அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சோவியத் சிங்கம் லெனின்

உலகில் ஒப்பற்ற மாறுதலைக் காட்டி, ஜாரின் வேட்டைக் காட்டினை மக்களின் பூந்தோட்டமாக்கிய, மாபெரும் புரட்சி வீரன் லெனின் பாட்டாளி உலகின் தலைவன், அவர் வரலாற்றுச் சுருக்கம், மே முழக்கம் மேதினியெங்கும் கிளம்பிய இக்கிழமை, ஒவ்வொருவர் நெஞ்சிலும் பதிய வேண்டும்; படித்தோர் புதியதோர் சக்தி பெறுவர்; கோழைகளும் வீரராகும் விதமானது அவருடைய வாழ்வு. அவர் சித்தரித்த சோவியத் நாட்டுக்குச் சொல்லொணாக் கஷ்டம் ஏற்பட்டுள்ள இந்நாளிலே லெனின் வரலாறு, படித்திடல் அவசியம். எத்தகைய வீரனின் சித்திரத்தை இன்று நாஜி வெறியன் நாசமாக்க நினைக்கிறான் என்பதை உணர்ந்து, தோள்தட்டி, எழுந்து போரிடத் தக்க புத்துணர்ச்சி தரும் புரட்சிப் பானம், அவர் வரலாறு.

ருஷ்யாவில் ஜனங்களைத் துன்புறுத்திவந்த முடியரசை வீழ்த்தி, உண்மையான குடியரசை ஸ்தாபித்த லெனின் ஹிம்பர்ஸ்க் என்ற ஊரில் கீர்த்தி வாய்ந்ததோர் குடும்பத்தில் 1870ம் வருஷம் பிறந்தார். சிறுபிராயமுதல் தேசமக்களின் பரிதாபகரமான நிலைமையைக் கண்ணுற்றுக் கலங்கினார். அப்பொழுது எல்லாத் துறைகளிலும் அவர்களை வாட்டிவந்த இன்னல்களைப் போக்க வேண்டுமென்ற விடுதலை வேட்கை அவருடைய இளம் காதில் வேரூன்றிவிட்டது. சொந்த ஊரில் ஒரு தேகப் பயிற்சி சாலையிற் சேர்ந்தார். அவருடைய திறமையைப் பாராட்டி ஒரு தங்கப் பதக்கமும் அளிக்கப்பட்டது. பிறகு காஜான் சர்வகலாசாலையிற் சேர்ந்து கல்வி கற்கலானார். சர்க்காருக்கு எதிராக ஏற்பட்ட மாணவர்களின் கிளர்ச்சியில் சேர்ந்ததற்காக வெளியேற்றப்பட்டார். பதினேழாவது வயதில் அவருடைய சகோதரனாகிய அலெக்ஸாண்டர், ஜார் மன்னனை (மூன்றாவது அலெக்ஸாந்தரை)க் கொல்ல முயற்சித்ததாக தூக்கிலிடப்பட்டார். அதையும் வெகுவாய்ப் பொருட்படுத்தாது, தம்முடைய உயரிய நோக்கத்திலேயே ஊக்கங்கொண்டு உழைக்க ஆரம்பித்தார். பிட்ரோகிராட் சர்வகலாசாலையைச் சேர்ந்து 1891இல் சட்டம் பொருளாதாரம் முதலியவைகளைக் கற்கலானார். பிறகு காரல் மார்க்ஸ் இயற்றிய நூல்களிலேயே அதிக கவனம் செலுத்தலானார். ரஷ்யாவின் இராஜீயப் பொருளாதார அபிவிருத்திக்கும் பொதுவாக உலகின் முன்னேற்றத்திற்காக மார்க்ஸியக் கொள்கைகள் எவ்வாறு இன்றியமையாதனவென்று ஆராய்ச்சி செய்யலானார்.

