அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


டி.என். ராமன் மறைந்தார்!

சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப காலத் தூதர்களை எண்ணினால் நமது இதயங்களில் குதூகலம் ஏற்படு்ம்! அவ்வளவு ஆர்வமும், வீரமும், திறமையும் கொண்ட நல் உள்ளங்கள் கொண்ட பொது வாழ்வினர், அவர்கள் கல்லுக்கும் சொல்லுக்கம் ஆட்பட்டு, அவர்கள் அடைந்த இன்னல்கள் ஏராளம் அதனால்தான் அவர்களைக் காணும்போதும், பேசும் போதும், நமக்கு அலாதியான மரியாதையும், மதிப்பும் ஏற்படுவதுண்டு. அன்று அவர்கள் இயக்கத்தில் தோற்றுவித்த, குடும்பப்பாசம், இன்று மலைபோல்,உயர்ந்துவிட்டது! அந்தக் குடும்பப்பாசத்தோடு பழகிவந்த சுயமரியாதைச் செல்வர் திருவாரூர் டி.என்.ராமன் அவர்கள் கடந்த 15-7-52 அன்று நம்டை விட்டுப் பிரிந்துவிட்டார் என்கிற செய்தி கேட்டதும், திடுக்கிட்டோம் நம்மால் நம்பவே முடியவில்லை! சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு, சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உடல் தேறி வருவதாகவும் செய்திகள் வந்த நேரத்தில், இத்தகைய தகவல் வரின் என்ன வென்று எண்ணுவது? அந்த கம்பீரமான உருவம் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சடலமாகக் கிடந்ததாம்! வீழ்ச்சியுற்ற இனத்தில் எழுச்சி கண்டுபூரித்த அவரை, இனி நாம் காண முடியாது – பேச முடியாது – ராமன் இங்கு இல்லை! அவர் போய்விட்டார்.

திருவாரூர் இன்று அறிவுக் கோட்டையாக விளங்குகிறது என்றால், அதன் பெருமைக்குரியவர்களில் நண்பர் டி.என்.ஆர். அவர்களுக்குச் சிறப்பிடம் உண்டு. இன்று, பொதுப்பணியில் ஆர்வமுடன் முன்னிற்கும், இளைஞர்கள் – அவரால் சிருஷ்டிக்கப்பட்டவர்களாவர். இசைவேளாளர்களிடையே தீவிரமான முன்னேற்ற உணர்ச்சி பெருக்கெடுத்தமைக்கு மறைந்த தோழரின் பொதுப்பணி, மிகவும் காரணமாகும். திருவாரூரில் மட்டுமின்றி, சென்னை, சேலம் முதலான இடங்களிலெல்லாம் அவர், பகுத்தறவிக் கொள்கைக்காகப் பணியாற்றியிருக்கிறார். 45 வயது அதற்குள், அவர் உலகமேட்டில் உலவிய பொன் வண்டாக இருந்தார். போய்விட்டார். ‘பாரதிதாசன் நிதி‘க்காக அவர் எடுத்துக்கொண்ட பொன்னா முயற்சிகளை, நாடு அறியும் ‘லிபரேட்டர்‘ ஆங்கில தினசரியின் ஆசிரியராகவும் “குயில்“ வார இதழின் ஆசிரியராகவும் இருந்து பணியாற்றியிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கிய போது சில காலம்வரை ‘மாலை மணி‘யில் மானேஜராகவும் இருந்தார். நமது கழக செயற்குழு உறுப்பினராக இருந்து, அரிய யோசனைகளை அடிக்கடி தெரிவித்த தீரர் அவர், அத்தகைய ஒரு நல்ல நண்பர் போய்விட்டார் என்பதை எண்ணும்போது நம்மால் தாங்கமுடியவில்லை! இதயத்தைப் பீறிட்டு வரும் நமது துக்கத்தை நாம்தானே தாங்கிக் கொள்ள வேண்டும்? – இந்த ஆறுதலை மறைந்த நண்பரிக் துணைவியாருக்கும் அவரது தம்பி டி.என். லட்சப்பாவுக்கும் மருமகன் டி.என். நமசிவாயத்துக்கும், ராஜ கோபாலுக்கும் குடும்பத்தாருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

திராவிட நாடு – 20-7-52