அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தாக்குதல் ஆரம்பம்

நான் சொல்லுவதே சரி! என் வார்த்தைக்கு எதிர்பேசக் கூடாது, என்ற சித்தாந்தம் கொண்டவராக இருக்கிறீர், நீர் ஜாடை காடடினதும் சல்லடம் கட்டிக்கொண்டு, என்மீது பாய்ந்து என்னைத் தாக்கப் பலர் தயாராக உள்ளனர். அப்படிப்பட்ட கும்பல் உம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. ஆயினும் என்ன! நான் தூற்றல் கண்டு துயருறேன். தாக்குதல் கண்டு தலைகுனியேன்.மனத்திற் சரி என்று பட்டதைச் சொல்வேன். எது சரி என்று கருதுகிறேனோ அதைச் செய்வேன்
ஜனாப் ஜின்னா, காந்தியாருடன் நடத்திய சமரசப் பேச்சு முறிந்தபோது இதுபோலக் கூறினால். அவர் கூறினபடியே, காந்தியாரின் கும்பல் இப்போது, ஜனாப் ஜின்னாவின் மீது பாய்ந்துவிட்டது. தாக்குதல் ஆரம்பமாகிவிட்டது.

மீண்டும் சந்திக்கக்கூடும், பொருந்துமா என்பது ஒரு புரமிருக்க இன்று, தாக்குதலை நடத்தும தோழர்கள், நாட்டின் எதிர்காலத்தைப் பற்சி சிறிதேனும் கவலை கொண்டவர்கள்தானா என்ற கேள்வி முன்னணியிலே நிற்கிறது.

காந்தியார் பாகிஸ்தானை எதிர்க்கிறார், என்றால், உடனே கண்ணை மூடிக்கொண்டு பாக்கிஸ்தானைக் கண்டிப்பது, காந்தியார் அதனை ஆதரிக்கிறார் என்றதும், உடனே அவர் மொழிவழி நடப்பது மீண்டும அவர் கரணம் அடித்தால் தாங்களம் கரணமிடுவது, என்ற கோக்கைக்கொண்டுள்ள இப்புனிதர்களைப் பூலோக விசித்திரங்கள் என்றே நாம் கருதுகிறோம். அறிவுக்குத் தளை பூட்டிக்கொண்டு, தலையாட்டிக் கிடக்கும் இவர்களின் தாக்குதலால், ஏற்கனவே தகர்ந்து போயுள்ள ஒற்றுமை துண்டு துண்டாகச் சிதறிக் கீழே வீழ்வதன்றி வேறென்ன பலனைக் காணப்போகிறார்கள். இப்போது இவர்கள் நடத்தும் தாக்குதலைக் கவனிக்கும்போது, ஒரு இரகசியம் வெளியாகிறது. ஜானப் ஜின்னாவைப் பேட்டிகண்டு காந்தியார் பேசினதை ஒரு சூழ்ச்சிக்காகத்தான், எங்கள் மாபெரும் தலைவர், மகாத்மா, ஜின்னாவிடம் சென்று பேசினார், எவ்வளவோ விட்டுக்கொடுத்தார், கட்டிப்பிடித்தார், பாகிஸ்துன் சாரத்தை அளித்தார், ஆனால் ஜின்னா பிடிவாதம் பேசிக் காரியத்தைக் கெடுத்துவிட்டார். முஸ்லீம்களின் நலனுக்குக் கேடு செய்துவிட்டார் என்று கூறுவதற்காகவே, இப்புக்குக் காந்தியார் ஜனாப் ஜினனாவைச் சந்தித்தார் என்று தெரிகிறது. இந்தப் போக்கு, இப்போது காந்திக் கும்பல் நடத்தும் தாக்குதலால் வெளிப்படுகிறது.

ஆனால், ஒரு முக்கியமான உண்மையை மறந்துவிட்டு இவர்கள், இத்தாக்குதலைத் துவக்கியிருக்கிறார்கள், தாக்குதலால் ஜினனாவை ஒழித்துவிட்டிருக்க முடியுமானால் கனல் கக்கியாம் ஜவஹரும், பாணாசூரப் படேலும், மற்றும் பலரும சேர்ந்து நடத்திய தாக்குதலின் போதே, ஜினனாவை ஒழிததுவிட்டிருக்க முடியும். அவர்கள் முழுவலிவுடன் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்ட பிறகுதான், காந்தியார் ஜனாப் ஜின்னாவின் முற்றத்திலே காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த உண்மையை உணராமல், மீண்டும் தாக்குதலைத் துவக்குகிறார்கள்! விழிப்புற்ற ஒரு இனத்தின் வீரத்தலைவனை, வீம்புகொண்ட ஒரு கும்பல் வீழ்த்த முடியாது. புயலை அடக்கச் சென்று, புலம்பி வீடு திரும்பிய புல்லர் போலாவர், காலம் இதனை காட்டும்.

(திராவிடநாடு - 15.10.44)