1894 முதல்தான் தீவிரமான முறையில் பிரசாரத்தி லீடுபட்டார். அப்பொழுது ஆதிக்கத்திலிருந்து கக்ஷியாரை எதிர்த்து, இரகசியமாகப் பிரசுரங்களை வெளியிட்டார். அச்சுக்கூடங்கள் அவை
களை அச்சிட மறுக்கவே, கையினாலெழுதப்பட்டு அப்பிரசுரங்கள் பரவின. அத் தருணந்தான் சட்டவிரோதமான “தொழிலாளரின் விடுதலைச் சங்கம்” அவரால் ஸ்தாபிக்கப்பட்டது. அடுத்த வருஷம் ஜெர்மனிக்குச் சென்று திரும்புங்கால் சமூக சமதர்மவாதத்தில் அவர் ஈடுபட்டதற்காகக் கதைசெய்யப்பட்டுக், கிழக்கு ஸைபீரியாவில் சிறைவைக்கப்பட்டார். சிறைவாசம் கழிந்தபின்னர் ருஷ்யாவிலுள்ள பெரிய நகரங்களிலாவது தொழிற்சாலைகளுக்கருகிலாவது சர்வகலாசாலை
களிருக்கும் நகரங்களிலாவது அவர் வசிக்கக்கூடாதென்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

1898ஆம் வருஷத்தில் தொழிலாளரின் விடுதலைச் சங்கத்தில் அரிய தொண்டாற்றிய க்ருப்ஸ்காயா என்ற மாதை மணம்புரிந்தார். உயிருள்ளவரை பொதுஜன சேவையில் லெனினுக்கு அப் பெண்மணி அளித்த உதவி மிகவும் போற்றத்தக்கது.

சைபீரியாவில் சிறைவாசம் செய்யுங்கால் ஏராளமான புள்ளி விவரங்களை ஆதாரமாய்க்கொண்ட “ரஷ்யாவில் முதலாளிகளின் முன்னேற்றம்” என்ற அபூர்வ நூலை இயற்றினார். 1899ல் ‘சிறுபொறி பெருந்தீ’ என்ற கொள்கையைக் கொண்ட ‘ஸ்பார்க்’ என்ற புரட்சிப் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தலானார். ஜார் அரசரின் அதிக்கிரமத்தை யொழிக்கவேண்டி நேர்முகமாய்ப் போராட ஒரு மத்திய கட்சியும் ஸ்தாபிக்கப்பட்டது.

1906ம் வருஷம் ஏற்பட்ட ரஷ்ய ஜப்பானியப் போரில் தொழிலாளர் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டனர். அதனால் விவசாயிகளுக்குள் பரபரப்பு ஏற்பட்டது. இராஜீய வேலை நிறுத்தங்களும், அமைதியின்மையும் நாடெங்கும் அதிகரித்தன. ‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்றவாறு லெனின் அக்குழப்பத்தினிடையிலேயே ஜார் அரசருக்கு விரோதமான கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, பலாத்காரமாய் அவருடைய அநியாய ஆட்சிக்கு உலைவைத்துத் தேசத்தையும் ஜனங்களையும் சீர்திருத்த வேண்டித் தொழிலாளரையும், விவசாயிகளையுங் கொண்ட பெரியதோர் இயக்கத்தின் மூன்று முக்கிய நோக்கங்களைத் தெளிவாகக் கீழ்க்கண்டவாறு வெளியாக்கினார்.

1. உண்மையான இராஜிய சுதந்தரத்தை ஜனங்கள் தற்காலிகமாகவாவது கைப்பற்ற வேண்டும்.

2. வலுவுள்ளனவாயும், தொழிலாளர், விவசாயிகள், இராணுவ வீரர்கள் இவர்களைக் கொண்டவாயுமுள்ள, கட்டுப்பாடுள்ள சோவியத் புரட்சி ஸ்தாபனங்களை ஏற்படுத்த வேண்டும்.

3. ஜனங்களிடம் பலாத்காரத்தைப் பிரயோகிப்பவர்களை, பலாத்கார முறையிலேயே ஜனங்கள் நசுக்கிவிட வேண்டும்.

புரட்சி ஸ்தாபனங்கள் வளர்ந்தோங்கின. அவ் வருஷத்தினிறுதியில் (டிசம்பர்) மாஸ்கோவில் பெரியதோர் புரட்சி கிளம்பியது. ஆனால் மற்ற நகரங்களிலும் ஏககாலத்தில் புரட்சிகளில்லாததாலும், இராணுவத்தினரின் பரிபூரண ஆதரவு இல்லாமையாலும், அப்புரட்சியைச் சர்க்கார் சிரமமின்றி அடக்கிவிட்டனர்.

