அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தேயிலைத் தோட்டத்திலே!

ஒன்ஸ்மோர்! ஒன்ஸ்மோர்!!

ஆமாம்! காலரிக் கனவான்களின் கடுமையான கட்டளை! காலஞ்சென்ற நடிகர் விஸ்வநாததாசுக்குப் பிறக்கும், அவர், அரிச்சந்திரனாகத் தோன்றினாலுஞ் சரி, அர்சுணனாகத் தோன்றினாலுஞ் சரியே, அந்தத் “தேயிலைத் தோட்டத்திலே” என்ற பாடலை மற்றமோர் முறை பாடும்படி, கட்டளை பிறக்கும். அவர் பாட, மக்கள் கைத்தாளம்போட, சோகம் கொட்டகையினுள் நடமாட, தேயிலைத் தோட்டத்திலே, என்ற பாடலைக் கொட்டகை வந்தவர்கள் பாடிக் கொண்டு வீடு திரும்புவர். அந்த நேரத்திலே தேயிலைத் தோட்டத்திலே, உண்மையிலே வேலை செய்து அலுத்த தோழர்கள், எங்கேயோ, படுத்துப் புரண்டு கொண்டிருப்பர். அவர்களிடம் அக்கறை காட்டுவதாகப் பாவனை, நாடகமேடையிலே நடைபெறும். அந்தப் பாவனை தோற்றுவிடும், சோகரசம் பிரயோசனமில்லை என்று கூறுவீர்கள் தாசின் சாரீரம் பயனே இல்லை, என்பீர்கள், அன்பர் ஆச்சாரியார், அண்மையிலே, சென்னையிலே, பேசிய ஒரு சொற்பொழிவைக் கேட்டால். காங்கிரஸ் தோழர்கள் சிறையிலே இருக்கிறார்களல்லவா, அவர்கள், பாவம், எவ்வளவு கஷ்டப்படுகிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கை இப்படி வீணாகலாமா, என்ற விசாரம், ஆச்சாரியாருக்கும் பிறந்தது; ஒரு சொற்பொழிவு ஆற்றிவிட்டார், வேறு என்ன செய்வார் பாவம்! சிலகாலமாகத்தான் அவர் அரிய சொற்பொழிவு ஆற்றுவது, பெரிய அறிக்கை விடுப்பது, எனும் இரு கர்மங்களைச் செய்து வருகிறாரே! அத்தகைய பிரசங்கம் ஒன்று நடந்தேறியது.

சிறையிலே, வாடுகிறார்களே, என்ற சிந்தனை, ஆச்சாரியாருக்கு உண்டானதுகாண மகிழ்கிறேன். அதாவது காங்கிரஸ் தோழர்கள் சிறையிலேயிருக்கிறார்களே அதைக் கண்டன்று நான் சந்தோஷிப்பது, அவர்களைப்பற்றி ஆச்சாரியாருக்கு மனது இரக்கம் உண்டாயிற்றே அதற்காகச் சந்தோஷிக்கிறேன். ஏனெனில், அவர் ஒரு கர்மயோகி! நிஷ்காம கர்மி! அரசியலில் மட்டுமன்று, பொதுவாகவே கடமையைச் செய், பலாபலனைப் பற்றிச் சிந்திக்காதே என்ற கொள்கை கொண்டவர். “கண்ணன் காட்டிய வழி”யின் ஆசிரியர், கர்மயோகியாகத்தானே இருக்க வேண்டும். அத்தகையவருக்கு ‘சிறைச்சாலை என்ன செய்யும்’ என்ற நினைப்பு இருக்குமே யொழிய “ஐயோ, சிறையிலே அவர்கள் என்ன கஷ்டப்படுகிறார்களோ” என்று சோகம் ஏன் பிறக்கப்போகிறது, என்று நான் நினைத்தேன். மேலும், ஆயிரம், ஆண் பெண் குழந்தைகள் தாய்மொழிக்காகச் சிறை புகுந்தபோது, அவர்கள் சிறையிலே, வாடுகிறார்களே என்று கூறிய காலை, அறுபது வயதுள்ள பெரியாரை வெப்பமிக்க பெல்லாரிச் சிறையிலே தள்ளலாமா என்று தயவாகக்கேட்டபோது ஆச்சாரியார், “ஆமாம், பாவம், சிறையிலே இந்தத் தமிழர்கள் கஷ்டந்தான் படுகிறார்கள்” என்று ஒருதடவைகூட அன்புடன் கூறி நான் கேட்டதில்லை. நீங்களுங் கேட்டதில்லை. அது மட்டுமா தோழர்களே! தாலமுத்து, நடராசன் எனும் இரு வாலிபர்கள், பிணமானபோது கூடத்தான், வேதாந்த விளக்கமுணர்ந்த விப்பிரர், விசாரமடைந்தாரில்லை. எனவே நான், சரி சாமான்ய மனிதரைப்போல, இந்தச் சத்புருஷருக்கு விசாரம், வேதனை முதலியன அண்டாது, கர்மவீரருக்குக் கலக்கமும் கண்ணீரும் வருமா’ என்று எண்ணினேன். ஆனால், தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பதுபோல, தன் அன்புக்குப் பாத்திரமானவர்கள் சிறையிலே, வாடுகிறார்கள் என்றதும், கர்மயோகிக்கும் கலக்கத்தை உண்டாக்கிவிட்டது.

