அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தாளம் - சீசன் ஆரம்பம்!

உணவுப்பொருள் கிடைக்காத திண்டாட்டத்தைக் குறைக்க பம்பாய் சர்க்கார், மணவிழா முதலியனவற்றிலே 50 பேருக்கு மேல் விருந்தினரை அழைக்கக் கூடாதென்று சட்டம் இயற்றியுள்ளனர். மே 26ந் தேதி பம்பாயில் ஒரு பிரபலஸ்தர் இல்லத்திலே நடைபெற்ற விருந்துக்கு 49 பேருக்குத்தான் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. போலீசார் மேற்படி விருந்தைப் பார்வையிடச் சென்றபோது, 93 பேர் விருந்தில் கலந்து கொண்டிருக்கக் கண்டவர். சட்டத்தை மீறினதற்காக, நால்வர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப் பட்டனர். சமையற்காரனும், உணவுப் பொருள் விற்ற வியாபாரியும் கைதானவர்களில் இருவர். விருந்தும் மருந்தும் இனி அளவிட்டு நடத்த வேண்டும் என்று ஏற்பட்டு விட்டது. இந்தச் செய்தி, அரைவயிற்றுக் கஞ்சிக்கு ஆலாய்ப்பறக்கும் தோழர்களுக்கு ஒரு தொல்லையுந்தராது, ஆனால் ஆறு காதம் ஓடியாவது அறுசுவை உண்டி தேடும் அக்ரகாரக்கூட்டத்துக்கு இச்செய்தி சஞ்சலத்தைத் தான் தரும். பழமொழி தெரியுமல்லவா, பிராமணா போஜனப் பிரியா என்று! பந்தியிலே முந்திக்கொள்ளும் இனத்தவரின், போஜனப்பிரியத்தை, சரித்திரங்களிலே கூடப் படிக்கலாம். நமது செல்வவான்கள் இந்தச் சண்டையின்போதுகூட திருமண முதலிய விழாக்களிலே, சந்தர்ப்பணை, சமாராதனை ஆகியவைகளை நடத்துகிறார்கள். இந்த வீண் செலவை நிறுத்தி, வேதனைப்படும், ஏழைகட்கு உணவுப் பொருள் கிடைக்க உதவி செய்வது சிலாக்கியமானதாக இருக்கும். திருக்கோயில் மானியங்கள் இத்திருத்தொண்டு செய்ய முன் வரக்கூடாதா? தேரும் திருவிழாவும் நிறுத்தப்பட்டது, செல்வம், ஏழைகளின் வாழ்வுக்கு ஓரளவு இன்பமாவது தரப்பயன்படக்கூடாதா என்று கேட்டால், உடனே, இவனுக்கு மதத்திலே நம்பக்கை இல்லை, சாஸ்திரத்திலே சிரத்தை இல்லை என்று சீறிக்கூறுகிறார்களே தவிர, தமது சன்மார்க்கத்தைக் காட்ட, சிறு விரலையும் இப்பக்திமான்கள் அசைக்க மறுக்கின்றனர். இவர்களின் மனப்பான்மையை என்னவென்பது! ஏழைக்கு உதவி செய்யும் உள்ளத்தைக் கொள்ளாதவன் “இறைவனிடம்” உண்மையில் பக்தி செலுத்தியதாகக் கூறுவது பொருந்துமா? இதோ கேளீர், குளிர்ச்சியான ஒரு செய்தி! சோவியத் நாட்டிலே சொல்லொணாக் கஷ்டமனுபவித்துக் கொண்டிருக்கும், மாதரும் குழந்தைகளும் உதவி பெறுவதற்காக நிதி திரட்டப்படுகிறது. பம்பாயைச் சேர்ந்த தோழியர் எல். எண்டர்சன் அம்மையார் இதற்காகப் பத்தாயிரம் ரூபாய் நன்கொடையாகத் தந்தனர். இத்தகைய பயனுள்ள, மனித தர்மத்துக்கேற்ற காரியத்தைச் செய்யப்பலரும் முன்வர வேண்டுகிறேன்.

வறுமையைத் தீர்க்கவோ, வாட்டததைத் துடைக்கவோ, ஏன் இங்குள்ளோருக்கு எண்ணம் சுலபத்திலே வருவதில்லை தெரியுமோ? தர்மம் என்ற தத்துவம், பரலோகத்திலே, ரிசர்வ் சீட் தேடிக்கொள்ளும் முயற்சியாக்கப்பட்டிருக்கிறது. பன்னெடுங் காலமாக, தர்மம் செய்வதால், போகிற கதிக்கு நல்லது - புண்யம் உண்டு என்ற மனப்பான்மையே வளர்க்கப்பட்டிருக்கிறது. அதிலும் இந்தத் தர்மம், பிராமணருக்குச் செய்வதால் மட்டுமே பரலோகத்திலே உயர்தரமான பலன் கிடைக்கும் என்ற எண்ணம் ஊட்டப்பட்டிருப்பதால், பிராமண போஜனம் செய்வித்தல், பிராமணருக்குத் தானமளித்தல், சிலாக்கியமான சத்காரியமாகக் கருதப்பட்டுவருகிறது. பவதி பிக்ஷாந்தேஹி! என்று வரும் ஆரியன், அரசர்களையும் அஞ்சவைக்க முடிகிறது, ஒரு பிடி சோறு போடு தாயே என்ற பிச்சை கேட்கும் தமிழனுக்குச் சொல்லடியும் கல்லடியும் கிடைக்கிறது. பிராமணர் தானவேட்டைக்குக் கிளம்பும் சீசன் இப்போது பிறந்துவிட்டது என்பதனாலேயே இக்கிழமை இதனை எழுதுகிறேன். நமது செல்வவான்களின் இல்லங்களிலே, இனி நான் கீழே தீட்டிக் காட்டும் உரையாடல் நடக்கக் கேட்பீர்.
* * *

