அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சோவியத் கொரில்லா

படை தோற்றால் சண்டை தோற்றது என்பது, மற்ற இடங்களில் நடப்பது. சோவியத்திலே, அன்று! படை அழிந்தாலோ, அல்லது பின்வாங்கினாலோ, களத்திலே இல்லை, என்றுமட்டுமே தான்கூற முடியும் சண்டை தீர்ந்துவிட்டது என்று கூறமுடியாது. காட்டிலே, கணவாயிலே, மலைச்சரிவிலே, ஜெர்மன் முகாமுக்கருகே, வளைவிலே, எங்குச் சோவியத் கொரில்லா இருப்பான், என்ன செய்வது பகலிலா, இரவிலா, எந்த நேரத்தில் எப்போது வருவான், என்று கூறமுடியாது. போர் எங்கும் தோன்றும் தீடீரென்று, எந்தச் சமயத்திலும் வரக்கூடும், கையில் கிடைத்தது ஜெர்மானியன் கையிலே தப்பித்தவறி சிக்கினாலோ, அவன் வாய் திறவாது, மற்றக் கொரில்லாப் படையினர் எங்கே உள்ளனர் என்பதைக் கூற மாட்டான், என்ன செய்தாலும் எவ்வளவு இம்சை செய்தாலும் டாங்கியின் இரும்புப்பற்கள் கொண்ட சக்கரத்திலே கட்டி, டாங்கி ஓட்டுவதை விடவா, சித்திரவதை வேறு இருக்க முடியும்! சோவியத் கொரில்லாவை இத்தகைய சித்திரவதை செய்தும், வாய் திறக்கவில்லை.

செஞ்சேனை, சீறிப்பாயும் புலியன்று, சோவியத் கொரில்லா, நெளிந்து தீண்டிடும் நாகம்! அதன் பற்களைக்கண்டு, ஜெர்மானியர் பதறிக்கிடக்கின்றனர்.

பத்துநாள் போரிட்டோம். பத்துப்பேரை இழந்தோம். பட்டிணத்தைப் பார்த்தோம். இனி பயமின்றி வெல்வோம், வெற்றி ரசத்தைப் பருகுவோம் என்று ஜெர்மன் படையினர் கூறமுடியாது. கொரில்லாவின் கண்கள் ஊருக்குள்ளே கூடாரமிட்டுக் கொண்டிருக்கும் விரோதியின் ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டிருக்கும். காடுகளிலே உலவுவர் காலை மாலையிலே மந்திராலோசனை. வேட்டை! எதிர்ப்பட்ட சனியன் அழிந்தான். ஓடும் ரயில் கவிழும், பாடும் ஜெர்மானியன் பிணமாவான், அவன் சேர்த்துள்ள பண்டம் பறிபோகும், அவன் ஆயுதச்சாலை கொள்ளைபோகும். டாங்கிகள், பீரங்கிகள், லாரிகள், விமானங்கள், எதற்கும் ஆபத்துதான். எதிரே, செஞ்சேனை இல்லை என்று அயர முடியாது, சுற்றிலும் இருப்பர் சோவியத் கொரில்லாக்கள், ஆண், பெண், கிழவர், குமரர், சிறுவருங்கூட!

கொரில்லாவிடம் பட்ட கஷ்டத்தை ஒரு ஜெர்மன் படைத்தலைவன் தனது கடிதத்திலே எழுதினான். அக்கடிதம் சோவியத் படையினரிடம் சிக்கிற்று, அது இது.

“ஆறு நாட்களாக நமது ஆட்கள் அவதிப்படுகின்றனர். உணவு இல்லை. சர்வமும் இங்கு சாம்பலாக்கிவிட்டே ரஷியர் ஊரைவிட்டுச் சென்றனர். பக்கத்து இடங்களிலே போய், உணவு சேகரிக்கலாமென்றாலோ, பாழும் கொரில்லாத் தொல்லை பொறுக்க முடிவதில்லை. இரவும்பகலும், இவர்களின் இன்னல், இம்சிக்கிறது. இருபது பேருக்குமேல், உணவு தேடிக்கொண்டு வரும்படி வெளியே அனுப்பினேன். மூவரே திரும்பிவந்தனர் வெறுங்கையுடன், மற்றவர்கள், கொரில்லாவிடம் சிக்கிவிட்டனர். செத்தனரோ, பிழைத்தனரோ தெரியவில்லை.”

18ம் நம்பர் ஜெர்மன் டாங்கிப் படைக்கு இச்செய்தியை ஒரு பிரிவின் தலைவன் தெரிவித்தானாம்.
சோவியத் கொரில்லாக்கள், புரட்சிக் காலத்தில் எப்படி, ஜாரின் கொடுமைகளை, மறைந்திருந்து, சமயம் கிடைக்கும் போதெல்லாம், தாக்கி வந்தனரோ, அதுபோல் நாஜியிடம் பிடிபட்ட இடங்களிலே இன்று செய்து வருகின்றனர். அவர்களின், போர்முறை, ஜெர்மன் படையினருக்குப் பெரிய தொல்லையாகி விட்டது. அதிலும், குளிர் காலத்திலே, கொரில்லாவின்பாடு கொண்டாட்டம்! இது குளிர்காலந்தானே!!

15.11.1942