அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சோவியத் விகடம்

சோவியத் நாட்டிலே, இந்தப் பயங்கரமான போரின்போதும், மக்கள், நகைச்சுவையை இழக்கவில்லை! நகைச்சுவையும் சோவியத் நோக்கத்தைப் பலப்படுத்தும் விதமாகவே உள்ளது. சோவியத் பத்திரிகைகளிலே விகடப் பேச்சுகள் விதவிதமாக வெளிவருகின்றன. எதிரியை நையாண்டி செய்வது அப்பேச்சுகளின் நோக்கம். அவற்றிலே சில. இங்கே தரப்பட்டுள்ளன.

(1) நகரைத் தாக்குவதா!
ஜெர்மன் மேஜர் (சோவியத் நகரொன்றைப் பிடிக்கக் கிளம்புகையில்) : ஏ! லெப்டினன்ட்! ஏன் நமது படைகள் என் உத்திரவின்படி அந்த சோவியத் நகரைத் தாக்கக் கிளம்பவில்லை?

ஜெர்மன் லெப்டினன்ட் : அந்த நகரை, நாஜிகள் பிடித்துவிட்டனர், என்று நேற்றே கொயபிள்ஸ் பெர்லின் ரேடியோவிலே பேசிவிட்டாரே ஏற்கனவே கொயபிள்சிடம் பிடிபட்ட நகரத்திலே நாம் போவானேன் என்று எண்ணுகின்றன போலும் நமது படை.

(2) வழி தெரியவில்லை
ஒரு ஜெர்மன் சோல்ஜர் : டே, காரல்! தெரியுமா விஷயம், ரஷியர்களுக்கு இருட்டிலே வழியே தெரிவதில்லை.

மற்றொரு ஜெர்மானியர் : அது உனக்கு எப்படித் தெரியும்?

முதல் பேசிய ஜெர்மானியன் : நேற்று இரவு, இரண்டு ரஷிய சோல்ஜர்கள் நமது படைவரிசைக்கு வந்தனர். திரும்பிப் போகும்போது, நமது படையினரிலே நாலுபேரை இழுத்துக்கொண்டு போனார்கள் வழி தெரிந்து கொள்ள!

(3) நேர்மாறாக!
ஒரு ஜெர்மன் சோல்ஜர் : அடே, ஆட்டோ! வீட்டிலிருந்து உனக்கு வந்துள்ள கடிதத்திலே என்ன எழுதி இருக்கிறார்கள்?

ஆட்டோ : ஜெர்மனியிலே எங்கும் நாசமாகவும் மோசமாகவும் இருப்பதாக எழுதி இருக்கிறார்கள். காரல்! உனக்கு உன் வீட்டார் என்ன எழுதி இருக்கிறார்கள்.

காரல் : நேர்மாறாக எழுதி இருக்கிறார்கள். ஜெர்மனியிலே எங்கும் மோசமாகவும், நாசமாகவும் இருக்கிறதாம்.

(4) குஷியா? கூப்பிடு!!
ஜெர்மன் ஆபீசர் : கர்னலே! உமது உத்திரவின்படி ருமேனியப்படை, சோவியத் படையைத் தாக்கக் கிளம்பிவிட்டன.

ஜெர்மன் கர்னல் : ருமேனியப்படை, முணுமுணுத்துக் கொண்டே போயிற்றா?

ஜெர்மன் ஆபீசர் : இல்லையே! மிக்க சந்தோஷமாகக் கிளம்பிற்று.

ஜெர்மன் கர்னல் : அடடா! மோசம் போனோம். ருமேனியப் படை அவ்வளவு குஷியாக கிளம்பிற்று என்றால், சோவியத்தில் சரண்புகுந்து விடலாம் என்பதற்காகத்தான் என்று தோன்றுகிறது. உடனே ருமேனியப்படையைத் திருப்பிக்கொண்டு வந்துவிடு. போ.

(5) விட்டால்தானே!
சோவியத் களக் குழியிலிருந்து ஒரு ஜெர்மன் சோல்ஜர் : ஆட்டோ! நான் ஒரு ரஷிய சோல்ஜரைப்பிடித்து விட்டேன்.

ஜெர்மன் களக்குழியிலிருந்து மற்றோர் ஜெர்மன் சோல்ஜர் : அவனை இழுத்துக்கொண்டு இங்க வாயேண்டா!

சோவியத் குழியிலிக்கும் ஜெர்மானியன் : அவன் என்னை விட்டால்தானே நான் அங்கு வர!!

15.11.1942