அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தாய்மார்களின் உற்சாகம்
29,30.9.1945 தேதிகளில், திருச்சி புத்தூர் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பன்னீர்செல்வம் பந்தலில், 17ஆவது திராவிடர் கழக மாகாண மாநாடும், 4ஆவது சுயமரியாதை மாகாண மாநாடும் சிறப்பாக நடைபெற்றன.

27ஆம் தேதியிலிருந்தே, திருச்சி வந்து சேரும் ஒவ்வொரு புகைவண்டியிலும் வெளியூர்த் தோழர்கள் ஆயிரக்கணக்கில் வந்தவண்ணமாக இருந்தனர். 29ஆம் தேதி காலையில், திருச்சியிலுள் ஒவ்வொரு தெருவிலும் திராவிடத் தோழர்களின் நடமாட்டம், எதிரிகள் கண்டு கலங்கும் வகையில் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தங்கள் தங்கள் துணைவர்கள் பக்கத்தில் வர, தங்கள் குழந்தைகளை இடுபபில் தாங்கியும் நடத்தியும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் அணி அணியாகச் சென்ற காட்சி, “பொன்னின் வார்ப்படம்போல் மாதரோடு, போர்புரி மாவீரர்” என்று புரட்சிக்கவிஞர் பாடிய உண்மையை, ‘இதோ நாங்கள் “உரிமையாக்கிக் கொண்டோம், இனி அச்சம் வேண்டாம்’ என்று கூறுவதுபோலவும், ‘திராவிட நாட்டைத் திராவிடருக்கே ஆக்கிக் கொள்ளும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ள பெரியார் அவர்களே! அஞ்சற்க! இப்பெரும்பணியில் வெற்றிபெறும் ஆக்க வேலைகளைச் செய்வதற்கு இதோ எங்கள் அன்பளிப்பு, இவர்களைத் தங்களிடமே ஒப்படைக்கின்றோம், அதற்காகவே இத்திராவிடச் செல்வங்களைப் பெற்றெடுத்தோம் ஏற்றுக்கொண்க’ என்று கூறுவதுபோலவும் இருந்தது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளோடு சென்ற காட்சி. இதுபோன்ற, உணர்ச்சியும் உற்சாகமும் நிரம்பி, உண்மைக்கம் உரிமைக்கும் போரிடவல்ல ஒரு பெருங்கூட்டத்தைத் திராவிடம் இதுவரை கண்டதே இல்லை என்று கூறுவதைக், கருத்தில் கவடம் இருந்தாலன்றி எத்தகையகுறை மதியினரும் மிகைப்படக்கூறியதாகக் கருதவேமாட்டார்.

29, காலை 9-மணிக்குத் திருச்சி தெப்பக்குளத்திலிருந்து ஊர்வலம் தொடங்கியதும், திருச்சியிலுள்ள தெருக்கள்தோறும் திராவிட முரசு கொட்டிக் கொண்டிருந்து தோழர்களும் தாய்மார்களும் ஓடிச்சென்று ஒருங்குகூடி ஊர்வலமாகச் சென்ற காட்சி, அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சித் தங்கள் கடமையை நடுநிலைமை தாங்கிச் செய்யத் தவறியவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, வெட்கித் தலைகுனிந்து நல்ல பாடம் கற்றுக்கொள்ளும் முறையில், ஊர்வலம் “பெரியார் வாழ்க” “திராவிட நாடு திராவிடர்க்கே” என்ற வாழ்த்தொலிகளுடன் அமைதியாக அணிவகுத்துச் சென்று மாநாட்டுப் பந்தலை அடைந்தது. ஊர்வலத்தில், பொன்மலை, கற்கண்டார் கோட்டை, தஞ்சாவூர், கருவூர், மதுரை, தூத்துக்குடி, மாயவரம், புதுச்சேரி சேலம் முதலான ஊர்களில் இருந்து வந்த தொண்டர் படையினரும், திருச்சித் திராவிட மாணவத் தொண்டர்களும் பெரும் பங்கெடுத்துத்’ திராவிட முரசொலிகளுடன் ஊர்வலத்தை நடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரதிநிதிகளும், பார்வையாளர்களும் தாய்மார்களுமாக முப்பதினாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், மாநாட்டுப் பந்தலில், அவரவர்களுக்கெனத் தனித்தனியாக வகுக்கப்பட்ட இடங்களில் மாவட்ட (ஜில்லா) வாரியாக அமர்ந்ததும், தோழீயர் மிராண்டா கஜேந்திரன் ஆ.அ., அவர்கள் தம்முடைய அரிய சொற்பொழி வாற்றி மாநாட்டைத் திறந்துவைத்தார். (திறப்புவிழாச் சொற்பொழிவு பின்னர் வெளிவரும்) தோழர் தி.பொ. வேதாசலம் அவர்கள் அன்புகலந்த உரையால் அனைவரையும் வரவேற்று மகிழ்வித்தார். பின்னர், பெரியார் அவர்கள், மாநாட்டில் குழுமியிருந்த அனைவருடையவும் முழு ஆதரவோடு மாநாட்டின் தலைமைப்பதவியை ஏற்றுத் தம்முடைய பேருரையை நிகழ்த்தினார். (தலைமையுரை பின்னர் வெளியிடப்படும்) இதோடு மாநாடு இடைவேளை உணவுக்காகக் கலைந்தது.

