அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தடை உத்தரவு

திராவிடப் பெருங்குடி மக்கள், பலகாலமாகச் சமுதாயத் துறையில் மிகவும் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் முறையில், திராவிடர் கழˆத்தைச் சார்ந்தவர்கள் எல்லாரும் கருப்புச்சட்டை அணிந்து கொள்ள வேண்டுமென்று, திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதன் பேரில் இப்போது சிலகாலமாகத் திராவிடர் கழகத்தைச் சார்ந்த பலர், தங்கள் குறைபாட்டைத் தெரிவிக்கும் முறையில் கருப்புச் சட்டை அணியும் வழக்கத்தை மேற்கொண்டு வந்தனர்.

இதனை, இப்போது சர்க்கார் சட்டவிரோதமான ஸ்தாபனம் என்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
கருப்புச்சட்டைக்கென ஒரு தனி ஸ்தாபனமே கிடையாது. திராவிடர் கழகத் திட்டங்களிலும் கருப்புச்சட்டை அணிவதை ஒரு ஸ்தாபனமாகக் கொள்ள வேண்டுமென்ற விதியும் கிடையாது. திராவிடர்கள், தங்களுக்குள்ள குறைகளைத் தெரிவிக்கும் முறையில், கருப்புச்சட்டை அணிவதை ஒரு அடையாளமாகக் கொள்ள வேண்டுமென்பதே அதன் நோக்கமாகும்.

கருப்புச்சட்டை அணிபவர்களுக்கென ஒரு தனிப்பயிற்சி முகாமோ, படை அணிவகுப்போ, ஆயுதம்தாங்கும் முறையோ, பலாத்கார முறைகளைக் கையாளவேண்டுமென்ற திட்டமோ எதுவும் கிடையாது.

திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் கருப்புச்சட்டை போட்டுக் கொள்ள வேண்டுமென்று, பெரியார் அவர்கள் எப்போது சொன்னாரோ, அன்றே சர்க்காருக்கும் இது சம்பந்தமாக எல்லாம் தெரிந்தே இருக்கும். ஆனால், இவ்வளவு காலமும் சர்க்கார் அது சம்பந்தமான நடவடிக்கை ஒன்றும் எடுக்காமல், இப்போது திடீரென்று, கருப்புச்சட்டை படை என்பதாக ஒரு ‘ஸ்தாபனம்’ இருப்பதாகவும், அது, சட்டவிரோதமானதென்றும் கருதும் படியான நிலைமை ஏற்படக் காரணம் என்ன என்று தெரியவில்லை.

ஒரு சமுதாயம், தனக்குள்ள குறைகளைக்கூடத் தெரிவிக்கக் கூடாதென்ற முறையில் ஒரு சர்க்கார் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமாயின், அதனை ஜனநாயக அடிப்படையைக் கொண்ட சர்க்கார் என்று எப்படிக் கூற முடியும்? ஒரு சமுதாயம், தன்னுடைய குறைகளை எடுத்துக்காட்டி, அவைகளை நிவர்த்தி செய்து கொள்வதுகூடத் தவறு என்பதைத் தானே சர்க்காரின் இந்தத் தடை உத்தரவு எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இல்லையேல், எந்தவிதமான பலாத்காரச் செயலையும் அடிப்படையாகக் கொள்ளாத கருப்புச் சட்டையினர் மீது சர்க்கார் நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன?

கருப்புச் சட்டை அணிவது என்பது ஒரு ஒழுங்கு முறை, அதாவது தாங்கள் திராவிடர்கள். தங்களுடைய குறைகள் போக்கப்படவேண்டும். அவை போக்கப்படும் வரையில் துக்க அறிகுறியாகக் கருப்புச்சட்டை அணிந்துகொள்ள வேண்டுமென்பதைத் தவிர, கருப்புச்சட்டை அணிவதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை, என்றாலும் இதனைச் சர்க்கார் ஒரு சட்டவிரோதமான ‘ஸ்தாபனம்’ என்று கருதக்கூடிய அளவுக்குக், கருப்புச் சட்டை அணிவதைப் பற்றிச்சர்க்கார் தெரிந்திருக்கிற தென்றால், யாரோ சொன்னதைக் கேட்டுக் கொண்டு, இந்தக்காரியத்தைச் சர்க்கார் செய்திருக்கிறதென்று பொருள்படுமேயன்றி, உண்மையாகவே சர்க்கார் கருப்புச்சட்டை யைத் திராவிடர்கள் ஏன் அணியமுற்பட்டனர் என்பதனை அறியவோ, அல்லது அதன் அமைப்புமுறை எப்படி, என்னென்ன காரணங்களுக்காக அந்த முறை ஏற்பட்டதென்பதைத் தெரிந்து அதன்படி இந்தத் தடை உத்தரவை விதித்துள்ளதென்று கூறவோ முடியாது.

பெரியார் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கருப்புச்சட்டை அணிவதன் காரணத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்ட காரணத்தையே, கருப்புச் சட்டையைத் திராவிடர்கள் அணிந்துகொள்ள வேண்டுமென்று சொன்ன காலத்திலும் பெரியார் அவர்கள் கூறியுள்ளார்.

ஒரு பெரும் பொறுப்பைத் தன் மீது போட்டுக்கொண்டு, அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள ஒரு சர்க்கார், விஷய விளக்கம் இல்லாத முறையில் எதேச்சாதிகார மனப்பான்மையோடு காரியங்களைச் செய்வது, பொதுமக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் இழப்பதற்கு அடிகோலுவதாகவே முடியும்.

எனவே, சர்க்காரின் இந்தப் போக்கைக் கண்டு, திராவிடர்கள் தங்கள் பொறுப்பை மறந்து, அமைதிக் குறைவுக்கும், கிளர்ச்சிக்கும் இடமளிக்காமல், தங்களுடைய பெருந்தன்மையைக் காட்டிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறோம்.

(திராவிட நாடு.7.3.48)