“ஏண்டா கந்தசாமி, மரமாக நிற்கிரே, வீட்டுக்குப் போகலையோ?”
“போகணும், எஜமானிடம் ஒரு மனு சொல்லிக் கொள்ளத்தான் நிற்கிறேன்.”
“என்ன இழவு சொல்லித் தொலையேண்டா. தலையைச் சொறியரே, பல்லை இளிக்கறே, வேஷம் பலமாயிருக்கிறது, என்ன விஷயம், சொல்லு.”
“ஒண்ணுமில்லைங்க, நம்ப வையன், முத்துசாமி பத்தாவது பாஸ் செய்து விட்டான். பேப்பரிலே போட்டாச்சிங்க.”
“சரி, ரொம்ப சந்தோஷம். அவனுக்கு ஒரு டிப்டி கலைக்டர் உத்யோகம் கிடைச்சுவிடும். அதைத்தானே சொல்ல நினைத்தாய்.”
“பையன், காலேஜ் படிக்க வேணுமாம்.”
“படிக்கட்டுமே.”
“பணத்துக்கு எங்கே போறதுங்க.”
“அதை, அவனையே கேட்டுப்பாரேன். காலேஜ் படிக்கணுமாம் காலேஸ். போ, போ, பேசவந்துட்டான். இதுவரை படித்ததே போதும். எங்காவது கிளார்க் வேலைக்கு அப்ளிகேஷன் போடச் சொல்லு.”
“காலேஜ் போய்த் தீரணுமாம், ஒத்தைக் காலால் நிற்கிறான். உங்களிடம் சொல்லி, ஏதாவது பண உதவி பெற வேண்டுமாம், இப்போது ஐம்பது ரூபா கிடைத்தா, காலேஜிலே சேரலாமாம். பிறகு அரைச் சம்பளங் கிடைக்குமாம்.”
“அரைகாசுகூட நம்மாலே சாயாது. அவன் காலேஜாவது படிக்கட்டும். ஐ.சி.எஸ். பரீட்சைக்காவது படிக்கட்டும் என்னை வீண் தொந்தரவு செய்யாதே, போ. பெரிய ஜெமீன்தார் மகன், காலேஜ் படிக்க வேண்டுமாம்! அந்தப் பயலுக்கு இது என்ன தர்ம சத்திரம் என்ற நினைப்பா? போய் வேலையைப்பாரு. காலேஜாம் காலேஜ் ஏதோ படித்தது போதும் என்ற திருப்தியோடு இருபது இருபத்தைந்திலே ஒரு வேலையைத் தேடி ஒழுங்கா இருக்கலாம் என்ற நினைப்பில்லாமே, காலேஜ் படிக்கிறேன் என்று அந்தப் பயல் சொல்கிறான், இவன் பல்லையிளிக்கிறான், பிச்சைக்கு; போ, போ, இங்கே அரைகாசுகூட கிடைக்காது.”
* * *

பண்ணை பத்மநாபப்பிள்ளையிடம், கணக்கெழுதும் கந்தசாமியின் மகன், பத்தாவது பரீட்சை தேறிவிட்டான். புத்திசாலி, மேல் படிப்புக்கு இலாயக்குள்ளவன். காலேஜ் படிக்கக் காசு இல்லை. கந்தசாமியின் எஜமானரோ, காசு கேட்டால் ஏசுகிறார், காலேஜ் போகமுடியாமல், பையன் கலெக்டர் ஆபீசில் அடெண்டராகவோ, கல்யாணி பாங்கின் கிளார்க்காகவோ, முனிசிபல் பில் கலெக்டராகவோ, காலந்தள்ள நேரிடுகிறது. ஆனால், இதோ படியுங்கள் மற்றோர் உரையாடல்!