இப்புரட்சிகளில்தான் லெனினுக்கு எதிர்ப்பு அதிகரித்து, அதுவரை சகாக்களாயிருந்த சிலர் பலாத்காரப் புரட்சிக்குப் பயந்து, அவரை எதிர்த்தனர். அரசாங்கத்தாரின் அடக்குமுறை ஒருபுறம், மென்ஷிவிக்குகள் என்று அழைக்கப்பட்ட கோழைவீரர்களின் எதிர்ப்பு ஒருபுறம். இவை இரண்டையும் எதிர்த்துப் போராடிய லெனின் பட்டபாடு கொஞ்சநஞ்சமன்று. 1912ஆம் வருஷம் தொழிலாளரியக்கம் புத்துயிர் பெற்றுத் தழைத்தோங்கியது. அப்பொழுது அவர் ஸ்தாபித்த ‘பிராவ்டா’ என்ற பத்திரிகை போலீசாரின் கோபாக்கினியையும், சர்க்காரின் பறிமுதலையும் மீறி ஜனங்களிடையே புரட்சிக் கொள்கைகளைப் பரப்பிவந்தது. அவ்வருஷத்திலேயே ஆஸ்டிரியா தேசத்துப் போலீசார், அவரை ஓர் இரஷ்ய வேவுகாரனென்று கருதி, ஸ்விட்ஜர்லாந்துக்குப் பிரஷ்டம் செய்தனர்.

சென்ற மகாயுத்தத்தின் ஏகாதிபத்தியக் கொள்கையை அவர் தீவிரமாய் கண்டித்தார். ஒவ்வொரு வல்லரசும், தன்னுடைய பொருட்களையே அன்னிய தேசங்களில் விற்பனை செய்து இலாபமடையும் பொருட்டும், மற்றவர்களுடைய போட்டியைத் தகர்த்தெறியும் கெட்ட எண்ணத்துடனுமே, யுத்தத்தில் முனைந்து நிற்பதை விளக்கிக் காட்டினார். தேசியம், தேசியம் என்று முதலாளிகள் கூறுவதெல்லாம் தொழிலாளரை வஞ்சிப்பதற்காகவே யல்லாமல் வேறல்ல வென்றும், அம்மாதிரி பிறரை வஞ்சிப்பதற்காகவே ஏகாதிபத்யமுறை ஏற்பட்டிருப்பதால் என்றும் தலைக்காட்டாதவாறு அதைக் குழி தோண்டிப் புதைத்துவிடப் புரட்சி இன்றியமையாதது; அதை விடுத்து, அஹிம்சை அஹிம்சையெனப் பின் வாங்குவது சற்றுத் தகாதென்றும் பொருள் படுமாறு எடுத்துரைத்தார்.

சில இராஜீய வாதிகளும், ஆசிரியர்களும் அவரை அராஜக வாதியெனத் தாக்கியுள்ளார்கள். பலாத்காரத்தை அவர் ஆதரிக்க வில்லை. ஆனால் அப்போதைய சமூக அமைப்பில், வேறு எவ்விதத் திலும், அவருடைய லட்சியத்தை யடையக்கூடாததால் அம்முறை யைக் கையாளவேண்டியது அவசியமாய் விட்டது.

1915ல் ஐரோப்பாவிலுள்ளவர்களும், யுத்தத்திற்கு ஆதரவளிக்காதவர்களுமான, சமூக சமதர்மவாதிகளின் மாநாடொன்று கூட்டி சர்வதேச பொதுவுடைமைச் சங்கத்தை ஸ்தாபித்தார்.
தொழிலாளரின் இயக்கம் சர்வதேச நோக்கமுடையது. எல்லாத் தேசங்களிலும் தொழிலாளர்களுக்குரிய குறைகள் ஒன்றேயாகும், எத்தேசத்தில் பிறந்து எம்மதத்தினனாயினும் சரி, தொழிலாளி என்றால் அவனை உய்விக்க மற்ற வகுப்பாரில் எவரும் கிடையாது. ஆகையால் முன்னேற்றமடைய வேண்டுமாகில் அவர்கள் ஒன்று சேர்ந்து முற்பட வேண்டுமென்று சந்தேகமறத் தெரிவித்தார். காரல் மார்க்ஸின் தத்துவங்களை நன்குணர்ந்து அவைகளின் சாஸ்வதமான உண்மையை உலகிற்கெடுத்துரைத்தார். ரஷ்யப் புரட்சி இயக்கங்களில் அவருக்கேற்பட்ட அனுபவங்களும், உலகெங்கும் தொழிலாளரின் நிலைமையைப் பற்றிய தகவல்களை அறிந்திருந்தாலும், இங்கிலீஷ், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன், போலீஷ் போன்ற பாஷைகளில் அவருக்கேற்பட்ட பாண்டியத் தியத்தின் உதவியாலும், சர்வதேச தொழிலாளரியக்கத்திற்கு அவர் சேவை புரிவதில் அதிகமான கஷ்டங்கள் தோன்றவில்லை. ஒவ்வொரு தேசத்திற்கும் ஆங்காங்குள்ள நிலைமைகளை யுத்தேசித்துத் தனிப்பட்ட திட்டங்களின் அவசியத்தையும், எல்லாத் தேசங்களுக்கும் பொதுவாக ஏற்பட வேண்டிய இயக்கத்தின் நோக்கத்தையும் திட்டமாக எடுத்துக் கூறியுள்ளார்.

