அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘தடியாட்சி’

குடியாட்சி தினத்தில் ‘தடியாட்சி’ நடந்திருக்கிறது. நல்லாட்சி வேண்டுமென்று தங்கள் வாழ்நாள் முழுவதும் செலவிட்ட தோழர்கள் கண்ணீர் விட்டுக் கதற வேண்டிய நிகழ்ச்சி சென்னையிலே நடந்துள்ளது!

ஜன 26 இந்தியா, குடியாட்சியான தினம்-அதற்குக் கொண்டாட்டங்கள். கூட்டங்கள், கொடியேற்றங்கள்-உண்டென்று கூறியதுண்டு... ஆனால் சென்னையில் தடிகொண்டு, குடியாட்சித் திருவிழா கொண்டாடி விட்டார்கள்!

வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு அறிகுறியாக, சென்னையில் திராவிட கழகத்தாரால் நடத்தப்படும் வடநாட்டு கடை மறியலில் பெரியார் ஈ.வே.ரா.வே கலந்து கொண்டார்.

ஜன 26 ம் நாள் மாலை 5 மணியளவில் சென்னை ஆரிய பவன் ஓட்டலுக்கு முன் பெரியார் வந்து மறியல் செய்தார். தமது தள்ளாத வயதிலும், வடநாட்டார். திராவிடத்தைத் தேயவைக்கும் ‘திருட்டுத் தனத்தை’ எதிர்ப்பதற்காகத் தாமே, மறியலுக்குத் தலைமை தாங்க முன்வந்தார். அவரது நாட்டுச் சேவையுணர்ச்சியை நாம் மனமாரப் பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம்!

அவர் ஐந்து நிமிடங்கள் பேசினார். அதற்குள், போலீசார் அவரை, போலீஸ் ‘வேனில்’ ஏற்றிச் சென்றனர்.

கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்கள் ஆரவாரித்தனர்-கையொலி எழுப்பினர்.

பெரியாருடன் வந்த மற்ற தொண்டர்களையும் வேறொரு வண்டியிலேற்றிச் சென்றனர்.

சிந்தாதிரிப் பேட்டை போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு போய் பிறகு, பெரியாரை வீட்டிலே கொண்டு விட்டுவிட்டனர்.

இந்த ஆட்சியாளர் திட்டமில்லாது தட்டுத் தடுமாறி, ஆட்சியை நடத்துகிறார்கள் என்று அடிக்கடி கூறிவருகிறோம் நாம்-ஆட்சி முறைகளிலே ஆயிரங்கோணல்கள் உணவுத் துறையில் நினைத்து நினைத்து மாற்றங்கள் நூலைப்பற்றி நிமிடத்திற்கொரு விளக்கங்கள் மதுவிலக்குத் திட்டத்திற்கு ஆளுக்கொரு வியக்கியானம்-ஜமீன்தாரி முறையொழிப்பிற்கு விதவிதமான அர்த்தங்கள் இனாம்தாரிக்கு எத்தனை வகையான விசித்திர பொழிப்புரைகள் அப்பப்பா, திட்டமில்லா அரசாங்கத்தின் சீரழிவிற்கு, சென்னை அரசாங்கமே பெரிய சாட்சியாகும்!

ஆளுவதிலேதான் இத்தனை அலங்கோலங்கள் என்று நினைத்துவிடாதீர்கள்-அடக்குவதிலேயும், அவர்களுக்குத் திடமும் இல்லை திட்டமும் இல்லை.

வடநாட்டுச் சுரண்டலைத் தென்னாட்டார் தடுக்க முனைந்து விட்டார்கள் என்பதைக் காட்ட அடையாள மறியல் செய்து வுரகிறார்கள் திராவிட கழகத்தார். இதுவரையிலே முந்நூறுக்கு மேற்பட்ட தோழர்கள் சிறைப்படுத்தப் பட்டார்கள். அவர்களை யெல்லாம் நாம் பாராட்டுகிறோம்.

ஆனால், அவர்களெல்லாம், ஆளுக்கொரு வகையான தண்டனை அடைந்திருக்கிறார்கள். செய்த ‘குற்றம்’ ஒன்று தண்டனையோ, விதவிதமானது! எச்சரிக்கப்பட்டனர்-பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டது ஒரு வாரமுதல் ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை அடைந்திருக்கின்றனர்.

குடியாட்சி தினத்தில் பெரியாரைப் பிடித்தனர்-விட்டனர்!

நாடாள்வோரின் திட்டமில்லா போக்கைக் காண நாம் திகைக்கவில்லை சிரிக்கிறோம். ஏனெனில் அவர்கள் எதைச் செய்வது என்று புரியாது திணறுகிறார்கள்!

திராவிட இயக்கத்தின் செல்வாக்கைக் கண்டு பொறாமை கொண்ட ‘சிலதுகள்’ சென்னையிலே மறியல் நடந“த இடத்தில் குழப்பம் ஏற்பட வழி வகுத்து, அதன் மூலம் குடியரசு தினத்தை, தடியரசு தினமாக மாற்றி விட்டதைக் காண வருந்துகிறோம். அத்தகைய இழிமனங் கொண்டோரின் கீழ்மைச் செயலைக் கண்டிக்கிறோம்.

குடியாட்சி, தடியாட்சியாக மாறியதைக் காண நாண வேண்டும் அவர்கள்-தலையைத் தாழ்த்திட வேண்டும். ஆளவந்தார் அவர்கள் வெட்கப்பட்டாக வேண்டும்.

(திராவிடநாடு 4.2.51)