அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தமிழருக்குத் தேவையில்லை!

இந்தி எதிர்ப்பாளர்கள், யார் தெரியுமோ? சூனாமானாக்கள்தான்- வேறு யாருமில்லை- என்று, கூறித் திருப்தியைத் தருவித்துக் கொள் ளும் திருப்பிரம்மங்களுக்கு, ஒரு வார்த்தை- சூனாமானாக்கள்தான், ஆட்சிப் பீடம் ஏறியுள்ள பழைமை விரும்பிகளின் சுபாவத்தையும், திறமையையும் நன்கு அறிந்தவர்கள்- எனவே, வேறு பலருடைய கண்களுக்கு முதலில், தெளிவாகத் தெரியாத பல விஷயங்களை, அவர்கள் கண்டறிய முடிகிறது. இந்தி விஷயத் திலும் அப்படித்தான். இந்தியை ஏன் இந்த ஆட்சியாளர்கள், பிடிவாதமாகப் புகுத்துகிறார் கள்- உட்பொருள் என்ன, என்பதைச் சுயமரி யாதைக்காரர்கள்தான் கண்டறிந்தனர்- சூட்சு மத்தை எடுத்துரைத்தனர். ஆனால், அவர்கள் மட்டுமே தான் இந்தி எதிர்ப்பாளர்கள் என்று கூறுவது அசட்டுத்தனம்- நம்புவது பைத்தியக் காரத்தனம்.

சூட்சுமத்தைக் கண்டறிந்து ஆளவந்தார் களின் அந்தரங்க நோக்கத்தை அம்பலப் படுத்தியவர்கள் அவர்கள் என்றபோதிலும், இந்தி கூடாது, ஆகாது என்பதற்கான காரணங்களை ஏற்றுக் கொண்டவர்கள், சுயமரியாதைக் கட்சி யினர் மட்டுமல்ல- பொதுமக்கள்- குறிப்பிடத் தக்க அளவுள்ள காங்கிரஸ்காரர்கள்- தமிழரசுக் கட்சியினர்- தமிழ்ப் புலவர்கள், ஆகியோரும், இந்தி கூடாது, என்பதை உணர்ந்து, உரைக்கின் றனர். ஊராரின் உள்ளத்தை அறிய முடியாத உப்பளத்தார் (சர்தார் வேதரத்னம்) எண்ணுவது போல, இந்தியை எதிர்ப்பவர்கள் சூனாமானாக் கள் மட்டுந்தான் என்று எண்ணிவிட வேண்டாம்- இந்தி எதிர்ப்பு, பல்வேறு முனைகளிலிருந்தும் கிளம்பிய வண்ணம் இருக்கிறது- அவை யாவும் ஒன்றுகூடி, ஓருருக்கொள்ளும் நாளும் அதிக தூரத்தில் இல்லை. இன்று, இந்தி எதிர்ப்புக்காக நேரடி நடவடிக்கை எடுத்துள்ள திராவிடர் கழகத்தவரின் இரத்தம், அடக்குமுறைக் கொடுமையினால், கீழே சிந்தச் சிந்த இந்தக் கூட்டு எதிர்ப்பு முன்னணியின், உருவம் வளரப்போகிறது.

மாணவர்களின் நலன் எதுவென்பதை அறிந்து பணியாற்றும் `ஆரம்பக் கல்வி' எனும் இதழ் சூனாமானா ஏடு அல்ல, அந்த ஏடு இந்தி, தமிழர்களுக்குத் தேவையில்லை என்று கூறுகிறது.
அரசியல் கிளர்ச்சி என்றோ, பதவி பறிக்கும் தந்திரம் என்றோ, கல்விப் பிரச்னை களைக் கருத்தூன்றிக் கவனிக்கும் ஒரு இதழின் கருத்துரையைக் கூறிவிட முடியாது. எனவே, காங்கிரஸ் சூத்ரதாரிகளின் தூபத்தில் மயங்கி, இந்தி எதிர்ப்பு அர்த்தமற்றது. யாரோ சிலருடைய சுயநலக் கூச்சல் என்றெல்லாம் எண்ணிக் கொண்டுள்ள, காங்கிரஸ் அன்பர்கள் ஆரம்பக் கல்வி, ஜூலை மாத இதழில் உள்ள, தமிழர் களுக்குத் தேவையில்லை என்ற கட்டுரையைச் சற்று அக்கறையுடன் படித்திடக் கோருகிறோம். அவர்களின் நலனுக்காக, மேற்படி கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.