1917ஆம் வருஷம் ரஷ்யாவில் புரட்சி இயக்கம் அதிதீவிரமாய்க் கிளம்பி, ஜாரின் ஆதிக்கத்தை ஒழித்து விட்டது.

புரட்சியாரம்பத்தில் லெனின் சுவிட்சர்லாந்திலிருந்தார். முன்னேற்றத்திற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் பிரிட்டிஷ் அதிகாரிகள், ரஷ்யாவிற்கு அவர் செல்வதைப் பலமாக எதிர்த்தனர். ஆகையால் ஜெர்மனி மார்க்கமாய்த் திரும்ப வேண்டி நேரிட்டது.

ஜாரின் ஆட்சியை ஒழித்துவிட்டதால் மட்டும் பயனில்லை. இனி நடக்க வேண்டிய முறைகளைப்பற்றியே யோசிக்க வேண்டும். பாமர ஜனங்கள் ஆயுதந்தரித்து, சோவியத்து சபைகளைப் பலப்படுத்த வேண்டும். கிராமந்தரங்களில் வேலை செய்து கிளர்ச்சிகளைப் பெருக்கி, முதலாளிகளின் அதிகாரத்தைப் பிடுங்கிச், சமூக சமதர்மத்தை அடிப்படையாய்க் கொண்டு ஜன சமூகத்தை நிர்ணயிக்க வேண்டுமென்று தீவிரப் பிரசாரத்தை மேற்கொண்டனர்.

நாற்புறமும் அவருக்கு விரோதிகள் கிளம்பினர். ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி என்ற பேதமற்ற தர்மத்தைப் பணக்காரர்களும் பிரபுக்களும் ஒத்துக்கொள்ளவில்லை. லெனின் ஜெர்மனியின் ஆட்சியை ரஷ்யாவில் ஸ்தாபிக்க முற்படுவதாகவே பொய்ப் பிரசாரங்கள் எங்கும் கிளம்பின. லெனினுக்கு ஏற்பட்ட விரோதிகளுக்குக் கணக்கில்லை தோல்வியும் ஏற்பட்டது.

ஆனால், லெனின் அதனால் சோர்வடையாமல் ஒரே ஊக்கத்துடன் பிரசார வேலையிலீடுபட்டதன் பயனாக அதே வருஷம் ஜுலை மாதம் நடந்த தேர்தலில் அவருடைய போல்ஷிவிக் (தீவிர பொதுவுடமை) கட்சியாருக்கு அதிகப்படியான ஸ்தானங்கள் கிடைத்தன. அதிகாரம் கிடைத்தவுடன் தாமதமின்றி, முன்வைத்த காலைப் பின் வைக்காது எடுத்த காரியத்தை முடித்தாக வேண்டு மென்ற பிடிவாதத்துடன் சுறுசுறுப்பாய் வேலை துவக்கினார்.

உடனே “பாமர ஜனங்களுக்கே சர்வாதிகாரம் உரித்தானது” என்று பறைசாற்றி ஜனங்களுக்கிடையில் தாண்டவமாடிப் பேதம் விளைவித்துக் கொண்டிருந்த ஏழை, பணக்காரன் என்ற வகுப்புவாத உணர்ச்சியை அடியோடு ஒழித்துவிட முற்பட்டார்.