பிற்பகல் மூன்று மணிக்கு மாநாடு மீண்டும் தொடங்கிற்று, நாதஸ்வர வித்வான் குளிக்கைப் பிச்சையப்பா அவர்கள் தம்முடைய சகாக்களுடன், புரட்சிக்கவிஞரின் பாடல்கள் சிலவற்றை, உணர்ச்சிததும்ப - இனிமை தவழ - அங்கு கூறியிருந்த அனைவரும் உள்ளம்பூரிக்க, நாதஸ்வரவிருந்தளித்து மகிழ்வித்தார். மாநாட்டினர், அவருக்கு ஓர் தங்கப்பதக்கத்தைப் பரிசாக வழங்கித் தங்களுடைய அன்பைத் தெரிவித்துக் கொண்டனர். பின்னர் பல முக்கியமான தீர்மானங்கள், தலைவராலும், பிரதிநிதிகளாலும் கொண்டுவரப்பட்டு முழுமனதாக நிறைவேற்றப்பட்டன. (தீர்மானங்களின் முழுவிபரமும் பின்னர் வெளியிடப்படும்) தோழர்கள் பலரின் அரியசொற்பொழிவுகளுடனும், இயக்கப் பாடல்களுடனும், நன்றி கூறலுடனும் திராவிடர் கழகப் 17-வது மாகாணமாநாடு இரவு 9-மணிக்கு இனிது முடிந்தது.

30-ந்தேதி காலை 9-மணிக்கு 4-வது சுயமரியாதை மாகாண மாநாடு தொடங்கிற்று. சேலம் தோழியர் கனகம்மையார் இராமசாமி அவர்கள்அன்புரையாற்றிக் கொடி யேற்றுவிழாவை நடத்தி வைத்தார்கள். கும்பகோணம் தோழர் ஓ.ஓ. நீலமேகம் அவர்கள் அரியதோர் விரிவுரையாற்றி மாநாட்டைத் திறந்துவைத்தார். தோழர் அண்ணாத்துரை அனைவரையும் அன்பால் வரவேற்று மகிழ்வித்தார் பின்னர், செங்கற்பட்டு மாவட்டத் தலைவர் திருவொற்றியூர்த் தோழர் கூ. சண்முகம் அவர்கள், அங்கு கூடியிருந்தவர்களின் ஆதரவோடு மாநாட்டுத் தலைமைப் பதவியை எற்றுச், சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்களை விளக்கித் தம்முடைய தலைமைப் பேருரையை நிகழ்த்தினார். (தலைமையுரை பின்னர் வெளிவரும்.) இதோடு மாநாடு இடைவேளை உணவுக்காகக் கலைந்தது.

பிற்பகல் இரண்டுமணிக்கு மீண்டும் மாநாடு தொடங்கிற்று தலைவராலும் பிரதிநிதிகளாலும் பலமுக்கியமான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு முழுமனதாக நிறைவேற்றப்பட்டன. (தீர்மானங்களின் முழுவிபரமும் பின்னர் வெளியிடப்படும்)

