அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


சுழல் விளக்கு

ரம்பையின் காதல் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது என் நண்பர் தோழர் எஸ்.வி. லிங்கம் ஓர் ஆவலை வெளியிட்டார். காட்சியிலே அந்தச் சமயம், சிங்கார ரம்பை இந்திரனின் சீற்றத்தால் சிலையாக மாறி, சில அந்தணச் சிறுவர்களின் சேட்டையால், ஒருபித்துக்கொள்ளி பிரமச்சாரியால் தாலிகட்டப்பட்டு, இரவு வந்ததும், சிலை உருவிலிருந்து சிங்காரி உருவை அடைந்த சட்டம் நடந்து கொண்டிருந்தது. தோழர் லிங்கம், ‘அத்தான்’ எனக்கு அதுபோன்ற ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து வைக்கவேண்டும்’ என்று கூறினார். நான் சிரித்தேன். சினிமா ஸ்டார்களைக்
கண்டு சித்தம் சிதையும் நிலைபல தோழர்களுக்கு வர நான் கண்டிருக்கிறேன். தோழியர் வசந்தாவின் ‘ரம்பை’ வேடம் எவரையும் ரசவல்லிகளைப்பற்றி எண்ணும்படி தூண்டக்கூடியதுதான். ஆனால் லிங்கம், அத்தகைய ஆவலைத் தெரிவிப்பதென்றால் எனக்கு நகைப்புத்தான் வந்தது. ஏன்? அவர் என்ன, சித்தத்தைச் சிங்காரிகளுக்காக சிதைக்காது காக்கும் இயல்பினரா என்பீர்கள்? அது அல்ல காரணம், அவர் ‘ஸ்டார்களை’ நன்கு அறிந்தவர். ஸ்டார்களைப்பற்றி மேக்அப் தோழர்கள், என்னென்ன பேசுகிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். எனவே அவர் படக்காட்சியிலே வரும் பாவையருக்காகப் பசி கொள்ள மாட்டார். ஆகவேதான் ரம்பையின் காதல் படத்தைக்கண்டு இந்த மாதிரி பெண் வேண்டும் என்று என் நண்பர் தன் ஆவலைத் தெரிவித்தபோது நான் சிரித்தேன். ‘என்ன! வசந்தா போன்ற வனிதையா தேவை?’ என்று கேட்டேன்’ உருவம், வயது, அழகு, எப்படியேனும் இருக்கட்டும் அத்தான். குணம், இதுபோல இருக்க வேண்டும்’ என்றார். எனக்கு வசந்தா அம்மையின் குணம் தெரியாது. எனவே ‘வசந்தா சுகுணசுந்தரிதானோ’ என்று கேட்டேன். ‘எனக் கென்ன தெரியும், அந்த ஸ்டாரின் சுபாவம். நான் அந்தக் குணம் என்று குறிப்பிட்டது, வசந்தம்மையின் சொந்தக் குணத்தை யல்ல. அந்த அம்மையின் ‘நடிப்பு’ இருக்கிறதே, ரம்பையாக வந்தார்களே, அந்த ரம்பை போன்ற குணவதி வேண்டும்; காலையில் எல்லாம் சிலையாக இருக்க வேண்டும், மாலையானதும் சிங்காரியாகிவிட வேண்டும்; செலவு இராது. குடும்பத் தொல்லை இராது, ஆனந்தம் உண்டு அலைச்சல் இல்லை, சுகம் உண்டு சங்கடமே கிடையாது’ என்று கூறினார். காட்சியிலே இருந்தவர்களிலே முன்வரிசைக்காரர் முறைத்துப் பார்த்துக் கனைக்குமளவு சிரித்தேன். என் நண்பரின் ஆவலைக்கேட்டு அவருடைய திருமண நோக்கமும், திருமணத்தால் நேரிடக்கூடிய பொறுப்பைப் பாரமாகக் கருதும் கவலையும் அவர் மொழியால் விளங்கிற்று. ஆகவே, திருமணம் செய்து கொள்பவர்கள், எதை எதிர்பார்க்கிறார்கள் என்ற யோசனை யிலிறங்கினேன். நெடுநாட் களுக்குப் பிறகு ஒருநாள் பிரிட்டிஷ் பிரமுகர் ‘சர். வில்லியம் பீவரிட்ஜ் காக்ஸ்டன்ஹால், ரிஜிஸ்டிரார் ஆபீசில் மேயர் என்ற