காதலால் வாடிய வாலிபன், தன் கருத்தைக் கவர்ந்த கன்னியின் தலையணையைக் கண்டு, “உனக்குள்ள பாக்கியம், எனக்குக் கிடைக்கக்கூடாதா” என்று அடிமூச்சக்குரலாற் கூறி ஆயாசமடைந்தானாம். அன்பர் ஆச்சாரியார் தமது கட்சிக்காரர் சிறையிலே இருப்பது கண்டு இவ்வளவு மனம் இரக்கமடைந்து, பேசியிருப்பதைப் பத்திரிகையிலே படித்தபோது, “அந்த அன்பிலே, ஆயிரத்திலொரு பாகம், இந்தத் தமிழரிடம் காட்டியிருக்கக் கூடாதா?” என்று கூறவும் என் மனந்தூண்டுகிறது. ஆனால் நான் கூறித்தான் பயன் என்ன? அவர்தான், தனக்குப் பிடிக்காத விஷயமாக யாராவது பேசினால் கேளாக்காதை அந்தப் பக்கம் திருப்பி விடுவாரே!!

சிறையிலே வாடுகிறார்கள்! வாழ்வு பாழாகிறது! அடுப்பிலே கட்டையைப் போட்டு எரித்துக்கொண்டே இருந்தால் கட்டை மிச்சமாகுமா? இப்போதாவது அடுப்பிலிருந்து கட்டையை வெளியே இழுத்துத் தண்ணீர் ஊற்றி அணைத்தால்தான் கட்டை மிச்சமாகும் - என்று கசிந்துருகிப் பேசியிருக்கிறார். “தேயிலைத் தோட்டத்திலே” என்ற மெட்டிலே, இதோ அவருடைய சொற்பொழிவு தருகிறேன், பாடிப் பாருங்கள்!

சிறைக் கூடத்திலே! - அவர்
செய்வதென்னவென்று
தெரியாமல் வாடுறார்! (சிறைக்)
பாழும் மனம் என்னமோ,
பாகாய் உருகுது பலப்பல
நினைக்குது,
ஓயாது ஓலமிட்டும், - நான்
ஓங்காரங்கூவியும் ஒரு
பலனும் இல்லை (சிறைக்)
கதவுந்திறக்கக்காணோம் - இந்தக்
கஷ்டத்தை எண்ணினால்
கலந்தண்ணீர் வருகுதே
கண்கள் சிவந்திடுதே - என்
காலமும் வீணாகப்போகுதே
ஐயயோ (சிறைக்)
அடுப்பிலிட்ட கட்டைபோல் - அவர்
அனைவரும் தேய்வதா
அணைத்திட வேண்டாமா,
அண்டை அயலார்களே! - நீங்கள்
ஆவன செய்திடத்
தேவைதான் இல்லையா, (சிறைக்)