தீர்மானங்கள் நினைவேற்றப்பட்டதும், பலகாலமாகப் பண்டிதர்களுக்கு அறிவாராய்ச்சி கசையடி கொடுத்துவரும் நமது தொண்டுகிழவர் கைவல்யம் அவர்கள் மேடைக்க வந்தார். வந்ததும், கட்டுரைகள் வாயிலாகக் காட்சியளித்த கருதுரம் பெற்ற கைவல்யத்தை இன்று கண்ணாற் கண்டோம், களிபேருவகை யடைந்தோம்’ என்று அங்கு கூடியிருந்தவர்கள் அன்பொலி முழங்கினர். ஆண்டில் கிழவரும், அறிவில் இளைஞருமான நமது கைவல்யம் அவர்கள்,“சுயமரியாதைச் சங்கம் ஏன் வந்தது என்ற பொருள் பற்றி ஓர் அரியவிரிவுரை ஆற்றினார். (அதுவேறு இடத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது) அதன்பின்னர், புத்துலகச் சிற்பியாம் புரட்சிக் கவிஞர் தோழர் கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) அவர்கள் மேடையில் தோன்றினார். தோன்றியதும், தோழர்களும் தாய்மார்களும் அடைந்த அகமகிழ்வை இங்கு அளந்து கூறமுடியாது. கவிதை உலகின் கண்ணெனவிளங் கும்கனகசுப்புரத்தினம் அவர்கள், கருத்து நிரம்பிய இனிய உரைவழங்கி இளைஞர்களின் உள்ளத்தில் ஓர் எழுச்சியை உண்டாக்கினார். தோழர் அழகர்சாமி அவர்களின், அறிவை விள்கும் ஆணித்திறமான பேச்சவம்மையைப் பற்றிப் பேசவும் வேண்டுமோ? சிலகாலமாகப் போர் முனைப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பணிபுரிந்த தோழர் அழகர்சாமி அவர்கள் மாநாட்டு மேடையில் தோன்றியதும், அவர், அந்தப்பணி தீர்ந்ததும் தமது சொந்தப் பணிக்கு வந்துவிட்டார் என்று அனைவரும் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் 4-வது சுயமரியாதை மாகாண மாநாடு நன்றிகூறலுடன் மாலை 7-மணிக்கு இனிது முடிந்தது.

திராவிட - சுயமரியாதை மாநாடுகளின் நிகழ்ச்சிகள் இரண்டு நாட்களிலும் மகிழ்ச்சிகரமாக முடிந்தபின்னர், ஞாயிற்றுக் கிழமை இரவு 10-மணிக்குத் ‘திராவிட மறுமலர்ச்சி நாடகசபாவின் தலைவர் தோழர் எம்.ஆர். இராதா அவர்களும் அவரது சாகாகளும் ‘போர்வாள்’ என்னும் புரட்சிகரமான சீர்திருத்த நாடகத்தை மாநாட்டுப் பந்தலில் அமைக்க பட்டிருந்த மேடையில் சிறப்பாக நடித்தனர். மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரும் தாய்மார்கள் உட்பட நாடகத்தை ரசித்தனர். மக்களிடையே நெடுங்காலமாகப் பதிந்திருக்கும் அறியாமையையும், மூடப்பழக்கவழக்கங்களையும், நாடக வாயிலாக விரைவில் போக்கமுடியுமென்பதைத் தோழர் இராதா அவர்கள் தம்முடைய பகுத்தறிவு நிறைந்த பேச்சோடு கூடிய நடிப்பு முறையால் நன்கு விளக்கிக் காட்டியது பெரிதும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும். இந்நாடகத்தில் தோழர் அண்ணாத்துரை அவர்களும் பங்கெடுத்து நடித்து அனைவரையும் மகிழ்வித்தார். தோழர் இராதா அவர்கள் யாதொரு கைம்மாறும் கருதாது திருவாரூரிலிருந்து வந்து இந்நாடகத்தை நடித்துக்காட்டியது, திராவிடர் இயக்கத்தில் அவர் கொண்டுள்ள உண்மையான பற்றுதலை விளக்குவதாகும். அவருக்குத் திராவிட மக்களின் நன்றி உரியதாகுக. தோழர் அண்ணாத்துரை அவர்களால் பரிசாக அளிக்கப்பட்ட தங்கப்பதக்கம் ஒன்றை நடிகமணி தோழர் டி.வி. நாராயணசாமி அவர்கள் அன்புரைசில கூறித் தோழர் இராதா அவர்களுக்கு அணிந்து மகிழ்வித்தார். தலைவர் பெரியார் அவர்களின் சிறந்த பாராட்டுரையுடன் இரவு இரண்டு மணிக்கு நாடகம் இனிதுமுடிந்தது.

