அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தமிழர் தலை நிமிர்ந்திடுகின்றனர்!

ஆறு ஆண்டுகளாக வடநாட்டிலே இருந்துவிட்டு, மறுபடியும் தமிழகம் வந்தார், ரெவரண்டு சகாயம், எனும் கிருஸ்தவ அன்பர். தமிழகத்திலே புதியதோர் எழுச்சி இருக்கக் கண்டு, “கார்டியன்” என்ற ஆங்கில வார இதழிலே, ஒரு குறிப்பு எழுதினார் இதுபற்றி, அவர் குறிப்பின் சாரம் இங்கே தரப்பட்டிருக்கிறது.
* * *

“தாழ்த்தப்பட்டுக் கிடந்த மக்களிடையே இப்போது தன் மதிப்பு வளர்ந்திருக்கிறது. சுயமரியாதை சுயாட்சிக்கு வழிகாட்டியாகிறது சுயமரியாதை என்ற பெயருடனேயே ஒரு இயக்கம் தென்னாட்டில் வேலை செய்து வெற்றி பெற்றுள்ளது. இன்று ‘தீண்டாதார்’ அடக்கிக் கிடக்கும் மக்களாக இல்லை, உயர் ஜாதிக்காரர் என்பவர்களின் தர்மகர்த்தாத்தனத்தை அவர்கள் பொறுத்துக் கொள்ள மறுக்கிறார்கள். ஆதித் திராவிட மக்களிலே பலர் பட்டாளத்திலே சேர்ந்து, மற்றவர்களோடு சமமாக உண்டு வாழ்ந்ததால், கிராமங்களிலே சமுதாயக் கேடான பழைய வழக்கங்களால் தங்கள் குல மக்கள் பிணைக்கப்பட்டிருப்பது கண்டு பதறுகிறார்கள். இந்து மார்க்கம் புரட்சிகரமான மாறுதல் அடைந்தாலொழிய, அந்த மார்க்கம் உள்ளவரையில், தீண்டாமை இருந்துதான் தீரும், ஆனால் இப்போது அதன் விஷப் பல் கழற்றப்பட்டுவிட்டது; சிறிய நகர்களில்கூட, பார்ப்பனருக்கு வேறு இடம் பார்ப்பனரல்லாதாருக்கு வேறு இடம் என்று காப்பி ஓட்டல்களில் இருந்து வந்த வித்தியாசம் மறைந்துவிட்டது (?) ஒரு குலத்தாரைச் “சாமி” என்று மற்றக் குலத்தார் கூப்பிடும் வழக்கம் மறைந்து வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக, பெயர்களுடன் சேர்க்கப்படும் ஜாதிப் பட்டங்களை, இப்போது நீக்கிக் கொண்டு வருகிறார்கள். ஒரு நாள் ரயில் வண்டியிலே, கூட்டமாக ஏறினார்கள், தற்போது “மேலான வகுப்பு” எனப்படும் வகுப்பினர் ஒருவர், கூட்டத்தைக் கண்டித்தார். “இங்கேயும் நீ இருக்கிறாயா? உத்யோக பீடங்களிலேதான் உங்கள் கும்பல் ஆட்சி செய்கிறது என்று பார்த்தோம். உங்க பருப்புவேகிற காலம் அல்ல இது!” என்று ரயிலிலே ஏறின கும்பலிலே ஒருவர் கூறினார். அந்த மேல் ஜாதிக்காரனைப் பார்த்து.”
ஃ ஃ ஃ ஃ

அன்பர் சகாயம் கூறியிருப்பது உண்மை, ஆனால் ஒரு திருத்தம் கூற விரும்புகிறோம். காப்பி ஓட்டல்களிலே எல்லாம், பிராமணருக்குத் தனியிடம் என்ற வித்யாசம் நீக்கப்பட்டு விட்டது என்று கூறுகிறார். நிலைமை அது அல்ல. சுயமரியாதை இயக்கத்தார் இரண்டாண்டுகளுக்கு முன்பு சமுதாய இழிவு நீக்கக் கிளர்ச்சி துவக்கி, முதலிலே ரயில்வே ஸ்டேஷன்களிலே உள்ள ஓட்டல்களில் இந்த ஜாதிபேத போர்டுகள் ஒழிய வேண்டுமென்று கூறினர், அதற்காக மறியில் செய்யத் திட்டம் வகுத்தனர், இது தெரிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ரயில்வே ஸ்டேஷன் ஓட்டல்களிலே இருந்த ஜாதிபேதத்தைக் குறிக்கும் தட்டிகள், போர்டுகள், குறுக்குச் சுவர்கள் ஆகியவற்றை நீக்கிவிட்டனர். எனவே இப்போது ரயில்வே ஸ்டேஷன்களி÷ல் உள்ள ஓட்டல்களிலே மட்டுந்தான் ஜாதி பேதம் பாராட்டப்படுவதில்லை. ஊரிலே பழைய நிலைமையேதான் இருக்கிறது. போர்டுகளும், தட்டிகளும், குறுக்குச்சுவருகளும், முன்பு போலவேதான் உள்ளன. சுயமரியாதைக்காரர்கள்,இந்தப் பேத ஒழிப்புப் போர்த் திட்டத்தை விரைவிலே அமுலுக்குக் கொண்டு வரப் போகிறார்கள். அன்பர் சகாயம், மற்றுமோர் முறை தமிழகத்தை இரண்டாண்டுகளுக்குப் பிறகு சுற்றிப் பார்க்கும்போது, ஜாதி பேதம் ஒழிக்கப்பட்ட சாப்பாட்டு விடுதிகளைக் காணலாம் என்று நம்புகிறோம்.

திராவிடநாடு - 19.8.1945.