அம்மையாரை மணம் புரிந்துகொண்டார், என்ற செய்தியைப் படித்தேன். மேயர் அம்மையார் ஒரு பாட்டி! நான்கு மக்களும் பேரன் பேத்தியும் உண்டு. சர். பீவரிட்ஜ் 63 வயதானவர்’ 63 வயதான சர். பீவரிஜ் வயோதிக அம்மையைக் கலியாணம் செய்து கொண்டதன் காரணம் என்ன? நம் நாடுகளிலே திருமணம், வாழ்க்கையிலே வசீகரமிக்க இன்பம் நுகரும் சந்தர்ப்பமாகக் கருதுபவர்கள், இந்த நரைத்தலை நாதன் மற்றோர் நரைத்தலையம்மையை நாயகியாகக் கொண்டதன் காரணம் என்ன? இந்த வயதில் காடு வாவாவென்று கூவும் கட்டத்திலே உள்ளவர்கட்கு கலியாணம் ஒரு கேடா? என்றுதான் கேட்பார்கள். ஆனால் அதன் அர்த்தபுஷ்டியுள்ள தத்துவம் தெரிந்தால், அதிசயிக்க மாட்டார்கள். வெளி உலகிலே, கலியாணம் என்பது ‘புத்’ என்ற நரகத்திலே விழாதிருக்கவேண்டி, ஒரு பிள்ளை
பெறும் கருவிக்கு மாலையிடும் சடங்குமன்று, மன்மதபாணமடா! மார்பைத் துளைக்குதடா! என்ற மதனலீலா விநோதச் செயலுமன்று, கலியாணம் என்பது அங்கு வாழ்க்கைக்கு ஓர் துணையைத் தேடிக்கொள்வது என்பதுதான். அது வாலிப விருந்துமட்டுமன்று, வயோதிக காலத்துக்கும் வாழ்க்கைக்கு வேண்டிய ஒரு தேவை. ஆகவேதான் பீவரிட்ஜ் திருமணம் நடந்தேறியது. இங்குள்ள ‘தடிஊன்றிகள் கட்டினவளைக் கட்டையிலே வைத்துக் கொளுத்தியதும், மற்றோர் கன்னியைத் தேடி அலைந்து, கலியாணம் செய்துக்கொண்டு, பிறகு சித்த யூனானி வைத்யர்களிடம் கைகாட்டிக் காலங்கழிப்பர். வாழ்க்கைக்குத் துணை வேண்டும் என்ற எண்ணங் கிடையாது. வாலிப விருந்தாகத் திருமணம் இருக்க வேண்டுமென்று கருதிடும் சிலரும், என் நண்பர் லிங்கம்போல, காலையில் சிலையாக இருந்து மாலையில் மனோகரியாகும் ‘சக்தி’ பெற்ற ஓர் சுந்தரி கிடைத்தால், திருமணத்துக்குத் தயாராவார்கள். சுகவாழ்வில் பற்று, திருமணத்துக்குத் தூண்டுகோலாக இங்கு இருக்கிறது. மேனாடுகளிலே, அத்துடன், அரியதோர் இலட்சிய மாகிய, வாழ்க்கைக்கு ஓர் துணை தேடிக்கொள்வது என்ற கொள்கையும் தழுவி இருக்கிறது. இந்த இலட்சியம் இங்கும் பரவ வேண்டும். மக்கள் வாழ்வு மணம்பெற அதுவே வழி. வாழ்க்கைக்
கோர் துணை தேடிக்கொள்ள வேண்டுவது முறை, அதிலே சாத்திரமும் கோத்திரமும், குறுக்கிடக்கூடாது என்ற கொள்கையுடன், நாட்டை நெடுங்காலமாகக் கரையான்போல் அரித்துவரும் ‘விதவைத்தன்மை’ என்ற கொடுமையையும் களைய வேண்டுமென்று வங்க சர்க்கார், மனைவியை இழந்த ஆடவன் மறுமணம் செய்துகொள்ளக் கருதினால் விதவையைக் கலியாணம் செய்துக் கொள்ள வேண்டும். கன்னியைத் தேடி கலியாணம் செய்து கொண்டால்; தண்டனை விதிக்கவேண்டும் என்றோர் மசோதா கொண்டு வந்துள்ளனர். காலத்திற்கேற்றதும், பகுத்தறிவுக் கொத்ததுமான இந்த மசோதாவைச் சட்டமாக்கி, வங்கம், மற்ற இடங்கட்கும் வழி காட்ட வேண்டும். வைதிகரின் வரட்டுக் கூச்சலைப் பொருட் படுத்தாது வாலிபர்கள் இதற்கான ஆதரவு திரட்டித் தரவேண்டும். மற்ற இடங்களிலும் இதைப்போன்ற முன்னேற்ற வழி வகை ஏற்படவேண்டும்.

