள் தேவையில்லை, அங்கு தர்ப்பைகள் தேவையில்லை, அவை வெறும் சூது, ஏமாற்று வித்தை பாஞ்சாலத்து வீரர்களே! இனி இப்படுமோசத்தை நம்பாதீர், சிங்கமென வெளிக் கிளம்புங்கள், சேர்ந்து வாழுங்கள், வாளை ஏந்துங்கள். மானத்தை இழக்க மறுக்கும் மாண்பு பெறுங்கள்.

மேலே காணப்படும் வீர, விவேக உரைகள், பதினைந்தாம் நூற்றாண்டிலே பாஞ்சால நாட்டிலே, சாதாரணக் குடும்பத்தில் தோன்றி இந்துமதக் கொடுமையை வெறுத்துப் புரட்சி செய்த குருநானக் முழக்கமிட்டவை. அவருடைய வீர உரை கேட்டு விழிப்புற்ற எண்ணற்ற மக்கள், சீக்கிய மார்க்கத்தைத் தழுவினர். அவருக்குப் பிறகு வந்த பல குருமார்கள், சீக்கிய மார்க்கம், பரவி, பலமான ஸ்தாபனமாகும்படி செய்தனர். ரன்ஜித்சிங் என்ற குருவின் வீரதீரம் வரலாற்றிலே இடம் பெற்றிருக்கிறது.

அத்தகைய பகுத்தறிவு மார்க்கமான சீக்கியமதத்தைக் கண்டு அஞ்சினர் வைதீகர்கள். ஏகதெய்வக் கொள்கையும் ஒரே குலம் என்ற கோட்பாட்டையும் கொண்ட சீக்கியர், சிங்கமெனச் சீறிப் போரிடத் தொடங்கியதுகண்டு இஸ்லாமியர், வியந்தனர்.

அத்தகைய சீக்கியரை, இன்று, இந்துமகா சபையினர், தமது வலையிலே விழவைக்க முயலுகின்றனர் சட்லஜ் நதிக்கரையிலே அன்று நடந்த புரட்சியைக் கெடுக்கின்றனர்.

பித்தர் விடுதியிலே சில காலம் தங்கியிருந்து, சிகிச்சை செய்து நோய் நீங்கப்பெற்ற, வெளி வந்தவர், தாம் முன்பு பித்தர் விடுதியில் இருந்ததாகக் கூறிக்கொள்ளவோ, உறவு கொண்டாடவோ மனம் இசையார். அங்கனம் எண்ணிடின் அவர்களுக்குப் பித்தம் முழுதும் போகவில்லை என்றே எண்ணவேண்டி நேரிடும்.

காவி உடுத்திக்கொண்டு கள்ளச்சாரயங் குடித்து வெறித்து, வீதி வழியே நடந்து தன்னை விற்கும் தையலைக் கூடிக் காலந்தள்ளும், சாமி வேடமும் காம நாடகமும் கொண்ட ஆண்டிகள் கூட்டத்திலே கலந்திருந்து பிறகு விவேகம் உதயமானதால், அவ்வீணரின் கூட்டுறவை அறுத்துவிட்டு, நாணயமான நல்வாழ்க்கை நடத்தப் புகுவோர், நமது முன்னாள் சகாக்கள் தங்கும் சாவடிப்பக்கமாகப் போகவும் கூசுவர். பழைய உறவை எண்ணினால் நெஞ்சம் குமுறுவர்; நினைத்து வருந்துவர்.

கெட்ட செயலும் கெடுமதியுங் கொண்டோரின் கூட்டுறவு நீங்கற்பெற்றால், மீண்டும் அத்தொல்லை தொடர முடியாத தொலை தூரத்தில் சென்று தங்குவதே மனித இயல்பு.

அதைப்போலவே, தூய்மையானவர்களின் புகழைக் கெடுக்க நல்வாழ்வைக் குலைக்க புதிய ஏற்பாட்டைக் கெடுக்க, தீயர்கள் “ஓ! இந்த ஆசாமியா? இவன் எம்மோடு இருந்தவனன்றோ! இது போது ஏதோ, மகாபெரியவனாகக் காட்சி தருகிறான். அவன் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன்” என்று கூறிடுவர்; அவனிடம் உண்டான அன்பின் காரணமாக அன்று; அசூயை காரணமாக.

சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் உள்ள தொடர்பு, இது போன்றதாகவே இருக்கிறது. வைதீக வெறி ஒழிந்து, இந்து போதை குறைந்து, சமத்துவ வாழ்வு தேவை என்பதை உணர்ந்து, புதிய முறையான சீக்கிய மார்க்கத்தைப் பின்பற்றிய கூட்டத்தினரை, இந்துக்கள், இன்றும், “எம்மவர்; எமது கூட்டத்தினர்; இவர்களும் இந்துக்களே” என்று கூறிக்கொள்கின்றனர். இதற்குக் காரணம் பல. முக்கியமானது, சீக்கியமார்க்கக் கோட்பாடுகளைத் தெரிந்தவர்கள், அந்த உன்னதமான கொள்கைகளைக் கொண்ட மக்களைப் போற்றாதபடி தடுக்க, அவர்களும் இந்துக்களே என்று கூறிட அவாவுகின்றனர். இஸ்லாமியர் எழுச்சியைத் தடுக்கவும், அரசியலிலே, இந்துக்களின் எண்ணிக்கையை அதிகமாக்கிக் காட்டவும், சீக்கியரையும், இந்துக்களின் பட்டியிலே சேர்த்து உலகை ஏய்க்கின்றனர். இந்துமத ஆபாசங்களைக் கண்டு இடித்துரைப்போரிடம், “எமது இந்து மதம், பலவர்ண மலர்த் தோட்டம். அதிலே வர்ணாஸ்ரமம் மட்டுமே இருக்கிறதென்று எண்ணாதீர், ஜாதி ஒழிந்த சமத்துவம், வீரம் நிரம்பிய சீக்கிய மார்க்கமும் இந்து மார்க்கத்திலே சேர்ந்ததுதான் என்று கூறி உலகை ஏய்க்க முனைவர். பூங்கொத்தைத் தின்று புதுப்புனல் பருகி கீதமிசைக்கும் கிளி வாழும் தோட்டத்திலேயே, பச்சைப் பாம்பு வாழினும், நீயும் நானும் நிறத்தில் ஒன்றே - இருப்பிடமும் ஒன்றே - சேர்ந்து வாழத் தடையுளதோ என்று பச்சைப் பாம்பு, கிளியிடம் கூறினால், நம்பும் கிளியின் கதி என்னாகும்? அதுபோல, இந்து வைதீகரின் உறவு கொண்டாடும் முறையை நம்பும் சீக்கியரின் கதியுமாகும் என்போம். எனவே, சீக்கியத் தலைவர் தோழர் பலதேவசிங் ‘சீக்கியர்களை இந்துக்களுடன் சேர்த்துப் பேசுவதையும், இந்துக்களுக்கும் சீக்கியருக்கும் பேதமில்லை என்று கூறுவதையும், சீக்கியரை இந்துக்களின் பட்டியிலே சேர்ப்பதையும் நான் பலமாகக் கண்டிக்கிறேன்” என்று உறுதியுடன் உரைத்திருப்பதுகேட்டு, நானக் பரம்பரை இன்னமும் நலிந்துவிடவில்லை என்று மகிழ்கிறோம். கூடத் தகாதவர்களின் கூட்டுறவை நீக்குவது அறிவு உடைமை மட்டுமன்று, தற்காப்பு முறையுமாகும். இதனை உணர்ந்ததுகண்டு உளம் பூரிக்கிறோம்.

