அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தேம்பும் தாயகம்

நாட்டு மக்களின் நல்வாழ்க்கைக்காக நாளும் பாடுபட்டுழைக்கும் நல்லோர்க்கெல்லாம் நாயகமாக விளங்கிய நமது தளபதி, தோழர் செ.தெ.நாயகம் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தார். ஒரு திங்கள் நோயுடன் போராடினார். திராவிடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள ஆரிய மெனும் நோயை நீக்க வாழ்நாள் முழுதும் உழைத்து வந்த வீரர், நாயகம் நற்பண்புகளின் தாயகம்! கட்சிப் பற்றிலே அவர் ஓர் எடுத்துக் காட்டாக விளங்கினார். கரையான்களாகவும், காளான்களாகவும், காலத்திற்கேற்ற கோலமிருப் பவராகவும், பலர் கட்சியிலே இருந்தனர். அந்தக் கரைகள் மறையுமளவு, மணி ஒளி என விளங்கினார் மாண்புடைய அன்பர். அவர், துரைத்தனத்திலே வேலை பார்த்து, ஓய்வு பெற்றார். சில ஆண்டுகட்கு முன்பு. ஆனால் ஓய்வைப் பொதுவாழ்க்கைக்கு அர்ப்பணித்தார், எளிய வாழ்க்கை, இன்சொல் குளிர் முகம், மலர்ந்து மறைந்து மீண்டும் மலரும் அழகிய புன்னகையுடன், அவர் காட்சியாக விளங்கினார், தமிழகம் கண்குளிரக் கண்டது, பெருமிதத்துடன் அவருடன் உறவு கொண்டது, அவருடைய பயனுள்ள மொழி கேட்டுப் பண்பட்டு வந்தது. கலம் கரை சேருமுன், காவலரில் ஒருவர் மறைந்தார், கலத்திலே உள்ளோரின் கண்ணீர் கடல் வெள்ளத்திலே கலந்தது. என் செய்வது, திராவிடம் பெற்ற தீரர், ஆரியத்தோடு தொடுத்த போர் முடியாமுன்னம், மறைந்தார். மனமுடைந் துள்ள நாம், அவர் வழி சென்று, அவர் ஆற்றி வந்த அரும்பணியினைத் தொடர்ந்து நடத்தி, அவருக்கு நன்றி செலுத்துபவராக வேண்டும் என்பயைன்றி, வேறென்ன இருக்கிறது.

தளர் பருவமுற்றபோதும், நாயகம், தமது தமிழகப் பண்புக்கேற்பப், பணிபுரிந்தே வந்தார், அஞ்சாநெஞ்சுடன், பணிபுரிந்தார் என்றால், பாராளும் இடம் பெறுவதற்காகச் சர்க்கார் முன் தவங் கிடக்கும் பணியல்ல, பழமையுடன் போராடினார், தமிழர் தமது தரணியை ஆளும் தகுதியுடையோராக வேண்டுமென்ற நோக்கத் துடன் போராடினார். நமது கொள்கைகளைக் கண்டு சிலர் மிரண்டதுண்டு, சிலர் தலைவரைத் தாக்கியதுண்டு, மற்றுஞ் சிலர் தலைவரைத் தாக்க இது ஓர் சாக்கு எனக் கொண்டதுமுண்டு, நமது நாயகம், கொள்கை தீவிரமானது கண்டு களி கொண்டு, சுயமரியாதை ஆர்வத்தை வேண்டு மட்டும் மொண்டு உண்டு, பணிபுரிந்தார்.