“திவான் பகதூர் தேசிகாச்சாரியார் தங்களைப்பற்றிச் சொல்லியிருக்கார். தாங்கள் இலட்சுமீ புத்ரர், தர்மிஷ்டர், என்று, என் அத்திம்பேர் அனந்தாச்சாரியார் இருக்காரேன்னோ ஹைக்கோர்ட் வக்கீல், அவர் சொல்லியிருக்கேர்.”
“உம்ம பேர் என்னமோ?”
“என் பேர் வரதாச்சாரின்னு சொல்லுவா. வானமாமலை வரதாச்சாரின்னுகூடச் சொல்லுவா.”
“என்ன விசேஷம்? என்னாலே என்ன ஆக வேண்டும்?”
“ஒரு சின்ன காரியம், தங்களடைய உதவியை நாடி வந்திருக்கேன். நம்ம பையன் நரசிம்மன், மகாபுத்திசாலி, மணி. இந்த வருஷம் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையிலே தேறியிருக்கான், என் அத்திம்பேரிடம் சொல்லி ஏதாவது நல்ல உத்தியோகத்திலே சேர்த்து விடாலாமென்று நினைச்சேன். பையனுக்கு, சரஸ்வதி கடாட்சம் இருக்கும் போலீருக்கு. அவன் ஒரே பிடிவாதமா, காலேஸ் போய்ப் படிக்கவேண்டுமென்று சொல்றான். காலேஜ் படிப்புன்னா இலேசாயிருக்கோ, பிச்சைக்காரப் பிராமணனிடம் பணம் தாடான்னு சொன்னேன், அவன் சொன்னான், என்னப்பா, நம்ம பண்ணை பிள்ளைவாளைப் போய்ப்பார்த்தா அவர் சகாயம் செய்வாரே, மகாதிமிஷ்டராச்சேன்னு நான் சரின்னு வந்தேன்.”
“இந்த வருஷம் கொஞ்சம் சிரமம் ஸ்வாமி. கந்தாயத்துக்கும் விளைவுக்கும் ஏறுமாறாப் போச்சு. இல்லைன்னா ஏதோ பிராமண காரியம், செய்யலாம்.”
“அது சரி, பண்ணையிலே எவ்வளவோ தொல்லை இருக்கும். ஆனால் பகவான் உமக்கு ஒருகுறையும் வைக்க மாட்டார். ஜோசியம் குப்பு ஒருநாள் என்னிடம் உம்ம ஜாதகத்தைப் பத்தி என்ன சொன்னான் தெரியுமோ? உமது ஜாதகமும், மைசூர் மகாராஜாவின் ஜாதகமும், ஏறக்குறைய ஒரேவிதமாம்.”
“இன்னொரு சமயம், நான், என்னால் ஆனதைச் செய்கிறேன். இந்த முறை வேறே எங்கேயாவது...”
“வேறே இடம் ஏது? தாங்கள் மனசு வைத்தால் எல்லாம் நடக்கும். தாங்களே இல்லைன்னா, பிறகு பையன் அழுதிண்
டிருப்பான். நானே வேறே எங்கேயும் போகிறதாக உத்தேச மில்லை.”
“சரி, பத்து ரூபா தருகிறேன். பிறகு...”
“பத்து ரூபாயா? பட்டணம்போற செலவுக்கு ஆச்சு. பிள்ளையவாள், ஒரு நூறு ரூபாய் சகாயம் செய்யணும். நான் இந்த சகாயத்தை என் ஆயுசுள்ள மட்டும் மறக்கமாட்டேன்.”
“நூறு, ஐம்பதெல்லாம் நடவாதுங்க. காலம் இப்போ சரியில்லை, கந்தசாமி முப்பது ரூபாய் கொண்டுவந்து ஐயாவிடம் கொடுத்தனுப்பு.”

தன் மகன் காலேஜ் படிக்கக் காசு தர மறுத்த மிராசுதாரர், புரோகிதன் மகனுக்கு முப்பது ரூபாய் தரச்சொல்லி தன்னிடமே கூறுவதைக்கேட்கும் கணக்கப்பிள்ளைக்கு கண்ணீர் வராதா. ஆனால் அதை அந்த மிராசுதாரன் ஏன் சட்டை செய்யப்போகிறான். பிராமணனுக்குத் தானமளித்தால் புண்யம் என்று எண்ணி அவன் ஏமாறுகிறான். ஏமாளிகளை உற்பத்தி செய்யும் புராணங்களை நமது முன்னோர்கள் எழுதி வைத்ததினால், இன்று நமக்கு இந்த வாழ்க்கை கிடைக்கிறது என்பது தெரிந்து ஆரியன் அகமகிழ்கிறான்.

பரீட்சையில் தேறினவர்களின் அட்டவணை வெளிவந்து விட்டது. காலேஜ் திறப்பதற்குள், கனபாடிகள் கூட்டம் கையிலே எலுமிச்சையுடன் கிளம்பி மடியில் நோட்டுகள் நிறப்பிக் கொண்டு வீடு திரும்பும், முதலாளியிடம் பணம் கேட்டு, முகத்தடிபட்டு, தமிழர் வீடு திரும்பி தமது பையனைக் காலேஜ் படிக்கவைக்க முடியவில்லையே என்று துயருறுவர். நாடு, தமிழருடையது, செல்வம் தமிழருடையது!!

13.6.1943