சீக்கியமதமே, இந்து வைதீகத்தை எதிர்த்தெழுந்த புரட்சி மலர். அதன் மணம், புண்பட்ட பல இலட்சம் மனதுக்கு மருந்தூட்டியது. அதன் வாடை, வைதீகவெறியை ஓரளவு தெளிய வைத்தது. இந்துமத மெனும் இடுக்கியில் சிக்கிச்சிதைந்த சமுதாயத்தைச் சீர் செய்து சேற்றிலிருந்த செந்தாமரையை வெளியே எடுத்ததுபோல, முள்நீக்கி ரோஜாவைப் பறித்ததுபோல், கனியில் சென்று கட்டித் தங்கமெடுத்ததுபோல சீக்கியக் குரு, இந்து மதமெனும் சேற்றிலே புதைந்து கிடந்த மக்களை வெளியேற்றினார். அடிமைகளாகக் கிடந்தோரை, அரசாள்வோராக்கினார்; கோழைத்தனத்தை ஒரு கோட்பாடாக்கிக் கொண்டிருந்த கூட்டத்திலிருந்த மக்களின் ஒரு பிரிவினரை வீரராக்கினர். போரிட அஞ்சிய போகப்பிரியர்களில் ஒரு பகுதியினரை, சீறிப்போரிடும் சிங்கக்களாக்கினார். வெளியான் எவன் வரினும் வீழ்ந்து வணங்கவும், கங்கா ஜலத்தைத் தெளிக்கவுமே கற்றுக்கொண்டிருந்த கையாலாகாதவர்களிலே, சில இலட்சம் மக்களை அஞ்சா நெஞ்சராக்கினார். சீக்கிய மத குருமார், வைதீகத்தை வீழ்த்தி, சடங்குகளைச் சாய்த்து, விக்ரக வணக்கத்தை வீணாட்டம் என்று வெறுத்தொதிக்கி, பல தெய்வ வணக்கத்தைப் பலமாகக் கண்டித்து, ஜாதி பேதமெனும் பித்துப்பிள்ளை விளையாட்டை ஒழித்து, சீலம், வீரம், சமத்துவம், எனும் நற்குணங்களுக்கு இருப்பிடமான மார்க்கத்தை வகுத்தனர். மும்மூர்த்திகள், மூர்த்திஸ்தலங்கள், முப்புரியினர் எனும் மூடமதிக் கோட்பாடு சீக்கியர்கட்குக் கிடையாது. உருவமற்ற ஒரே ஆண்டவன், குருமார்களின் வாக்குகளின் தொகுப்பான கிரந்தம், அவர்களின் வேதம். சீக்கியர்களுக்குள் ஜாதி வித்தியாசம் கூடாது என்பது அவர்களுடைய சட்டதிட்டம். வீர வாழ்வு அவர்களின் இலட்சியம்.

இஸ்லாமியருக்கு ஒரு அல்லா, ஒரு நபி, ஒரு கொரான், ஒரே இனம், என்ற திட்டம் இருப்பதுபோல், சீக்கியர்களுக்கும் அமைந்திருக்கிறது. இதன் பயனாகவே, இந்துக்களிடையே காணப்படாத, உண்டாக முடியாத, உத்வேகம், சமத்துவ உணர்ச்சி, வீரம், சீக்கியரிடம் இருக்கிறது. மொழியுங்கூட சீக்கியருக்குத் தனி. குர்முகி என்பது அவர்தம் மொழி.

ஒரு பேராசிரியர் கூறியிருப்பது போல், இஸ்லாத்தின் குர்முகி பதிப்பே சீக்கிய மார்க்கம்.

இவ்விதமான ஒப்புவமை உள்ள இருசாராருக்கு மிடையே, அணையாத விரோதம் மூட்டி விட்டு, அதனால் பயனடைந்தவர்கள், பஞ்சாங்கக் கூட்டமே என்பதை வரலாற்றைக் கூர்ந்து படிப்போர் உணருவர். மராட்டியர், ரஜபுத்ரர், சீக்கியர், எனும் போர்ப் பரம்பரையினர் வரையும், முஸ்லீம்கள் மீது மோதவிட்டு இடையே ஆரியம், இரத்தம் உறிஞ்சி வாழ்ந்தது. அந்தப்போக்கை மாற்றிக்கொள்ளாமல், இன்றும், வீரசவர்க்கார் எனும் மராட்டியப் பார்ப்பனர், இந்துமகா சபைத் தலைவராக இருந்து கொண்டு, பாகிஸ்தானை எதிர்க்கப் பச்சை இரத்தம் பரிமாற வாரீர் என்று சீக்கியரைத் தூண்டிவிடுகிறார்.

மொகல் சாம்ராஜ்யத்தின் மீது மராட்டியரை மோதவைத்த தன் பலனாகப் பீஷ்வாக்கள் எனும் பார்ப்பன அதிபர்கள் உண்டாயினர். சீக்கியரை, இஸ்லாத்தின் மீது மோதவைப்பதாலும், இந்துக்களே இலாபம் பெற முடியும். சீக்கியர் இந்தச் சூதினை உணர்ந்து விடுவதால், இஸ்லாமியருடன் சரிசமமான உத்தமக் கொள்கைகளைக் கொண்ட தாங்கள் இழுக்கு நிரம்பிய இந்துமதக் கரடியில் விழக்கூடாது என்பதை உணருவர்.

