அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சும்மாயிரார்!

சொறிபிடித்தவன் கை சும்மாயிராதென்பார்கள் – கோவை சுப்பிரமணியத்துக்கும் மந்திரிப் பதவி கிடைத்த நாள் முதல் வாயும் சும்மாயிருப்பதில்லை. மூளையும் சும்மாயிருப்பதில்லை.

அமைச்சரின் நிர்வாகத்துக்குச் சரியான ‘அடி‘ கொடுக்கப்பட்டது. ஆரம்பக்கல்வித் திட்ட ஒழிப்பு மூலம், வாலறுந்தது சும்மாயிரா தென்பார்களே அதுபோல, அவரால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை போலிருக்கிறது. இப்போது, ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்! இந்தியை எஸ்.எஸ்.எல்.சி. பரீட்டை மொழியாக ஆக்கி – அதனை விளக்கி, வெண்டைக்காய் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார். அதனை, நாம் கண்டிக்கு முன்னரே, தென்னிந்திய ஆசிரிய சங்கத்தார் கூடி ‘கனமான‘ குட்டு ஒன்று வைத்திருக்கின்றனர், கல்வி அமைச்சருக்கு.

“ஐயா! இப்படியெல்லாம் ஆடாதீர். திடீர், திடீர் என்று உத்தரவிடுவதால் எவ்வளவு திகைக்க வேண்டியிருக்கிறது தெரியுமா? கல்வி சம்பந்தமாக ஏதாவது செய்ய வேண்டுமானால், அதுபற்றி விஷயம் தெரிந்தவர்களைக் கலந்தாலோசிக்காமல் எதுவும் செய்யாதீர், சும்மா இருமே!“ என்பதாக.

இப்படி, சந்தி சிரிக்கும் இவர் சென்னையில் நடைபெற்ற படிப்பக ஆண்டுவிழா ஒன்றில் பேசும்போது, கவனமாகக் கூறினாராம், “லைப்ரரியில் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் போதும், பத்திரிகைகளை வாங்கிப்படிக்கும் போதும் மிகவும் ஜாக்கிரதையா யிருக்க வேண்டும். ஏனெனில் இப்போது, குரோதத்தையும் துவேஷத்தையும் உண்டு பண்ணும் ஏடுகள் அதிகமாகிவிட்டன“ என்பதாக.

இதற்கும், நாம் பதில்தர வேண்டிய அவசியத்தை வைக்கவில்லை, பாசில் எனும் நண்பர்! அமைச்சரைப் பார்த்தே கேட்டியிருக்கிறார். “ஐயா! அப்படி அந்தப் புத்தகங்களைப் படிப்பதால் யாருடைய மனமும்மாறிவிடாது. நானும் எவ்வளவோ கம்யூனிஸ்டு புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அதனால் நான் கம்யூனிஸ்டாகி விடவில்லை. அதனால், உண்மையும் கருத்தும் இருந்தால்தான் மக்களை வசப்படச் செய்யும், ஆகவே, எல்லாவற்றையும் மக்கள் படிக்க வேண்டுமே யொழிய – வெறுக்கக் கூடாது!“ என்று சூடான பதில்! சுப்பிரமணியத்தின் முகம் எப்படியிருந்ததோ தெரியவில்லை!

இப்படி, தொட்டதும் துலங்காமல், சொல்வதும் விளங்காமல் அல்லாடும் இந்தச் சுப்பிரமணியம் சும்மாவாவது இருக்கிறாரா என்றால், அதுவும் இல்லை.

செச்சே! பாவம்! பரிதாபமாயிருக்கிறது, சுப்பிரமணியத்தை பற்றிய செய்திகளைப் பார்க்கும்போது.

திராவிட நாடு – 11-7-54