மகாயுத்த உடன் படிக்கையின் காரணமாய்ச் சமாதானம் நிலைத்தவுடன், சர்க்காரின் தலைமை ஸ்தானத்தை மாஸ்கோவிற்கு மாற்றினார். தம்முடைய கட்சிக்கும், இதரர்களுக்கும், இனி ருஷியர், எவ்விதங்களில் முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டுமென்று எடுத்துரைத்தார்.

ஜெகோஸ்லோவேகியாவில் அவருக்கு விரோதமான கிளர்ச்சிகள் வலுத்தன. யுத்தக்கடனை மறுத்துவிட்டதற்காகப், பிரிட்டிஷார் சொற்படி ரஷ்யாவுக்கு ஆகாராதிகள் மற்றத் தேசங்களிலிருந்து அனுப்பப்படவில்லை. எனினும் லெனின் ஊக்கங் குறையாது ஜனங்களிடையே தமது கொள்கையைப் பற்றிப் பிரசாரம் செய்வதை மும்முரமாய்க் கைக்கொண்டார், உள் நாட்டில் கிளர்ச்சிகளுக்கு காரணபூதமாயிருந்து தொந்தரவு விளைவித்து வந்த மென்ஷிவிக்குகள் 1921இல் இறுதியாக முறியடிக்கப்பட்டனர்.

ரஷ்யாவை மின்சாரமயமாக்குவதைப் பற்றி ஒரு விரிவான யதாஸ்தை லெனின் 1920ல் சமர்ப்பித்தார். ஆலைப் பண்டங்களை சிக்கன முறையில், ஏராளமாய்த் தயாரிக்க வேண்டியதன் அவசியத் தையும், தனிப்பட்ட நபர்கள் வேளாண்மையில் ஈடுபடுவதைக் காட்டிலும் சிலாக்கியமானதான சமூக வேளாண்மையில் சுலபமாய் அனைவரும் விளைபொருட்களைத் தயாரிப்பதற்கான வழிகளையும் விரிவாக அந்த யாதாஸ்தில் குறிப்பிட்டார்.

தன்னுடைய சௌகரியங்களைக் கொஞ்சமும் கவனியாது, சதா ஜன சேவையில் ஈடுபட்டு வேளைக்குணவின்றி உழைத்ததன் பயனாய் அவருடைய சரீர சுகம் கேடுற்றது. 1923ஆம் வருஷத்தில் வலது புறம் பாரிச வாய்வினால் பாதிக்கப்பட்டு, 1924ஆம் வருஷம் ஜனவரி மாதம் 21ஆம் தேதி உயிர் நீத்தார்.

அவரிடம் ரஷ்யர் கொண்ட அன்பு அளவற்றதென்பது, கோடிக்கணக்கான மக்கள் அவருக்குக் காட்டிய கடைசிக் கல்லறை மரியாதையிலிருந்து புலப்படுகின்றது. மாஸ்கோ காட்சிச் சாலையின் இன்றைக்கும் அவருடைய உடல் அழிந்துபோகா வண்ணம் காப்பாற்றி மயக்கப்பட்டிருக்கின்றது.
தாய் நாடு மட்டுமன்று, ஜனசமுகத்திற்கே தம்முடைய தத்துவங்களைப் பறைசாற்றி ஏழைகளுக்குத் தன் ஆவியையே அர்ப்பணம் செய்த லெனினை எவரும், என்றைக்கும் மறக்க முடியாது. இராஜீய சுதந்திரம் மட்டுமல்லாது பொருளாதார சுதந்திரத்தின் அவசியத்தை உலகிற்கெடுத்துக் காண்பித்த லெனின் அழியாப்புகழ் பெற்றுவிட்டார். ரஷ்யாவில் இப்பொழுது கையாளப்பட்டு வரும் இரண்டாவது ஐந்து வருஷ திட்டம் என்பது லெனினுடைய யாதாஸ்தைப் பின்பற்றியதே யாகும். முதலாளி மயமான உலகெங்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாய் ஜன சமூகம் தத்தளித்துக் கொண்டிருக்க லெனினைப் பின்பற்றிய ரஷ்யாவில் மட்டும் எவருக்கும் சௌகர்யக் குறைவேயில்லை என்று நாம் கண்கூடாகக் காண்பதிலிருந்து லெனின் போதித்த கொள்கைகள் அனுபவ சாத்தியமில்லாத பகற்கனவன்று வென்பது வெளியாகிவிட்டது.

9.5.1943