தோழர் பலதேவ சிங்கின் பேச்சு, இத்தகைய விழிப்பை சீக்கியரிடையே உண்டாக்கியிருப்பதைக் காட்டுகிறது. இது வரவேற்கத்தக்கது.

இஸ்லாமிய ஆட்சி ஏற்படாதபடி தடுக்கும் சூரர்கள், சிங்கங்கள் நீவிரன்றோ! ரஞ்ஜித்சிங் எனும் தலைவன் தயாரித்தான் களச்சூரர் நீவிரல்லவோ! பாகிஸ்தான் என்றோ வந்து வேண்டும்” என்று தூண்டிவிடும் காரியத்தை இந்துமகாசபை செய்து வருகிறது. இதனால், சிந்தும் இரத்தம் பாஞ்சாலத்துச் சடலம் நதியைக் கெடுக்குமே யன்றி கரை வாசிகள் கவலையற்று கிடப்பர் என்பதைச் சீக்கியர் தெரிந்துகொள்ள வேண்டும்.

“வீர மரபினரான உமக்கு ஒரு தனி அரசு கேளுங்கள். சீக்கியர்கள், பஞ்சாப் பிரதேசத்தில் மட்டுமே பெருவாரியாக உள்ளனர். இங்கு அவர்களின் தொகை 30 இலட்சம். இந்த 30 இலட்சம் பேருக்குத் “தனிநாடு” தேவை என்றால், பாகிஸ்தானில் இடம்பெறாத ஐக்கிய மாகாணத்தில் மட்டும் உள்ள 50 இலட்சம் முஸ்லீம்கள் தனிநாடு கேட்க உரிமை பெற்றவராவர் என்பதை, இந்து மகாசபையினருக்குக் கூறவிரும்புகிறோம். சீக்கியரைத் துண்டி விடுவதன் விளைவாக, பாகிஸ்தானின் எல்லை விஸ்தரிக்குமேயன்றி, கோரிக்கை அடங்கிவிடாது. சீக்கியரும், சட்லட்ஜ் நதிக்கரையிலே முன்னாளில் உலவிய தமது குருமார்கள், இந்துக் கொடுமையை விட்டு விலகவே, வீரசீக்கிய மார்க்கத்தை வகுத்தனர் என்பதை உணர்ந்து, கோழைத்தனமே குடி கொண்ட இந்து வைதீகக் கும்பலின், எடுபிடிகளாகாமல், நானக்கும், ரஞ்சித்தும், வகுத்த வழியைப் பின்பற்ற வேண்டுகிறோம்.

சிரோமணி குருத்வரா பிரபுதன்தாக் கமிட்டி எனும் சீக்கியக் குழு, “யாரொருவர் தன்னை இந்துவென்று கூறிக் கொள்கின்றனரோ, அவர்கள் சீக்கியராகக் கருதப் படமுடியாது” என்று தீர்மானித்துள்ளனர்.

ஓரியன்ட் பிரஸ் நிருபர் இதுபற்றி லாகூரிலிருந்து தெரிவிப்பதாவது, “இனி அரசியலிலே சலுகைகள் பெற வேண்டுமானால் அதனை முஸ்லீம்களிட மிருந்தே பெற முடியும் என்பதையும் இந்துக்களிடமிருந்து இதனைப் பெற முடியாது என்பதையும், இப்போது சீக்கியர் தெரிந்து கொண்டனர்!”

அகாலித் தலைவர்கள், இனி சீக்கிய இஸ்லாமிய ஒற்றுமைக்கான வழிவகை செய்ய ஒரு குழு அமைக்கவும், அதனைத்துவக்கி வைக்க ஜனாப் ஜின்னாவை அழைக்கவேண்டு மென்றும் தீர்மானித்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது. எனவே, சட்லஜ் நதிக்கரையில் இனி இந்து ஆதிக்கம் அடங்கிவிடும் என்பதுறுதி.

23.5.1943