``பருத்தி நூற்காரர்களின் பழக்க வழக்கங் கள் பற்றிப்பல வருட அனுபவத்துடன் அவர் ஆற்றிய உரைகளைக் கேட்டவர்கள், தெளிவும் தீரமும் பெற்றனர். இவ்விதழில் பிறிதோரிடத் திலே, நாயகம் நல்கிய நன்மொழிகள் என்ற தலைப்பிலும், சுயமரியாதை நீதி என்ற தலைப்பிலும், அவருடைய பொன்மொழிகளில் ஒரு சிறு பகுதியை வெளியிட்டிருக்கிறோம், ஆழ்ந்த கருத்தும், அறிவின் திறமும், திராவிடத் தீரமும், அவர் மொழியிலே குழைத்திருப்பதைக் காணலாம். எப்படிப்பட்ட நெஞ்சழுத்தமும், நேர்மையில் நாட்டமும், பணியில் ஆர்வமும், பண்பில் பயிற்சியும் பெற்றிருந்தவரை நாம் இழந்து விட்டோம் என்பது அவர் உரையிலிருந்து அறிகிறோம், அறிந்தும் நமது ஆறாத் துயரம், அனலென நம்மை வாட்டிடக் காண்கிறோம், வதைகிறோம், விம்முகிறோம், வேறென் செய்வோம்.

மாநாட்டு மலர் மாலைக்கும், சட்ட சபை ஸ்தானங்கட்கும், அதிகாரிகளின் புன்சிரிப்புக்கும், கட்சிப் பிரவேசம் ஒரு நுழை வழி என்று கொண்ட சிறு மதியினராகப் பலர் இருந்த நாளிலே உழைத்து உடல் மெலிந்திருந்த உண்மை ஊழியர், தமது இன முன்னேற்றங் காண மட்டுமே கட்சிப் பணி ஓர் வாய்ப்பு எனக் கொண்டிருந்தார், தொண்டு புரிந்தார், அந்தோ மறைந்தார், அரும்பணி புரிந்து வந்த அண்ணல்.

இந்தி எதிர்ப்புக் காலத்திலே, சொல்லம்பு பல விட்டுச் சோபிதமாக உலவி, அறிக்கைகளை ஏவித் தொண்டர்களைக் கூவி அழைத்துக் கூண்டுக்குள் இருக்கச் செய்துவிட்டுக் கொலுவீற் றிருந்த கொள்கை மறந்த கோமான்கள் கூட்டத்திலே இருந்தவரல்ல, நம்மைக் கோவெனக் கதறவட்டுக் குளிர்ந்துபோன திராவிடத் திருவிளக்கனையார். சிறைக்கஞ்சாச் சிங்கமானார், தங்கக்குணமுடையார்! இந்தி எதிர்ப்புக்கே தமது இல்லத்தை ஓர் பாசறையாக்கி னார். அவருடைய புன்முறுவலே, எண்ணற்ற தொண்டர்களுக்கு இன்னமுதாயிற்று, சிறை புக நேருமோ என்ற சிந்தனை எழுந்த காலை சிரித்த முகத்துடன், ஆரிய ஆட்சியினும் அவதி தரும் சிறை மேல் என்று ஆண்மையுடன் பேசினார். அரசாங்கம் ஓலை விட்டதும், காலை முன் வைத்துச் சிறைச் சாலைக்குச் சென்றார், சென்ற பின் கொள்கையைக் கொன்ற சீலர்கள் போல, மன்னிப்புக் கோரும் மணிகளாகாது, அந்தக் கிழவர், சுகம் வெளியே இருக்க, சுற்றம் சோர்ந்திருக்க, குடும்பம் களிப்பூட்டக் காத்திருக்க, அவைகளை மறந்து, மனதுட்கொள்ள மறுத்து, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்ற பொன்மொழிப் புலவரின் பாட்டினை விளக்கும் நடமாடும் நாயகமாகப் சிறைச் சாலையிலே இருந்தார். செந்தமிழரின் வீரத்தை இகழ்ந்தாரில்லை. புலி எனப் பேசி ஏலி என ஓடிய புன்மதியினர் போலன்றி, மெள்ளப் பேசிக் கள்ளச் சிந்தனை ஏதுமின்றிக் கஷ்டாஷ்டத்தைக் கலங்காது ஏற்றுக் கொண்டார், நமது மனதைக் கொள்ளை கொண் டார், நமது கண்களைக் குளமாக்கி மறைந்தார், குணக்குன்று.