அல்லாபக்ஷே எங்கே!
சிந்து மாகாணத்திலே, அடிக்கடி தமது “ஜெயக்கொடி”யை ஏற்றுவதும் இறக்குவதுமாக இருந்துவந்த “அரும்பெரும் தலைவர்” அரசியல் ஊஞ்சலாடி வந்தவர், வர்தாவரப் பிரசாதத்துக்காக வளைந்து கொடுத்தவரான மாஜி முதலமைச்சர் அல்லா பக்ஷ் இப்போது எங்கே இருக்கிறார்? முஸ்லீம் லீகுக்கு எதிரிடையாக ஓட்டைத் தம்பட்டத்தை அடித்துக் கொண்டிருந்தாரே, ஜனாப் ஜின்னாவை எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்தாரே, காங்கிரசுடன் குலவிக்கொண்டு லீகின் திட்டங்களை எதிர்த்தாரே, அவர் ஆண்ட மாகாணத்திலே சென்ற வாரம் என்ன நடந்தது தெரியுமோ! நாட்டின் சிக்க்ல போக்க, பாகிஸ்தான் ஒன்றுதான் பரிகாரம் என்ற தீர்மானம், சிந்துமாகாண சட்டசபையிலே நிறைவேறியது! மந்திரி சபையிலே உள்ள இந்துமகாசபை மெம்பர்கள், எதிர்த்தனர், பேச்சு மன்றத்திலே பயன் தரவில்லை. சிந்து மாகாண மக்களின் தீர்ப்பு, அல்லா பக்ஷின் நிலைமையைத் தெளிவாக்கிவிட்டது. முஸ்லீம் லீகின் மூலாதாரக் கொள்கையை சிந்து முஸ்லீம்கள் ஆதரிப்பதைக் காட்டிய பெருமை, முஸ்லீம் லீக்கைச் சார்ந்த பிரமுகர்களுக்குரியது. பிரிட்டிஷ் பிரமுகர்கள் பலரின் பித்தம் இதனால் தெளிந்திருக்க வேண்டும்.

அது இல்லாமலா!
காந்திஸ்தான் வேண்டுமென்று கதறுகிறார்களே தோழர்கள், அந்த ஆட்சி எப்படி இருக்குமென்பதற்கு ஓர் உதாரணம் கேளுங்கள், காந்தியாரின் காரியதரிசி மகாதேவ தேசாய் இறந்து விட்டாரல்லவா, அவருடைய எலும்பைப் புனாவுக்கு அருகாமையிலே ஒரு திவ்ய க்ஷேத்திரத்திலே, வைதிக முறைப்படி ஆற்றில் சேர்த்தனராம், தர்ப்பணம் நடந்ததாம், பிராமணர்களுக்கு தட்சணை தரப்பட்டதாம்!! இது காந்தியார் உபவாசத்தை முடித்துக்கொண்டு பாரணை செய்த தினத்தன்று நடந்தேறியதாம். இடையே ஒரு விளக்கம், உபவாசத்துக்கும் பாரணைக்கும் வித்தியாசம் என்ன வென்று எண்ணுகிறீர்கள்? உபவாசத்திலே இனிப்பான எலுமிச்ச ரசம் கலந்த தண்ணீர்! பாரணைக்கு ஆரஞ்சு ரசங் கலந்த ஜலம்!! இதுதான் வித்யாசம். எலும்பை ஆற்றிலிடல், வைதிகக் கர்மம், தர்ப்பணம், பிராமணருக்குப் பூரி எனும் இத்யாதி ஆரிய தர்மப்படிதான் காந்திஸ்தான் இருக்கும். எனவேதான் இஸ்லாமியரும், திராவிடரும் வேறு “ஸ்தான்கள்”கேட்கின்றனர். அது தவறா?