“திராவிட நாடு” காரியாலயத்தில் ஓவியம் வரையும் (அணூtடிண்t) தோழர் இராமச்சந்திரன் அவர்களால் வரையப்பட்ட, சீர்திருத்தக் கருத்துக்களையும் விஞ்ஞானக் கருத்துக்களையும் விளங்கம் பல படங்கள், மாநாட்டுப் பந்தலில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கொள்கையை நன்கு விளக்கும் முறையில் பலவர்ணங்களோடு அழகாக வரையப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு வந்த அனைவரும் இக்கண்காட்சியைக் கண்ணுற்றுக்களிப் படைந்து, இயக்கக் கொள்கைகளை நாட்டில் பரப்புவதற்கு இது ஒரு சிறந்த சாதனம் என்று பாராட்டினர். படங்களின் வேலைப்பாட்டைப் பாராட்டி, ஊக்கம் கொடுக்கும் முறையில், மாநாட்டுக் குழுவினரால் பரிசாக வழங்கப்பட்ட ஒரு வெள்ளிக்கோப்பையைத் தோழர் பாவலர் பாலசுந்தரம் அவர்கள் தோழர் இராமச்சந்திரன் அவர்களுக்கு அளித்து மகிழ்வித்தார்.

பொதுவாக, திருச்சியில் நடைபெற்ற இருமாநாட்டு நடவடிக்கைகளும், இதுவரை தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநாடுகளைப் பார்க்கிலும், எல்லாவகையிலும் சிறப்பாகவும், திராவிட மக்களுக்கு என்றுமில்லாத ஒரு புத்துணர்ச்சியைத் தாக்கூடியதாகவும் இருந்தனவென்றே கூறலாம். சிறப்பாக, இதுவரையிலும், எந்த மாநாட்டுக்கும் வராதஅளவுக்கு, ஆயிரக்கணக்கான தாய்மார்கள், இக்காலத்திலுள்ள இரயில் நெருக்கடிமையையும் பொருட்படுத்தாமல் வந்துமாநாட்டைச் சிறப்பித்து, உண்மையிலேயே, திராவிடநாடு திராவிடர்க்கே ஆகும் நான் அண்மையில் உள்ள தென்பதை எடுத்துக் காட்டுவது போல் இருந்தது.

மாநாட்டுப் பிரதிநிதிகளாகத் திருவாங்கூர் சட்டசபை உறுப்பினர் உட்படப் பல தோழர்களும், மைசூர் சட்டசபை அங்கத்தினரும், இலங்கையிலிருந்து பல தோழர்களும் வந்திருந்தனர்.

மாநாடு நடப்பதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்தே மாநாட்டு அலுவல்களைக் கவனிப்பதற்காகக் கடலூர்த் தோழர் திராவிடமணி அவர்கள் திருச்சியில் தங்கியிருந்து தோழர் தி.பொ. வேதாசலம் அவர்களுடன் இராப்பகலாகப் பணிபுரிந்தது பெரிதும் குறிப்பிடத்தக்கதாகும். இவர்களுடன், தங்கள் சொந்த அலுவல்களையும் விட்டுக் கடமையே பெரிதெனக் கொண்டு பணியாற்றிய பொன்மலைத் தோழர்கள், திருச்சி மாணவர்கள், தோழர்பிரான்சிஸ், சுலைமான் ஆகியவர்களின் சலியா உழைப்பு மாநாட்டைப் பெரிதும் சிறப்பித்தது.

வெளியூர்ப் பிரதிநிதிகள் தங்குவதற்கு மாநாட்டுப் பந்தலிலும், வேறுதனித்தனி பங்களாக்களிலும், குடும்பத்தோடு வந்தவர்களுக்குத் தனியாகவும் இடவசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. உணவு வசதி மாநாட்டுப் பந்தலிலேயே அதற்கென அமைக்கப்பட்ட இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாநாட்டுக்கென மின்சார விளக்குகளுடன் அமைக்கப் பட்டுப், பன்னீர்செல்வம் பெயரால் காட்சியளித்த மாபெரும் பந்தல், திருச்சிகளுக்கே ஒரு தனிஅழகு கொடுப்பதுபோல் விளங்கியது. சுருங்கச் சொல்லவேண்டுமானால், மாநாட்டுப் பந்தலும், அங்கு குழுமியிருந்த 30000க்கு மேற்பட்ட மக்களும், அவர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல திறப்பட்ட கடைகளும், மாநாட்டு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் கருவிகளும், அவற்றின் எதிரொலியும் பிறவும் ஒன்று சேர்ந்து அந்த இடத்தை ஒரு அழகிய சிறுநகரமாக ஆக்கிவிட்டதென்றே சொல்லலாம். இத்தனைக்கும் காரணம்; திராவிட மக்கள், தங்கள் நிலையை உணர்ந்து, அதற்காவன செய்ய வேண்டுமென்ற எண்ணத்தால் தூண்டப்பெற்ற விழிப்போடு கூடிய ஒரு உணர்ச்சி மிக்க எழுச்சியேயாகும்.

திராவிடநாடு 7-10-1945