``இன்று நமது திராவிட நாட்டில் உள்ள பள்ளிகளிலெல்லாம் இந்தி கட்டாயப் பாடமாக நுழைக்கப்பட்டு வருவது குறித்து எங்குப் பார்த்தாலும் ஒரே எதிர்ப்புக் கிளம்பியுள்ளன என்பதை அறிவோம். நமக்கும் தினம் தினம் கடிதங்கள் வந்த குவிந்து கொண்டே இருக் கின்றன. நாம் அவைகளுக்கெல்லாம் தனித் தனியே பதில் சொல்வதைவிட இக்கட்டுரை அவர்களுக்குப் பயன்படும் என்று நினைக்கிறோம்.''

நம்மை நமது ஆசிரியர்கள் பலவிதமான கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். அதாவது, இந்தி மொழியை ஏன் கட்டாயமாக்கியுள்ளார்கள்? இந்தி மொழியினால் நம் நாடு சீர்கேடு நீங்கி சிறப்பெய்தி விடுமா? உலகப் பொது மொழியாகிய, ஆங்கிலத்தில் இருக்கும் அல்லது இல்லாத விஞ்ஞான அறிவு நம் மக்களுக்கு இந்த இந்தி மொழி கற்பதனால் வந்துவிடுமா? எங்கோ ஒரு மூலையில் முடங்கிக் கிடந்த, இந்த இந்தியை நம் தமிழ்நாட்டில் வைத்து, நம் கண்ணிமையால் காத்து வந்த தமிழ் மொழியை இருக்குமிடந் தெரியாமல் செய்யப்படும்- தமிழர்கள் வட நாட்டவர்களின் அடிமைகளாக்க வேண்டி செய்யப்படும் சூழ்ச்சிகளை ஏன் நமது தமிழ்- திராவிட- இன மந்திரிகள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்? என்பன போன்ற இன்னும் மக்கள்பலவித ஐயங் கலந்த கேள்விகளை நம் பார்வைக்கு வாசகர்கள் அனுப்பி வைத்திருக் கிறார்கள். ஆகவே இவைகளுக்கு நாம் சுருக்கமாகப் பதில் சொல்ல வேண்டுமானால் ஆங்கிலப் பழமொழி ஒன்று நமது நினைவிற்கு வருகிறது.

அதாவது, ``ஒரு நாட்டை நீ அடைய வேண்டுமானால் முதலில் அந்நாட்டு மொழியைக் கொல்லு'' என்பதாகும். இப்படிப் பார்க்குங் கால் மேற்படி இந்தி மொழி புகுதல், வடநாட்டு ஆதிக்கம் புகுதல் என்றுதான் அர்த்தம். ஆகவே, இது ஒரு அரசியல் பிரச்னைதானே தவிர, நம் நாட்டுக் கல்வி முன்னேற்றத்துக்குச் செய்யப் படும் நற்றொண்டு என்று எவரும் எண்ணி விடக் கூடாது.
நம் திராவிட- தமிழ்நாட்டில் நூற்றுக்கு 80 பேர்கள் இன்னும் ஆரம்பக் கல்வியே அறியாத வர்களாக இருக்கிறார்கள். அதைக் களைந்து நூற்றுக்கு நூறு பேர்களும் கற்றவர்களாக ஆக்குவதன்றோ கல்வி முன்னேற்றத்துக்குச் செய்யப்படும் நற்றொண்டும், இன்று மிக மிக இன்றியமையாதவையுமாகும். ஆகவே, அதை விடுத்து 150 ஆண்டுகளாக ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டு முன்னேற்றத்திற்கு வழியில்லா மல் படுகுழியில் தள்ளப்பட்டுக் கிடந்த நம் நாட்டு மக்களை, சுதந்திரம்வந்த பிறகாவது கரையேற்ற வேண்டாமா? கரையேற்றுவதற்குப் பதிலாக ஆங்கிலேய ஆட்சிப் படுகுழியில் 150 ஆண்டு கள் வதைத்தீர்கள். இப்பொழுது சுதந்திரம் வந்துவிட்டது. ஆகவே எல்லோரும் புதிய படு குழியான வடநாட்டுப் பாழும் படு குழியில் ஒரு 150 ஆண்டுகளுக்கோ, அதற்கு மேலே விழுந்து கிடவுங்கள் என்று சொல்லாமல் சொல்வது போன்றல்லவா வுள்ளன இப்பிரச்னை?

``அரசாங்க உத்தியோகத்திற்கு இந்தி மொழியும் ஒரு தகுதியாகக் கருதப்படும்'' என்ற கனம் கல்வி மந்திரியாரின் பேச்சு மிக விந்தை யாக இருக்கிறது. அப்படியானால் இவர்கள் பிரதேச மொழியைப் புறக்கணித்து இந்தி மொழி யிலேயே தங்களது நகல்களைப் பதிவு செய்யப் போகிறார்கள்? என்று கேட்கிறோம். அப்படி யில்லையாயின் பின் சென்னை மாகாணத்த வருக்கு இந்தி கற்க வேண்டிய அவசியம் இல்லை.

(திராவிட நாடு - 5.9.48)