அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சுரண்டல் கூடாது, எந்த வடிவிலும்!

நாட்டோர் தரும் நல்ல தீர்ப்பு
பார்த்து தெளியட்டும், பாராள்வோர்!

சுரண்டல் கூடாது-எவரும் எவரையும் சுரண்டிப் பிழைத்தல் கூடாது என்ற உணர்ச்சி பெருகிவிட்டது. இந்த உள்ளத் துடிப்பை, எத்தனையோ கள்ளத்தனங்களால் மறைக்க முனைந்தும் முடியவில்லை.

திராவிட நாட்டிலே, வடநாட்டார் சுரண்டுகிறார்கள். இது பிரத்தியட்ச உண்மை-கண்கூடான காட்சி! இதனை மறைக்க முடியவில்லை. ஆகவே, ஒரு மறைவுப் படுதா கண்டுபிடித்தார்கள், தேசிய சிங்கங்கள் ஒரே இந்தியா, இதில் வடக்கும், தெற்கும் ஏதேது என்று பேசினர். அந்த மாய்மாலப் பேச்சுகளில் மக்கள் மயங்கியதாகத் தெரியவில்லை.

பஞ்சாபியா, அவனுக்கு பாராக்கு கூறிடும் பழக்கம் ஏன் நமக்கு குஜராத்தியா, அவனைக் கும்பிட்டு வாழும் கோணல் புத்தி கூடாது. மூல்தானியா, அவனுக்கு அடி பணியும் குணம் ஏன், சேட்டுகளுக்கு இங்கு ஏன் சுகவாழ்வு என்று மக்களின் குரலில் ஆத்திரங் கலந்தது.

அதே நேரத்தில், தாயகத்தைச் சேர்ந்தவர்கள், பர்மாவிலே, இலங்கையிலே, வேறு பல நாடுகளிலே கூலிகளாக, நாயினும் இழிந்த அடிமைகளாக வாழ்வதைப் பார்க்கும் பொழுது ஏன் ஆத்திரம் பிறக்காது?

வருகின்ற வடநாட்டான், இங்கு வந்ததும் சௌகார்ஜி, ஆனால் வாழ்ந்த திராவிடத்தின் பிரஜை, வெளி நாடுகளிலே கூலி! ஒப்பிட்டுப் பார்த்தனர். தென்னாட்டுப் பெருங்குடிகள் ‘சுரண்டாதே, சூது மதிகொண்ட வடநாட்டு பனியாவே, சுருட்டிக் கொள். உனது சுரண்டல் கொள்கையை என்று கூவிடும் நிலை பிறந்துவிட்டது.

இதனை சென்னை ஆட்சியாளர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வீம்புக்கு வார்த்தைகளை வீசிடுவது விவேகிகள் செயல்லல இன்று வேண்டிய போக்கும் இதுவல்ல! அத்துடன், தென்னாட்டாரின் இந்த ஏகோபித்த எண்ணத்தை, வளர்ந்து வரும் மனக்கொதிப்பை உணர வேண்டும், டெல்லி மத்திய ஆட்சியினர், உணரவும் இடம் தராத, உலர்ந்த இதயத்தவராக அவர்கள் உலவினால் பிறகு விபரீதம் விதையாகத் தூவப்பட்டுவிடும். அபாயந்தான் அறுவடையாக இருக்கும்.

இது சாதாரண சராசரி அறிவு படைத்தோருக்கும் புரியும் உண்மை ஆளும் பொறுப்பிலே அமர்ந்திருப்போருக்கு நிச்சயமாகப் புரியும் ஆனாலும் அலட்சியப்படுத்தப் பார்க்கிறார்கள். அபாயத்தை அணைத்துக் கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

திருச்சியில் டிசம்பர் 2 ம் நாள் நடந்த வடநாட்டுச் சுரண்டல் தடு“ப்பு மாநாடு இந்த உண்மையைத்தான், நாட்டோருக்கும் ஆண்டிடுவோருக்கும் எடுத்துக் காட்டுகிறது.

சுரண்டல் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு உருவில் இருக்கத்தான் செய்தது! அங்கங்கே அதற்கேற்ற வகையில் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் நடந்திருக்கின்றன. இரத்தக் கறை படிந்த ஏடுகள் பல. இன்னமும் இம்மாதிரியான விடுதலைப் போர்க்கதைகளைச் சொல்லிக்கொண்டுள்ளன. உலக வரலாற்றிலே!

திராவிடத்திலே, வடகத்தியார், வாணிபத்தின் பெயரால் சுரண்டிக் கொழுக்கிறார்கள். இங்கோ, சோற்றுக்கின்றி, துணிக்கின்றி இருக்க இடத்திற்கின்றி ஏங்கிச் சாகிறார்கள். சொந்த நாட்டில்! அந்நிய நாட்டிற்கு ஓடியாவது அரைவயிற்றுக் கஞ்சிக்குப் பாடுபடுவோம் என்று கடல் கடந்து செல்கிறார்கள். அதனை எதிர்த்து ஒழித்துவிட வேண்டும் என்ற உணர்ச்சி அரும்பிவிட்டது. அந்த அரும்பு நிலை வளரத்தான் போகிறது. ஆகவே நிலைமையை உணர்த்துவிக்க இதைவிடப் பொன்னான சந்தர்ப்பம் வேறில்லை. திருச்சியில் நடந்த வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மாநாடு, இதனை எடுத்துக் காட்டுகிறது.

வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மாநாட்டில் தோழியர் இந்திராணி பாலசுப்பிரமணியம் கொடியேற்றி வைத்தார். தோழர் ஏ.பி.சனார்த்தனம் திறப்புரை நிகழ்த்தினார். பெரியார் ஈ.வே.ரா. தலைமை தாங்கினார்.

ஆட்சியாளர், தங்கள் அறிவுக் கண்களை திறந்து, கலந்து கொண்டவர்கள் எதிர்க் கட்சிக்காரர்கள் என்பதை மட்டும் மனதிலிறுத்தாமல் பிரச்சினை எவ்வளவு முக்கியமானது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

(திராவிட நாடு 10.12.50)