அவரது அடுத்த அலுவல்!
அன்பர் ஆச்சாரியார், அரசியலில் நடத்திய பல முயற்சிகள் பலனளிக்காது போகவே, முஸ்லீம் லீகுடன் பேசி ஏதேனும் செய்யலாமே என்று எண்ணினார், அதுவும் பலிக்கவில்லை. கட்சியற்றோருடன் கலந்து காரியசித்திக்கு ஏதேனும் இடமுண்டா என்று பார்த்தார், அதுவும் பலனளிக்கவில்லை. ஆகவே காந்தியாரின் உபவாச வெற்றிக்காகப் பிரார்த்தனை நடத்த வேண்டுமென்று பல பிரமுகர்களுடன் சேர்ந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். என்ன செய்வார் பாபம்! அறிக்கை வெளியிடுவதும், சண்டே அப்சர்வர் ஆசிரியரின் குறுக்குக் கேள்விகளுக்குப் பதில் கூறுவதுமே அவருடைய அடுத்த அலுவலாகி விட்டது. ஆண்டார் முன்பு, ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழரைக் கூண்டிலிட்டார், அதற்குப் பிறகு, இந்த அலுவலே கிடைத்தது, என்செய்வார்! “கண்ணன் காட்டிய வழி” ஆசிரியர், “காலம் காட்டும் வழி” செல்கிறார் போலும்!!

நிறத்திமிர்!
டாக்டர் ஏ. இலட்சுமணசுவாமி முதலியாருக்கென “ரிசர்வ்” செய்யப்பட்டிருந்த முதல் வகுப்பு இரயில்வே வண்டியில், யாரோ ஒரு வெள்ளையன் ஏறிக்கொண்டு, அதிகாரிகள் எவ்வளவோ கூறியும் இறங்க மறுத்ததாகப் பத்திரிகைகளிலே ஒரு செய்தி வந்தது. இத்தகைய நிறத்திமிரைச் சர்க்கார் அடக்காவிட்டால், சாந்தியையும் சமாதானத்தையும் சட்ட ஆட்சியையும் விரும்பும் மக்களுக்குப் பிரிட்டிஷார் மீது கசப்பு அதிகரிக்கும். வெள்ளை நிறத்தான் என்பதற்காகவோ, வேதிய குலத்தான் என்பதற்காகவோ, யாரும் யாரிடமும் திமிருடன் நடந்து கொள்வதை அறிவும் நாகரிகமும், மனிதத்தன்மையும் ஓங்கியுள்ள இக்காலத்திலே யாரும் சகிக்க முடியாது. உள்நாட்டிலே, உள்ள இனச்சிக்கலால், பொதுவான விடுதலைக் கிளர்ச்சி நடக்கவில்லையேயொழியே, இந்தியாவிலுள்ள எவரும் ஆங்கில ஆட்சி இருந்தே தீரவேண்டு மென்று கருதியில்லை என்பதை, நடப்பது “கிளைவ் காலம்” என்று, எண்ணிக்கொண்டுள்ள சில வெள்ளையர்கள் உணரவேண்டும். நேசநாடுகளின் “கதியை” நிர்ணயிக்கும் யுத்தசபையிலே ஓர் அங்கத்தினராக இருக்கும் சர். எ. இராமசாமி முதலியாரின் உடன் பிறந்தாரும், ஒரு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும், பண்பு மிக்கவருமான டாக்டர் எ. இலட்சுமணசுவாமி அவர்களை அவமதித்ததைத் தமிழர் கேட்டுக் கொதிக்கின்றனர். ஆட்சியாளர் தக்கது செய்வது முறை - செய்தல் வேண்டும். ஜப்பானியராட்சி ஏற்பட்டால், இந்தியாவிலுள்ளவர் களை மட்டுமரியாதையின்றி நடத்துவர் என்று பலமான பிரசாரம் செய்யப்படுகிற நேரத்தில், இத்தகைய நிறத்திமிர் காட்டப்படுவது, போர் ஆதரவு தேடுவதற்கு உதவி செய்யுமா என்பதைச் சர்க்கார் யோசிக்க வேண்டும், மேலோரின் மனதைப் புண்ணாக்குவதை விட பைத்தியக்காரதனமான தவறை ஒரு சர்க்கார் செய்ய முடியாது! எனவே, நடந்த சம்பவத்தை விசாரித்து, ஆவன செய்யச் சர்க்கார் முன் வர வேண்டும்.