இங்ஙனமாகத்தானே, அழுகின்ற அன்பர் ஆச்சாரியாருக்கு, நாம் கூறும் ஆறுதல் ஒன்றுண்டு. காங்கிரசின் ஆகஸ்ட்டுத் தீர்மானமே, இத்தகைய சிறைவாசத்துக்குக் காரணம் ஆகையினால், வெளியே உள்ள காங்கிரஸ் தலைவர்களைக்கொண்டு, அதிலும், வெளியே உள்ள, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியினரைக் கொண்டு, கூட்டங்கூடி, ஆகஸ்ட்டுத் தீர்மானத்தைக் காங்கிரஸ் ரத்து செய்கிறது; வம்பை வாபஸ் வாங்கிக் கொள்கிறது; போர் முடியுமட்டும், கிளர்ச்சிகள் செய்வதில்லை என்று உறுதி கூறுகிறது; யுத்த முயற்சிக்கு எதிரிடையாக ஏதும் செய்வதில்லை என்று உறுதி கூறுகிறது - என்று தீர்மானங்கள் நிறைவேற்றினால், பலன் உண்டாகும், அதைச் செய்யலாகாதா. என்று ஆச்சாரியாருக்கு யோசனை கூறுகிறோம்.

கோழி முட்டை அடையின் மீது ஆசையிருந்தால், முட்டையை உடைத்தால்தான் அடை செய்ய முடியும்! கோழியே இல்லாத இடத்திலே இருந்து கொண்டு, கோழி முட்டை அடை வேண்டும் என்று கூவினால் என்ன பயன்! ஓஹோ! ஆச்சாரியாருக்குக் கோழிமுட்டைக் கதை கூறினால், எப்படிப் புரியும்! குட்டிக் கதை கூறினேன், அது அவருக்குப் புரியக்கூடியதாக இருக்கவேண்டுமே! என்ன கூறலாம்? தேங்காய் புட்டுத் தேவையானால், தேங்காயை உடைத்துத் திருவினால்தானே கிடைக்கும், தேங்காயே கிடைக்காத ஊரிலே இருந்து கொண்டு, தேங்காய்ப்புட்டு கேட்டால் கிடைக்குமா? அதுபோல, நெருக்கடி தீரவேண்டும், முட்டுக்கட்டை தீரவேண்டும், என்று நெருக்கடியோ, முட்டுக் கட்டையோ போடாத இடத்தைப் பார்த்து ஓயாது கூவினால் நெருக்கடி தீருமா! ஸ்வாமிகளே! பிராக்கன் துரைக்குப் பதில் கூறுவதும், பெர்னாடுஷாவுக்கு அறிவுரை புகட்டுவதும், நெருக்கடியைப் போக்கும் வழியன்று! நான் மேலே கூறினேனே யோசனை, அதைச்செய்து பாரும், சிந்தனைக்கு வேதனை தரும் சிறைவாழ்விலிருந்து, உமது தோழர்களை வெளியேற்றலாம். பிறகு நாங்கள் இருக்கவே இருக்கிறோம், பிடித்துத் தள்ளுங்கள் சிறையிலே - மீண்டும் நீர் கனமானால்! ஆனால் அது அவ்வளவு இலேசாக நடக்கக் கூடியதன்று.

பரதா! ஆறாவது டோஸ், தயாரா? என்று என் நண்பன் வீரன் கேட்கிறான். “இல்லையப்பா, இந்தக்கிழமை ஆச்சாரியாரின் சோகரசத்தைப் பற்றிச் சொன்னேன், அடுத்த இதழிலே ஆறாவது டோஸ் உண்டு” என்று வீரனுக்குக் கூறினேன். உங்கட்கும் கூறி விட்டேன். அடுத்த இதழிலே ஆச்சாரியாரின் சோகமன்று, அயோத்தி மக்களின் சோகத்தைக் கம்பர் வர்ணிக்கும் “ரசம்” கூறுகிறேன்! அந்த ஆறாவது டோஸ், இதுவரை வெளிவந்தவைகள் எல்லாவற்றையும் விட, அதிக நெடி!! நான் என்ன செய்வேன்? உண்மையை உரைக்கிறேன்.

5.9.1943