தீவிரமாகப் பேசுவதிலே தீரர் என்ற பெயரெடுத்தாகிவிட்டது, அந்த அரங்கிலே ஆனந்த நடனம் புரிந்து, அதற்கான ஆதரவு பெற்றுவிட்டது, இனி வேறு ஆடலிடம் தேடு வோம், பாடலழகராகுவோம், பரமன் பதத்தை நாடுவோம், பழனிப் பக்தருடன் கூடுவோம், பக்திப் பஞ்சாமிருதத்தைப் பருகுவோம், பாமாலை புனைந்து பூமான்களை அடைந்து, பெம்மான் அருள் பெற்ற சீமான் எனத் திகழ்வோம் என்று துணிந்து தூர்த்தராகும் தூய மணிகளைக் கண்டு, கண்புண்ணாகவில்லையே இக்காட்சியைக் காண நேரிட்டும் என்று கவலையுற்றபோதெல்லாம், செச்சே! இந்த நாவாணிபர்கள் வேளைக்கோர் வேடமிடுவர், இவர் பற்றிச் சிந்தனையும் சோகமும் ஏன், நரிக்குணம் கொண்டவரின் நடவடிக்கையைக் கருதற்க, நாயகத்தை நோக்கு! அவருடைய நடுங்கா நாவையும், ஒடுங்கா உள்ளத்தையும், பதவிப் பாசத்திலே சிக்காத பான்மையையும் கண்டு களி! பெருமை கொள்! இதோ என் தமிழர்! என்று மார் தட்டு!- என்று நமக்கெல்லாம் கூறுவது போலிருந்து வந்தது, நாயகத்தின் குறுநகையும், கண்களிலே தோன்றி டும் சிறு ஒளியும், பெரும் பணியும், ஆம்! அத்தகைய வீரரைத்தான் இழந்துவிட்டோம். அவர், பலகாலம் நமக்காகப் பாடுபட்டுத் தமது பங்குக்கு மேலாகவே உழைத்து விட்டுத்தான் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார். இனி, அவரிடம் இவ்வளவு பெற்ற நாம், அவருடைய பெயரை மறவாது, குறியை மறவாது, அவர் பணி வழி நின்று உழைப்பதன்றி, மறைந்தவருக்குக காட்டக் கூடிய மரியாதை வேறென்ன! அறிவுக் கண் இழந்தே நமது வீர இனம்!, வீழ்ச்சியுற்றது என்பதை உணர்ந்த நாயகம், குலசேகரன் பட்டினத்திலே கல்விச் சாலை, நிறுவி அதனைக் கண்ணிமைபோல் காத்து வந்தார். அவருடைய அறிவு இல்லத்தைத் திராவிடர் தமது ஆதரவுக்கு உரிமை பெற்ற குழந்தைகளாகக் கொண்டு, அன்பை அள்ளி ஊட்டி வளர்க்க வேண்டும். நமது நீங்காக் கடமை அது. தூங்கும் உள்ளம் படைத்தோராக இராமல், துயர் நீக்க அயராது உழைத்த நாயகத்தின் நற்பண்புகளின் சின்னங் களாக நாம் விளங்குவோமாக. நாயகம் நமக்காக வாழ்ந்தார், உழைத்தார். நம்மை நினைத்த வண்ணமே உயிர் நீத்தார். நாமும் உயிர் நீங்குமுன், நாயகம் நல்கிய நன்மொழி வழிநடந்து, நாங்களும் நாயகத்தின் நல்லின மக்களே என்று உவகையுடன் உரிமையுடன் உரைத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு, உரிமைப் போரிலே ஊக்கம் கொண்டு உழைப்பேமாக, நாயகத்தை இழந்த தாயகம் தேம்புகிறது, தேம்பிய வண்ணமே, தலைவனை இழந்து தவிக்கும், அம்மைக்கும் தந்தையை இழந்து தவிக்கும் மக்கட்கும், உற்றார், உறவினருக்கும், ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மீண்டும் தேம்புகிறது!

(திராவிட நாடு - 24.12.1944)