அடிமேல் அடி!
சோவியத் சம்மட்டி அடி, நாஜிப்படையை நொறுக்கிவிட்டது. ரிஜாவ் ரஷியரிடம் பிடிபட்டது. ஜெர்மன் ரஷியப்போர் ஆரம்பித்தபோது முதல் பாய்ச்சலில் பிடிபட்ட பிரதேசந் தவிர மற்ற இடங்களை நாஜிகள் இழந்துவிட்டனர். நாலாபக்கமும் சூழ்ந்துக் கொள்ளப்பட்டதால் நாஜிகளுக்குச் சரியான நஷ்டம்! அதைப்போலவே, ஆப்பிரிக்காவிலும் அச்சுப்படைகளுக்கு நஷ்டந்தான்! அச்சுக் கூட்டாளியான ஜப்பானுக்கோ, சென்ற வாரம், பிரம்மாண்டமான நஷ்டம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவைத் தாக்க ஒரு பெரும் ஜப்பானியக் கப்பற்படை, விமானத் துணையுடன் சென்றது. அதனை பிஸ்மார்க் கடலில், நேசநாட்டு விமானங்கள் தாக்கி, அழித்தன. ஜப்பானுக்கு ஆள் சேதம் மட்டும் 15000. பல பெரிய போர்க்கப்பல்கள் கடலடி சென்றன. இத்தகைய பெரிய நஷ்டம் இதுவரை ஜப்பானுக்கு ஏற்பட்டதில்லை. ஜப்பானின் கடற்பலத்துக்கே, பிஸ்மார்க் சம்பவம் ஊனமுண்டாக்கி விட்டது. ஆஸ்திரேலியாவுக்கு ஆபத்து நெருங்கியதை நேசநாட்டு வெற்றி தடுத்துவிட்டது. சிங்கப்பூரருகே பிரிட்டிஷ் கப்பலான பிரின்ஸ் ஆப் வேல்ஸ், ரிபல்ஸ் இரண்டையும் ஜப்பானிய விமானங்கள் தாக்கி மூழ்கடித்ததை அச்சுப் பிரசாரர்கள் பிரமாதமாகப் பேசினர். அமெரிக்கர்கள் பவழக்கடலில் ஜப்பானியருக்கு விளைவித்த சேதம் அபாரம். அதைவிட அதிகமான நஷ்டம், பிஸ்மார்க் கடலிலே, ஜப்பானியருக்கு ஏற்பட்டுவிட்டது. இப்போது அச்சுப் பிரசாரகர்கள் வாய்மூடிக் கொண்டனர். இதே சமயத்தில் அடிமேல்அடி கொடுத்து ஜப்பானை மட்டந்தட்ட வேண்டும். சீன வீராங்கனை, மாடம் சியாங், இதனை அமெரிக்காவெங்கும் வலியுறுத்திப்பேசி வருகிறார். இந்நிலையிலே, பர்மாமீது படை எடுக்கும் திட்டத்தை, பருவ நிலையை உத்தேசித்து ஒத்தி வைத்திருக்கிறார்கள் என்று நேசநாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர். பர்மாமீது பாயாவிடினும் உடனடியாக அந்தமான் தீவையாவது நேசநாடுகள் தாக்கிப்பிடிக்க வேண்டும். பர்மாவைப் பிடிக்கவும், அந்தமானைப் பிடிக்கவும் தேவையான தளவாடம் இந்தியாவிலே குவிந்துவிட்டது. அதற்கும் மேலாக, சீனாவுக்கு அனுப்பவும், இங்கு தளவாடம் தேக்கப்பட்டு வருகிறது. ஆகவே, சக்தியை யுக்தியாக உபயோகித்து அந்தமான் தீவை முதலிலே பிடித்து விட்டால், சென்னை மாகாண கடலோரத்திலே இன்றுள்ள கவலை குறையும். நேசநாடு இதை உணர்ந்து காரியம் நடத்த வேண்டும்.

14.3.1943