அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தலயாத்திரை

தலயாத்திரை சென்று, பக்தர்கள், அருள் பெற்று வரலாம் என்றெண்ணுவர். ஆனால் பெறுவது அது அல்ல, உடலிலும் உள்ளத்திலும் நோய் கொள்வர். இத்தகைய பயணமின்றி, உல்லாசத்துக்குச் செல்வர் சிலர். வேறு சிலர், உலகைக் காணவேண்டும், ஏட்டிலே உள்ளதைப் படித்தால் மட்டும் போதாது, நாட்டு நிலையையும் நினைப்பையும் கண்டு, கருத்தை வளமாக்குவோம் என்ற எண்ணத்துடன் ஊர் பல சென்று வருவர்.

மைசூர் மாஜி திவான் சர். மிர்சா இஸ்மாயில், வெளியே சுற்றுப்பயணம் செய்வதனால் கருத்து வளர்ச்சி ஏற்படும் என்பது பற்றித் தெரிந்து கொண்டிருப்பாரோ இல்லையோ, நமக்குத் தெரியாது. ஆனால், அது போல, மாணவர்கட்கு அவர் உபதேசித்தார். அவரும் பாட்னா, டாக்கா சர்வ கலாசாலைகளிலே, போய்ப் பார்த்ததில், தமது சுற்றுப் பயணம் பலனளித்திருப்பதைத் தெரிந்து கொண்டிருக்கக் கூடும். அங்கெல்லாம், அவர் பாகிஸ்தானை மறுத்துப் பேசினார்.

உடனே முஸ்லீம் மாணவர்கள் கண்டித்தனர், சர். மிர்சாவின் பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவுக்குச் செல்லக்கூடாதென்று கிளர்ச்சி செய்தனர். இது சர். இஸ்மாயிலுக்கு, முஸ்லீம் உலகின் மனப்பாங்கை விளக்கி இருக்க வேண்டும். இந்தப்பாடம் அவருக்குக் கிடைத்தது, சுற்றுப் பயணத்தினால் தான்! பாடங் கேட்ட பிறகாவது, சர். இஸ்மாயில் திருந்துவாரா?

20.12.1942